(பேட்டி எடுத்தவர்: பிச்சைக்காரன்
சூர்ய கதிர், ஃபெப்ருவரி 2015)
1) ஒரு படைப்பின் கருத்தை விமர்சிக்காமல் படைப்பை உருவாக்கியவரைப் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்யும் சூழல் அண்மைக் காலமாக பெருகி வருகிறது. நாவலில் கூறப்பட்ட புனைவுகளை உண்மை என நினைப்பதும், உண்மையை கற்பனை என நினைப்பதுமான இந்தப் போக்கு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பொதுவாகவே தமிழில் ஒரு நவீன இலக்கியப் படைப்பை எப்படி வாசிப்பது என்பது பற்றிய புரிதலோ முன்மாதிரியோ இங்கே இல்லை. ஐரோப்பிய மொழிகளில் ரீடர் என்று ஒருவித வாசிப்பு அனுபவ நூல் மாதிரி உண்டு. உதாரணமாக, என்னுடைய ராஸ லீலாவில் எக்கச்சக்கமான வெளிநாட்டு நூல்கள், நாம் கேட்டிராத இசை மற்றும் சினிமா பற்றிய குறிப்புகள் உண்டு. அதெல்லாம் என்ன என்பது பற்றி ஒரு சீரிய வாசகர் தனியாக ஒரு நூலே எழுதலாம். அது ராஸ லீலா என்ற பிரம்மாண்டமான புனைவு உலகில் நுழைவதற்கு உதவும். கம்ப ராமாயணம், மகாபாரதம், ஆழ்வார் பாசுரங்கள் போன்ற பக்தி இலக்கியப் பிரதிகளுக்கு இது போன்ற விரிவுரைகள், வியாக்கியானங்கள் பல உண்டு. நவீன இலக்கியப் பிரதிகளுக்கும் இப்படிப்பட்ட விரிவான மதிப்புரைகள் வரத் தொடங்கினால் நீங்கள் குறிப்பிடும் நிலை மாறும்.
இன்னொன்றும் சொல்ல வேண்டும். நவீன இலக்கியப் படைப்புகளை இந்த இலக்கியத் துறைக்கு வெளியே உள்ளவர்கள்தான் மதிப்பீடு செய்ய வேண்டும். உதாரணமாக, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் இதைச் செய்யலாம். மேற்கில் இப்படித்தான் நடக்கிறது. ஆனால் இங்கே உள்ள பல பேராசிரியர்களுக்கு சமகால இலக்கியம் பற்றி எதுவும் தெரியவில்லை. ஜெயமோகனின் நாவல் பற்றி என்னிடம் கருத்து கேட்கிறார்கள். என் சமகால எழுத்தாளர் பற்றி நானே எப்படிக் கருத்து சொல்ல முடியும்? இதுவரை ராஸ லீலாவுக்கு ஒரு மதிப்புரையோ விமர்சனமோ வந்ததில்லை. அப்படிப்பட்ட சூழலே இங்கு இல்லை. அதை விடுங்கள். 65 ஆண்டுக் காலமாக எழுதி வரும் அசோகமித்திரன் பற்றி அவரது சமகாலத்தவரான, புகழ் பெற்ற விமர்சகரான வெங்கட் சாமிநாதன் ஒரு நல்ல வார்த்தை கூட இதுவரை சொன்னதில்லை. நவீன தமிழ் இலக்கியத்தின் சாபக்கேடு இது. ஞானக்கூத்தனை தமிழ் நவீன கவிதையின் உச்சம் என்று சொல்லலாம். ஆனால் அவர் பெயரை கமல்ஹாசன் சொன்னால்தான் எல்லோருக்கும் தெரிகிறது. தமிழ்நாட்டில் வாசிப்புப் பழக்கம் உண்டாகும் வரை இந்த நிலை மாறும் என்று எனக்குத் தோன்றவில்லை.
2) காமம் என்பது ஒரு தற்காலிக மரணம். இதை உங்களின் சமீபத்திய படைப்பான ‘எக்ஸைல்’ நாவலில் பார்க்க முடிகிறது. அப்படிப் பார்த்தால் காமம் என்பது பிறப்பு என்றும் சொல்லலாம் அல்லவா? ‘எக்ஸைல்’ நாவலில் வரும் அஞ்சலி காமம் மூலமாகவே புதிதாகப் பிறப்பெடுக்கிறாள். இதன் மூலம் காமம் என்பது மரணம் மட்டுமல்ல; பிறப்புக்கும் அது காரணமாக அமையும் என்கிற கூற்றும் சரிதானே?
எக்ஸைல் நாவலில் இந்திய வேதாந்த மரபின் அடிப்படையில் பிரபஞ்சம் பற்றிய ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 4,32,00,00,000 ஆண்டுகள் நமக்கு ஒரு கல்ப காலம். அது பிரம்மாவின் ஒரு பகல். ஒரு கல்பம் என்பது நான்கு யுகங்கள்.
சத்ய யுகம் = 17,28,000
த்ரேதா யுகம் = 12,96,000
த்வாபர யுகம் = 8,64, 000
கலி யுகம் = 4,32,000
மொத்தம் 4,32,00,00,000 ஆண்டுகள். பிரம்மாவின் இந்தப் பகல் முடிந்து இரவு துவங்கும் போது மீண்டும் 4.32 பில்லியன் ஆண்டுகள் கழிகின்றன. இப்படியாக பிரம்மாவின் ஒரு நாள் முடிகிறது.
இப்படியாக 100 பிரம்மா ஆண்டுகள். நூறாவது பிரம்மா ஆண்டில் பிரம்மா அழிந்து இரண்டாம் பிரம்மா தோற்றம் எடுக்கிறது.
இந்தக் கணிதங்களை முறைப்படுத்தியவர் ஆர்யபட்டா. தற்போதைய கலியுகம் கி.மு. 3102-ஆம் ஆண்டில் துவங்கியது.
எந்தச் சிந்தனையும் இல்லாமல் மேற்கண்ட எண்களால் சொல்லப்படும் காலம் என்பதை தியானியுங்கள். அது உங்களை எங்கே அழைத்துச் செல்கிறதோ அதே இடத்துக்கு அழைத்துச் செல்வது கலவி.
பூமியே… ஒரு தாய் தன் பிள்ளையை அணைத்துக் கொள்வது போல் இந்த மானிடனை நீ அரவணைத்துக் கொள் என்பதாக ரிக் வேதத்தின் பத்தாம் பகுதியில் ஒரு சுலோகம் வருகிறது. இதேபோல் அக்னிக்கும் ஒரு பிரார்த்தனை… காற்றுக்கும் ஒரு பிரார்த்தனை.
கலவியில் மரணத்தை அளிப்பவள் இன்னொரு தாய். கலவியில் ஜனனத்தை அளிப்பவளும் அவளே.
இது எக்ஸைல் என்ற நாவலின் பல பரிமாணங்களில் ஒன்று. இதைக் கண்டு பிடித்த உங்களுக்கு என் நன்றி.
3) பாரம்பரியம், இயற்கை, சுற்றுச் சூழல், மொழி, வனவிலங்குகள் என எதைப் பற்றியும் சுரணை அற்ற தமிழனைப் பற்றி உங்கள் ‘எக்ஸைல்’ நாவலில் காண முடிகிறது. இந்த சுரணையற்ற தன்மை தமிழர்களுக்கு மட்டுமே உரியதா? அல்லது உலகளாவிய மற்ற இனத்தவர்க்கும் பொதுவானதா?
நீங்கள் சைவ உணவுப் பழக்கம் உள்ளவர் என்றால் உங்களுக்கு உரிய இடம் இந்தியா அல்ல; ஐரோப்பா என்றால் நம்ப முடிகிறதா? ஐரோப்பியர்கள் மாமிச உணவு உண்பவர்கள். ஆனால் சைவ உணவு என்றால் அங்கே நூறு விதமான உணவுப் பொருட்கள் உண்டு. சீஸ் கட்டிகளில் கூட நூறு விதம் உண்டு. பாலைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளில் நூறு விதம் உண்டு. காய்கறிகளிலும் அப்படியே.
மரங்களை அவர்கள் வணங்குவதில்லை. ஆனால் மரங்களை வெட்டினால் அது கொலைக்குச் சமமாக எண்ணுகிறார்கள். அங்கே ஒவ்வொரு ஊருமே ஒவ்வொரு வனம் மாதிரி தான் இருக்கிறது. மொழியையும் அவர்கள் வணங்குவதில்லை; ஆனால் (தாய்) மொழி தெரியாதவனை அங்கே மனிதனாகவே மதிப்பதில்லை. வாழ்த்துப் பாடல் பாடி நிகழ்ச்சிகளைத் தொடங்கும் முட்டாள்தனம் அவர்களிடம் இல்லை. ஆனால் – உதாரணமாக, எனக்குத் தெரிந்த ஃப்ரான்ஸை எடுத்துக் கொள்வோம் – ஃப்ரெஞ்ச் மொழி தெரியாவிட்டால் நீங்கள் அங்கே எந்தக் கல்வி நிலையத்திலும் படிக்க முடியாது. ஃப்ரெஞ்ச் தெரியாவிட்டால் நீங்கள் அங்கே டூரிஸ்டாக மட்டுமே சுற்றலாம். மற்றபடி உங்களுக்கு அங்கே எந்த இடமும் கிடையாது. நீங்கள் ஒரு பெண் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கணவர் ஃப்ரான்ஸில் வேலை பார்க்கும் இந்தியர். நீங்கள் ஃப்ரெஞ்ச் மொழியில் சில தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் வாங்க வேண்டும். இல்லாவிட்டால் ஃப்ரான்ஸில் உங்களுக்கு இடம் கிடையாது. இந்தியாவுக்கு மூட்டை கட்ட வேண்டியதுதான். இந்திய மனைவிமார்கள் விழுந்து விழுந்து ஃப்ரெஞ்ச் படிப்பதை அங்கே நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்கள் நம்மைப் போல் பெட்ரோலை அல்லது மண்ணெண்ணையை ஊற்றித் தீக்குளிப்பதில்லை, ஃப்ரெஞ்சுக்காக.
தமிழ்நாட்டில் மட்டுமே எதைப் பற்றியுமே கவலை இல்லாத பொறுப்பற்ற தன்மையைப் பார்க்கிறோம். ஐந்து மாணவ மாணவிகளை ஒரு பைக்கில் ஏற்றிக் கொண்டு சென்று மூன்று பிள்ளைகளைக் கொன்று தானும் செத்தவன் இந்த உலகிலேயே தமிழன் ஒருவனாகத் தான் இருக்க முடியும்.
4) ‘எக்ஸைல்’ நாவலில் மனிதர்களுக்கு நிகராக மீன்கள், நாய், மரம் போன்றவையும் மனதில் நிற்கின்றன. யானையையும் மறக்க முடியவில்லை. இது திட்டமிட்டு அமைக்கப்பட்டதா? மேலும், ‘எக்ஸைல்’ நாவலின் பல பக்கங்கள் பாமரத் தமிழனுக்கு புரியும்படியான எழுத்து நடையில் இல்லையே? என்ன காரணம்?
திட்டமிட்டே செய்தேன். எக்ஸைலை என்னுடைய மற்ற நாவல்களைப் போல் பாமரர்களும் வாசிக்க இயலாது. எக்ஸைலுக்குள் நுழைய சற்று இலக்கியப் பரிச்சயம் தேவை. அந்த நாவலின் கரு அப்படி. எல்லா எழுத்துமே எல்லோருக்கும் புரியும்படியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
5) ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்கிற நம் பண்பாடு விவசாய நிலத்தை வீட்டு மனைகளாக விற்கும் பண்பாடாக எப்படி மாறியது?
தொன்மையான நாகரீகத்தைக் கொண்ட ஈராக், ஈரான், சிரியா போன்ற நாடுகள் இன்று எப்படி சீரழிவின் அடையாளங்களாக மாறிப் போனதோ அப்படியே தமிழ்நாடும் தனது தொன்மையை இழந்து பணம், அதிகாரம் ஆகியவற்றின் பின்னால் போய் சீரழிந்து விட்டது. சினிமாவும் தொலைக்காட்சியும் அந்தச் சீரழிவை துரிதப்படுத்தி வெற்றி கண்டு விட்டன. இன்றைய தமிழ்நாட்டை தொன்மை நாகரீகத்தின் சீரழிவின் குறியீடாகச் சொல்லலாம்.
6) ‘‘வறுமையில் வாழ்ந்துள்ளேன். சாக்கடையில் வாழ்ந்ததில்லை,’’ எனச் சொல்லும் நீங்கள், ‘‘நான் வாழ்ந்த பகுதி இப்போது சாக்கடையாக மாறிவிட்டது’’ என சொல்லி இருப்பீர்கள். இதற்குத் தீர்வாக எதை முன் வைக்கிறீர்கள்?
தீர்வை எந்த எழுத்தாளனும் சொல்ல முடியாது. நோயை சுட்டிக் காட்டுவதே அவன் வேலை. நோய்மையின் மருந்தைத் தேட வேண்டியது ஒரு சமூகத்தின் கடமை.
7) சாரு என்றால் சுயசரிதைத் தன்மை கொண்ட நாவல் மட்டுமே படைப்பார். முழுக்க முழுக்க ஒரு நாவலில் புனைவு எழுத மாட்டார் என்கிற விமர்சனம் பரவலாக உள்ளது. இதை மாற்றி, முழுக்க முழுக்க ஒரு புனைவு நாவல் எழுதும் திட்டம் இருக்கிறதா?
அதை விமர்சனமாக எடுத்துக் கொள்ளலாகாது. நேற்றைய தினசரிகளிலிருந்து கச்சாப் பொருளை எடுத்து கதை எழுதுவதில் ஆழம் இல்லை என்று எழுதியிருக்கிறார் ஜெயமோகன். நேற்று என்பது என்ன? காலம் என்ற நேர்க்கோட்டில் இன்று என்ற புள்ளியில் அமர்ந்திருக்கும் ஒரு மனிதனுக்கு வேண்டுமானால் நேற்று என்பது மிகச் சமீபத்திய விஷயமாக இருக்கலாம். ஆனால் அந்தத் தரைவெளியிலிருந்து மேலே இருந்து பார்க்கும் கலைஞனுக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பாரதமும் ஒன்றுதான்; நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் ஐந்து மாணவர்களை அழைத்துச் சென்று கொன்றவனின் கதையும் ஒன்றுதான். மேலே பறக்கும் கலைஞனுக்கு எல்லாமே புள்ளிகள் தான். பிரம்மாவைப் போன்றவன் எழுத்தாளன். மனிதக் கணக்குகளெல்லாம் அவனுக்கு ஒரு தூசு.
இந்த நிலையில் கதையில் வரும் நான் என்பது இன்றைய சாரு நிவேதிதாவாக இன்றைய வாசகனுக்குத் தெரியலாம். தப்பில்லை. ஆனால் நூறு ஆண்டுகளுக்குப் பின்னே வரும் ஒரு வாசகன் அந்தப் பிரதியையும் அதில் வரும் ”நான்”-ஐயும் எப்படி எதிர்கொள்வான் என்பதை சற்றே யோசித்துப் பாருங்கள்.
மேலும், நான் மட்டுமே சுயசரிதைத் தன்மை கொண்ட புனைவுகளை உருவாக்குகிறேன் என்று சொல்வது தவறு. எனக்கு முன்னே இது போல் எழுதியவர்களில் முதன்மையானவர் க.நா.சு. அவருடைய நாவல்கள் அனைத்திலும் அவர் ஒரு எழுத்தாளராகவே வருகிறார். ஒரு நாவலில் அவர் பெயரே க.நா.சு. அதே நாவலில் தி. ஜானகிராமனும் தி. ஜானகிராமன் என்ற பெயரிலேயே வருகிறார். அந்த வரிசையில் நகுலன், கோபி கிருஷ்ணன் போன்றவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆனாலும் ஒரு மாற்றம் வேண்டி, ‘நான்’ இல்லாத வேறொரு கதையை எழுத இருக்கிறேன். அதற்கான தயாரிப்பு தான் வரும் ஆறு மாதம்.
8) உங்களை ஏன் பெரும்பாலான எழுத்தாளர்கள் புறக்கணிக்கிறார்கள். உங்களின் நண்பர்களும் இதில் அடங்குவர். இந்தப் புறக்கணிப்பு திட்டமிட்டுச் செய்யப்படுகிறதா?
தமிழ் வாசகரின் வழிபாட்டுக்குரிய எழுத்து நாயகர்கள் சுந்தர ராமசாமியும் புதுமைப்பித்தனும். அவர்கள் இருவரையுமே நான் ஆரம்பத்திலிருந்தே மறுதலித்து வந்தவன். என்னுடைய முதல் நாளிலேயே தமிழ் இலக்கியத்தின் இரண்டு பெரிய புனித பீடங்களை உடைத்து நொறுக்கினேன். இப்படியாக, தமிழில் எழுதும் அத்தனை பேரின் வழிபாட்டு நாயகர்களை உடைத்து நொறுக்கிய ஒருவனை அவர்கள் எப்படி அங்கீகரிப்பார்கள்? மேலும், அவர்களுக்கு ஒவ்வாத ஏதோ ஒரு விஷயத்தையே நான் எப்போதும் பேசியபடி இருக்கிறேன். முன்பு இளையராஜா. இப்போது பெருமாள் முருகன். எனவே அவர்கள் என்னைப் புறக்கணிப்பது எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றே.
9) ஜேஜே சில குறிப்புகளை போலி நாவல் எனக் குறிப்பிட்டு, அதை விளக்கும் பொருட்டு நீங்களே தனியாக புத்தகம் வெளியிட்டீர்கள். அதே போல ஜி.நாகராஜனையும் புறக்கணிக்கிறீர்கள். இவர்கள் எழுத்தில் இருக்கும் போலித்தனத்தை இன்றைய வாசகர்களுக்கு சுருக்கமாக விளக்க முடியுமா?
ஜே.ஜே. சில குறிப்புகள் பற்றி நான் எழுதியுள்ள கட்டுரையைப் படியுங்கள். ஒரு தங்க ஆபரணத்தையும் கவரிங் நகையையும் எப்படி அடையாளம் காண்பீர்களோ அதைப் போன்றதுதான் இலக்கியத்தில் நிஜமான படைப்பையும் போலியையும் அடையாளம் காண்பதும். ஒரு கால் நூற்றாண்டில் ஜேஜே சில குறிப்புகள் காணாமல் போய் விட்டது. ஆனால் என்னுடைய ஸீரோ டிகிரி எழுதப்பட்டு இத்தனை ஆண்டுகள் ஆகியும் சர்வதேசப் பரிசுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. என்னுடைய ஒவ்வொரு ஆங்கிலக் கட்டுரைக்குக் கீழும் என்னைப் பற்றிய அறிமுகத்தில் ”His magnum opus, Zero Degree, is considered one of the best in transgressive fiction” என்றே எழுதுகிறார்கள். இதைப் பெருமைக்காகச் சொல்லவில்லை. தமிழின் பிற நாவல்கள் இப்படிச் சென்றிருந்தால் முதலில் பெருமைப்படுபவன் நானாகத்தான் இருப்பேன். ஏனென்றால், என்னை விட தமிழையே நான் அதிகம் நேசிக்கிறேன்.
ஜி. நாகராஜன் விளிம்பு நிலை வாழ்க்கையை romanticize செய்து எழுதியவர். அதில் உண்மை இல்லை. ஒரு பிராமணன் அந்த விளிம்பு நிலை மனிதர்களைப் பார்த்து ஆஹா ஓஹோ என்று வியப்பது மட்டுமே அவருடைய எழுத்தில் காணக் கிடைக்கிறது. ஒரு விளிம்பு நிலை மனிதன் அந்த வாழ்க்கையை எழுதினால் அது நாகராஜனின் எழுத்தைப் போல் இருக்காது. தஞ்சை ப்ரகாஷின் எழுத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நான் சொல்வதை நீங்கள் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ஜி. நாகராஜனை இங்கே எந்த அடிப்படையில் கொண்டாடுகிறார்கள் என்றே எனக்குப் புரியவில்லை. நாளை மற்றுமொரு நாளே என்ற அவருடைய நாவல் எனக்கு சில அசட்டுத் தமிழ் சினிமாப் படங்களை ஞாபகப்படுத்துகிறது. இலக்கியத்திலும் கூட போலிகள் ஜொலிக்க அசல்கள் காணாமல் போகும் துர்ப்பாக்கிய நிலை தான் நிலவுகிறது. தஞ்சை ப்ரகாஷின் பெயர் சொல்ல இங்கே ஆள் இல்லை; ஆனால் ஜி. நாகராஜன் வழிபாட்டுக் கடவுளாகவே மாறி விட்டார்.
10) எழுத்தாளனை சமூகம் மதிப்பதில்லை என்கிறீர்கள். ஆனால் எழுத்தாளனுக்குத்தான் அதிக தோழிகள் கிடைக்கின்றனர். இதன் உளவியல் என்ன?
சவலைப் பிள்ளையைத்தான் தாய்க்குப் பிடிக்கும். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களின் மீதுதான் பெண்களுக்குக் கருணை பிறக்கும். அது தாய்மைக் குணம். காதலியும் தோழிகளும் எனக்குத் தாய் போன்றவர்களே. கருணையின் ஊற்றை பெண்ணின் கண்களிலேதான் என்னால் காண முடிகிறது.
11) படைப்புகளுக்கான விருதுகள் குறித்து உங்கள் பார்வை?
ஐம்பது லட்சம் ரூபாய்க்குக் குறைவான தொகை கொண்ட எதையும் நான் விருதாகவே கருதவில்லை. ஏனென்றால், என் நண்பர் ஒருவர் ஒரு மேட்ரிமனி நிறுவனத்தில் பணி புரிகிறார். மாதச் சம்பளம் ஐந்து லட்சம். வேலை செய்யும் இடம் அமெரிக்கா அல்ல. சென்னை. இந்தச் சூழ்நிலையில் ஒரு படைப்பாளிக்கான விருதுத் தொகை ஐம்பது லட்சம் என்பதுதானே நியாயம்?
மற்றபடி இந்திய விருதுகள் எல்லாமே நான்சென்ஸ். சமீபத்தில் டி.எஸ்.ஸி. விருது பெற்ற ஜும்ப்பா லஹரியின் நாவலைப் போன்ற நாவல்கள் தமிழில் 200 உண்டு. விருதுகள் தகுதி அடிப்படையில் கொடுக்கப் படுவதாகத் தோன்றவில்லை.
12) எழுத்தாளர்கள் பலர் சினிமாவில் இறங்கி வருகிறார்கள். சாருவை எப்போது சினிமாவில் எதிர்பார்க்கலாம்?
கௌதம் மேனனுடன் ஒரு படத்தில் வேலை செய்தேன். படம் வெளிவராமல் போனாலும் ஆறு மாத வேலை. அந்தச் சமயத்தில்தான் அவருடைய தயாரிப்பில் தங்க மீன்கள் என்ற படம் வெளிவந்தது. அப்போது கௌதம் கடுமையான பணப் பிரச்சினையில் சிக்கியிருந்தார். வழக்கு அது இது என்று பெரிதும் மன உளைச்சல். தங்க மீன்களைப் பார்த்தேன். மிகக் கொடுமையான சமூக விரோதமான கருத்துக்களையும், குழந்தைகளின் நலன்களுக்கு எதிரான கருத்துக்களையும் கொண்டிருந்த அந்தப் படத்தை பத்திரிகைகள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடின. கௌதமின் பெரும் பணம் அந்தப் படத்தில் இருந்தது. அவரோ கடுமையான பணச் சிக்கலில் இருந்தார். தங்க மீன்களோ சமூக விரோதக் கருத்துக்களை குழந்தைகளின் மனதில் விதைக்கும் ஆபத்தான படம்.
என் வாழ்க்கையில் செய்த முதலும் கடைசியுமான சமரசம் அந்த சமூக விரோதப் படத்துக்கு நான் விமர்சனம் எழுதவில்லை என்பதுதான்.
ஒரு படத்துக்கே இப்படி என்றால் நான் சினிமாவில் நுழைந்தால் என் தர்மமும் அறமும் என்னாவது? அஞ்சு பத்து லட்சத்துக்கு என் நேர்மையையும் அறத்தையும் விற்க முடியாது. என் உயிரை விட மேலானது என் தர்மம்; என் நேர்மை. அதை என் கால் தூசை விடக் கீழான காசுக்காக என்னால் விற்க முடியாது என்பதை அந்தச் சம்பவத்தின் மூலம் அறிந்து கொண்டேன்.
படத்துக்கு வசனம் எழுதுவது என்பது ஒரு துறையில் முழுமையாக உங்களை சமரசத்துக்கு உள்ளாக்கிக் கொள்வது என்பதே ஆகும். விஸ்வரூபம் படத்துக்கு மிக மிகக் கடுமையாக விமர்சனம் எழுதிய ஜெயமோகன் ஐந்து மணி நேரத்தில் அந்த விமர்சனத்தை எடுத்து விட்டதைக் கொண்டு இதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். அந்தப் படம் முஸ்லீம்களை மிக மோசமாக அவமதிக்கிறது என்ற என் கருத்தையேதான் ஜெயமோகனும் அவரது விமர்சனத்தில் எழுதியிருந்தார்.
ஆனால் எனக்குப் பணத் தேவை இருக்கிறது. மிகக் கடுமையாக இருக்கிறது. என் வெளிநாட்டுப் பயணங்களுக்குப் பணம் வேண்டும். அது என் எழுத்தின் மூலம் கிடைக்காது. சினிமாவில் நுழைந்தால் பணம் கிடைக்கும். ஆனால் அதற்காக என்னையே சினிமாவுக்கு விற்க எனக்குச் சம்மதம் இல்லை. மேலும், என் சினிமா விமர்சனங்களை வாசித்த இயக்குனர்கள் யாருமே என்னை வசனம் எழுத அழைப்பார்கள் என்று தோன்றவில்லை. எந்த மனிதனுக்குமே comfort முக்கியம் இல்லையா? என்னைப் போல் உண்மையை உரத்துச் சொல்லக் கூடிய ஒருவனால் சௌகரியம் கிடைக்குமா? ஒரு ஞானியை அருகில் வைத்துக் கொண்டு உங்களால் கசாப்புக் கடைக்குப் போக முடியுமா சொல்லுங்கள்? எழுத்தாளன் என்பவன் ஒரு ஞானியைப் போன்றவன். பணம், புகழ், அதிகாரம் போன்ற எதற்குமே மயங்கக் கூடாதவனாக இருப்பவனே எழுத்தாளன். இந்த வகையில் சி.சு. செல்லப்பா, க.நா.சு., தருமு சிவராமு என்ற சென்ற தலைமுறையைச் சேர்ந்தவனாகவே என்னைக் கருதிக் கொள்கிறேன். என் அறம் நெருப்பைப் போன்றது. இந்த நெருப்பை என்னிடமிருந்து பெற்றுக் கொண்டு எனக்கும் முன்னே செல்வதற்கு ஏராளமான இளைஞர்கள் இப்போதும் உண்டு என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.
13) யூதாஸ் குறித்து நாவல் ஒன்று எழுதப் போவதாக சொல்லியிருந்தீர்கள். அடுத்த நாவல் அதுதானா?
அது என்னுடைய திட்டங்களில் ஒன்று. அடுத்த நாவல் எது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. ஒரு திட்டம் மனதில் இருக்கிறது. Parricide என்ற விஷயத்தை வைத்து எழுதலாம் என்று இருக்கிறேன்.