ஜனவரி 5 : விழா பதிவுகள் (1)

டியர் சாரு ,
நேற்று, உங்களின்  புத்தக வெளியீட்டு விழாவில் தருண் தேஜ்பாலின்  பேச்சு அத்தனை பேரையும் வசியப்படுத்தி, ஒரு சுய பரிசோதனைக்கு உட்படுத்தியது.  ஒருவர் தமிழில் பேசினால் எப்படிப் புரியுமோ , அப்படியே தருணின் ஆங்கிலம் எனக்குப் புரிந்தது. இவ்வளவு எளிமையாகக்  கூட ஆங்கிலத்தில் பேச முடியுமா?

தருணின் பேச்சு கண்டிப்பாகப்  பதிவு செய்யப் பட்டிருக்கும். அந்தப் பேச்சை ஒரு பாடம் என்றே கொள்ளலாம். இந்தியா, கலாசாரம், பண்பாடு,  அரசியல், போலி புனிதம், கல்வி, கருணை, முஸ்லிம் படையெடுப்பு, ஆங்கிலேய ஆட்சியில் ஏற்பட்ட சீரழிவு, சிதைவில் இருந்து சில வருடங்களில் நம்மை மீட்டு  எடுத்த மகாத்மா & நேரு , 1960களுக்குப் பின் திரும்பவும் நம்மை அழிவுக்கே இட்டுச் சென்ற அரசியல். இந்தச் சூழலில் எழுத்தாளர்களின் கடமை என்று பின்னிப் பெடலெடுத்தார் .
சிலரைப் பற்றி பேசும் போதெல்லாம் இவர் visionary ன்னு சொல்லுவாங்க. அப்படினா என்னனு லேசான குழப்பம் இருக்கும். தருணின் பேச்சைக் கேட்டவுடன்  visionary க்கான பொருள் விளங்கியது
” Vision is not an aggregation of your desires. Vision means seeing a solution for existing situations”
இது சமீபத்தில் நான் படித்த மேற்கோள்.
நிற்க,
சாருவின்  விழாவிற்குப்  போயிட்டு இப்படித்  தருணைப் பற்றி பேசுறியே, சாருவின்  பேச்சு எப்படி ன்னு கேட்பவர்களுக்கு.
அது ஒரு ஆன்மீக அனுபவம். பார்த்தா தான் புரியும் . (பிரபு ராமகிருஷ்ணன் சீக்கிரம் வீடியோ பதிவேற்றம் பண்ணுங்க )
ஹார்ட் அட்டாக் வந்த பல  மனிதர்களைப் பார்த்திருக்கிறேன் , உண்மையில் பிணங்கள் போலவே மீதி வாழ்வைக் கடப்பார்கள். ஆனால் நீங்கள், தருண் சொல்வது போல, “You are really a Rock star Charu”.
மேலும், தருண் பேசியவற்றைத்  தான் சாரு தன்  எழுத்தின் மூலமாக முன்வைத்துக் கொண்டே இருக்கிறார்.
தருண், சாரு இருவரும் ஒரே இசையின் வெவ்வேறு வடிவங்கள் என்றே தோன்றுகிறது.
நிகழ்ச்சி முடிந்தவுடன் மேடையேறி தருணிடம் நெருங்கி
“Sir, its a real pleasure to be with a person like you,” என்று சொல்லி தருணின் காலில் விழுந்த பொழுது அப்படியே பதறி,
No No , please don’t do this, என்று கூறி அப்படியே இழுத்து அணைத்துக்  கொண்டார். அழகான ராட்சஸி என்ன உணர்ந்தாரோ அதையே அடியேனும் உணர்ந்தேன்.
I am Overwhelmed..
நன்றி சாரு.
அன்புடன்
முரளி
திருவல்லிக்கேணி.
நன்றி முரளி.  தருண் பேச்சைக் கேட்டு மனுஷ்ய புத்திரன் ஒரு கருத்து சொன்னார், தருண் உங்களுக்கு நேர் எதிரான ஆள் என்று.   உண்மையில் தருண் பேச்சு தான் என் எழுத்தின் manifesto.   நேரு பற்றிய கருத்தும் இன்னொரு கருத்தும் தான் எனக்கு உடன்பாடு இல்லையே தவிர மற்றபடி தருண் பேசிய அத்தனையையும்தானே நான் 40 ஆண்டுகளாக எழுதி வருகிறேன்?  தருணை ஏன் கொண்டாடுகிறேன் என்றால் அதற்கு ஒரே காரணம், மூன்று வயது குழந்தை இந்தியாவில் பிச்சை எடுப்பதைப் பற்றி கவலைப்பட்ட ஒரே ஆங்கில இந்திய எழுத்தாளன் தருண் ஒருவன் தான்.  அதுதான் நேற்றைய தருண் பேச்சின் சாரம்.  அதுதான் என் எழுத்தின் சாரமும்.
தருணிடம் நான் ஆரம்பத்திலிருந்தே உடன்படாத ஒரே விஷயம், இந்தியாவின் முக்கிய பிரச்சினை ஊழல் என்பது என் கருத்து.  இல்லை, மதவாதம் என்பது தருணின் கருத்து.  என்னைப் பொறுத்தவரை பிஜேபியை நீங்கள் மதவாதக் கட்சி என்றால் அதை விட ஆபத்தான மதவாதக் கட்சி காங்கிரஸ்.  ஏனென்றால், பிஜேபியின் மதமாதம் வெளிப்படையானது. ஆனால் காங்கிரஸின் மதவாதம், மதச்சார்பின்மை என்ற அழகான முகமூடிக்குள் ஒளிந்து கொண்டிருப்பது.  எது ஆபத்தானது சொல்லுங்கள்?  இந்த ஒரு விஷயத்தைத் தவிர தருண் பேசிய அத்தனை விஷயங்களையும்தான் நான் தொடர்ந்து என் எழுத்தின் வாயிலாக முன்வைத்துக் கொண்டிருக்கிறேன்.
இந்த விழா மிகச் சிறப்பாக நடக்க உதவி புரிந்த அற்புத நண்பர்கள் நந்த ப்ரதீப், பெரியார் சம்பந்தர், ஆயிரக் கணக்கான நோட்டீஸ்களை இலவசமாக அச்சடித்துக் கொடுத்த நண்பர் (அவர் பெயரைக் கூட மறந்து விட்டேன்), ஒரு மாதமாக விழாவுக்காக அலைந்த செல்வகுமார், அராத்து, கணேஷ் அன்பு, மற்றும் பிரபு ராமகிருஷ்ணன், பிரபு காளிதாஸ், தர்ம சேனன், வேலையில் விடுப்பு எடுத்துக் கொண்டு சென்னை வந்து ஒரு வாரமாக பூங்கா பூங்காவாக அலைந்து துண்டுப் பிரசுரம் விநியோகித்த பெரியார் சம்பந்தர், டாக்டர் ஸ்ரீராம் (ஒரு சீனியர் டாக்டரான ஸ்ரீராம் பூங்கா பூங்காவாகப் போய் காலையில் ஐந்தரை மணிக்கு துண்டுப் பிரசுரம் விநியோகித்தார்), இன்னும் ஐம்பது நண்பர்களின் பெயர்களை நான் சொல்ல வேண்டும்.  கத்தரிலிருந்து இந்த விழாவுக்காகவே வந்திருந்தார் ஜெகா. குஜராத்திலிருந்து வந்திருந்தார் சிவா.   தில்லியிலிருந்து வந்திருந்தார் தரணீஷ்வர்.  ஈரோட்டிலிருந்து வந்திருந்தார்கள் ஸ்ரீதரும் கெஜலட்சுமியும்.   டேய் மனோ, கவி பழனி, மதுரை அருணாசலம், கவிதைக்காரன் இளங்கோ, கவிஞர் அமிர்தம் சூர்யா எல்லோருக்கும் நன்றி.   (உதயா என்றால் சாரு என்றும் இன்னும் பல்வேறு கதாபாத்திரங்களையும்  நிஜ வாழ்வில் தேடிப் பிடித்து அடையாளம் காட்ட முயன்று கிட்டத்தட்ட என் பர்ஸனல் வாழ்க்கைக்கே வெடி குண்டு வைத்தாலும் என் வேண்டுகோளுக்கு இணங்கித்தானே பேச வந்தார் அமிர்தம் சூர்யா?  அதனால் அவருக்கும் என் நன்றி…)  ஆனால் எத்தனை பேர் என்ன சொன்னாலும் அவந்திகாவுக்கு என் மீது நம்பிக்கை உண்டு என்பதால் விவாகரத்திலிருந்து தப்பினேன்.
ம்ம்ம்…  கால் நூற்றாண்டுக் காலம் இலக்கியமே வாழ்வாக இருந்தாலும் ஒரு இலக்கியப் பிரதியை எப்படி அணுகுவது என்ற ஆரம்பப் பாடமே சிலருக்குத் தெரியவில்லை.  ஜெயமோகன் மிகச் சரியாக சொன்னார்.  மேடையில், ஒரு புத்தக அறிமுக/வெளியீட்டு விழாவில் யார் யாரை பேசச் சொல்லலாம் என்று.  அதை நேற்று எனக்கு நிரூபணம் செய்தார் சூர்யா.  ஆனாலும் என் வேண்டுகோளுக்கு இணங்கி பத்து நாட்கள் பரீட்சைக்குப் படிப்பது போல் இந்தப் பிரதியைப் படித்து வந்து பேசிய அவருக்கு நன்றி. இனிமேல் ஒரு சூளுரை.  என் கூட்டத்தில் இலக்கியவாதிகள் யாருமே பேச மாட்டார்கள்.   மீண்டும் மீண்டும் எனக்கு நிரூபனமாவது என்னவென்றால், இலக்கியத்துக்கு வெளியே உள்ள நெல்சன் சேவியர் புதிய எக்ஸைலின் ஆன்மாவைப் பிடித்து விட்டார் என்பதுதான்.  ஆனால் சூர்யா அந்த நாவலின் பாத்திரங்களை நிஜவாழ்வில் தேடி எடுத்து ஒரு கிசுகிசுத்தன்மையைத்தான் உருவாக்கினார்.  இப்படி எழுதுவதற்காக சூர்யா என்னை மன்னிக்க வேண்டும்.  ஒரு இலக்கியப் பிரதியை இப்படி அணுகவே கூடாது.
நேற்றைய விழா மிக வெற்றிகரமாக முடிந்தது.  வந்திருந்த அனைவருக்கும் நன்றி.  விடுமுறை முடிந்த முதல் நாள் – திங்கள் கிழமை அன்று – 2000 பேர் கொள்ளளவு கொண்ட அரங்கில் 1500 பேர் வந்திருந்தது ஒரு மிகப் பெரிய சாதனை தான்.  ஆனாலும் இனிமேல் காமராஜ் அரங்கம் வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.  ஏனென்றால், அந்த அரங்கம் இப்படித்தான் ஏதாவது இடக்குமுடக்கான தேதியில் கிடைக்கிறது.  சனி, ஞாயிறு வேண்டும் என்றால் டிசம்பர் விழாவுக்கு பத்து மாதங்கள் முன்னதாக அதாவது மார்ச் மாதமே முன்பதிவு செய்ய வேண்டியுள்ளது.  அது நம்மால் ஆகாது என்பதால் இனிமேல் மியூசியம் அரங்கிலேயே வைத்து விடலாம் என்று யோசிக்கிறேன்.
விழாவின் திருஷ்டிப் பரிகாரம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்.  தருணை அறிமுகப்படுத்தி ஆங்கிலத்தில் பேசிய ரொமிலா மிக அழகாகச் செய்தார்.  ஆனால் அவருக்குத் தமிழ் தெரியாது என்பதால் மொத்த நிகழ்ச்சியையும் நடத்த முடியவில்லை.  தமிழில் செய்தவர்கள் எந்த அளவுக்கு அபத்தமாக்ச் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு அபத்தமாகச் செய்தார்கள்.  அதற்காக நண்பர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.  அந்தப் பெண்களிடம் கூட.  ஏனென்றால், குருவி தலையில் பனங்காயை வைத்தது என் தவறுதான்.  அராத்துவிடம் ஆரம்பத்திலேயே சொன்னேன், நீங்களோ கணேஷோ செய்து விடுங்கள் என்று.  அவர்தான் இப்படி யோசனை சொன்னார்.  அராத்துவாலும் தவறு செய்ய முடியும் என்று தெரிந்து கொண்டேன்.  ஆனால் ஊர் பூராவும் தட்டி, ஃப்ளெக்ஸ் போர்டு, மவுண்ட் ரோடில் ஃப்ளெக்ஸ் போர்ட் என்று அதகளம் செய்தவர் அராத்து தான்.  மிகச் செவ்வனே அதெல்லாம் நடந்து முடிந்தது.
விழா சிறப்புற நடைபெறக் காரணமாக இருந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.  குறிப்பாக என் நண்பர் ஆர்.  ராமகிருஷ்ணன் அவர்களுக்கு என் நன்றி.  மிகப் பெரிய வாசகர்.  போலீஸ் துறையில் டெபுடி கமிஷனர் என்று சொன்னால் சண்டைக்கு வருவார்.  நான் ஒரு இலக்கிய வாசகன் என்று சொன்னால் மட்டுமே போதும் என்பார்.  பெரிய பதவிகளில் இருப்பவர்களிடம் இது போன்ற எளிமையைக் காண்பது அரிதாக இருப்பதால் இதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது.  தவறாக நினைக்க வேண்டாம்.
பாண்டிச்சேரியிலிருந்து வந்திருந்த வரதன் மற்றும் நண்பர்களுக்கும் நன்றி.  தருணுக்கு நன்றி சொல்வது எனக்கே சொல்லிக் கொள்வது போல.
பலருடைய பெயரையும் விட்டிருப்பேன்.  அடுத்த பதிவில் எழுதுவேன்.  ஆதரவு அளித்த  தினமலர், இந்து, தினமணி, அந்திமழை, புதிய தலைமுறை, ஆனந்த விகடன் போன்ற பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி.  கூட்டத்தின் ஒரு மூலையில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்த தினமலர் ரமேஷுக்கு என் பிரத்தியேக நன்றி.  நான் அழைக்காமலேயே கூட விழாவுக்கு வந்து பெருந்தன்மை காட்டிய நண்பர் பாலகுமாரனுக்கு நன்றி.  விழாவுக்கு வந்து சிறப்பித்த என் சஹ்ருதயர்களான எஸ். ராமகிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன் ஆகியோருக்கும் நன்றி.
கிழக்கு பத்ரிக்கும் மற்றும் கிழக்கு நண்பர்களுக்கும் நன்றி.

Comments are closed.