தமிழ் இலக்கியம் என்று ஒன்று இருக்கிறதா?

ஜெய்ப்பூர் இலக்கிய விழா உலக அளவில் நடைபெறும் ஆகப் பெரிய இலக்கிய சந்திப்பு.  2012-ஆம் ஆண்டு நான் தமிழ் இலக்கியத்தின் சார்பாக அழைக்கப்பட்டிருந்தேன்.  பாமாவும் அழைக்கப்பட்டிருந்தார்.  அதற்குமுந்தின ஆண்டு குட்டி ரேவதி, ஸல்மா என்று நினைக்கிறேன்.  அப்புறம் பெரிதாக அதில் நான் ஆர்வம் காண்பிக்கவில்லை.   2016-ஆம் ஆண்டுக்கான பட்டியல் வெளிவந்துள்ளது.  உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் பெரும் இலக்கிய ஆளுமைகள் அழைக்கப்பட்டுள்ளனர்.  சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு நிகாராகுவாவைச் சேர்ந்த செர்ஹியோ ராமிரெஸ் என்ற எழுத்தாளரின் To Bury Our Fathers என்ற நாவலைப் பற்றி எழுதியிருக்கிறேன்.  செர்ஹியோ ராமிரெஸ் ஸாந்தினிஸ்தா புரட்சிகர அரசில் உதவி ஜனாதிபதியாக இருந்தவர்.  மிக அற்புதமான நாவல் அது.  Readers International என்ற அமைப்புதான் அந்த நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டது.  வெளியிட்ட உடனேயே வாங்கிப் படித்து விட்டேன்.  நிகாராகுவாவில் ஸாந்தினிஸ்தாக்களின் ஆட்சிக்கு முன்பாக அது பல காலம் தடை செய்யப்பட்டிருந்தது.  அந்த செர்ஹியோ ராமிரெஸ் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவுக்கு வருகிறார்.

தமிழ் இலக்கியத்தின் சார்பாக அழைக்கப்பட்டவர்கள் யார் என்று பட்டியலில் பார்த்தேன்.  ஜெயமோகன்?  ம்ஹும்.  எஸ். ராமகிருஷ்ணன்?  ம்ஹும்.  மனுஷ்ய புத்திரன்?  நோ. சரி, Legends பெயர்கள் இருக்கிறதா, ஞானக்கூத்தன்? அசோகமித்திரன்?  ந. முத்துசாமி?  சா. கந்தசாமி?  ம்ஹும்.  ஒரு பெயரையும் காணோம். தமிழ் இலக்கியத்திலிருந்து யாருமே இல்லை.  ஆனால் தமிழ்நாட்டிலிருந்து ஒரே ஒரு பெயர் இருந்தது.  ட்டி.எம். கிருஷ்ணா.  கிருஷ்ணா ஆங்கிலத்தில் எழுதுபவர்.  தமிழில் அல்ல.  எனவே தமிழ் இலக்கியம் என்ற ஒன்று இருக்கிறதா என்றே எனக்கு சந்தேகம் வந்து விட்டது.

தமிழ் எழுத்தாளர்களை யாரும் (தமிழ்நாட்டிலேயேதான்) கொண்டாடுவதில்லை என்று சொன்னால் எல்லோருக்கும் நோப்பாளம் வருகிறது.  யானையில் ஏத்தனுமா, பூனையில் ஏத்தனுமா என்று நக்கல் பண்ணுகிறார்கள்.  ஒருமுறை காலச்சுவடு கண்ணன் எழுதியிருந்தார்.  ”வெளிநாட்டில் போய் புதுமைப்பித்தன் என்ற பெயரையோ சுந்தர ராமசாமி என்ற பெயரையோ சொன்னால் அவர்கள் எத்தனை விருதுகள் பெற்றிருக்கிறார்கள் என்று கேட்கிறார்கள்.  என்னால் ஒரு பதிலும் சொல்ல முடியவில்லை.”  நம்முடைய பெயர் நமக்கே தெரியாவிட்டால் இந்திக்கார(ரி)னுக்கு எப்படித் தெரியும்?

2016 ஜனவரி 21 இலிருந்து 25 வரை ஜெய்ப்பூரில் நடக்க இருக்கும் அந்த இலக்கிய விழாவுக்கு நான் ஒரு அனாமதேயமாகப் போய் வரலாம் என்று இருக்கிறேன்.  அவர்களே அழைத்தால் தங்குமிடம், சாப்பாடு எல்லாம் ஓசி.  மட்டுமல்லாமல் அத்தனை எழுத்தாளர்களுக்கு மத்தியில் ஒரு அறிமுகமும் கிடைக்கும்.  நாமாகப் போனால் நம்முடைய காசைத்தான் செலவழிக்க வேண்டும்.  செர்ஹியோ ராமிரெஸைப் பார்ப்பதற்காகவாவது போகலாம் என்று இருக்கிறேன்.  சரி, ஜெய்ப்பூர் இலக்கிய விழாவுக்கு என்னுடன் யாருக்கேனும் வர விருப்பம் உள்ளதா?  இல்லாவிட்டால் தனியாகவே போய் விட வேண்டியதுதான்…

அந்த வயிற்றெரிச்சல் பட்டியலைப் பாருங்கள்.

https://jaipurliteraturefestival.org/speakers-for-2016