அவந்திகா அடிக்கடி என்னிடம் வந்து நீ எனக்குக் கடவுளின் கொடை என்று ஆங்கிலத்தில் சொல்லும் போது நான் ஒரு மாதிரியாகப் பார்ப்பேன். அது எப்படி சம்பாதிக்காமல் வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு கணவனை ஒரு மனைவிக்குப் பிடிக்க முடியும் என்பது என் உள்ளார்ந்த சந்தேகம். ஒருவேளை இவள் விமர்சகர் வட்டத்தில் இருக்கிறாளோ என்று கூட நினைத்திருக்கிறேன் என்றால் பாருங்களேன்.
ஆனால் சமீபத்தில் அவள் ஒரு ஆத்மார்த்தமான குரலில் (அப்படி என்று ஒரு குரல் இருக்கிறதா? அதெல்லாம் எனக்குத் தெரியாது; அப்போது அவளுடைய குரல் இருந்த விதத்தை வேறு எப்படியும் என்னால் சொல்ல முடியவில்லை) “நீ பாரதியின் வாரிசு; அவனிடமிருந்த நெருப்பு உன்னிடம் இருக்கிறது; அதை எக்காரணம் கொண்டும் அணைய விட்டு விடாதே; உன்னுடைய இறுமாப்பும், கர்வமும், ’தர்மத்தின் பக்கம் நிற்கிறேன்’ என்ற திமிரும்தான் உன்னிடம் எனக்குப் பிடித்ததே… அதை விட்டு விடாதே” என்று சொன்னபோது கமல்ஹாசனின் தூங்காவனத்தை நினைத்தேன்.
பிரபு காளிதாஸ் புண்ணியத்தில் இப்போதெல்லாம் தினம் ஒரு சினிமா பார்க்கிறேன். நல்ல படங்கள். ஆனாலும் இடையே சில மொக்கைகள் சிக்கி விடுகின்றன. அப்படித்தான் ஸ்லீப்லெஸ் நைட் ஃப்ரெஞ்சுப் படத்தைப் பார்த்தேன். த்ரில்லர். ஒரு போலீஸ் அதிகாரி கடத்தப்பட்ட கொகெய்னைக் கைப்பற்றுகிறான். ஆனால் அந்த கொகெய்ன் ஒரு நைட் க்ளப் உரிமையாளனுக்குச் சொந்தமானது. அவன் போலீஸ்காரனின் மகனைக் கடத்திக் கொண்டு வந்து வைத்துக் கொண்டு, கொகெய்னைக் கொடு, மகனைத் தருகிறேன் என்கிறான்.
உடனே போலீஸ் என்ன செய்ய வேண்டும்? ஒழுங்கு மரியாதையாக கொகெய்னைக் கொடுத்து விட்டு பிள்ளையை மீட்க வேண்டியதுதானே? இதற்கிடையில் போலீஸின் குடும்பம் ஓரிரு நிமிடங்களில் வருகிறது. மனைவி அவனை விட்டுப் பிரிந்தவள். மகன் இவனிடம் இருக்கிறான். (அப்படித்தான் நினைக்கிறேன். படத்தில் ஒன்ற முடியாததால் தப்பாகவும் இருக்கலாம்.) மகனுக்கும் அப்பனுக்குமே ஆகவில்லை. ம்ஹும். அப்படிச் சொல்லக் கூடாது. மகனுக்கு அப்பனைப் பிடிக்கவில்லை. அப்பனிடம் முரட்டுத்தனமாகவும் அன்பில்லாமலும் நடந்து கொள்கிறான்.
அந்தப் பிள்ளைதான் நைட் க்ளப் உரிமையாளனிடம் மாட்டிக் கொண்டிருக்கிறான். இப்போது போலீஸ் என்ன செய்ய வேண்டும்? பல கோடி ரூபாய் மதிப்புள்ள கொகெய்னை நைட் க்ளப் டாய்லட்டில் ஒளித்து வைத்து விட்டு, அதிலிருந்து ஒரே ஒரு சிறிய பாக்கெட்டை மட்டும் எடுத்துக் கொண்டு போய் நைட்க்ளப் ஆளிடம் கொடுக்க, அவன், “டேய் போலீசு… நான் என்ன கேணப்பயலா? எல்லா பாக்கெட்டையும் குட்றா?” என்று ஃப்ரெஞ்சில் கத்த, போலீஸ் டாய்லட்டில் வந்து பார்த்தால் கொகெய்ன் கோய்ந்தா… அப்புறம் என்ன நடந்தது, போலீஸ் மகனை மீட்கிறாரா இல்லையா என்பதெல்லாம் வெள்ளித் திரையில்.
படம் பூராவும் ஒரே அடிதடிதான். கமலுக்கு என்னைப் பிடிக்காவிட்டாலும் நான் அவர் படங்களை விடாமல் பார்த்து விடுவேன். தமிழ் சினிமாவின் ஒரே புத்திஜீவி. விடலாமா? ஆனால் தூங்காவனம் பார்க்க மாட்டேன். ஏனென்றால், அடிப்படை தர்க்கமே இடிக்கிறது. மகனை வைத்துக் கொண்டு மிரட்டும் நைட் க்ளப் உரிமையாளனிடம் போய் கொகெய்னைக் கொடுக்காமல் ஒருத்தன் விளையாடுவானா?
படத்தில் ஒரே ஒரு இடம் ரொம்பப் பிடித்திருந்தது. மகன் மாட்டிக் கொண்டிருக்கிறான். அவனை மீட்பதற்காக போலீஸ்காரன் செய்யும் அத்தனை முயற்சியும் வீணாகிக் கொண்டு வரும் போது ஒருமுறை மகனிடம் அப்பன் சொல்கிறான். ”காலை விடிவதற்குள் நீ உன் அம்மாவைப் பார்க்கிறாய். அதற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். ஏனென்றால், எனக்கு இந்த உலகத்திலேயே நீ மட்டும் தான் முக்கியம்.” மகனுக்கோ ஒரே திகைப்பு, அதிர்ச்சி, ஆச்சரியம். எல்லாம் முகத்தில். ஒரே ஒரு வாக்கியம்தான் சொல்கிறான் மகன். “இதை நீ ஏன் என்னிடம் முன்னாலேயே சொல்லவில்லை?”
நானும் அவந்திகாவிடம் அதைத்தான் கேட்டேன். ”நீ என்னை பாரதியின் வாரிசு என்று நினைப்பதை ஒரு பத்து வருடம் முன்னாலேயே சொல்லியிருக்கலாமே? இவ்வளவு காலமும் வேறு மாதிரியல்லவா நினைத்து விட்டேன்?”
ஸ்லீப்லெஸ் நைட்டில் இன்னொரு விஷயமும் பிடித்திருந்தது. போலீஸ்காரன் நைட்க்ளப்பின் சமையல் அறைக்குள் துப்பாக்கியுடன் வெகுவேகமாக நுழையும் போது அங்கே வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு ஈழத் தமிழன் அலறி அடித்துக் கொண்டு ஓடும் காட்சி. இதைத் தமிழில் கொண்டு வர முடியாது. ஒரு த்ரில்லரில் கூட ஃப்ரான்ஸில் வாழும் அகதிகளின் அவலமான வாழ்க்கையை எவ்வளவு அழகாகக் காண்பிக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன். அகதி ஓடுவதைக் கண்டதுமே போலீஸ்காரன் ”ஏய் ஏய் ஓடாதே… நான் உன்னைப் பிடிக்க வரவில்லை. உனக்கு ஆங்கிலம் தெரியுமா?” என்று ஆங்கிலத்தில் சொல்கிறான். ஐரோப்பிய நாடுகளில் முறையான ‘குடியுரிமைக் காகிதங்கள்’ இல்லாமல் இப்படி எத்தனையோ ஆயிரக் கணக்கான அகதிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு இந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, “உலகம் பூராவும் தமிழ்ப் படங்கள் மாதிரி மொக்கைப் படங்கள் எடுக்கிறார்களே, பரவாயில்லை” என்று திருப்திப்பட்டுக் கொண்டிருந்தேன். அதற்குப் பிறகுதான் தெரிந்தது, இதைத் தமிழில் தயாரிக்கிறார்கள், கமல் ஹீரோ என்று.
படம் பூராவும் நைட் க்ளப். படம் பூராவும் அடிதடி. ஒற்றைப் பரிமாணமுள்ள மொக்கைப் படம் ஸ்லீப்லெஸ் நைட். ஆனால் நன்றாக ஓடும். அதில் சந்தேகம் வேண்டாம். இதை விட கமல் Mesrine, Part 1 & 2 என்ற ஃப்ரெஞ்ச் சினிமாவை எடுத்திருக்கலாம். நாயகன், பாட்ஷா மாதிரி வந்திருக்கும்.