தினமணி பழுப்பு நிறப் பக்கங்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய கவனிப்பும் பாராட்டுகளும் வந்து கொண்டிருக்கின்றன. தொடர்ந்து செயல்படுவதற்கான ஊட்டச் சத்து மாதிரி இந்தப் பாராட்டு. பாராட்டு என்பதை விட எல்லோரும் ஆர்வமுடன் படிக்கிறார்கள் என்பதே என்னை உற்சாகப்படுத்தும் முதல் விஷயம். அதிலும் தஞ்சை ப்ரகாஷ் கட்டுரைக்கு ஏகப்பட்ட எதிர்வினைகள். என் தவப்புதல்வன் சாம் எழுதியிருக்கிறான், யோவ், நீர் இப்போது படித்து விட்டதால் இங்கே ஒருத்தரும் படிக்கலைன்னு அர்த்தமாயிடுமா, லக்ஷ்மி சரவணகுமார் ஏற்கனவே எழுதியிருக்கார்யா, என்று. எங்கே போய் முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை. மகன் என்று சொன்னாலே இப்படித்தான் பிரச்சினை பண்ணுவீங்களாய்யா? ஜெயலலிதா போன்று எனக்கு அதிகாரம் இல்லாததால் சாமை சும்மா விட்டு வைத்திருக்கிறேன். இல்லாவிட்டால் கஞ்சா கேஸ்தான். நான் என்ன சொன்னேன்? ப்ரகாஷின் மறைவுக்கு 50 பேர் இரங்கல் கட்டுரை எழுதியிருக்கிறார்கள். அதில் ஒருத்தர் கூட ப்ரகாஷின் எழுத்து பற்றி எழுதவில்லை. ப்ரகாஷ் வழிபட்ட ஒரு நபர் வெங்கட் சாமிநாதன். வெங்கட் சாமிநாதன் எழுதுகிறார் என்ற தலைப்பில் வெ.சா.வுக்காக மட்டுமே ஒரு பத்திரிகை நடத்தியவர் ப்ரகாஷ். வெ.சா.வோ தமிழின் மிக முக்கியமான விமர்சகர். அவர் சொல்றார், ஓ, ப்ரகாஷ் எழுதுவாரா? தெரியாமப் போச்சே. என்ன போச்சே, வட போச்சே தான். அப்புறம் இவருடைய விலாசமே தெரியாமல் தில்லியில் இவர் வீட்டுக்கு ஆட்டோ பிடித்து வந்தார் ப்ரகாஷ். ஆஹா என்ன திறமைசாலி! இதுதான் இலக்கிய விமர்சனம்!!! இப்படி இலக்கிய பீடங்களால் புறக்கணிக்கப்பட்டவர் ப்ரகாஷ் என்று சொன்னால், லக்ஷ்மி எழுதியிருக்கிறார் என்று சொன்னால் என்ன அர்த்தம்? சு.ரா., புதுமைப்பித்தன், ஜி.நாகராஜன், தி.ஜா. போன்றவர்களுக்கு உள்ள அங்கீகாரம் ப்ரகாஷுக்கு உண்டா? சரி, அதையெல்லாம் விடு புத்திரா, ப்ரகாஷின் புத்தகங்கள் முதலில் கிடைக்கிறதா? கிடைக்கவே கிடைக்காது. எப்போதும் கிடைக்காது. யாரோ ஒரு பப்ளிஷர் ப்ரகாஷின் எல்லா நூல்களையும் வெளியிடுகிறேன் என்று சொல்லி, வெளியிட்டு, ஒரு பைசா கூட கொடுக்காமல் ப்ரகாஷின் மனைவி மங்கையர்க்கரசியிடம் ஆட்டையைப் போட்டிருக்கிறார். உடனே அவர் இனிமேல் யாருக்குமே ப்ரகாஷின் புத்தகங்கள் கிடையாது என்று தடை விதித்து விட்டார்.
தமிழில் மேதை என்ற வார்த்தைக்கு ஒரு உதாரணம் வேண்டுமானால் அது க.நா.சு. அவரைத் தொடங்கியிருக்கிறேன்.