ஒன்பது மாத தினசரிகளைப் படித்துக் கொண்டிருந்த போது ஒரு கட்டுரை. தீபன் என்ற ஃப்ரெஞ்ச் படம் பற்றி என் நண்பர் ஷங்கர் எழுதியது. அதில் அதன் இயக்குனரின் பெயரைக் குறிப்பிடும்போது ழாக் அடியார்டு என்று எழுதியிருந்தார். Jacques Audiard என்பதில் முதலில் Audiard ஐ எடுத்துக் கொள்வோம். ஃப்ரெஞ்சிலும் மற்றும் பல ஐரோப்பிய மொழிகளிலும் t, d என்ற உச்சரிப்புகள் இல்லை. த்த, த என்பதே அதன் உச்சரிப்பு. எனவே Audiard என்ற பெயரை ஓதியார் என்று எழுதுவதே சரி. Jacques என்பதில் உள்ள Ja-வை தமிழில் அனைவருமே ழ என்றே எழுதுகின்றனர். இது தவறான ஒரு நம்பிக்கையை விதைத்து விட்டது. சில தினங்கள் முன்பு கூட ஒரு நண்பர் கேட்டார். தமிழிலும் மலையாளத்திலும் தான் ழ உண்டு என்று நினைத்தேன்; ஃப்ரெஞ்சிலும் ழ உண்டு என்று இப்போதுதான் தெரிகிறது என்றார் அவர். அப்படி ஒரு தவறான கருத்து இங்கே பரவி விட்டது. ஃப்ரெஞ்சில் ழ இல்லை. Ja என்பது ஜவையும் ஷவையும் சேர்த்தால் வரும் உச்சரிப்பு என்னவோ அதுதான். ஆக, அதை ழ என்று எழுதுவதை விட ஜ என்று எழுதுவதே கொஞ்சம் சரி. ழ என்று எழுதுவது முழுத் தவறு. எனவே Jean Paul Sartre என்றால் ழான் பால் சார்த்ர் அல்ல; ஜான் பால் சார்த்ர் என்பதே சரி. ஏன் Je taime என்று தலைப்பிட்டேன் என்றால் உலக மொழிகளிலேயே I love you என்பதை ஃப்ரெஞ்சில் போல் அவ்வளவு இனிமையாக வேறு எந்த மொழியிலும் சொல்ல முடியாது. காரணம் இந்த je தான். கவுண்டமணி குரலில் சொன்னால் கூட இனிக்கும். ஜ்ஷு தேய்ம்… லாரா ஃபாபியானின் ஜூ தேய்ம் பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? இனிமேலாவது பத்திரிகையாளர்களும் நண்பர்களும் j என்ற ஃப்ரெஞ்ச் எழுத்துக்கு ஜ என்ற எழுத்தைப் பயன்படுத்தவும். ழ அல்லவே அல்ல.