ராஜேஷ், அராத்து, கணேஷ் அன்பு, பிரபு காளிதாஸ்…

மேலே சொன்ன பட்டியலில் செல்வகுமாரையும் சேர்க்க வேண்டும்.  ஆனால் அவர் எழுதியதை இன்னும் தொகுக்காமல் இருக்கிறார்.  பிரபு காளிதாஸ் பற்றி நான் எழுதியதற்கு அராத்து முகநூலில் எழுதியதும் அடியேன் அதற்கு எழுதிய பதிலும்…

கொஞ்சூண்டு வெளில தெரியிர மாதிரி ஆளாயிட்டாலே மூளையைச் சுத்தி வேலி போட்டுப்பாங்க ! பெரிய பாறாங்கல்லை தூக்கி தலைல வச்சிகிட்ட மாதிரியே திரிவாங்க.

ஐகான் ஆயிட்டா கேக்கவே வேணாம்.அக்குள்ள கையை வுட்டு கிச்சி கிச்சாங்க் பண்ணா கூட , 45 டிகிரி தலையை வானத்தை பாத்து உசத்தி , தங்கள் கை அழுக்காயிடப் போகுது என டீடிஎஸ் வாய்சில் சொல்வார்கள்.

எதைப்பத்தியும் கவலைப்படாமல் , யாரைப்பத்தியும் யோசிக்காமல் , தனக்கு என்ன தோன்றுகிறதோ , அதை உடனே அப்படியே போட்டு உடைப்பதற்கு தற்போது சாருவை விட்டால் தொலை தூரத்திற்கு ஆளில்லை.தன்னுள் இருக்கும் குழந்தையை கொல்லாமல் வைத்திருக்கும் ஆள் சாரு.

பிரபு காளிதாஸைப் பாராட்டி போட்டிருக்கும் தற்போதைய போஸ்ட் லேட்டஸ்ட் உதாரணம்.

விரைக்க வேண்டியது விரைக்காமல் , உச்சி குடுமி விரைத்துக்கொண்டு திரியும் தமிழ் இலக்கிய விமர்சன ஆர்வலர்களுக்கு , ஜெயமோகன் ச்சும்மா , சாரு லூஸு , எஸ்.ரா வேஸ்ட் .

கடமைக்கு சில படைப்புகளை தட்டச்சி விட்டு , வெறுப்பின் காரணத்தால் குழு அமைத்துக்கொண்டு , அடுக்களை பாலிடிக்ஸையும் மிஞ்சும் வண்ணம் புறம் பேசித் திரியும் பித்துக்குளிக் கூட்டத்துக்கு இடையில் , பிரபு காளிதாஸ் போஸ்டுக்களை சிம்பிளாக , பாசிடிவாக சாரு பாராட்டி எழுதி இருப்பது அவ்வளவு ஆசுவாசமாக இருக்கிறது. குகைக்குள் இருந்து வெளி வந்து மூச்சு வாங்குவது போல உள்ளது.

வாழ்த்துக்கள் பிரபு காளிதாஸு !

அராத்து.

என் பதில்:

நன்றி அராத்து. வாஸ்தவத்தில் பிரபுவிடம் நான் என்ன சொன்னேன் என்று கேளுங்கள். ஒருவேளை அராத்து இந்த போஸ்டைப் படித்துக் கோபப்படுவதற்கு இடம் இருக்கிறது. ஏனென்றால் உங்களை அராத்துவோடு ஒப்பிட்டு எழுதி விட்டேன். ஆனால் நீங்கள் போக வேண்டிய தூரம் இன்னும் எவ்வளவோ இருக்கிறது. அராத்துவின் நாலு வரிகளில் கூட ஒரு தீக்கங்கு தகிக்கிறது. உங்களிடம் அந்த அளவுக்கு இல்லை. ஆனாலும் அற்புதமான பதிவுகள் உங்களுடையது என்று குறிப்பிட்டேன். மேலும், பிரபு காளிதாஸின்  பதிவுகளை எடிட் செய்ய இரண்டு முழு தினங்கள் ஆயிற்று. ஒன்றுமில்லை; ”இதை யூஸ் பண்ணினேன்” என்று எழுதலாகாது. பயன்படுத்தினேன் என்று சொல்லலாம். ”save பண்ணியதில்” என்பதை ”மிச்சப்படுத்தியதில்” என்று அழகாகச் சொல்லலாம். முகநூல் எழுத்தாளர்களுக்காக ஒரு டிக்‌ஷனரியே ஸாரி, அகராதியே போடலாம் என்று தோன்றுகிறது. எப்படியிருந்தாலும், ஒரு அருமையான நாவலைப் படித்தது போல் இருந்தது பிரபு காளிதாஸின் ஒட்டு மொத்த முகநூல் பதிவுகள். ஒரு அரசியல்வாதி வீட்டுத் திருமணத்துக்குப் புகைப்படம் எடுத்ததையும் ஒரு அழகான கர்னாடகப் பாடகி இவருக்குக் கடிதம் எழுதியதையும் ரகளையாக எழுதியிருக்கிறார். சினிமா கவர்ச்சி நடிகைகளைப் புகைப்படம் எடுத்த அனுபவங்கள் ஒன்றிரண்டை என்னிடம் நேரில் சொல்லியிருக்கிறார்.  ஆனால் எழுத்தில் அதை சென்ஸார் செய்து விட்டார். ஆர்வத்துடன் தேடினேன். ம்ஹும். ஏமாற்றி விட்டார்.