சென்ற ஆண்டா, அல்லது அதற்கும் முந்தின ஆண்டா, ஞாபகம் இல்லை. தற்கொலைக் குறுங்கதைகள் என்ற அட்டகாசம் நடந்தது. வழக்கம் போல் எழுத்தாளர்கள் மூடிக் கொண்டு விட்டார்கள், இந்தக் குப்பையை எல்லாம் பற்றி நாம் பேச வேண்டுமா என்று. இந்த உயிர்மைக்காரனுக்கும் வேறு வேலை இல்லை; எந்தெந்தக் கருமத்தையெல்லாம் போட்றான். ஒருத்தரும் என்னிடம் சொன்னதில்லை. அவர்கள் நினைத்தது எனக்குத் தெரியும்.
இந்த ஆண்டு அப்படி ஒரு அட்டகாசம் நடக்கப் போகிறது. பிரபு காளிதாஸ். இதெல்லாம் இண்டர்நெட் வந்த பிறகு வந்தது. இது ஒரு புதிய வடிவம். குறுங்கதைகள். குறுங்கட்டுரைகள். குறுஞ்செய்திகள். என்ன பெயரிடுவது என்றே தெரியவில்லை. அசத்தியிருக்கிறார் மனிதர். என்னுடைய வாசகர் வட்டத்திலிருந்து வரும் நான்காவது ஐந்தாவது படைப்பாளி. ராஜேஷ், அராத்து, கணேஷ் அன்பு, செல்வகுமார்… இப்போது பிரபு காளிதாஸ். புத்தகம் வெளியே வரும் வரை வெளியே சொல்லக் கூடாது என்பது மரபு. ஆனாலும் என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அதனால் பின்வரும் ஒரே ஒரு பகுதியை மட்டும் – அதில் வரும் ஒரு எழுத்தாளரின் பெயரை மட்டும் எடுத்து விட்டுத் தருகிறேன். என்ன பெயர் என்பதை புத்தகம் வந்த பிறகு பார்த்துக் கொள்ளுங்கள். அதுவரை உங்கள் யூகத்துக்கு…
”’டிக் டிக் டிக்’ படம் என் பால்ய நாட்களில் ஒரு பத்து முறைக்குமேல் பார்த்திருப்பேன். காரணம், இசையோ கதாநாயகனோ அல்லது வேறு எதுவோ இல்லை. அப்போதெல்லாம் வேறு வழியில்லை. தூர்தர்ஷனில் என்ன போடுகிறார்களோ அதை தேமே என்று பார்த்தே ஆகவேண்டும்.
இப்படி பத்து முறைக்கு மேல் ’டிக் டிக் டிக்’ பார்த்தால் அதில் ஒரு டயலாக் மட்டும் கம்பளியில் கக்கா ஒட்டிக்கொண்டது போல் இறங்கிவிட்டது. வில்லன் வரும்போதெல்லாம் ஒவ்வொருமுறையும் அமைதியாகச் சொல்லுவார், “எனக்கு எல்லா நியாங்களும் தெரியும், எல்லா தர்மங்களும் தெரியும்” என்று. இதே தொனிதான் மிகவும் துல்லியமாக —————– கட்டுரைகளில் தெரிகிறது.”