கல்புர்கி கொலை (3)

 

என்னுடைய முகநூல் பக்கத்தில் நண்பர் அருணாச்சலம் என்னுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார்.  உடனே அவருடைய (முகநூல்) நண்பர்கள் ஒரு சக எழுத்தாளனின் படுகொலையை ஆதரித்து எழுதியவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள உங்களுக்கு எப்படி மனம் வந்தது என்று கேட்டு அவரை வறுத்திருந்தார்கள்.  அதற்கு நண்பர் அருணாச்சலம் எழுதியிருந்த பதில் என்னை மிகவும் வருத்தமடைய வைத்தது.  அருணாச்சலத்தின் பதில் கீழே:

”நான் சாருவின் நீண்ட கால நண்பன். மேலும் நான் மதிக்கும் ஒரு ஆளுமையும் கூட.யதார்த்தத்தில் முழுமையான சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே எல்லா நட்புகளும் அமையாது.. தனிப்பட்ட முறையில் அக்கொலையை ஆதரிக்க என்னால் ஒருபோதும் இயலாது. இதுசார்ந்து, என்னுடைய வருத்தத்தை அவரிடம் நேரிடையாகவே தெரிவித்துள்ளேன். நண்பர் என்பதற்காக அவருடைய எல்லாக் கருத்துக்களையும் ஆதரிக்க வேண்டியதுமில்லை.. ஒருபோதும் அவரும் அதை விரும்பியதில்லை.. நட்பாக இருப்பதால் எல்லா கருத்துகளுக்கும் உடன்பட வேண்டிய அவசியமும் இல்லை.. I do respect all your feelings too.

இதற்கு என்னுடைய பதில் கீழே:  நண்பர் அருணாச்சலம் என்னிடம் எத்தகைய வருத்தத்தைத் தெரிவித்தார் என்பது எனக்கு ஞாபகம் இல்லை.  ஆனால் இது குறித்து அருணாச்சலத்திடமும் மற்ற மதுரை நண்பர்களிடம் நான் என்னென்ன பேசினேன் என்பது எனக்கு ஞாபகம் உள்ளது.  அதை இங்கே தருகிறேன்.

கல்புர்கி கொலையை ஆதரித்து எழுதும் அளவுக்கு நான் மூடனோ அயோக்கியனோ வன்முறையாளனோ கிடையாது.  முதலில் இதை யார் ஒத்துக் கொள்கிறார்களோ அவர்களோடு மட்டுமே என்னால் உரையாட முடியும்.  ஒரு எறும்பைக் கொல்வதற்குக் கூட நமக்கு உரிமையில்லை என்று என் கட்டுரையில் எழுதியிருந்தேன்.  நான் சொன்னது/எழுதியது என்னவென்றால்:

கல்புர்கி இந்து மதத்தையும் விநாயகர் வழிபாட்டையும் தொடர்ந்து திட்டிக் கொண்டிருந்தார்.  அதன் விளைவாக அவருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்தது.  அவரை எதிர்த்துப் பலரும் வீதிக்கு வந்து போராடியிருக்கிறார்கள்.  ஒருமுறை அவருடைய பேராசிரியரே அத்தகைய போராட்டத்துக்குத் தலைமை தாங்கியிருக்கிறார்.  சில மாதங்களுக்கு முன்பு அவருடைய கருத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவர் வீட்டின் முன்னே வந்து கல் வீசியிருக்கிறார்கள்.   அதன் விளைவாக போலீஸார் கொடுக்க முன் வந்த போலீஸ் பாதுகாப்பையும் வேண்டாம் என்று மறுத்து விட்டார் கல்புர்கி.  இதனால் எல்லாம் தான் அவர் செய்தது முட்டாள்தனம் என்று குறிப்பிட்டேன்.

இந்தியாவில் என்றைக்குக் கருத்துச் சுதந்திரம் இருந்தது?  ஒரு சாதிப் பெயரைக் குறிப்பிட்டு விட்டார் என்பதற்காக 20 ஆண்டுகளுக்கு முன்பு சுஜாதாவின் தொடர்கதை ஒன்று பாதியிலேயே நின்று போனது.  மீறி வெளியிட்டிருந்தால் அந்த வாரப் பத்திரிகையின் சென்னை அலுவலகம் தீயில் எரிந்து போயிருக்கும்.  இதுதான் இந்தியாவில் கருத்துச் சுதந்திரத்தின் நிலை.  இப்போதும் அதே நிலைமைதான்.  என்னால் சில சாதிகளின் பெயரைக் குறிப்பிட்டு எழுத முடியாது.  எழுதினால் கல்புர்கிக்கு நேர்ந்த கதிதான் எனக்கும் நேரும். ஆனால் பிராமண சாதி குறித்து என்ன வேண்டுமானாலும் எழுதலாம். யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.  விஸ்வரூபம் படத்தில் கமல்ஹாசன் “அந்தப் பாப்பாத்தி கிட்ட குடு… சிக்கன் எப்படி இருக்குன்னு டேஸ்ட் பண்ணிச் சொல்லட்டும்” என்று சொல்லவில்லையா?  அது போல. ஆனால் வேறு சாதிகள் பற்றிச் சொன்னால் வெட்டு. ரத்த ஆறு ஓடும். குறிப்பாக என்னென்ன சாதி என்று சொன்னால் நாளையே என் உயிர் போய் விடும்.  அதேபோல் புனித நூல்கள் பற்றியும் என் கருத்தைச் சொல்ல முடியாது.  உயிர் இருக்காது. ஒரே விதிவிலக்கு, பகவத் கீதை.  அதைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். தமிழ்நாட்டில் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.  இதையே கர்னாடகாவில் சொன்னால் கொலைதான். ஏனென்றால், கர்னாடகாவில் எழுத்தாளன் என்றால் இங்கே ரஜினிகாந்த் மாதிரி. ரஜினி மதங்களைப் பற்றி, சாதிகள் பற்றி, புனித நூல்கள் பற்றி, தீர்க்கதரிசிகள் பற்றி தன் மனதில் பட்டதையெல்லாம் சொல்ல முடியுமா? கர்னாடகாவில் யு.ஆர். அனந்தமூர்த்தி ஒரு கருத்து சொன்னால் சென்னையில் உள்ள ஆங்கில ஹிண்டுவில் முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தி போடுகிறார்கள். அவர் இறந்ததும் ஒரு வாரம் துக்கம் அனுஷ்டிக்கிறது கர்னாடகா அரசு. ஒரு நாள் அரசு விடுமுறை.  சவ அடக்கம் அரசு மரியாதையுடன் நடத்தப்படுகிறது.  அதனால்தான் அங்கே கல்புர்கி போன்ற ஒரு எழுத்தாளர் இந்து மதம் பற்றியும் விநாயகர் பற்றியும் தன் கருத்தைச் சொல்லியிருக்கக் கூடாது என்றேன். சொல்ல சுதந்திரம் இல்லை.  மீறிச் சொன்னால் சாக வேண்டியதுதான். நான் சொன்னதில் தவறு எங்கே இருக்கிறது? சரி, இந்து மதம் பற்றிச் சொல்கிறாரே, வேறு மதங்கள் பற்றிச் சொல்வாரா என்றும் கேட்டேன். உடனே எனக்குக் கொலை மிரட்டல். டஜன் கணக்கில் எனக்குக் கொலை மிரட்டல் வந்துள்ளன. எல்லாம் நீண்ட கடிதங்கள்.  அதையெல்லாம் படித்த போது ஒருநாள் நானுமே கல்புர்கி போலவே கொல்லப்படுவேனோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

கல்புர்கி கொல்லப்பட்டது தொடர்பாக நானும் மற்றவர்களைப் போல் கண்டித்து எழுதி உங்கள் நல்லெண்ணத்தைச் சம்பாதித்திருக்க முடியும். ஆனால் குறைந்த பட்ச கருத்துச் சுதந்திரமாவது இங்கே இருக்கிறது என்று தவறாக நினைத்து விட்டேன்.  இதைப் போலவே தான் எல்லா விவகாரங்களிலும் என் கருத்து பொதுப் புத்திக்கு எதிரானதாக உள்ளது.  அதற்கு நான் என்ன செய்ய முடியும்? பெருமாள் முருகன் விவகாரத்திலும் என் கருத்துக்காக சென்னை புத்தக விழா அரங்கில் என்னைப் பல முரடர்கள் சேர்ந்து கொண்டு தாக்க வந்தார்கள். பெருமாள் முருகன் பற்றிப் பேசினாலே உதைப்போம் என்று பகிரங்கமாக மிரட்டினார்கள். என் பாதுகாப்புக்கு வந்த போலீசும் வேண்டாம் என்று சொன்னதால் அந்தக் கூட்டத்தில் வேறு விஷயங்களைப் பேசினேன்.  மூன்று தினங்கள் உயிருக்குப் பயந்து பாதுகாப்புடன் வாழ்ந்தேன். ஒருநாள் போலீஸ் பாதுகாப்பு.  இரண்டு நாட்கள் என் நண்பர்களின் பாதுகாப்பு.

கலாம் விஷயத்தில் மாற்றுக் கருத்தை வைத்ததற்காகவும் கொலை மிரட்டல்தான் வந்தது.  மது விலக்கு விஷயத்திலும் நான் மாற்றுக் கருத்தே கொண்டிருந்தேன். இப்படி ஒவ்வொரு முறையும் பொதுக் கருத்துக்கு எதிராகவே என் கருத்து அமைந்திருப்பதும் அதற்காக மிரட்டப்படுவதும் எனக்குப் பழகி விட்டது. ஆனால் அச்சமாக உள்ளது.  கல்புர்கி வலதுசாரிகளால் கொல்லப்பட்டார். எனக்கு இடதுசாரிகளிடமிருந்தும் கடவுள் மறுப்பாளர்களிடமிருந்தும் தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. முகவரி, புகைப்படத்தோடு கொலை மிரட்டல் கடிதம் எழுதுகிறார்கள் என்பதால் கொஞ்சம் ஆசுவாசம் கிடைக்கிறது; சொல்பவன் செய்யமாட்டான் என்று.   மீறி நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இப்போது அல்ல; எம்.எஃப். ஹுஸேன் விவகாரத்திலும் ஹுஸேனைக் கண்டித்தே எழுதினேன். அவர் வரைந்த படங்கள் ஆபாசமாகவும் அருவருப்பாகவும் இருந்தன; ஏனென்றால், அவை கோடிக் கணக்கான மக்களின் வழிபாட்டுக்குரிய தெய்வங்களாக இருந்தன.

மதுரை சென்றிருந்த போது என்னை ஒரு தாயைப் போல் கவனித்துக் கொண்டவர் அருணாச்சலம்.  எனக்குத் தேவையான புத்தகங்களையெல்லாம் வாங்கிக் கொடுத்தார். ஆனால் சில நண்பர்கள் நான் எழுதியதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் உளறி வைத்திருப்பதைக் கண்டு அவர்களுக்குத் தக்க பதில் அளிக்காமல் “சாருவிடமே என் வருத்தத்தை நேரிடையாகத் தெரிவித்து விட்டேன்” என்று பதில் எழுதியிருப்பது எனக்கு மிகுந்த மன வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது.  நான் எந்தக் கொலையையும் ஆதரித்து எழுதும் ஆள் அல்ல.  தெரிந்தே பாம்புப் புற்றுக்குள் கை விட்டு விட்டு ஐயோ அம்மா பாம்பு கடித்து விட்டதே என்று புலம்பி சாகிறவனை என்னவென்று சொல்லலாம்? கல்புர்கி அப்படிப் புலம்பவில்லை. இது பாம்புப் புற்று அல்ல; கரையான் புற்று என்று சொன்னார் அவர். அதன் விளைவே அவர் மரணம்.  இது விஷயத்தில் போலீஸின் எச்சரிக்கையையும் அவர் கண்டு கொள்ளவில்லை.

மேலும், இது போன்ற விஷயங்களால் என்னை இந்துத்துவர்கள் நட்போடு பார்க்கப் போவதில்லை.  அவர்களைப் பொறுத்தவரை கல்புர்கியை விட ஆபத்தான ஆள் நான்.  காரணம், அவர்கள் முன்வைக்கும் ’இந்தியக்’ கலாச்சாரத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்த்துக் கொண்டிருப்பவன் நான். அவர்களின் செல்லப்பிள்ளை அவர்களை எவ்வளவு விமர்சித்தாலும் ஜெயமோகன் தான். கல்புர்கி விவகாரத்திலும் ஜெயமோகன் இந்துத்துவர்களை விமர்சித்தே இருக்கிறார்.   வலதுசாரிகளின் செல்லப்பிள்ளைக்கு இடதுசாரிகளிடமிருந்தும் பாராட்டு. நானோ வலதுசாரிகளுக்குத் தீண்டத் தகாதவன்.  இடதுசாரிகளின் ஜென்ம எதிரி.

இந்த நிலைமையைப் புரிந்து கொள்கிறீர்களா அருணாச்சலம்? இந்தக் கட்டுரையை என் சார்பாக நீங்கள் எழுதியிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன். என்னை ஒத்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை.  ஆனால் நான் என்ன சொன்னேன் என்பது பற்றிய புரிதல் வேண்டும்.  அதுவும் என் நெருங்கிய நண்பர்களுக்கு.