ஆபாச வார்த்தைகளால் என்னைத் திட்டும் போது வருத்தப்பட மாட்டேன். அவர்களைப் பார்த்து பரிதாபப்படுவேன். ஆனால் என் மதிப்புக்குரிய சில எழுத்தாளர்கள் என் நோக்கத்தைச் சந்தேகித்துக் கேவலமாகப் பேசும்போது அவர்களுடனான தொடர்பை அறுத்துக் கொள்வது என் வழக்கம். அதற்காக அவர்களுடைய எழுத்தை மதிப்பிடுவதில் இந்தப் பிரச்சினையெல்லாம் குறுக்கிடாது. அது வேறு; நட்பு வேறு. பல ஆண்டுகளுக்கு முன்பு – 2003 என்று நினைக்கிறேன் – திருநெல்வேலியில் ஒரு இலக்கியக் கூட்டம். பாரிஸில் வசிக்கும் கலாமோகனின் சிறுகதைத் தொகுப்பு பற்றி ஒரு கட்டுரை எழுதி வாசித்தேன். கருத்துரை வழங்கிய என் மதிப்புக்குரிய ஒரு எழுத்தாளர் “இவர் ஃப்ரான்ஸ் போய் வந்ததால் அந்த நன்றிக்கடனுக்காக கலாமோகனைப் பற்றி உயர்வாகப் பேசுகிறார்” என்றார். நான் அப்போது பெரும் முரடனாக இருந்தேன். எழுதிய கட்டுரையைக் கிழித்துப் போட்டு விட்டு, ஆபாச வசைகளில் இறங்க, அடிதடியாகி ஒரு கலவரமே அங்கு உருவானது. பெண்களெல்லாம் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடினார்கள். கேவலம், ஒரு ஃப்ரான்ஸ் பயணத்துக்காக் ஒருத்தரின் எழுத்தை இன்னொருவர் பாராட்டுவார் என்று நினைப்பதே எனக்கு மலத்தை மிதித்தது போல் இருந்தது. அப்படியிருந்தால், என் ஃப்ரான்ஸ் பயணத்துக்கே காரணமாக இருந்த ஷோபா சக்தியின் கொரில்லா நாவலை நான் பாராட்டி அல்லவா பேசியிருக்க வேண்டும்? அதுவும் அதன் வெளியீட்டு விழாவில்? அது ஒரு மோசமான நாட்குறிப்பு என்று பேசி ஷோபாவின் விரோதத்தை அல்லவா சம்பாதித்தேன்?
அந்தத் திருநெல்வேலி சம்பவத்தின் போது மனுஷ்ய புத்திரன் திருநெல்வேலி பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தார் என்று ஞாபகம். அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து எனக்குப் பிடித்த அந்த எழுத்தாளருடனான நட்பை முறித்துக் கொண்டேன். ஆனால் இன்னமும் அவர் எழுதுவதைப் படிக்கிறேன். அவர் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர்.
ஏஷியன் ஏஜ் பத்திரிகை வட இந்தியா முழுவதும் வரும் தினசரி. தென்னிந்தியாவில் அதன் பெயர் டெக்கான் க்ரானிகிள். ஏஷியன் ஏஜ் லண்டனிலும் வருகிறது. அதில் இரண்டு வாரத்துக்கு ஒருமுறை மூன்று ஆண்டுகள் கட்டுரை எழுதினேன். சென்னையிலிருந்து வரும் ஒரு பிரபல தினசரியின் ஆசிரியரின் சிபாரிசினால் தான் ஏஷியன் ஏஜில் கட்டுரை எழுதுகிறேன் என்று என் 30 ஆண்டுக் கால நண்பன் எழுதினான். அந்தப் பத்திரிகை ஆசிரியர் என் நண்பர்தான். காலச்சுவடு கண்ணனுக்கு நண்பனாக இருந்தாலாவது ஏதோ பிரயோஜனம் உண்டு; அந்தத் தினசரி ஆசிரியருக்கு அவ்வளவெல்லாம் செல்வாக்கு இல்லை. மேலும், அப்படி சிபாரிசு வைத்து எழுதும் அளவுக்கு நான் மட்டும் அல்ல; எந்தத் தமிழ் எழுத்தாளனுமே மோசமாகி விடவில்லை. அந்தச் சம்பவத்தோடு என் 30 ஆண்டுக்கால நண்பனிடமிருந்து தொடர்பை அறுத்துக் கொண்டேன்.
ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு நான் தருண் தேஜ்பாலின் நாவல்களைப் பாராட்டுவதன் காரணம், தருண் மூலமாக ஆங்கிலப் பதிப்பாளர்களை அணுகலாம் என்பதுதான் என்று என்னுடைய மற்றொரு 30 ஆண்டுக் கால நண்பர் கண்டு பிடித்து எழுதினார். அடப் பாவி, தருணின் நண்பன் என்று சொன்னாலே ஆபாசமாகக் கேள்வி கேட்கிறார்கள். தருணுக்கே என்னுடைய உதவி வேண்டிய நிலையில் இருக்கிறார். அவர் மூலமாக ஆங்கிலப் பதிப்பாளரா? இவ்வளவுக்கும் இப்படிப்பட்ட கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர் உலகத்தில் உள்ள பல முக்கியமான இலக்கியவாதிகளோடும் கலாச்சார நிறுவனங்களோடும் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவர். நண்பருக்கு உடம்பு பூராவும் மூளை; அதே சமயம் உடம்பு பூராவும் விஷம் என்று நினைத்துக் கொண்டேன். நண்பர்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும். எனக்கு மொழிபெயர்ப்பாளர்கள்தான் தேவை. பதிப்பாளர் தேவையில்லை. ஃப்ரெஞ்சின் ஆக முக்கியமான காலிமார் பதிப்பகத்தின் முதலாளியே எனக்கு அறிமுகமானவர்தான். சந்தித்தும் பேசியிருக்கிறேன்.
மதுபான விருந்தின் கடைசி பியரை யார் வழங்குகிறார்களோ அவரைப் பற்றித்தான் பாராட்டி எழுதுவார் என்று என்னைப் பற்றி எழுதினார் அந்த மூத்த சமூகக் காவலர். ஒரு பொது இடத்தில், ஒரு இலக்கியக் கூட்டத்தில், அவருடைய 20 வயது மகளின் எதிரே என் செருப்பைக் கழற்றி, இதால் அடிப்பேன் என்று கத்தினேன். நல்லவேளை, அவர் என்னை அடியாட்கள் வைத்துக் கொலை செய்ய முயலவில்லை.
இப்போது அந்த முரட்டுத்தனம் என்னிடமிருந்து போய் விட்டது. எந்த அவமானத்தையும் காகத்தின் எச்சம் விழுந்தது போல் நீரால் கழுவி விட்டுப் போய் விடும் சாந்தம் நிகழ்ந்து விட்டது.
எனவே, நண்பர்களே, இந்தப் பாராட்டின் மூலம் யார் என்ன சொன்னாலும் எனக்குக் கவலை இல்லை. கார்ல் மார்க்ஸ் என்னை அடிக்கடி விமர்சித்துக் கொண்டே இருப்பார். இப்போது கூட முகநூலில், எப்போதும் பிஹெச் டி மாணவர்களுக்குப் பாடம் எடுக்கும் சாரு இப்போது எல்கேஜி மாணவர்களுக்குப் பாடம் எடுக்க ஆரம்பித்து விட்டார் என்று எழுதியிருந்தார். எதற்காக எழுதினார் என்று தெரியாது. அ. மார்க்ஸின் நெருங்கிய நண்பர் வேறு. அவர் சில மாதங்களுக்கு முன்பு அவர் எழுதிய சில கதைகளை அனுப்பி வைத்திருந்தார்.