படித்ததில் பிடித்தது…

ஹ்யூமருக்கு டைமிங் சென்ஸ் ரொம்ப முக்கியம்னு சொல்வாங்க.  ட்ராஜடிக்கும் டைமிங் சென்ஸ் ரொம்ப முக்கியம்தான் போல.  மாசக் கடேசில போட்டதால யாரும் பணம் அனுப்பல.  ஒரு அய்நூர் ரூவா வந்துது. அநேகமா இன்னோர் தடவைப் போட்டுட்டு இனிமே பணம் அனுப்புங்க பிஸினஸை விட்டுர்லாம்னு இருக்கேன்.  பார்க்கலாம்.  இப்டியா ரொம்ப சோகத்துல இருந்த டைம்ல மதுரை அருணாசலம் எழுதின ஃபேஸ்புக் பதிவு ஒன்னு படிச்சு செம ஜாலியாப் போச்சு.  பின்னால வருது.  இது சம்பந்தமா என் மேல கேசு கீசு போட விரும்பும் நலம் விரும்பிகளுக்கு ஒரே ஒரு விஷயம்தான்.  இது நான் எழுதினது இல்ல.  ஃபேஸ்புக்ல திரு அருணாசலம் எழுதினது.  மத்தபடி மேட்டர்ல ஒரே ஒரு குறைதான்.  கமல் இந்துக்களையோ பிராமணர்களையோ திட்டி ஒன்னுமே சொல்லல.  அதுதான் ஒரு மாதிரியா இருக்கு.  அதுவும் தீபாவளி அன்னிக்கு இந்துக்களை திட்டாட்டி சரியா இருக்காதேன்னு பார்க்கிறேன்.  எப்டியோ, இது மாதிரி ஒன்னு ரெண்டு கொற இருந்தாலும் மொத்தத்துல பதிவு செம.  அதுலயும் கடேசி வரி, ”யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை”ன்னு போட்ருக்காரு பாருங்க… அருணா நீங்க எங்கியோ போய்ட்டீங்க…  (ஒரு ஆசிரியருக்குள்ள இத்தன வம்புதும்பான ஆளா?)

 

கமல்ஹாசன் போத்தீஸ் கடை விளம்பரத்தில் நடிக்கிறார்…. தீபாவளிக்கு வெளியிடப்படும்… இன்றைய தினமலர் செய்தி.

கண்டிப்பாக தீபாவளி அன்றோ பொங்கல் அன்றோ மதன் கமலை டிவியில் பேட்டி எடுப்பார்.. ( அது வரைக்கும் என்னால பொறுக்க மிடியாது.. இப்பிடித் தான இருக்கும்.. எவ்வளவு பேட்டிகள் பாத்திருக்கோம்… )

மதன் : சார்.. சார்.. சார். வணக்கம்.

கமல் : நான் இங்க தான் இருக்கேன் மதன்.
.

மதன் : சார், அறிவுஜீவியான உங்களுக்கு இந்த விளம்பரத்ல நடிக்கனும் அப்டின்னு ஏன் தோணுச்சு..

.
கமல் : என்னோட சின்ன வயதிலிருந்தே, அதாவது சண்முகம் அண்ணாச்சிக்கு பெரிய வயதாக இருந்த போதே நான் விளம்பரத்ல நடிக்கனும்னு நினைத்திருந்தேன்.. நடுவுல டைம் கிடைக்காததால அல்லது இப்ப டைம் இருக்கிறதால அப்டின்னு எப்படி வேணாலும் வைத்துக் கொள்ளலாம்.. இது தான் சத்தியம். உண்மை. மக்களுக்கும் இது தெரியும் ன்னு நினைக்கிறப்போ கூடுதல் மகிழ்ச்சியாகவும் எனக்குப் புரிகிறது.

மதன் : சார், விளம்பரப் படங்களில் நடிப்பதில் நீங்கதான் முன்னோடி அப்பிடின்னு நினைக்கிறப்ப, குறிப்பாக எனக்கும் உங்களுடைய உலகளாவிய ரசிகர்களுக்கும் உங்களின் தொலைநோக்கையும் மேதமையையும் பாராட்டாமல் இருக்க முடியாது… ஆனா.. இன்னும் என்னால நம்பவே முடியல,.. நீங்க நடிச்சிருக்கீங்கன்னு… விளம்பரத்ல வாழ்ந்து இருக்கீங்க.. அப்பிடின்னு தான் எல்லாரும் நம்புறாங்க.. அது எப்பிடி சார். உங்களால மட்டும் இப்படி புதுமையா யோசிக்க முடியுது…

கமல் : போத்தீஸ் விளம்பரத்ல நான் நடிச்சதுக்கு கண்டிப்பாக நான் தான் முன்னோடி என்பது எனக்கு புரிகிற அதே வேளையில், இந்தப் புதுமை ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும், போத்தீசுக்கும், ஏன் உங்களப் போல சீனியர் மீடியா ஆட்களுக்கும் புரிகிறது என்பதில் தான் என்னுடைய வெற்றி இருக்கிறது என்பது எனக்கும் பெருமையாக உள்ளது. நீங்க ஏன் இவ்வளவு லேட்டா வந்தீங்க அப்டின்னு நீங்க கேக்குறது எனக்கு புரிகிற அதே நேரத்தில், தம்பி மாதவன் ஃளாட்ஸ், பில்டிங் பிரோமொஷன், விஜய் அலூக்காஸ், சூர்யா சரவணா ஸ்டோர்ஸ் , சத்யராஜ் ஈமு கோழி, குமரன் சில்க்ஸ் அப்டி இப்டினு அவங்கவங்க விளம்பரங்கள்ள முன்னோடிகளாக இருந்ததும் நினைவுக்கு வராமல் இல்லை. என்னோட இந்தப் புதுமை லேட்டானதுக்கு என்னுடைய சொந்தப் பட ரிலீஸ், டி.டி.எச் விநியோகப் பிரச்சினைகள், இந்தியாவை விட்டு விட்டு வெளிநாட்டில் வசிக்கலாமா போன்ற பிரச்சினைகளே காரணம் என்பதை நீங்களும், எல்லோரும் ஏன் எனக்கே கூட நன்றாகவே தெரியும் என்பது அனைவருக்கும் புரியும்.

மதன் – சார்… இந்த போத்தீஸ் விளம்பரம் குறித்து எதேனும் சுவையான அனுபவங்களை சார் நீங்கள் விரும்பினால், எங்களுடன் சார், பகிர்ந்து கொள்ளலாமா சார்…

கமல் : இதுல விருப்பம் அப்பிடிங்கிறத தாண்டி, கடமை ன்னு ஒன்னு நடிகனுக்கு இருக்கிறதாகத் தான் நான் நம்புகிறேன்… சுருக்கமா நான் இந்த விளம்பரத்த பத்தி பேசுனால உங்களுக்கு சுவையாத்தான் இருக்கும். இது ஜவுளிக்கடை சார்ந்தது.. பல தளங்களில் வியாபாரத்திற்காக செயல்படுகிறது..

ஒவ்வொரு மாடிக்கும் தனித்தனி சிறப்புகள்.. ஒரு தளம் பெரியவர்கள் ஆவதற்கு முன்னாடி உள்ள சிறுவர்களுக்கு…. மற்றொன்று சிறுவர்கள் ஆவதற்கு முன்னால கண்டிப்பா குழந்தைகளாக இருப்பவர்களுக்கு, குழந்தைகளுக்கு ஆதிகாரணமாக எப்போதும் இருக்கிற வயது வந்த ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் உள்ளது.. ஆனா எல்லாத் தளங்களுக்கும் எல்லோரும், ரசிகர்கள் உள்பட யாவரும் போகலாம்.. வணிகத்தில் கலந்து கொள்ளலாம்.

போத்தீஸ் கடை இருக்கிற எல்லா ஊர்களிலும், போத்தீஸ் கடையே இல்லாத ஊர்களிலும் உள்ள யாவரும், எல்லா போத்திஸ் கடைகளுக்கும் சென்று பயன்பெறலாம் என்பது தான் மிகச் சுவையான அனுபவம் என்பதும் என்னுடைய கருத்தும் அது தான் என்பதும் கண்டிப்பாக மதன் உங்களுக்கும் புரிந்திருக்கும்….

மதன் : வழக்கம் போல மிகச் சிறப்பாக உங்களது பேட்டி அமைந்துள்ளதில் எனக்கு எந்த வியப்புமில்லை.. உங்களது… இல்லையில்லை ….எங்களது அதாவது உங்களின் ரசிகர்களின் ஆஸ்கார் கனவு கூடிய விரைவில் நிறைவேறும். கிடைக்கும்.. கிடைக்க வேண்டும் என்று உங்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டு, உங்கள் அனுமதியுடன் விடை பெறுகிறேன் சார்.. வணக்கம்
.

கமல் : நமக்குள்ள என்ன மதன் அனுமதி அது இதுன்னு கேட்டுக்கிட்டு.. நீங்க ஒரு மூத்த விமர்சகர்.. என் நண்பரும் கூட… நன்றி.. வணக்கம்.. தீபாவளி கொண்டாடுவோருக்கும் , கொண்டாடதோருக்கும் என் வாழ்த்துக்கள்..
.

( விளம்பரத்தில் கமல் கலக்குவார்.. சந்தேகமில்லை … ஆனால் பேட்டியை நினைத்தால் தான் சற்று டரியலாக உள்ளது. இப்பதிவு முழுக்க நகைச்சுவைக்காவே … யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கில்லை )