நாணயத்தின் இன்னொரு பக்கம்…

க.நா.சு.வைப் படிக்கும் போதுதான் புரிகிறது, ஒரு ஆள் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பே என்னைப் போல் புலம்பியிருக்கிறார் என்று.  அச்சு அசலாக அதே புலம்பல்.  ஒரு வார்த்தை மாறவில்லை.  என்ன புலம்பல்?  காசு இல்லை; பயணம் செய்ய முடியவில்லை; எழுத்தாளனுக்கு உரிய அங்கீகாரம் இல்லை; தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நாள் பூராவும் நேரம் செலவு செய்தாலும் ஒரு பைசா கொடுப்பதில்லை; எட்செட்ரா, எட்செட்ரா.  இது நாணயத்தின் ஒரு பக்கம்தான்.  இன்னொரு பக்கம் சொர்க்கம்.   அந்தப் பக்கத்தைப் பார்த்தால் என்னைப் போன்ற ஒரு அதிர்ஷ்டசாலி இந்த உலகத்திலேயே யாரும் இல்லை என்று தோன்றுகிறது.  ஒரு வாசகி.  அமெரிக்காவில் வசிக்கிறார்.  உங்களை உலகமெல்லாம் அறிந்த எழுத்தாளனாக ஆக்கி விட்டுத்தான் மறுவேலை என்றார்.  அடப் போய்யா, இது போல் எத்தனை வாய்ச் சவடால்களைப் பார்த்திருக்கிறோம் என்று நான் சட்டை செய்யவில்லை.  ஆனால் வாசகி என்ன செய்தார் என்றால், ஸீரோ டிகிரி ஆங்கிலப் பதிப்பை நூறு பிரதி வாங்கினார்.  அமெரிக்காவில் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள நூலகங்களைத் தொடர்பு கொண்டு, இன்ன மாதிரி இன்ன புத்தகத்தை உங்கள் நூலகத்துக்குப் பரிசாக வழங்க நினைக்கிறேன் என்று கடிதம் போட்டார்.  அமெரிக்காவில் நம் ஊர் மாதிரி ஓசியில் வாங்க மாட்டார்கள் போல.  அம்மணி, அதற்கென்று ஒரு கமிட்டி இருக்கிறது.  நீங்கள் புத்தகத்தை அனுப்புங்கள்; படித்து விட்டு அந்தக் கமிட்டி சம்மதித்தால் அந்தப் புத்தகத்தை சேர்த்துக் கொள்கிறோம்.

 

ஒவ்வொரு நூலகத்துடனும் பேசி, கமிட்டிக்கு அனுப்பி – இப்போது அமெரிக்காவிலிருந்து யார் என்றே தெரியாத எழுத்தாளர்கள், கவிஞர்கள், வாசகர்களிடமிருந்து எனக்கு மின்னஞ்சல் வருகிறது.  அதிகம் அல்ல.  அவ்வப்போது.  எப்படியோ என் மின்னஞ்சல் முகவரியைத் தேடிப் பிடித்து விடுகிறார்கள்.  ஒரு பல்கலைக்கழகத்திலிருந்து கவிதை பற்றிய தொகுப்புக்காக ஒரு கேள்வி:  கவிதையை நீங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்?

இந்தக் கேள்வியை உலகின் முக்கியமான எழுத்தாளர்களிடமும் கவிகளிடமும் கேட்டு அதை ஒரு ஆந்தாலஜியாகத் தொகுக்கிறார் ஒரு பேராசிரியர்.  அவர் ஒரு கவி.  வந்த பதில்களிலேயே உங்கள் பதில் தான் மிகவும் சுவாரசியமானது; ஆழமானது என்று அவர் பதில் போட்டார்.  இதற்குக் காரணம் நான் அல்ல; இந்தியப் பாரம்பரியம்.  காளிதாஸன். பாஸன். இன்ன பிற தாத்தன்கள், பாட்டன்கள், முப்பாட்டன்கள்.

அந்த வாசகி சொன்னார்.  நியூயார்க்கரில் உங்கள் பெயரை வரச் செய்வேன்.  மதிப்புரை.  பேட்டி.  இப்படி ஏதோ.  உங்களுக்கு அதற்கான தகுதி இருக்கிறது.  தகுதியின் அடிப்படையில் முடியாவிட்டால் குறுக்கு வழியில் முயல்வேன்.  அதற்காக நான் எதுவும் செய்யத் தயார்.  (எதுவும் செய்யத் தயார் என்று அவர் சொல்லவில்லை.  அவர் சொன்னது இன்னும் பயங்கரம்.  பச்சை.  அது வேண்டாம்.)  அவர் அதைச் சொன்ன போது என் கண்கள் கலங்கி விட்டன.  இவ்வளவுக்கும் நான் அந்த வாசகியோடு ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசியிருக்கிறேன்.  அதுவும் ஒரு கமிஷனரிடம் கான்ஸ்டபிள் எப்படிப் பேசுவாரோ அந்தப் பாணியில்தான் பேசுவேன்.  ஏனென்று தெரியவில்லை.  ஆனால் அப்படித்தான் பேசினேன்.  இப்போது யோசிக்கும் போது ஒரு காரணம் புரிகிறது.  கிடைத்தற்கரிய ஒரு பொக்கிஷம் கிடைத்துள்ளது.  அதை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்ற என்னுடைய பாதுகாப்பு உணர்வு கூட காரணமாக இருக்கலாம்.  மனுஷ்ய புத்திரனுக்கும் அந்த வாசகியை அறிமுகம் செய்து வைத்திருக்கிறேன்.   (அவரும் பதிலுக்கு என்னை ஒருவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.  அவர் பெயர் ஆத்மார்த்தி.  அப்போது நான் விட்ட சாபம்தான் இப்போது அவர் திமுகவில் சேர்ந்து விட்டார்!)

நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.  அமெரிக்காவில் நமக்காகக் களப்பணி ஆற்ற இப்படி ஒரு தீவிரத் தொண்டரா!  ஒருநாள் மனுஷ்ய புத்திரன் என்னிடம் “உங்கள் வாசகர்கள், வாசகிகள் எல்லாம் பின் லாடனின் தற்கொலைப் படை மாதிரியல்லவா இருக்கிறார்கள்?!!!!” என்று பல ஆச்சரியக் குறிகளுடன் கேட்டார்.  அன்றைய தினத்தோடு அந்த அமெரிக்க வாசகி காணாமல் போய் விட்டார்.  முடிந்தது கதை. (இந்தச் சம்பவத்திலிருந்து மனுஷ்ய புத்திரனிடம் நான் எந்த நல்ல செய்தியையும் பகிர்ந்து கொள்வதில்லை.)  வாசகியிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.  மின்னஞ்சலுக்கும் பதில் இல்லை.  கெட்டதாக ஒன்றும் நடந்திராது.  கணவர் தடை போட்டிருப்பார்.  ரொம்ப ஆடினால் இப்படித்தான்.  நல்லது செய்யும் போது யாரும் அறியாமல் செய்ய வேண்டும்.  உலகம் அப்படி இருக்கிறதே, என்ன செய்ய?

இப்படி ஒரு ஐம்பது சம்பவங்களைச் சொல்லலாம்.  ஒரு வருடம் ஓடும்.  காணாமல் போய் விடும்.  எது?  சொர்க்கத்திலிருந்து கொட்டும் அமிர்தம்.

ஆனாலும் ஒரு இருபது இருபத்தைந்து பேர் இருக்கிறார்கள்.  மாற்றி மாற்றி வருவார்கள், போவார்கள்.  அத்தனை பேரும் இளைஞர்கள்.  இப்போதைய கூட்டம் மாணவர்கள்.  சும்மா பேருந்து மேலே ஏறிக் கொண்டு பஸ் டே கொண்டாடும் புரட்சி மாணவர்கள் அல்ல.  சிவில் சர்விஸ் பரீட்சைக்குப் படிப்பவர்கள்.  ஒருவர் மருத்துவ மேல்படிப்பு படிப்பவர்.  இப்படி.  உங்கள் எழுத்து எங்களுக்கு வழிகாட்டி.  நீங்கள் எனது ஆசான்.  நீங்கள் எனது குரு.  நீங்கள் எனது தந்தை.  காட்ஃபாதர்.  இப்படி, இப்படி.

இவர்களில் என்னை அந்த அமெரிக்க வாசகியைப் போல் அசத்திக் கொண்டு செல்பவர் டாக்டர் ஸ்ரீராம்.  கடந்த ஒரு வாரத்தில் அவர் எனக்கு நான் செய்ய வேண்டிய சில வேலைகளை நினைவூட்டி சில கடிதங்களை எழுதினார்.  வெளியிடுவது தப்பு தான்.  ஆனாலும் எனக்குக் கொலை மிரட்டல் எல்லாம் விட்டு கடிதங்கள் வந்து கொண்டிருக்கும் போது, உன்னோடு பேசுபவர்களையே அன்ஃப்ரெண்ட் செய்து விடுவேன் என்று சொல்லும் அளவுக்கு என் மீது வெறுப்பு வளர்ந்து கிடக்கும் போது சில இளைஞர்கள் என் மீது உயிரையே வைத்திருக்கிறார்கள் என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்காகவே இக்கடிதங்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வெளியிடுகிறேன்.

அகதோ க்றிஸ்தோஃப் என்ற ஒரு ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் இருக்கிறார்.  இவருடைய மூன்று நாவல்களும் எனக்கு உடனடியாகத் தேவை.  வாங்க கையில் காசு இல்லை.  இதோ மின்னூல் சாரு.  படித்துக் கொள்ளுங்கள்.  வேறு எந்த நண்பர்களாலும் மின்னூல்களைப் பெற இயலவில்லை.  ஸ்ரீராம் பிடித்து விட்டார்.  எப்படி என்பது ரகசியம்.

picuture one

 

இந்தப் படமும் நீங்கள் பார்க்க வேண்டிய படம் தான் சாரு:

picuture two

நான் பார்க்க வேண்டிய படங்கள் பற்றிய குறிப்பு.  அனுராக் காஷ்யப்பின் Ugly பற்றி இந்தக் கடிதம் வந்திருக்காவிட்டால் எனக்குத் தெரிந்திருக்காது.

picture three

பின்வரும் கடிதம் நான் தினமணியில் எழுதி வரும் பழுப்பு நிறப் பக்கங்கள் தொடர் தொடர்பானது.  க.நா.சு. பற்றி சுந்தர ராமசாமி எழுதிய நினைவோடை எங்கேயும் கிடைக்கவில்லை.  காலச்சுவடில் பிரதி இல்லை.  இதைத் தொகுத்த அரவிந்தனிடமும் பிரதி இல்லை.  அதனால் பல இடங்களில் தேடி மின் வடிவத்தை எடுத்து அனுப்பியிருக்கிறார்.

picture four

 

பின்வரும் கடிதம் பதிப்பாளர்களிடம் என்னென்ன கேட்க வேண்டும் என்பது பற்றிய தகவல்கள்.  பண விஷயம் இல்லை சாமிகளா.  புத்தகம் எல்லா இடங்களிலும் கிடைக்க என்ன செய்ய வேண்டும்.

picture five

பின்வரும் கடிதம் கிழக்கு பதிப்பகத்தில் நான் என்னென்ன கேட்க வேண்டும், செய்ய வேண்டும் என்பது பற்றிய விபரங்கள் அடங்கிய கடிதம்.  இது சம்பந்தமாக சென்னையில் உள்ள பல மால்களுக்கும் புத்தகக் கடைகளுக்கும் தானும் சென்று நண்பர்களையும் அனுப்பி ரணகளமாக வேலை செய்திருக்கிறார் ஸ்ரீராம்.

picture six

 

பின்வரும் கடிதம் ஆறு தினங்கள் முன்பு வந்தது.  இன்னும் பதில் எழுதவில்லை.  அசோகமித்திரன் பற்றி அழகிய சிங்கர் எழுதிய கட்டுரைக்கான இணைப்பு.  இதில் என்னைப் பற்றி அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

picture seven