ஜனவரி 9 வெளியீட்டு விழா குறித்து…

ஜனவரி 9-ஆம் தேதி ஒரு பெரிய அரங்கத்தில் இடம் கிடைத்திருக்கிறது.  பழுப்பு நிறப் பக்கங்கள் முதல் தொகுதியின் வெளியீட்டு விழாவை அங்கே வைக்கலாமா?  அது சனிக்கிழமை என்பதால் பலரும் வந்து கலந்து கொள்வது சுலபம்.  பழுப்பு நிறப் பக்கங்கள் தொகுதி – 1 க.நா.சு.வோடு முடிவடைகிறது.  ஆதவன், தி.ஜா., வண்ணநிலவன் போன்றோர் இரண்டாம் பாகத்தில்.  தனிப்பட்ட முறையில் இப்படி பிரம்மாண்டமான முறையில் வெளியீட்டு விழா நடத்துவதில் எனக்கு விருப்பம் இல்லை.  இன்னும் இரண்டு வாரத்தில் அரங்கத்துக்கு 45 ஆயிரம் கட்ட வேண்டும்.

தமிழ்நாட்டின் கலாச்சார சூழல் எக்கச்சக்கமான மன அழுத்தத்தையும் சோர்வையும் தருவதாக இருக்கிறது. பொதுவாகவே நான் வெளியில் செல்வதைக் குறைத்துக் கொண்டிருக்கிறேன். இருந்தாலும் சமயங்களில் தவிர்க்க முடியாமல் போய் விடுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை Black Mass பார்க்க பிரபு காளிதாஸுடன் சத்யம் அரங்கத்திற்குப் போனேன்.  சத்யம் தியேட்டர் படு கேவலமாக இருக்கிறது. அவ்வளவு பேர் வரும் தியேட்டரில் ப்ளாக் மாஸ் ஓடும் அரங்கில் உள்ள கழிப்பறையில் ஒரு சமயத்தில் நான்கு பேர் சிறுநீர் கழிக்கலாம். (அடப் பாவிகளா, வெளங்குவீங்களா?) ஒரே நாற்றம். சகிக்க முடியவில்லை.   இதனாலேயே இப்போதெல்லாம் எக்ஸ்பிரஸ் அவென்யூ தவிர மற்ற இடங்களில் படம் பார்க்கப் பிடிக்கவில்லை.  தேவி தியேட்டரோ டாஸ்மாக்கை அடித்து விடும் போலிருக்கிறது. ப்ளாக் மாஸ் வேறு படு மொக்கை. ஜானி டெப் படம் என்பதால் போனேன். இன்னொரு காரணம், இப்போதெல்லாம் கொலைகாரர்கள் பற்றிய படங்களை ஒன்று விடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த நாவல் ஒரு கொலைகாரனைப் பற்றியதாக இருக்கும். நம் நாட்டில் செக்ஸை முன்னிட்டு நிறைய கொலைகள் நடக்கின்றன. அது எனக்குத் தேவையில்லை.  நாவலில் செக்ஸே இருக்காது. ஆனால் அத்தியாயத்துக்கு ஒரு கொலை இருக்கும்.  மனிதர்கள் ஏன் தங்களுக்குள் கொலை செய்து கொள்கிறார்கள் என்பது இப்போது என்னை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கேள்வி. ராணுவம் போன்ற கொலைகார அமைப்புகளின் மூலம் நடக்கும் போர்க் கொலைகள் பற்றியது அல்ல என் கவலை. அதிகாரம், பணம் ஆகியவற்றுக்காக நடக்கும் தனிநபர் கொலைகள் பற்றியே ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன்.  அதிகாரம் என்றால் அரசியல் மட்டும் அல்ல; குடும்ப அதிகாரம் தான் அரசியலை விட இறுக்கமானது.  வன்முறை அதில் அரசியலை விட அதிகம்.  ஒரு பெண் தன் கணவனின் கள்ளக் காதலியைக் கொன்றால் அதை செக்ஸ் பிரச்சினை என்று நான் பார்க்கவில்லை. குறைந்த பட்சம் இந்த நாவலில். அதை ஒரு அதிகாரப் போராட்டம் என்றே பார்க்கிறேன்.  விமான நிலையத்தில் தன் கணவனின் கள்ளக் காதலியைத் தூக்கிப் போட்டு அடித்த மனைவியின் செயலை நீங்கள் யூட்யூபில் கண்டிருக்கலாம்.  பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தில் அப்படி ஒரு காட்சி வரும்.

ப்ளாக் மாஸில் ஜானி டெப்பின் நடிப்பு பற்றி விமர்சகர்கள் ஒரேயடியாய்ப் புகழ்கிறார்கள்.  எனக்குப் படமே பிடிக்கவில்லை.  இதை விடக் கொலைகாரப் படங்களை அதிகம் பார்த்ததால் இருக்கலாம்.  எல்லாவற்றிலும் ஆகப் பிடித்தது ஐஸ்மேன்.  இதிலிருந்த வன்முறை நேரடியானதல்ல.  ஆனாலும் படத்தில் முக்கால்வாசிக்கு மேல் என்னால் உட்காரவே முடியாதபடி போனது.  இருந்தும் மல்லுக்கட்டி பார்த்து விட்டேன்.  இதை நீங்கள் பாராட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  பார்க்கவே முடியாத அளவுக்கு இருந்தது அந்தப் படத்தின் மறைமுகமான வன்முறை.  I saw the devil என்ற கொரியன் படத்தில் வரும் கொலைகாரன் பெண்களைக் கண்டதுண்டமாக வெட்டிக் கூறு போட்டுத் தானும் தின்று, தன் நாய்களுக்கும் போடுகிறான்.  அத்தனையும் அணுஅணுவாக நம் முன் நடக்கிறது.  ஆனால் அந்தப் படத்தில் தோன்றாத பயமும் பதற்றமும் ஐஸ்மேனில் இருந்தது.  காரணம், நூறு பேருக்கு மேல் ரொம்ப அனாயாசமாகக் கொலை செய்யும் குக்லின்ஸ்கி என்ற கொலைகாரனுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.  தன் மகள்களுக்கு மிக அற்புதமானதொரு தந்தையாக வரும் குக்லின்ஸ்கி தான் பிற மனிதர்களை மூட்டைப்பூச்சியைக் கொல்வது போல் கொல்கிறான்.  எந்த உணர்ச்சியும் இருப்பதில்லை அவனிடம்.  படு பயங்கரமான படம்.

இப்படி ஒரு கொலைகார த்ரில்லர் நாவலை எழுதுவதற்குக் காரணம், வாட்ஸ் அப் மூலம் கிடைத்த ஒரு புகைப்படம்தான்.  வேலூரில் என்று நினைக்கிறேன்.  ஒரு ரவுடியைக் கொல்ல வருகிறான் இன்னொரு ரவுடி.  கையில் அரிவாள்.  ஓடி வரும் போது ஒரு வாகனம் குறுக்கிட்டதால் கீழே விழுந்த அவனை மற்ற ரவுடிகள் சூழ்ந்து கொண்டு கல்லாலேயே அடித்துக் கொல்கிறார்கள்.  இவர்களெல்லாம் வெறும் ரவுடிகள் அல்ல.  கொலையுறாமல் தப்பி விட்ட ரவுடி ஒரு பொறியியல் கல்லூரி வைத்திருக்கிறார்.  கல்வியாளர் என்பதால் ‘ர்’ விகுதி எனக் கொள்க.  விரைவில் அவர் ஒரு பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் ஆகி விடுவார்.  அவருடைய பல்கலைக்கழகத்தில் நம் குழந்தைகளைச் சேர்ப்பதற்காக நாம் நாயாய் அலைவோம்.  பல்கலைக்கழக ஆண்டுவிழாவில் ஜக்கி வாசுதேவின் ஆன்மீகச் சொற்பொழிவு நடைபெறும்.  சொற்பொழிவின் இடையே ஆன்மீக குருவும் சச்சின் டெண்டூல்கரும் மேடையிலேயே கிரிக்கெட் ஆடி மகிழ்வார்கள்.  (தொப்பி வ்யாபாரி ஒருத்தங்க நிழலுக்காக மரத்தின் கீழே படுத்தாங்க.  அவங்க வைத்திருந்த தொப்பியை மரத்து மேலே இருந்த குரங்கு பார்த்தாங்க.  கீழே இறங்கி தொப்பியை எடுத்துக் கொண்டு மேலே போய்ட்டாங்க குரங்கு.  வ்யாபாரி யோசிச்சாங்க.  தன் தலையிலே இருந்த தொப்பியை எடுத்து வீசினாங்க.  குரங்கும் தன் தலையிலே இருந்த தொப்பியை வீசினாங்க…) (அது சரி, ஜக்கியும் ரஜினியும் ஏன் எல்லோரையும் ’அவுங்க” போட்டே பேசுகிறார்கள்? உதாரணம், ரஜினியின் தாமஸ் ஆல்வா எடிசன் பேச்சு.  ”தாமஸ் ஆல்வா எடிசன் பைபிளைப் படிச்சுட்டு இருந்தாங்க, அப்போ இன்னொரு சயண்டிஸ்டு கேட்டாங்க, நீங்க ஏன் பைபிள் எல்லாம் படிக்கிறீங்கன்னு…)

அந்தக் குறிப்பிட்ட வேலூர் புகைப்படமே இந்தக் கொலைகார த்ரில்லர் நாவல் எழுத உந்துதல்.  அதனாலேயே ப்ளாக் மாஸுக்குப் போனேன்.  ஆனால் அன்றைக்குப் பார்த்துதான் புலி ரிலீஸ் போல.  தியேட்டரில் சந்தித்த நண்பர்கள் எல்லோரும் என்ன புலியா, புலியா என்று என்னை நச்சரித்து விட்டார்கள்.

எங்கே பார்த்தாலும் புலி.  புலி பார்த்தாச்சா? புலி பார்த்தாச்சா?  முதல் நாளே முதல் காட்சியே பார்த்தாக வேண்டும்.  சிம்புதேவன் படம்.  முதல் நாள் ரிஸல்ட்டில் புலி சொதப்பல் என்று தெரிந்து விட்டது.  உடனே முகநூல் முழுக்கவும் ஒரு நாலு நாளைக்கு புலிக் காய்ச்சல்.   எங்காவது தூர தேசத்துக்கு ஓடி விடலாம் போல் இருக்கிறது.  புத்திஜீவியிலிருந்து சாதாரண பாமரன் வரை தமிழ்நாட்டில் சினிமா பைத்தியம் பிடித்து அலைகிறார்கள்.  முகநூலில் பிரபு காளிதாஸ் குற்றம் கடிதல் செம மொக்கை என்று எழுதிவிட்டார்.  உடனே ஒரு நண்பர் போடா புண்டை என்று பதில் எழுதுகிறார்.  இப்படி மதவெறியர்கள் போல் நண்பர்கள் சினிமாவுக்காக அடித்துக் கொள்கிறார்கள்.

ஆனால் அந்த நேரத்தில் நான் அசோகமித்திரனின் ஒற்றன் என்ற நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன்.  இப்படிப்பட்ட ஃபிலிஸ்டைன் சினிமா சூழலில் பழுப்பு நிறப் பக்கங்களுக்கு ஒரு வெளியீட்டு விழா வைக்க வேண்டுமா என்று யோசிக்கிறேன்.  பணம் இன்னொரு முட்டுக்கட்டை.  ஒன்றரையிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் வரை ஆகும்.  வெளியீட்டு விழாவில் பழுப்பு நிறப் பக்கங்களோடு இன்னும் ஏழெட்டு புத்தகங்களும் வரும்.

வாசகர் வட்ட நண்பர்களைக் கேட்கிறேன்.  யாருக்கும் ஃபோன் செய்வதாக இல்லை.  ஏனென்றால் யாரும் எனக்கு ஃபோன் செய்வதில்லை.  நானாக ஃபோன் செய்தாலும் எல்லோரும் வேலையாக இருக்கிறார்கள்.  நாம் ஃபோன் செய்வதே தப்பு போல் இருக்கிறதே என்று தோன்றும் அளவுக்கு அவர்கள் பிஸியாக இருக்கிறார்கள்.  எல்லோரும் சொல்லும் டெம்ப்ளேட் பதில்: ”நீங்க பிஸியா இருப்பீங்க.  எதுக்குத் தொந்தரவு செய்யணும்னுதான்…”  அத்தனை பேரும் இதையே சொன்னால் நான் என்னதான் செய்வது?  எனக்குத்தான் உங்களுடைய உதவி தேவை.  என் உதவி உங்களுக்குத் தேவை இல்லை.  எனவே நீங்கள்தான் எனக்கு ஃபோன் செய்ய வேண்டும்.  மூன்று மாதத்துக்கு மேல் ஒரு நண்பர் எனக்கு ஃபோன் செய்யவில்லை என்றால் அவர் என் மனதிலிருந்து நீங்கி விடுவார்.  (அப்படி ஒரு நெருங்கிய நண்பர் நீங்கி விட்டார்.)

இப்படி எந்தத் தொடர்புமே இல்லாத நிலையில் வெளியீட்டு விழா தேவையா?  இதற்கும் கிணற்றில் போட்ட கல்லைப் போல் இருக்காமல் பதில் எழுதவும்.  அல்லது ஃபோனில் தொடர்பு கொள்ளவும்.  அல்லது, வேறு என்ன செய்யலாம்?

இன்றுதான் இந்துவில் படித்தேன்.  சுப்ரமணியம் சிவா தொழுநோயோடுதான் அத்தனை பணிகளையும் செய்திருக்கிறார். அவருக்குத் தொழுநோய் இருந்தது இன்றுதான் எனக்குத் தெரியும்.  வரலாற்றில் இப்படி எத்தனையோ தியாகிகள் இருந்து கொண்டே இருக்கிறார்கள்.  நாம் அதில் ஒரு சிறிய துகள்.

இருந்தாலும் வாழ்க்கை அற்புதமாகவே இருக்கிறது.  டிஸ்கவரி புக் பேலஸில் அசோகமித்திரன் பற்றிய அம்ஷன் குமாரின் ஆவணப் படம் போயிருந்தேன்.  அருமையான படம்.  அதற்கு அடுத்து ஞானக்கூத்தன் பற்றிய ஆவணப் படம் என்னை அளவுக்கு அதிகமாகத் துன்புறுத்தி விட்டது.  ஒரு கவிஞனைப் பற்றிய ஆவணப்படம் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு ஒரு உதாரணமாக இருந்தது அந்தப் படம்.  படம் முழுவதும் கமல்ஹாசன் தான்.  கமலுக்கும் ஞானக்கூத்தனுக்கும் என்ன சம்பந்தம்? கமல் ஜெயமோகனின் நண்பர்; படத்தை இயக்குவது ஜெயமோகன் வாசகர் வட்டத்தைச் சேர்ந்தவர் என்றெல்லாம் நாம் முடிச்சுப் போட்டுக் கொள்ள வேண்டும்.  இயக்குனரின் நோக்கம் உயர்ந்ததாக இல்லை.  ஞானக்கூத்தன் பற்றி கமல் பேசியதெல்லாம் வெறும் உளறல்.  கமல் என்ற அந்தஸ்தைத் தவிர அந்தப் பேச்சை வேறு யார் பேசியிருந்தாலும் ஒரு ஆவணப்படத்தில் அது சேர்க்கக் கூடிய தகுதி வாய்ந்தது அல்ல.  நண்பர்களே, என்னைப் பற்றி யாரேனும் ஆவணப் படம் எடுத்தால் அதில் யாரேனும் இப்படி என்னைப் பற்றி உளறினால் அதைத் தயவு தாட்சண்யம் பார்க்காமல் வெட்டி எறிந்து விடுங்கள்.  உளறுவதில் தப்பே இல்லை.  நானும் பலபடியாக உளறுவேன்.  உளறுவதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது.  ஆனால் அதையெல்லாம் ஒரு ஆவணப்படத்தில் சேர்க்க வேண்டுமா? அதனால் படம் முடிந்த கையோடு ஓடி வந்து விட்டேன்.  அதற்குப் பிறகு அசோகமித்திரன் பற்றி மேடையில் பேசினார்களாம்.  உங்களையும் பேசச் சொல்லியிருப்பேன் என்றார் அழகிய சிங்கர்.  நான் அங்கே இருந்ததே அவருக்குத் தெரியாது.

படம் முடிந்து வெளியே ஓடிய போது பின்னாலேயே ஓடி வந்தார் ஒரு இளைஞர். பார்த்தால் ராம் பிரஸாந்த்.  அண்ணா பல்கலைக்கழக மாணவர்.  சிலபோது வீட்டிற்கும் வந்திருக்கிறார்.  என் எழுத்தை உள்வாங்கிய பல இளைஞர்களில் ஒருவர்.  அவரது இசை ரசனை குறித்து நான் வியந்திருக்கிறேன்.  அவரிடமிருந்துதான் சமீபத்தில் பிரபலமாக இருப்பவர்கள் பற்றித் தெரிந்து கொள்கிறேன்.  நூறு ரூபாயைக் கொடுத்தார்.  எவ்வளவோ மறுத்தும் கேட்கவில்லை.  மாணவர்களிடமிருந்து நான் பணமே வாங்குவதில்லை என்று சொல்லியும், அப்பாவுக்குக் கொடுப்பதில்லையா என்றார்.  என்ன சொல்வது என்று தெரியவில்லை.  எங்கேயோ எப்படியெப்படியோ என் எழுத்தைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாசகர் வட்ட நண்பர்கள் மற்றும் வாசகர்களிடம் ஆலோசனை கேட்கிறேன்.  வெளியீட்டு விழா குறித்து என்ன செய்யலாம்?  பணம் அனுப்பித் தர முடியுமா?  இனிமேல் நான் பணம் கேட்டு எதுவும் எழுத மாட்டேன்.  அதனால் பலன் இல்லை.  இந்த வெளியீட்டு விழாவுக்காகவே இதை எழுதுகிறேன்.  பணம் கொடுப்பவர்களுக்குப் பிரதியாக என்னால் என்ன செய்யக் கூடும் என்று யோசித்தேன்.  சென்ற ஆண்டைப் போல, முதல் பிரதியில் “முதல் பிரதி” என்று எழுதி மேடைக்கு அழைத்துக் கையெழுத்திட்டுக் கொடுக்கலாம்.  மேடையில் அவரைப் பேச வைக்கலாம். அது மட்டுமே என்னால் செய்யக் கூடியது.  முதல் பத்து பிரதிகளை அப்படி மேடைக்கு அழைத்துக் கையெழுத்திட்டுக் கொடுக்க முடியும்.  சென்ற ஆண்டு அந்தத் திட்டம் வெற்றி அடைந்தது.  ஒரு நண்பர் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து முதல் பிரதியை வாங்கிக் கொண்டார்.  ஆனால் தன் பெயரை வெளியிட வேண்டாம் என்பதால் வெளியே சொல்லவில்லை.

முதல் பிரதியை ஏலம் விடுகிறேன் என்றே இதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

Axis bank account No.  911010057338057

Account holder’s name: K. ARIVAZHAGAN

Branch: Radhakrishnan Salai, Mylapore,

Chennai

IFSC Code:    UTIB0000006 

MICR Code:    600211002

branch code:    000006

***

ICICI account No. 602601 505045

Account holder’s name: K. ARIVAZHAGAN

T. Nagar branch.  chennai

IFSC Code Number: ICIC0006026