அதிகாலையில் ஓர் நேர்காணல்…

பின்வரும் நேர்காணல் சூர்ய கதிர் பத்திரிகையில் வெளிவந்தது.  இந்த நேர்காணல் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்ல வேண்டும்.  யாராவது ஒருவர், “நான் 1953-இல் பிறக்கிறேன்.  பிறகு அவசரகால கட்டத்தில் தலைமறைவாகிறேன்…” என்று கடந்த காலத்தை நிகழ்கால இலக்கணத்தில் பேசினால் அவர் ஒரு பிரமுகர் (வி.ஐ.பி.) என்று அறிந்து கொள்ளுங்கள்.  எனக்குத் தெரிந்து அப்படி கடந்த காலத்தை நிகழ்காலத்தில் பேசிய ஒரே இலக்கியவாதி தமிழவன் என்று நினைக்கிறேன்.  25 ஆண்டுகளுக்கு முன்பு அப்படி ஒரு நேர்காணல் படித்தேன்.  மற்றபடி மடாதிபதிகள், சாமியார்கள் எல்லாம் கடந்த காலத்தை நிகழ்காலத்தில் பேசுவார்கள்.  அதேபோல் மடாதிபதிகளிடம் இன்னொரு ஸ்டைல் என்னவென்றால், நான் என்று சொல்ல மாட்டார்கள்.  நாம் அல்லது யாம் என்பார்கள்.  அவர்களும் வி.ஐ.பி. என்றே அறிக.  மோடி இப்போதெல்லாம் நான் என்று சொல்லாமல் நாம் என்கிறார் என்று சொல்கிறார்கள்.  அதெல்லாம் அவர் சோனியாவுக்கு செய்யும் தொண்டு.  இப்படியே அவர் பேசிக் கொண்டிருந்தால் மக்கள் காங்கிரஸுக்கு ஓட்டுப் போட்டு விடுவார்கள்.  போகட்டும்.  என்னைப் பேட்டி கண்ட பிச்சைக்காரனும் தன்னை நாம் நாம் நாம் என்றே குறிப்பிடுவதை கவனியுங்கள்.  சாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் இப்படித்தான்.  ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி பேசும், திரியும்.  எதையுமே கண்டு கொள்ளக் கூடாது.

நேர்காணலில் நீங்கள் கவனிக்கக் கூடிய இன்னொரு விஷயம், ஜெயலலிதாவை ஓ. பன்னீர்செல்வம் பேட்டி கண்டால் எப்படிப் பேசுவாரோ அதே பாணியில் கேள்விகளும் பிச்சைக்காரனின் மொழியும் நெளிந்து வளைகிறது.  அதிலும் நேர்காணலின் கடைசி வாக்கியம் அநியாயத்திலும் அநியாயம்.  இதற்கெல்லாம் நீங்கள் அசூயை அடையவோ கோபிக்கவோ கூடாது.  முக்கியமாக மாமல்லன்.  என்னைக் கண்டபடி திட்டி, சாகச் சொல்லி எல்லாம் கடிதங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அது ஒரு எல்லை என்றால் பிச்சைக்காரனும் ஒரு எல்லைதான்.  ங்கோத்தா என என்னை அன்புடன் விளித்து வரும் கடிதத்தின் மீதும் கோபம் இல்லை.  பிச்சைக்காரனின் தெய்வமே என்கிற துதியின் மீதும் குஷி இல்லை.  இனி நேர்காணல்.  எழுதியவர் பிச்சைக்காரன்.  நான் எதிலும் கை வைக்கவில்லை.

பிரமுகர்களை பொதுநிகழ்ச்சிகளில் சந்திப்பது அல்லது முன் அனுமதி பெற்று முறையாக சந்திப்பது என்பது வேறு; அவர்களது அன்றாட அலுவல்களுக்கிடையே அவர்களைத் தொந்தரவு செய்யாமல் இயல்பாக சந்தித்துப் பேசுவது என்பது வேறு. அவர்கள் தங்கள் நேரத்தை எப்படி வகுத்துக் கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதுடன் அவர்கள் சிந்தனை ஓட்டத்தையும் அறிந்து கொள்ள இது உதவும்.

பின் நவீனத்துவம், ஆட்டோஃபிக்‌ஷன் என இலக்கிய உலகில் புத்தகங்கள், இணையம், பொது நிகழ்ச்சிகள் என பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்கும் சாரு, தனது ஒரு நாளை எப்படித் துவக்குகிறார் என்பதை அறிந்து கொள்ள விரும்பி அனுமதி கேட்டோம். நாம் கேட்கும்போது மணி அதிகாலை 4.15. அவர் யோசித்து மதியம் தன் முடிவைச் சொல்வார் என நினைத்தோம். ஆனால் அவரோ உடனே இப்போதே மெரினா பீச் வாருங்கள் என்றார். அலறி அடித்துக்கொண்டு ஓடினோம்.

நாம் போனதும் புன்னகையுடன் வரவேற்றார். உடற்பயிற்சிக்கு உகந்த ஆடைகள், ஷூ என டிரெஸ் சென்சிபிலிட்டியுடன் இருந்தார். ஆனால் நாம் அப்படி இல்லை. அவசரத்தில் கிளம்பியதால் வழக்கமான ஃபார்மல் ஆடையில் போய் இருந்தோம். உடை அரசியல் குறித்தும், இடத்துக்குப் பொருத்தமான ஆடைகள் அணிவதில் நாம் காட்டும் அக்கறையின்மை குறித்தும் அடிக்கடி எழுதியும் பேசியும் வரும் அவர் முன்பு இப்படிப் போய் நிற்பதில் லேசாகக் கூச்சம் இருந்தது.

“என்ன, போர்ட் மீட்டிங் போவது போன்ற ஆடையில் வந்து இருக்கிறீர்கள்?” என நம்மைக் கிண்டலாக விசாரித்தார். முன்ன பின்ன செத்து இருந்தால்தானே சுடுகாடு தெரியும் என நினைத்துக்கொண்டோம்.

இரவு எத்தனை மணிக்குப் படுத்தாலும் அதிகாலை 4 மணிக்கே சாருவின் தினம் துவங்கி விடுகிறது. தனக்குத் தேவையான பழச்சாறை தயாரிக்குமாறு மனைவிக்கு உத்தரவிடாமல் தானே செய்கிறார். மனைவிக்கும் கொடுக்கிறார்.

நடந்தபடி மெல்ல உரையாட ஆரம்பித்தோம். அவர் நிதானமாகப் பேசினார்.

“வழக்கமாக நாகேஸ்வர ராவ் பூங்காவில்தான் வாக் போவேன். இன்னும் சீக்கிரமாகவே போய்டுவேன். நல்லா இருக்கும்.”

உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு என்று  உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருக்கிறீர்களே… இதற்கும் எழுத்துக்கும் சம்பந்தம் உண்டா?

கண்டிப்பாக உண்டு. எழுத்து என்பது கடுமையான உடல் உழைப்பைக் கோரக்கூடியது. சில நேரங்களில் இடைவிடாமல் பல மணி நேரங்கள் எழுத வேண்டி வரும். அதற்கெல்லாம் நல்ல உடல் வலு தேவை. சிலர் களைப்பு தெரியாமல் எழுதும் பொருட்டு மது அருந்துவார்கள். அப்படி மது அருந்தினால் அடுத்த நாள் எழுத முடியாமல் போய் விடும். எனவே மதுவினால் எந்தப் பலனும் இல்லை.

ஜப்பானிய எழுத்தாளர் ஹாருகி முரகாமி முறைப்படி பயிற்சி எடுத்து மாரத்தான் ஓடக்கூடியவர் என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன்.

பேசியபடியே நடந்து கொண்டிருந்த நம்மை, ”அப்படிப் போக வேண்டாம், இப்படி வாங்க, இனி அந்தப் பகுதி ஆபத்தாக மாறப் போகிறது” என்றார். புரியாமல் விழித்தோம். விளக்கினார். நடைப்பயிற்சி மேற்கொள்வோருக்கு வாகன ஓட்டிகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு சில காவலர்கள் நிறுத்தப்பட்டு இருப்பார்கள். காலை ஏழு மணி அளவில் அவர்கள் பணி நேரம் முடிந்து கிளம்பி விடுவார்கள். அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த இடத்தில் வாகனங்கள் சீறிப் பாயத் தொடங்கும். அது நடப்பவர்களுக்கு ஆபத்தாய் முடியலாம். அது வாகனங்களுக்கான பாதையே அல்ல. ஆனால் சிக்னல்களைத் தவிர்க்கும் பொருட்டு பலர் உள்ளே நுழைகிறார்கள். அங்கு நடைப் பயிற்சி செய்பவர்களில் கணிசமானவர்கள் வயதானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏதாவது அசம்பாவிதம் நடந்தாலோ, முக்கிய நிகழ்வுகளின் போதோ காவல் துறையினர் தேவைப்பட்டால் பரவாயில்லை. இங்கே  நடைப்பயிற்சிக்கே தேவைப்படுகிறதே. இதைத்தான் கலாச்சார சீர்கேடு என்கிறேன் என்றார் சாரு.

உங்களைத் தவிர பெரும்பாலானோர் தன் பாணியில் எழுதாமல் யாரையாவது போலி செய்கிறார்களே? குறிப்பாக இளம் படைப்பாளிகள் தமக்குரிய இயல்பான ஒரு பாணியைக் கண்டறியாமல் சாரு நிவேதிதா, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் என நகல் செய்ய முயல்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நான் மட்டும் அல்ல. இன்னும் பலரும் யாரையும் நகல் செய்யாமல் தம் பாணியில்தான் எழுதுகிறார்கள். உதாரணமாக, ஜெயமோகன்.  அவர் யாரையுமே நகல் செய்ததில்லை; அவரது குருநாதர் சுந்தர ராமசாமி உட்பட அவரிடம் யாருடைய சாயலையும் காணா முடியவில்லை.  ஜெயமோகனைப் பார்த்து நகல் செய்யும் எழுத்தாளர்கள் இதை யோசிக்க வேண்டும். தானே தேடிக் கண்டடைய முடியாதவர்களின் எழுத்து விரைவிலேயே மறக்கப்பட்டு விடும். சில நடிகர்கள் குறிப்பிட்ட காலத்தில் பிரபலமாக இருப்பார்கள். அதன் பிறகு காணாமல் போய் விடுவார்கள். அதுபோல தற்காலிகப் பரபரப்பு எல்லாம் இலக்கியத்தில் நிலைத்து நிற்க முடியாது.

பேசிக்கொண்டு இருக்கும்போதே ஒரு இயற்கை மூலிகைச் சாறு கடை வந்தது. கொள்ளு சூப்பும் அதை அடுத்து முடக்கத்தான் சூப்பும் அருந்தியவாறு பேச்சைத் தொடர்ந்தோம் .

உங்களோடு இலக்கியப் பயணத்தை தொடங்கிய பலர் இன்று இலக்கிய உலகில் இருந்து காணாமல் போய் விட்டதைப் பார்க்கையில் உங்களுக்கு என்ன தோன்றும்?

எழுத்தில் இரண்டு வகை உண்டு. என்னோடு எதிர்க் கருத்து கொண்டவர்கள் சற்று முயன்று இருந்தால் தங்கள் பயணத்தில் உச்சத்தைத் தொடாவிட்டாலும், ஓரளவாவது தங்களின் எல்லை அருகில் சென்றிருக்கலாம்.  தங்கள் பயணத்திலேயே அற்புதங்களைக் கண்டிருக்கலாம்.  ஆனால் அவர்களோ லௌகீக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள். இப்படித் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு, எழுத்து ஒன்றும் பகுதி நேரப் பணி அல்ல. அதற்கு முழு நேர உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை.

லௌகீக வாழ்க்கைக்கு நான் ஒன்றும் எதிரி அல்ல. பணக்காரன் ஆவதுதான் ஒருவரது உண்மையான ஆர்வம் என்றால் அவரிடம் அதற்கான அர்ப்பணிப்பு இருந்தால் அவர் நிச்சயமாகப் பணக்காரன் ஆகி விடுவார். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் ஒருவர் தனது உண்மையான ஆர்வம் என்பதைக் கண்டறிந்து அதற்காக மிகக் கடுமையாக உழைக்க வேண்டும். ஒருவரது நம்பிக்கைத் திடமாக இருக்கிறதா இல்லையா என்பதை அவர் செய்து காட்டும் சாதனையை வைத்தே மதிப்பிட முடியும். அவர் எவ்வளவு கஷ்டப்படுகிறார் அல்லது அவர் எவ்வளவு கொண்டாட்டமாக வாழ்கிறார் என்பதற்கும் அர்ப்பணிப்புக்கும் சம்பந்தம் இல்லை.

***

பிறகு கடற்கரையிலிருந்து கிளம்பி சாருவின் எழுத்தில் ஒரு கேரக்டராகவே வந்து வாசகர்கள் மனதில் இடம் பிடித்த இடமான நாகேஸ்வர ராவ் பூங்காவுக்குச் சென்றோம்.  அந்தப் பூங்காவிலும் அவருடன் சற்று நேரம் செலவிட நாம் விரும்பவே அங்கு கிளம்பினோம்… பூங்காவில் சிலர் நடைப் பயிற்சி செய்து கொண்டு இருந்தனர்… சிலர் யோகா பயிற்சியில் இருந்தனர்.

 

சாரு,  இப்போதெல்லாம் வயதானவர்கள் உட்பட பலர் யோகா, நடைப் பயிற்சி என ஈடுபடுகிறார்களே…  இது ஆரோக்கியமான போக்குதானே?

இல்லை… இது ஆரோக்கியமற்ற போக்கு. யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை சிகிச்சையாக கருதக்கூடாது. அவை நம் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். யோகா என்பது நோயாளிக்கானது அல்ல. அது ஆரோக்கியமானவர்களுக்கானது. கண்டதை சாப்பிட்டு, உடலுக்கு வேலை கொடுக்காமல் நோயை வரவழைத்துக் கொள்கிறோம். உடல் நலம் சீர்கெட்ட பிறகு யோகாவின் பக்கம் போகிறோம்.  இப்படிப்பட்டவர்களால் தொடர்ந்து இதில் ஈடுபட முடியாது என்பதை தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இடுப்பில் சுளுக்கு, கால் பிடித்துக்கொண்டு விட்டது என பாதியில் நிறுத்தி விடுபவர்கள் ஏராளம்.  என்னுடன் ஒருவர் சூரிய நமஸ்காரம் செய்யலாம் என்று வந்தார்.  எண்ணி பதினைந்து நாள்.  பிறகு அங்கே வலிக்கிறது இங்கே வலிக்கிறது என்று சொல்லி விட்டு ஓடி விட்டார்.  வலியெல்லாம் ஒன்றுமில்லை.  சோம்பேறித்தனம்.  அவ்வளவுதான்.

***

பேசிக்கொண்டிருக்கும்போதே சாருவின் நண்பர்கள் சிலர் வந்தனர். நமக்கு அறிமுகம் செய்தார். எக்ஸைல் நாவலில் வரும் கேரக்டர் அந்த நண்பர். ”நிஜ வாழ்வில் நடப்பதைப் புனைவாக்கி விடும் சாரு எனக்கு ஓர் அற்புதம்” என்றார் அந்த நண்பர். ”புனைவில் வரும் கேரக்டர்களை நிஜ வாழ்வில் சந்திப்பதும் ஓர் அற்புதம்தானே?” என்றோம் நாம். சாரு அதை ரசித்தபடியே தன் அடுத்த நாவலில் வரப்போகும் ஒரு கேரக்டரை நமக்குக் காட்டினார்.

அதன்பின் நடைப்பயிற்சி தொடர்ந்தது. நடைப்பயிற்சியை விட சக்திமிக்க ஒரு பயிற்சியை கவனியுங்கள் என சொன்ன அவரை ஆச்சர்யத்துடன் கவனித்தோம்.

நேராக நடப்பதை விட எட்டுப் போடுதல் என்பது சிறந்தது. 8 என்ற எண் வடிவில் நடப்பதே இந்தப் பயிற்சி. வீட்டிலேயே கூட இதைச் செய்யலாம். இரண்டு நாற்காலிகளை ஒன்றுக்கொன்று சில அடிகள் இடைவெளியில் இருக்குமாறு போட்டுக்கொண்டு, 8 வடிவில் நடக்கலாம். இடமிருந்து வலமாக கொஞ்ச நேரம். வலமிருந்து இடமாக கொஞ்ச நேரம். நல்ல பலனளிப்பது இது. பூங்காவில் இரு மரங்களுக்கிடையே இப்படி எட்டு போடுவேன். என்னைப் பார்த்து பலரும் இதைச் செய்ய ஆரம்பித்துள்ளனர் என சொன்னபடியே 8 போட ஆரம்பித்தார் சாரு. இன்னும் சிலரும் 8 போட்டனர்.

கட்டுரை, நாவல்,  சிறுகதைகளில் உங்கள் நிபுணத்துவம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அதேபோல மொழி பெயர்ப்புகளிலும் நீங்கள் நிபுணர். ஆனால் இப்போது மொழி பெயர்ப்பை நிறுத்தி விட்டீர்களே?

ஆமாம்…  என்னைப் பொறுத்தவரை மொழி பெயர்ப்பு என்றால் மொழித் துரோகம் என்பேன்.  நாம் உலகெங்கும் இருக்கும் எழுத்துக்களை இங்கே மொழி பெயர்த்துக் கொண்டு வருகிறோம். ஆனால் தமிழனை தமிழ் எழுத்துக்களை வேறு யாருமே கண்டு கொள்வதில்லை.  நம்மிடம் இல்லாத எழுத்தாளர்களா அல்லது நம்மிடம் இல்லாத இலக்கியமா? ஆனால் இவை எல்லாம் தமிழ்நாட்டைத்தவிர வெளியே செல்வதே இல்லை. நம்மை யாருக்கும் தெரிவதில்லை. நாம் மட்டும் அவர்களை ஏன் மொழி பெயர்க்க வேண்டும் என்ற கோபம் எனக்கு உண்டு?

***

பேச்சு சுவாரசியத்தில் நேரம் போனதே தெரியவில்லை. உணவு அருந்த ராயர் கஃபே சென்றோம். அங்கு பராமரிப்பு வேலை நடந்ததால், அங்கிருந்து கிளம்பி சாயி மெஸ் சென்றோம். சாப்பிட்டபடியே பேச்சு தொடர்ந்தது.

சீன மருந்து உட்கொள்வதால், காஃபி சாப்பிடுவதில்லை என அங்கும் உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடித்த சாருவிடம் அடுத்த கேள்வி கேட்டோம்.

படைப்பை மட்டும் கவனித்தால் போதும். இலக்கணத்தையோ எழுத்துப் பிழைகளையோ கண்டு கொள்ளத் தேவை இல்லை என சிலர் சொல்வது குறித்து?

கிரிக்கெட் விதிகள் தெரியாமல் ஒருவர் கிரிக்கெட் ஆட முயல்வது போன்றது இந்த வாதம். நீங்கள் இலக்கணத்தை உடைக்கலாம், மீறலாம். ஆனால் அதற்கு முன் உங்களுக்கு இலக்கணம் தெரிந்து இருக்க வேண்டும். எழுத வேண்டும் என்று வந்து விட்டால் தப்பு இல்லாமல் எழுதத் தெரிந்து இருக்க வேண்டும்.

***

இதன்பின் சாரு தன் வீட்டுக்குக் கிளம்பினார். நாமும் சேர்ந்து கொண்டோம். வழியில் லஸ் சந்திப்பு.  அப்போது லஸ் என்ற பெயர்க் காரணம் குறித்துப் பேசினார். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சில போர்த்துக்கீசிய மாலுமிகள் சென்னை நோக்கிக் கப்பலில் வந்து கொண்டு இருந்தனர். வழியில் பயங்கர அலைகள். வழி தெரியவில்லை. அன்னை மேரியை வழிபட்டனர். திடீரென ஒரு ஒளி கரையில் தோன்றி கலங்கரை விளக்கம்போல வழி காட்டியது. பெருமகிழ்ச்சியுடன் அந்த மாலுமிகள் லூஸ், லூஸ் (Luz, Luz) என்று கத்தினர். போர்த்துக்கீசிய மொழியில் லூஸ் என்றால் ஒளி என்று பொருள். அந்த ஒளி தோன்றிய இடத்தை தேடிக் கண்டடைந்தனர். அந்த இடம்தான் லஸ் என அழைக்கப்படலாயிற்று. மாதா ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டு இன்று அந்தப் பகுதியின் அடையாளமாக விளங்கி வருகிறது.

கடைசியாக வீட்டுக்கு அருகே வந்து சேர்ந்தோம். காய்கறிக் கடையில் நுழைந்து தக்காளி வாங்கினார். அரைக்கிலோ வேண்டும் என சொல்லி இருந்தார். அவர் கைகளில் இரண்டு அரைக்கிலோ பைகளை கொடுத்து விட்டு 15 ரூபாய் வாங்கினார் கடைக்காரர். ஒரு கிலோ 15 தானா என ஆச்சர்யமாக வினவினார். நாம் ஏற்கனவே அரைக்கிலோவுக்கு காசு கொடுத்ததைச் சொன்னதும், அது வரையிலான இலக்கிய மனநிலை மாறி குழந்தையாகச் சிரித்தார். அதுவும் இலக்கியமாகவே தோன்றியது.