தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் அவலம்…

“இன்று கனமான இலக்கிய ஆசிரியர்களும் கூட பொது ஜனங்களிடம் தங்கள் பெயர்களை அறிமுகப்படுத்துவதற்கு இந்தப் பத்திரிகைகளைத்தான் நம்பியிருக்க வேண்டியதாக இருக்கிறது. வேறு விதமாகப் பொது ஜனத்தின் சிறு பகுதியைக் கூட கவனத்தைக் கவர சாதனம் எதுவும் இல்லை. பலதரப்பட்ட வழிகளில், ஓரளவு கௌரதை குறைவான வழியில் கூடப் பத்திரிகைகளில் தங்கள் பெயர்கள் வந்தாக வேண்டுமே என்பதற்காக நல்ல இலக்கியாசிரியர்களும் கூடக் கட்டுப்பட்டு, கட்டுப்படுத்திக் கொண்டு எழுத வேண்டியதாக இருக்கிறது. எழுதுவதை இலக்கியமாகக் கவனிக்க மறுக்கிற, அலட்சிய புத்தியுள்ள ஜனங்களின் கவனத்தைக் கவர வேண்டியதாக இருக்கிறது. பொழுதுபோக்காக மட்டுமே படிப்பதில் சிரத்தை உள்ள வாசகர்கள் கேட்பதைத் தர மறுத்தும் அவர்கள் அங்கீகாரத்தைப் பெற வேண்டியதாக இருக்கிறது.

ஆனால் இலக்கியாசிரியன் கெட்டிக்காரத்தனமாக ஒதுங்கி நின்று – தன்னை வெறுக்கின்ற சமுதாயத்தை விட்டு ஒதுங்கி நின்று தனது முயற்சிகளைச செய்து கொண்டிருக்கிறான். மௌனமாக, வாசகர் கவனத்தையும் கவர விரும்பாமல் – திருட்டுத்தனமாக என்று கூடச சொல்லலாம் – எழுதி சிருஷ்டித்துக் கொண்டிருக்கிறான்.”

இதை க.நா.சு. 1959-ஆம் ஆண்டு ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் எழுதியிருக்கிறார்.
இலக்கியம் பற்றிய சுரனையுணர்வு சிறிதும் இல்லாத ஒரு ஃபிலிஸ்டைன் சமூத்தில் ஒரு எழுத்தாளனாக வாழ்வதன் தேவை, அதனால் அவனுக்கு ஏற்படும் பாதங்கங்கள், அதற்காக அவன் செய்யும் தியாகங்கள், அவன் எதிர்கொள்ளும் அவமானங்கள் பற்றி க.நா.சு. அவரது இலக்கிய வட்டம் பத்திரிகையில் பக்கம் பக்கமாக எழுதிக் குவித்திருக்கிறார். அது எல்லாமே – அது எழுதப்பட்டு அரை நூற்றாண்டு ஆகியும் இன்றும் பொருந்துவதாக உள்ளன.
இலக்கிய வட்டம் இதழ் 12.2.1965 தேதியிட்ட இதழில் க.நா.சு. எழுதுகிறார்:
“அரசாங்கமும் அதிகாரிகளும் மற்ற எல்லோருக்கும் முக்கியத்துவம் அளித்து, இலக்கியாசிரியனை அறியாமையால் புறக்கணிக்கும் போது நாட்டில் பண்பாடு குறைகிறது. அறிந்து புறக்கணிக்கும் போது சர்வாதிகாரம் வளருகிறது.”

 

மேலே எழுத்தாளன் என்றும் இலக்கியாசிரியன் என்றும் இருவேறு விதமாக க.நா.சு. யாரைக் குறிப்பிடுகிறார் என்று பார்ப்போம்.

“உள்ளது மாறி இருக்க வேண்டியதை உருப்பெறச் செய்ய இடைவிடாத போராட்டம் அவசியமாகிறது. இந்தப் போராட்டத்தை, தன் எழுத்தில் காட்டுபவனையே எழுத்தாளன், இலக்கியாசிரியன் என்று சிறப்பாகப் பாராட்ட வேண்டும். உள்ளதை மாற்றி எதிர்காலத்தை யூகிக்க முயலுபவனைக் கவி என்று சொல்லலாம். கலைஞன் என்று சொல்லலாம். உள்ளதை உள்ளபடி இன்றைக்கும் மட்டும் தேவைப்படுகின்ற அளவில் கூறுபவனை நல்ல பத்திரிகாசிரியன் என்று சொல்லலாம். உள்ளதை ஏற்காமல் பழமையை மட்டும் போற்றித் தொழுது கொண்டிருப்பவனை சனாதனி , பண்டிதன் என்று கூறலாம்.”

மேலே உள்ளதை க.நா.சு. தனது இலக்கிய வட்டம் 3.1.1964 இதழில் எழுதியிருக்கிறார்.
இதையெல்லாம் ஞாபகத்தில் இருத்திக் கொண்டு பின்வருவதைப் படியுங்கள்.

பொதுவாக நான் தமிழில் வாசிப்பதை விரும்புவதில்லை. காரணம், எழுத்தாளர்களை மதிக்காத லும்பன் சமூகமாக இருப்பதால் எதைப் படித்தாலும் அது மன உளைச்சலை உண்டாக்கி, ரத்த அழுத்தத்தை அதிகமாக்கி விடுகிறது. இருந்தாலும் அவ்வப்போது படிக்கத்தானே வேண்டியிருக்கிறது? அப்படிப் படிக்கும் போதெல்லாம் பின்மண்டையிலேயே மரண அடி விழுகிறது. தமிழ் இந்து நாளிதழைப பற்றி எவ்வளவோ எழுதியிருக்கிறேன். தமிழ்ச் சமூகத்தில் அந்த நாளிதழ் ஒரு கலாச்சார விழிப்புணர்வு ஏற்படுவதற்குக் காரணமாக அமைநதிருக்கிறது என்பதைப பலமுறை எழுதியிருக்கிறேன். தொடர்ந்து அந்த நாளிதழை வாசித்து வருகிகிறேன். அதில் வரும் சமஸின் கட்டுரைகள் பற்றியும் பலமுறை சிலாகித்து எழுதியிருக்கிறேன். ஆனாலும், எப்படியிருந்தாலும், இலக்கியம் அறியாத – இக்கியவாதிகளை மதிக்கத் தெரியாத ஒரு லும்பன்/ஃபிலிஸ்டைன் சமூகத்தின் பிரதிநிதியாகத்தான் நான் மிகவும் மதிக்கும் சமஸ்-உம் இருக்கிறார் என்பதை நேற்றைய அவர் கட்டுரை சுட்டுகிறது. இவ்வளவுக்கும் சமஸ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், நாவலாரியர்கள் மத்தியில் பணி புரிகிறார். அந்தக் கொடுப்பினை எல்லாம் எனக்குக் கிடைத்ததில்லை. மிகக் கேவலமான ரசனை உணர்வுள்ள குமாஸ்தாக்களின் மத்தியில் நான் பணிபுரிந்தேன். எல்லாம் ராஸ லீலாவில் எழுதியிருக்கிறேன். க்ரியா ராமகிருஷ்ணன் போன்ற தமிழ் உலகம் மறந்து விட்ட தமிழ்ப் பதிப்பாளர்களை எல்லாம் தேடித் தேடிப் போய் சந்தித்து கட்டுரை எழுதுபவர் சமஸ். அதேபோல் ஜோ டி க்ரூசையும் பேட்டி கண்டு எழுதினார். இப்படி ஏராளம் சொல்லலாம். சமசின் சமூக அரசியல் கட்டுரைத் தொகுப்புக்கு நான் முன்னுரையே எழுதியிருக்கிறேன். அப்படிப்பட்ட சமஸ் நேற்று இந்துவில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். தேதி: 22. 9.2015.

நம்முடைய கர்ண பரம்பரை மரபுகள் மடியப் போகின்றன என்ற தலைப்பில் துவங்கும் கட்டுரை அது. அதன் துவக்கப் பத்திகள்:

“அலுவலக வரவேற்பறையிலிருந்து ‘செ.கணேசலிங்கன் வந்திருக்கிறார்,’ என்று தகவல் வந்தது. தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். ஈழத்தில் மார்க்சியப் பார்வையுடன் எழுத ஆரம்பித்தவர்களில் முன்னோடி. நாவல், சிறுகதை என்று புனைவுகளில் மட்டும் இல்லாமல், சமயம், சமூகவியல், அரசறிவியல், பெண்ணியம், கலை, திறனாய்வு என்று சகலப் பிரிவுகளிலும் எழுதிக் குவித்தவர். எல்லாவற்றையும் விட ஈழப் போராட்டத்தின் முக்கியமான சாட்சியங்களில் ஒருவர். ஒரு காலத்தில் போராளிகளுக்கு அரசியல் பாடம் எடுத்தவர். வயது இப்போது 87 ஆகிறது.

கணேசலிங்கன் நல்ல பேச்சாளியும் கூட. ஒரு காஃபி உள்ளே போனால், இலங்கை, மஹிந்த ராஜபட்ச – விக்கரமசிங்க  உள் கதைகள், புலிகள் விட்டுப் போன தங்கச சுரங்கம் என்று வெள்ளமாகப் பேச்சு பாயும். வரவேற்பரைக்குள் சென்ற போது கையில் ஒரு புத்தகத்துடன் சிரித்துக் கொண்டிருந்தார். ‘கொழும்பு போய் வந்தேன். இது புது நாவல். ‘சுசிலாவின் உயிரெச்சம்.’ போன முறை கொடுத்து விட்ட ‘பாலு மகேந்திரா’ புத்தகம் வாசிச்சீங்களா?’

புத்தகத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பதற்காக பேனாவை எடுக்கும் போது விரல்களில் அத்தனை நடுக்கம். பிரமிப்பாக இருந்தது. கடந்த ஒரு வருஷத்தில் அவர் எழுதியிருக்கும் மூன்றாவது புத்தகம் இது. கணேசலிங்கன் சென்ற பின் சகாக்களிடம் இது பற்றிப் பேச்சு ஓடியது. சாரி சொன்னார். “அந்த உயிரிடம் சொல்ல அவ்வளவு இருக்கிறது; அவற்றை முடிந்தவரை யாரிடமாவது சொல்லிவிட அது துடிக்கிறது. அதுதான் அவரைத் தொடர்ந்து இயக்குகிறது.”

 
இலக்கியம், எழுத்து, எழுத்தாளன் என்றால் என்னவென்று தெரியாத ஒரு பத்திரிகையில் இப்படி வந்திருந்தால் எனக்கு ஆச்சரியம் இல்லை. எழுத்தாளர்களுக்கும் சமூகத்தில் ஒரு இடமும் அடையாளமும் கிடைக்க வழி செய்யும் ஒரு பத்திரிகையில், சமூகத்தில் அரசியல், கலாச்சாரத் தளங்களில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தப பாடுபடும் ஒரு பத்திரிகையில் இப்படி ஒரு கட்டுரை வந்துள்ளது. சமூகத்தின் எல்லாத் தளங்களில்லும் நடந்து வரும் சுரண்டலையும், அநீதிகளையும் தொடர்ந்து சாடி வரும் ஒருவர் இப்படி எழுதியிருக்கிறார்.

நான் சமஸின் இடத்தில் இருந்திருந்தால் இவ்வளவு பெரியவர் என்னைத் தேடி வந்தது என்னை அதிர்ச்சி கொள்ள வைத்து விட்டால் என் அலுவலக சகாக்கள் முன்னிலையிலேயே செ.கணேசலிங்கன் என்ற அந்த மூத்த எழுத்தாளனின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தேன் என்று எழுதியிருப்பேன்.

ஆனால் ஒரு 87வயதான முத்த எழுத்தாளர் – அதிலும் போர்களத்தால் ரணமான தேசத்தை சேர்ந்தவர் – ஒரு பத்திரிகை அலுவலகத்துக்குச சென்று கட்டுரையாளரை நேரில் சந்தித்துத் தன் புத்தகத்தைக் கொடுக்க வேண்டும். என்ன மாதிரி சமூகம் ஐயா இது! அதிலும் சமஸின் வயது ஒரு முப்பது இருந்தால் அதிகம். கணேசலிங்கத்தின் பேரன் வயது. இது மற்ற எழுத்தாளர்களுக்குச சொல்லும் செய்தி என்ன? இனிமேல் எல்லா எழுத்தாலன்களும் தங்கள் புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு பத்திரிக்கை ஆபீஸ்களுக்கு ஓட மாட்டார்களா? ஏற்கனவே சமூகம் எழுத்தாளன்களை ‘நான் கடவுள்’ பிச்சைக்காரக் கூட்டம் மாதிரி நடத்துகிறது என்று தொடர்ந்து நாள் தோறும் எழுதிக் கொண்டிருக்கிறேன். இதற்கிடையில் இப்படிப்பட்ட அவமானங்கள் வேறு. கேவலம். மானக்கேடு. எழுத்தாளன்கள் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் என்று தோன்றுகிறது. அப்படியே கணேசலிங்கம் வந்திருந்தாலும் கூடஒரு பத்திரிகையில் இப்படி எழுதலாமா? எழுத்தாளனைக் கொண்டாடாத சமுகம் என்று நான் எழுதும் போது, “உங்களையெல்லாம் யானையில் வைத்து ஊர்வலம் விடணுமா?” என்று என்னைக் கிண்டல் செய்வார்கள் பலர். யானை ஊர்வலம் எல்லாம் வேண்டாம். இப்படி செருப்பால் அடிக்காமல் இருந்தால் போதும்.
தமிழ்நாட்டில் எழுத்தாளனாக வாழ்வது போன்ற ஒரு கேவலம் வேறு எதுவும் இல்லை.

அநுபந்தம்:

பொதுவாக இப்படி ஊடகங்களை விமர்சனம் செய்யும் போது நான் என்னையே களப்பலி கொடுத்துக் கொள்கிறேன்.  இந்த முறையும் அப்படியே…

நண்பரின் கணினியில் பிழைகள் அதிகம் வருகின்றன.  பொறுத்துக் கொள்ளுங்கள்.  அன்றைய மேற்கோள் எதற்காக எழுதுகிறேன்.  தி. ஜானகிராமன்.  சரியாகச சொன்னவர் பிரபு காளிதாஸ்.