கார்ல் மார்க்ஸ் (2)

ஏதோ காரணத்தால் சென்ற கட்டுரையின் கடைசிப் பத்தி காணாமல் போய் விட்டது.  அதிலும் இந்தக் கட்டுரைக்கு மாற்றுப் பிரதியை சேமித்து வைத்துக் கொள்ளாமல் அப்படியே சாருஆன்லைனில் தட்டச்சு செய்து பதிவேற்றி விட்டேன்.  இப்போது என் ஞாபகத்திலிருந்து.

நான் சென்ற கட்டுரையில் குறிப்பிட்டபடி முரடனாக இருந்தது வெறும் முரட்டுத்தனத்தினால் மட்டும் அல்ல.  நான் சார்ந்திருத்த தத்துவத்தின் அடிப்படையாக இருந்த வெறுப்பினாலும்தான்.  நாம் எதை சார்ந்திருக்கிறோமோ அதன் நிழல் நம் மீது படாதா?   இப்போது என்னால் யாரையும் எதையும் வெறுக்க முடியவில்லை.  ஒதுங்கிப் போக முடிகிறது.  என்னை வெறுப்பவர்கள் மீதும் அன்பு கொள்ள முடிகிறது.  அப்படியே முடியாமல் போகும் போது மகாத்மாவின் வாழ்வில் அவர் நிகழ்த்திக் காட்டிய அகிம்ஸை வழியிலான அத்தனை சம்பவங்களையும் நினைத்துப் பார்க்கிறேன்.  அப்போது அன்பு என்னைச் சூழ்ந்து கொள்கிறது.  இதுதான் இப்போதைய நான்.

சில மாதங்களுக்கு முன்பு கார்ல் மார்க்ஸின் சிறுகதைகளை நேற்றுதான் படிக்க நேரம் கிடைத்தது.  ரொம்ப எதிர்பார்ப்பு இல்லை.  ஆனால் படித்து முடித்த போது ஆதவன் கதைகளைப் படித்தது போன்ற ஒரு நிறைவு கிடைத்தது.  மிகவும் புதிதாக இருந்தது.  அதுதான் முக்கியம்.  அரைத்த மாவையே எப்படித் திரும்பத் திரும்ப அரைப்பது?  அந்த அரைத்த மாவு சமாச்சாரம் கார்ல் மார்க்ஸின் கதைகளில் இல்லை.  தொகுப்பாக வரும்போது விரிவாக எழுதுவேன்.  ஒரு சிறுபிள்ளைத்தனமான சந்தோஷமும் எனக்குள் முகிழ்த்தது.  கார்ல் மார்க்ஸ் எங்கள் மண்ணைச் சேர்ந்தவர்.  கும்பகோணம்.

கார்ல் மார்க்ஸுக்கு வாழ்த்துக்கள்.