நாணயத்தின் இன்னொரு பக்கம் என்ற நேற்றைய கட்டுரையில் ஒரு பகுதியைத் திட்டி என் அருமை வாசகி வெரோனிகா ஃப்ரான்ஸிலிருந்து கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரையில் ஆட்சேபணைக்குரிய பகுதியாக வெரோனிகாவுக்குத் தோன்றியிருப்பது இதுதான்:
”கவிதையை நீங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்?” இந்தக் கேள்வியை உலகின் முக்கியமான எழுத்தாளர்களிடமும் கவிகளிடமும் கேட்டு அதை ஒரு ஆந்தாலஜியாகத் தொகுக்கிறார் ஒரு பேராசிரியர். அவர் ஒரு கவி. வந்த பதில்களிலேயே உங்கள் பதில் தான் மிகவும் சுவாரசியமானது; ஆழமானது என்று அவர் பதில் போட்டார். இதற்குக் காரணம் நான் அல்ல; இந்தியப் பாரம்பரியம். காளிதாஸன். பாஸன். இன்ன பிற தாத்தன்கள், பாட்டன்கள், முப்பாட்டன்கள்.
இப்படி எழுதியது தப்பாம். தற்பெருமையாம். இதுதான் என்னிடம் உள்ள மிகப் பெரிய குறையாம். இதனால்தான் எல்லோரும் என்னைத் திட்டிக் கொண்டே இருக்கிறார்களாம். Proust Questionnaire என்ற பகுதியில் தி இந்துவில் கூட நானே இதை ஒப்புக் கொண்டிருந்தேனாம். (உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத குணம் எது? பதில்: தற்பெருமை.)
நீங்கள் நம்புவீர்களோ மாட்டீர்களோ, நான் அந்தக் கேள்விக்குப் பதில் சொன்ன போது உங்களிடம் உங்களுக்குப் பிடித்த குணம் என்று நினைத்தே பதில் சொல்லி விட்டேன். மறுநாள் அந்தக் கேள்வி பதிலை இந்துவில் பார்த்த போதுதான் அடடா என்று என்று தோன்றியது. பிடிக்காத குணம் அல்ல; பிடித்த குணம் அது. மேலும், இதை நான் தற்பெருமையாகவும் நினைக்கவில்லை. நண்பர்களே, please stand in my shoes for a moment. அந்த அமெரிக்கக் கவிஞரிடமிருந்து வந்த பதிலை நானே தணிக்கை செய்ய வேண்டுமா? அதுவும் எதற்கு? என் இமேஜைக் கூட்டிக் கொள்வதற்காக. அப்படியே வெளியிட்டால் அது தற்பெருமை என்ற பிரிவில் வந்து விடுமே, எனவே அதைத் தணிக்கை செய்து வெளியிடு. அப்போதுதான் உன் இமேஜுக்குப் பாதகம் வராது. இல்லாவிட்டால் அதைத் தற்பெருமை என்று ஊரார் கைகொட்டி நகைப்பர்.
அடக் கடவுளே, இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தால் என்னால் எழுதவே முடியாது அம்மணி. நான் எப்போதுமே என் எழுத்தால் விளையும் சாதக பாதகங்கள் பற்றி யோசிப்பதே இல்லை. யோசித்திருந்தால் எக்ஸைல் என்ற நாவலை என்னால் எழுதியிருக்க முடியுமா? அதுவும் என் இமேஜ் என்பதுதான் இந்த உலகத்திலேயே நான் கிஞ்சித்தும் கவலைப்படாத விஷயம். தமிழ்நாட்டிலேயே கண்ணதாசனுக்குப் பிறகு நான் குடிக்கிறேன் என்று பகிரங்கமாக சொன்ன ஒரே ஆள் நான் தான். (ஐயோ, தற்பெருமை, தற்பெருமை!!! இந்தத் தற்பெருமையிலிருந்து மீளவே முடியாது போல!) இமேஜ் பற்றிக் கவலைப்படும் யாராவது இந்தப் பத்தாம்பசலியான, போலியான தமிழ்ச் சமூகத்தில் ’நான் குடிக்கிறேன்’ என்று சொல்வார்களா? இப்படி இமேஜ் பற்றிக் கவலையே படாத நான் அந்த அமெரிக்கக் கவிஞர் எழுதிய கடிதத்தில் என்னைப் பாராட்டும் வரிகளை மட்டும் நீக்கி விட்டு எழுத வேண்டுமானால்… மை காட்… முதலில் அவ்வளவு மூளை எனக்குக் கிடையாது. ரொம்பவும் வெகுளியான, குழந்தைத்தனமான ஆள் நான். சூதுவாது, தந்திரம் எல்லாம் எனக்கு சுட்டுப் போட்டாலும் வராது.
மேலும் அந்த வெரோனிகாவுக்கு ஒன்று சொல்ல வேண்டும். நான் இவ்வளவு வெகுளியாக இருந்தும் அந்தக் கட்டுரையில் ஒரு விஷயத்தைத் தணிக்கை செய்துதான் வெளியிட்டேன். அந்த அமெரிக்கக் கவிஞர் ”வந்ததிலேயே உங்கள் பதில்தான் சுவாரசியமாகவும் சிந்தனையைத் தூண்டக் கூடியதாகவும் இருந்தது” என்று எழுதியதால் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. அப்போதே என் குழந்தைமைக்குச் சற்று பங்கம் வந்து விட்டது என்றுதான் பொருள். போகட்டும். என்ன சந்தேகம் எனில், இவர் எல்லோரிடமுமே இதே மாதிரிதான் சொல்லியிருப்பாரோ? உடனே அவருடைய ஆந்தாலஜியின் இணைய பக்கங்களில் தேடினேன். பல கவிஞர்களின் பதில்கள் அதில் வெளியாகியிருந்தன. உலகப் புகழ் பெற்ற கவிகளும் எழுத்தாளர்களும்தான். அவர் என்னிடம் சொன்னது உண்மைதான். மற்றவர்களின் பதில்களை விட என் பதில்தான் சிறப்பாக இருந்தது. மீண்டும் சொல்கிறேன். இந்தச் சிறப்புக்குக் காரணம் நான் அல்ல. காளிதாஸன், பாஸன், அகத்தியன், போகர். இன்னும் பலர். அதைத்தான் இந்திய மரபு என்று சுருக்கமாகக் குறிப்பிட்டேன். அதிலேயே எல்லாம் அடக்கம் என்று கருதினேன். முக்கியமாக சித்தர் மரபு.
நான் அந்த அமெரிக்கக் கவிஞருக்கு அனுப்பிய பதிலை கீழே தருகிறேன்.
The enlightened ancient poets of Tamil perceived the human body to be a part of cosmos, and the cosmos in the human body. Arguably it is the highest state of consciousness to see yourself as the cosmos and cosmos as you. The enlightened poet can hold a conversation with cosmos.
These conversations are not subject to time or place. Because we are talking cosmos, these conversations don’t need take place only when the poet wistfully gazes at the starry sky or finds himself tossing in the vastness of oceans. It could happen while listening to music or travelling in a crowded metro rail.
These conversations happen to take place through the medium of language—one of the key carriers of civilizations, histories and collective memories. It is language that forges the relationship between the poet and his fellow humans.
The poet is an alchemist who turns his cosmic visions into words employing metaphors in a process not too dissimilar from splitting an atom into countless particles. The disconnect between him and the reader occurs when the latter is unable to fully fathom this fission and fusion.
Fortunate is the reader who can log into the Network and witness the conversations between the poet and cosmos. Like the poet, such a reader too can begin to feel his physical existence in the cosmic scheme. He who can feel his body braided with the cosmos can never create an Auschwitz. In every tiny speck of universal dust, he will begin to see himself.
இப்படி ஒரு பதிலை ஒரு இந்திய எழுத்தாளன் மட்டுமே – அதிலும் குறிப்பாக ஒரு தமிழ் எழுத்தாளன் மட்டுமே கொடுக்க முடியும். ஏனென்றால், அண்டத்தையும் பிண்டத்தையும் ஒன்றாகப் பார்த்தவன் தமிழன் மட்டுமே. தமிழ்ச் சித்தன். அந்தத் தமிழ்ச் சித்தனின் எளிய வாரிசுகளே நானும் என் சக எழுத்தாளர்களும். இதை வெளியே சொல்லிக் கொள்வதில் எந்த வெட்கமோ கூச்சமோ கொள்ள வேண்டியதில்லை. சொல்லப் போனால் இதைத் தம்பட்டம் அடித்துச் சொல்ல வேண்டிய கடமையில் இருக்கிறோம் நாம். 2500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கிரேக்க நாடகாசிரியர்கள் பற்றி நாம் எல்லோரும் படிக்கிறோம். அவர்களுடைய மூக்கு எப்படி இருந்தது, தாடி இருந்ததா இல்லையா, ஒவ்வொருக்கும் எத்தனை மாணாக்கர் இருந்தனர், எல்லாம் நமக்கு, உலகத்துக்கு அத்துப்படி. மேற்கத்திய மரபை இப்படி நம் உள்ளங்கையில் வைத்திருக்கிறோம். ஆனால் நம்முடைய சித்தர் மரபு பற்றி நமக்கு ஒரு மண்ணும் தெரியவில்லை. அதனால்தான் எக்ஸைல் என்று ஒரு நாவலே எழுதினேன். ஆனால் அதில் இருக்கும் மரபு சார்ந்த கருத்தாங்களைப் புரிந்து கொள்ள இன்னும் நாளாகும். மேலே அந்த அமெரிக்கக் கவிஞருக்கு நான் கொடுத்த விளக்கம், எனக்குத் திருமூலன் அளித்தது. மூலனுக்குக் கொடுத்தது போகன். போகன் அறிந்தது
அண்டம் என்பது பிரபஞ்சம். பிண்டம் நம் உடல். பிண்டத்தில் பிண்டம் என்பது கழுத்துக்குக் கீழே உள்ள பகுதி. பிண்டத்தில் அண்டம் என்பது தலைப் பகுதி. அண்டமும் பிண்டமும் சேருமிடம் கண்டம். சுருக்கமாகச் சொன்னால், பிரபஞ்சத்தின் ஒரு சிறிய துகளே என் உடல். என் யோசனை வழி அண்டத்தோடு பிண்டம் தன்னைப் பிணைத்துக் கொள்கிறது. இதை அறிந்து உணர்ந்து கொண்டால் எவர் மீதும் எனக்கு வெறுப்பு வராது. உலகில் சாந்தியும் சமாதானமும் பெருகும். இதுவே இந்தியாவின் ஆதி கவிகள் அனைவரும் கண்டது என்றே அந்த அமெரிக்கருக்கு நான் பதில் எழுதினேன். நான் என்பது சாரு நிவேதிதா அல்ல. அகத்தியன், போகன், திருமூலன் என்று வரும் சந்ததியில் அவர்கள் கண்டதை எடுத்துக் கொண்டு போகும் ஒரு தபால்காரன் மட்டுமே நான். சொந்தமாக எனக்கு எதுவுமே தெரியாது.
ஆங்கிலத்தில் இருந்தால் வாசகர்கள் உடனடியாக நகர்ந்து போய் விடுகிறார்கள் என்பதால் மேலே உள்ள விளக்கத்தின் தமிழ் வடிவத்தைக் கீழே கொடுத்திருக்கிறேன்.
தமிழின் ஆதிகவிஞர்களான சித்தர்கள் பிண்டத்தை (human body) அண்டத்திலும் (cosmos) அண்டத்தைப் பிண்டத்திலும் கண்டவர்கள். இந்தப் பேரண்டத்தையே தானாகவும் (self) தன்னையே பேரண்டமாகவும் காணும் நிலை அது. அப்படிக் கண்ட கவிஞன் இந்தப் பேரண்டத்தின் முன்னே நின்றபடி அதனோடு உரையாடிக் கொண்டிருக்கிறான். நட்சத்திரக் கூட்டங்களை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் போது – ஆழ்கடலில் ஒரு கட்டுமரத்தில் சென்று கொண்டிருக்கும் போது – கண்களை மூடி வனத்தின் இசையைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது அல்லது ஒரு மெத்ரோ ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கும் போது எப்போது வேண்டுமானாலும் அந்த உரையாடல் நிகழலாம்.
அந்த உரையாடல் மனித சமூகத்தின் கலாச்சார, வரலாற்று ஞாபகங்களைத் தன் சுவாசமாகக் கொண்டிருக்கும் மொழி என்ற தளத்தில் நிகழ்வதால் கவிஞனுக்கும் மற்ற மனிதனுக்குமான உறவு ஏற்படுகிறது. இருந்தாலும் கவிஞன், தான் கையாளும் மொழியைப் படிமங்களாகியஅணுத்துகள்களாக மாற்றி விடுவதால் அந்த ரஸவாதம் (alchemy) அறியாத மனிதன் கவிஞனிடமிருந்து விலகிப் போகிறான்.
அப்படியின்றி கவிஞனின் உரையாடலைக் கேட்க நேரும் மனிதன் பாக்கியவான். அவன் கவிஞனைப் போலவே அண்டத்திலொரு பிண்டமாகத் தன்னை உணரத் துவங்குகிறான். அப்படி உணர்பவனால் ஆஷ்விட்ஸ்களை உருவாக்க முடியாது. அவன் இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துகளோடும் தன்னையே காண்பான்.
***
இன்றைய தினம் டிஸ்கவரி புக் பேலஸில் மாலை ஆறு மணிக்கு அசோகமித்திரன் பற்றிய ஆவணப் படம் திரையிடப் படுகிறது. என் மாதா, பிதா, குரு, தெய்வம் அனைத்துமே அசோகமித்திரன் தான் என்பதால் செல்லலாம் என்று இருக்கிறேன். வர விருப்பம் இருப்பவர்கள் என்னை அழைத்துச் செல்லும்படி கேட்டுக் கொள்கிறேன். கே.கே. நகர் வரை போக ஆட்டோக்காரர்கள் சொத்தில் பாதியைக் கேட்பார்கள்.
இன்றைய தி இந்து நாளிதழில் நடுப்பக்கத்தில் சாருஆன்லைனில் வெளிவந்த ஒரு கட்டுரையின் சிறிய பகுதி வந்துள்ளது. முடிந்தால் பார்க்கவும்.