ஜெயமோகனும் ரெமி மார்ட்டினும்…

ஹாய் சாரு,

நான் தங்களின் தீவிரமான வாசகன். பலமுறை உங்களுக்கு கடிதம் எழுத நினைத்திருக்கிறேன். “கற்றுக்கொடுத்த ஆசானுக்கு என்ன எழுதுவது? என்ன எழுதினாலும் அது அவன் கற்றுக்கொடுத்ததாக தானே இருக்க முடியும்?” என்று எழுதாமல் விட்டு விட்டேன்.

உங்களுடைய அனைத்து எழுத்தையும் படித்து விடுவேன். தற்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் பழுப்புநிறப் பக்கங்களை நீங்கள் லிங்க் கொடுக்கும் முன்பே தினமணியில் படித்து விடுவேன். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் புத்தகங்களை எல்லாம் வரும் புத்தக கண்காட்சியில் வாங்குவதற்காக குறித்து வைத்திருக்கிறேன். நீங்கள் கொடுத்த லிங்கில் இருக்கும் தஞ்சைப்ப்ரகாஷின் 31 சிறுகதைகளையும் படித்து விட்டேன்.

ஜெயமோகனின் இந்த பத்தியை http://www.jeyamohan.in/79412#.VhtbXWDnhgE  படித்த போது என்னால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நம்மை வேண்டுமென்றே அவமானப்படுத்தி உள்ளார். முதல் கடிதமே ஒருவரை குறைசொல்வதாக அமைந்ததற்கு வருந்துகிறேன்.

அன்புடன்,

சரவணன்.

அன்புள்ள சரவணன்,

உங்கள் கடிதத்துக்கு நீங்கள் கொடுத்திருந்த தலைப்பை நீக்கி விட்டேன்.  யாரையும் திட்டுவதில்லை என்ற முடிவை எடுத்து அதன்படி வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.  காந்திய வழியில் நடக்கிறேன் அல்லது நடக்க முயற்சிக்கிறேன் என்பது காந்தி பற்றி புத்தகம் எழுதுவதா?  இல்லை; காந்தியின் வழியை என்னால் முடிந்த அளவுக்கு – இப்போது என் வயது 62 ஆகி விட்டது; இன்னும் குறை காலத்துக்கு – பின்பற்றிப் பார்க்கலாம் என்று உண்மையிலேயே முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.  எனவே ஒருவரை வசை பாடும் உங்கள் கடிதத் தலைப்பை நீக்கி விட்டேன்.  ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு என்றால் அதை அப்படியே போட்டிருப்பேன்.

நீங்கள் கொடுத்த இணைப்பை வாசித்தேன்.  அதில் எதுவுமே எனக்குத் தவறாகப் படவில்லை.  ஜெயமோகனுக்குக் கடிதம் எழுதிய வாசகர் பெயர் சண்முகம் என்று உள்ளது. அந்தக் கடிதத்தைப் படித்த போது ஜெயமோகன் அளவுக்கு சண்முகமும் படித்திருக்கிறார் என்று தெரிகிறது.  ஒருவேளை ஜெயமோகனுக்கும் மேலேயோ என்னவோ.  தஞ்சை ப்ரகாஷ் எல்லாம் இலக்கியவாதி என்றால் தஸ்தயேவ்ஸ்கி, ஜேம்ஸ் ஜாய்ஸ் எல்லாம் எழுத்தாளர்களே இல்லை என்று ஆகும் என்று எழுதியிருக்கிறார் சண்முகம்.  இன்னும் பல உலக இலக்கிய ஆளுமைகளெல்லாம் அந்தக் கடிதத்தில் வருகிறார்கள்.  தி. ஜானகிராமன், ஆல்பர்த்தோ மொராவியா, ஹென்றி மில்லர் என்று பலர்.  ஜெயமோகனுக்கு இப்படிக் கடிதம் எழுதும் வாசகர்கள் நூற்றுக் கணக்கில் இருக்கிறார்கள் என்று அவருக்கு வரும் கடிதங்களைப் பார்த்தால் தெரிகிறது.  அக்கடிதங்களைப் படிக்கும் போது எனக்கு தெய்வத்தைப் பார்த்தது போல் புல்லரிக்கிறது.  தமிழ்நாட்டில் எப்பேர்ப்பட்டதொரு கலாச்சாரப் புரட்சி இந்த ஜெயமோகனால் நடந்து கொண்டிருக்கிறது என்று வியந்து வியந்து போகிறேன்.  ஆனால் அவருடைய மகாபாரதம் முன்பதிவுத் திட்டத்தில் 300 பிரதிதான் போனது என்று அவரே எழுதும் போது மாடியிலிருந்து கீழே விழுந்தது போல் இருக்கிறது.  சீ, கனவு… எல்லாம் கனவு…  அவருக்கு அப்படி வாசகர் கடிதம் எழுதும் ஆத்மாக்கள் எதுவும் புத்தகம் வாங்காதுகள் போல.  சரி, போகட்டும்.

அந்த சண்முகத்தின் கடிதம்.  தஞ்சை ப்ரகாஷ் எழுத்தாளரே அல்ல; மிக மிக அமெச்சூரான நடை; அவர் எழுதியதெல்லாம் சரோஜாதேவி எழுத்து என்கிறார்.  ரொம்ப சரி.  அதைச் சொல்வதற்கு சண்முகத்துக்கும் அதை வழி மொழியும் ஜெயமோகனுக்கும் உரிமை இருக்கிறது.  அந்த உரிமை அவர்களுக்கு இல்லை என்று சொல்ல நீங்களோ நானோ யார்?  நான் சொல்லவில்லையா, ஜெ.ஜெ. சில குறிப்புகள் வெளியாகி இருந்த நேரம்.  தமிழ்ச் சூழலில் ஒரு சுனாமியே நிகழ்ந்து விட்டது போன்ற அதிர்ச்சி.  அத்தகைய அதிர்ச்சியை அதற்குப் பிறகு நான் சந்தித்ததே இல்லை.  விஷ்ணுபுரத்தைக் கொஞ்சம் சொல்லலாம்.  ஆனாலும் ஜே.ஜே. ஒரு சுனாமிதான்.  நாவல் அல்ல; நாவலை எதிர்கொண்ட வாசகச் சூழல்.  ஒரு பக்கம் தர்மு சிவராமு ஒன்றியாகத் திட்டிக் கொண்டிருந்தார்.  இன்னொரு பக்கம் தமிழ்நாடே அந்த நாவலைப் படித்து கதிகலங்கிக் கொண்டிருந்தது.  தமிழ்நாடே என்றால் இலக்கியம் வாசிக்கும் ஆயிரம் பேர் எனக் கொள்க.  அப்போது நான் ஒரு சின்னப்பயல், 25 வயது, சுந்தர ராமசாமியும் வீற்றிருந்த ஒரு கருத்தரங்கில் (கோவை) இந்த நாவலில் புதுசாக எதுவுமே இல்லை; இது ஒரு போலி என்று பெரிய கட்டுரையே வாசித்தேன்.  சு.ரா.வோ தான் ஒரு இமாலய சாதனை செய்து விட்டதாக நினைத்துக் கொண்டிருந்தார்.  அவருக்கு நான் சொன்னது பெரிய விஷயமே அல்ல.  ஆனாலும் எவனோ ஒரு போக்கத்த போக்கிரி ஏதோ உளறிக் கொட்டி நம்மை அவமானப்படுத்துகிறான் என்று எண்ணி அவர் முகம் சிவந்து போயிற்று.  அந்தக் கணம்தான் என் வாழ்வின் வீழ்ச்சிக்கு வித்திட்ட கணம்.  தமிழ் இலக்கியத்தின் மகா புருஷனை அவமானம் செய்தவன் எப்படி வாழ முடியும்?  முடிந்தது கதை.  இப்போது இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கணம் வரை அப்போது நான் பேசிய பேச்சின் விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.  அது பற்றிக் கவலையில்லை.  இலக்கியத்தில் உண்மையே பேச வேண்டும்.  பொய் பேசி ஆதாயம் அடையும் துறை இலக்கியம் அல்ல.  (ஆனால் சு.ரா.வின் வீழ்ச்சி அவரது சீடரால் நிகழ்ந்தது.  சு.ரா.வுக்குப் புரிந்த பாஷையில், சு.ரா. பயணித்த அதே திசையில் மிக மிக உயரத்துக்குச் சென்று, சு.ரா. தன் கனவிலும் கற்பனை செய்ய முடியாத ஒரு உயரத்துக்குச் சென்று சு.ரா.வை மிகப் பெரிய அதிர்ச்சியிலும் மன உளைச்சலிலும் ஆழ்த்தினார் சீடர். சீடர் என்ன சீடர், ஜெயமோகன் தான்.  அந்த வீழ்ச்சியிலிருந்து சு.ரா. அதன் பிறகு எழுந்து கொள்ளவே முடியவில்லை.  ஒரு பெட்டிக் கடைக்குப் பக்கத்தில் எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் வந்தால் என்ன ஆகும்?  அதேதான் நடந்தது சு.ரா.வுக்கு.  நான் சு.ரா.வாக இருந்திருந்தால் எக்ஸ்பிரஸ் அவென்யூவையும் தூக்கி அடிக்கும் ஃபீனிக்ஸ் மாலை நிர்மாணித்திருப்பேன்.  சு.ரா. ஏன் அதைச் செய்யவில்லை என்று எனக்குத் தெரியாது.  ஆனால் அதற்கான ஆற்றலும் பலமும் அவருக்கு இருந்தது.   ஒருவேளை மால்களை அவர் வெறுத்திருக்கலாம்!)

சு.ரா.வை மட்டுமா?  தி. ஜானகிராமனையும் விமர்சித்தேன்.  எப்படி?  மிக மிக சராசரி என்று. மோகமுள்ளா?  வெறும் காதல் கதை.  Refined பாலகுமாரன்.  அப்படி இப்படி.  இன்று அந்த நாவலைப் படிக்கும் போது ஒரு உலக இலக்கியத்தைப் படிப்பது போல் இருக்கிறது.  வாழ்நாள் பூராவும் தஸ்தயேவ்ஸ்கியின் உபாசகனாக இருந்தேன்.  காரணம், அவருடைய குறுநாவல்களும், Notes from the Underground-உம்.  இப்போது அவருடைய இடியட் நாவலைப் படிக்கும் போது நம்மூர் டி.வி. சீரியல் போல் இருக்கிறது.  முக்கி முக்கி 200 பக்கம் படித்தேன்.  தாங்க முடியாத கொடுமை.  படு மடத்தனமான நாவல்.  இதையெல்லாம் எப்படி உலக இலக்கியம் என்று சொல்கிறார்கள் என்றே சந்தேகம் வந்தது.  அதேபோல் என் நண்பர் நேசமித்திரன் ஒருநாள் மதுரையில் வைத்து ஜேம்ஸ் ஜாய்ஸின் டப்ளினர்ஸ் பற்றி வானளாவப் புகழ்ந்து கொண்டிருந்தார்.  க.நா.சு. போன்றவர்களுமே அந்தத் தொகுதி பற்றி அப்படித்தான் புகழ்ந்திருந்தார்கள்.  சிறுகதைத் தொகுதி.  நான் அவருடைய யுலிஸஸ் படித்திருக்கிறேன்.  அது ஒரு மகத்தான அனுபவம்.  நேசமித்திரனின் மீது எனக்கு ஒரு பிரமிப்பு உண்டு.  அவருடைய வாசிப்பு, அவருடைய தமிழ் எல்லாம் பார்த்து பிரமித்துக் கொண்டே இருப்பேன்.  அவரே சொல்கிறாரே என்று டப்ளினர்ஸ் படித்தேன்.  மை காட்.  நம்முடைய பாவண்ணனே இதை விட நல்ல கதைகள் எழுதியிருக்கிறாரே?  நேசனிடம் ஃபோன் செய்து சொன்னேன்.  The Dead படித்துப் பாருங்கள் என்றார்.  நமக்கு அந்த அளவு பொறுமை இல்லை; நேரமும் இல்லை.  ஒரு தேர்ந்த எழுத்தாளன் – அதிலும் ஆங்கில இலக்கியத்தின் உச்சம் எனக் கருதப்படுபவன் A Mother போன்ற ஒரு கதையை எழுதவே மாட்டான்.  நானே கூட எழுதினாலும் அதை என் தொகுதியில் சேர்க்க மாட்டேன்.

இப்படியெல்லாம் இருக்கும் போது தஞ்சை ப்ரகாஷ் ஒருவருக்கு – அல்ல, இருவருக்கு – சராசரி என்றும், சரோஜாதேவி என்றும் தோன்றுவதில் என்ன ஆச்சரியம்?  இன்னொரு விஷயம், ஜெயமோகனும் நானும் வட துருவம், தென் துருவம்.  எந்த விஷயத்தை எடுத்தாலும் அவருடைய ரசனையும் என் ரசனையும் இருவேறு துருவங்களில் நிற்கும்.  Gangs of Wasseypur படத்தை அவர் குப்பை என்று எழுதியிருந்தார். நானோ தமிழில் கூட மதிப்புரை எழுதாமல் ஏஷியன் ஏஜ் தினசரியில் அது ஒரு மகத்தான படம் என எழுதியிருந்தேன்.  இப்படி ஒவ்வொருக்கொருவர் அபிப்பிராயங்கள்  மாறுகின்றன.  ஒரு சிலருக்கு காஃப்கா ஆகப் பெரிய எழுத்தாளன்.  என்னால் அவரைப் படிக்கவே முடியவில்லை.

ஆனால் ஒன்று.  நம்முடைய ஜெயமோகனின் ரசிகர்கள்/வாசகர்கள் ஒருவித அடிப்படைவாத மனோநிலையில் இருக்கிறார்கள்.  அதாவது, நான் சொல்வதே சரி.  நீ சொல்வது தப்பு, தப்பு, தப்பு.  தேர்ந்தெடுத்த Fanaticism.  மத அடிப்படைவாதி ஒருவரின் பேச்சு எனக்கு ரொம்ப சுவாரசியமாக இருக்கும்.  எதிர் மதத்தைப் பார்த்து அவர் சொல்வார்.  “உங்க மேல நான் வச்சிருக்கிற அன்புனாலதான் சொல்றேன் மக்களே, நீங்க சாப்புடறது பீ…  நீங்க அத சாப்புர்றதப் பாத்து வேதனப்பட்டுத்தான் சொல்றென்… எம் மதத்துக்கு வாங்க…  வந்து விருந்து உண்ணுங்க…” அவருடைய உணர்ச்சிகரமான பேச்சைக் கேட்கும் போது ஆ, நாம் சாப்பிடுவது அவர் சொல்வதுதான் போல என்றெல்லாம் தோன்றி விடும்.  அப்புறம் அது கொஞ்ச நேரம்தான்.  இதே வாதத்தை அவர் மேலும் வைக்கலாம்தானே?  ’உன்னைக் கடைத்தேற்றுகிறேன்’ என்று சொல்பவர்கள் அத்தனை பேரிடமும் இந்த அடிப்படைவாதம் – இந்த fanaticsm இருக்கும்.  இப்போது குடிக்காதவர்கள் குடிப்பவர்கள் மீது இந்த அதிகாரத்தைச் செலுத்துகிறார்கள்.   நீ சொல்வது தப்பு; நான் செய்வது சரி.  உன் கட்சி தப்பு; என் கட்சியே சரி.  இதுதான் எல்லா அடிப்படைவாதங்களுக்கும் அடிப்படை.  இதைத்தான் ஜெயமோகனுக்குக் கடிதம் எழுதியுள்ள அன்பரின் கடிதத்தில் பார்க்கிறேன்.  பரவாயில்லை.  அரசியலில், மதத்தில் இருப்பது போல் கலை இலக்கியத்திலும் அடிப்படைவாதிகள் இருக்கிறார்கள்.  அதை யார் தடுக்க முடியும்?  நம்மிடம் அந்த அடிப்படைவாதத்தின் நிழல் பட்டு விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மட்டுமே நாம் செய்யக் கூடியது.  ஜெயமோகனின் வாசகர் சண்முகத்தின் கடிதத்தில் கடைசியில் இப்படி எழுதுகிறார்:

”இதேபோல (தஞ்சை ப்ரகாஷ் போல) அமெச்சூர் ஆக எழுதுபவர்கள் தங்கள் எழுத்தை நியாயப்படுத்த இவரைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று சொன்னார்கள். அல்லது அவர்களுடைய வாசிப்பும் ரசனையும் அவ்வளவுதான். தமிழில் உள்ள நுட்பமான வாசகர்களோ விமர்சகர்களோ இந்த நாவல்களை பொருட்படுத்தியதில்லை என்று சொன்னார்கள்.”

இந்த வாக்கியம் மிகவும் விஷமத்தனமானது.  ஆனாலும் பரவாயில்லை.  படித்தவனிடம் தான் படிக்காதவனை விட விஷமமும் விஷமும் அதிகமாக இருக்கிறது என்பதைப் பல ஆண்டுகளாக நான் கவனித்து வருகிறேன்.  சண்முகம் குறிப்பிடுவது என்னைத்தான்.  நான் தான் சமீபத்தில் தஞ்சை ப்ரகாஷ் பற்றி வானளாவப் புகழ்ந்து எழுதினேன்.  என் எழுத்தை நியாயப்படுத்துவதற்காக நான் தஞ்சை ப்ரகாஷைப் புகழ்கிறேனாம்!  என்ன ஒரு விஷமம்!  இந்த விஷமமும் இந்த உள்நோக்கமும் எனக்கு சுட்டுப் போட்டாலும் வராது.  எனக்குப் பிடித்தால் பிடித்தது என்பேன்.  பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை.  நான் எழுதுவதை நியாயப்படுத்துவதற்காக தஞ்சை ப்ரகாஷைப் புகழ வேண்டுமா!  ஐயோ, இலக்கியம் படிப்பவர்களின்  மனம் ஏன் எதுவுமே படிக்காத சராசரி ரவுடிகளின் மனம் போல் மாறி விடுகிறது?

நான் திரும்பத் திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டிருக்கிறேன். ஜெயமோகனின் வாசகர்கள் யாருடைய அங்கீகாரமும் எனக்குத் தேவையில்லை.  இதுவரை என் பெயரை யாருமே சொன்னதும் இல்லை.  தமிழின் சிறந்த நாவல்கள் என்ற தலைப்பில் நூறு பட்டியல்கள் வந்துள்ளன.  அந்த நூறிலுமே என்னுடைய ஒரு நாவல் கூடக் கிடையாது.  அது பற்றியெல்லாம் எனக்குக் கவலையோ அக்கறையோ கிடையாது.  என்னுடைய ஒரே கவலையெல்லாம் ஆங்கிலத்தில், ஃப்ரெஞ்சில், ஸ்பானிஷில் என் நாவல்கள் வர வேண்டும் என்பது மட்டும்தான்.  அதைத் தவிர இந்த உலக வாழ்வில் எனக்கு எந்த ஆசையும் கிடையாது.  இதுவரை தமிழ் இலக்கியத்திலிருந்து உலக இலக்கியப் பரப்புக்குச் சென்ற நாவல்களில் அங்கீகாரம் பெற்ற ஒரே நாவல் என்னுடையதுதான்.  (இதில் ஏன் அசோகமித்திரனின் நாவல்கள் சேரவில்லை என்பது இன்னமும் எனக்குக் குழப்பமாகவும் பதில் தெரியாத கேள்வியாகவும் இருக்கிறது.)  Harper and Collins தொகுத்த இந்தியாவின் 50 முக்கிய புத்தகங்கள் என்ற பட்டியலில் ஸீரோ டிகிரி உள்ளது.  சிபாரிசினால் கிடைத்ததல்ல.  இந்த 50 புத்தகங்கள் தொகுப்பைத் தொகுத்த ப்ரதீப் செபாஸ்டியனை இதற்கு முன்பு நான் நேரில் கூடப் பார்த்ததில்லை.  ஹிண்டுவில் அவர் கட்டுரைகளைப் பார்த்திருக்கிறேன்.  அவ்வளவுதான்.  இந்த நூலைத் தொகுத்த மற்றொருவரான சந்திரா சித்தன் கனடாவில் வசிப்பவர்.  இவரை ஒரே ஒரு முறை சந்தித்திருக்கிறேன்.  அந்தத் தொகுப்புக்காக என்னுடன் ஒருமுறை பேசினார்.  அப்போது கூட அவர்தான் ஸீரோ டிகிரி பற்றி எழுதப் போகிறார் என்று எனக்குத் தெரியாது.

இதே ஸீரோ டிகிரிதான் Jan Michalski விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.  சரி, நீ நோபல் பரிசே பெற்றாலும் உன் எழுத்து மீது மரியாதை கிடையாது; ஏனென்றால் எனக்கு நோபல் பரிசு மீதே மரியாதை கிடையாது என்கிறீர்களா?  அதைப் பற்றியும் எனக்குக் கவலையில்லை.  ஏனென்றால், எனக்கு ஜெயமோகன் வாசகர்களின் அங்கீகாரமே தேவையில்லை.  ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் தமிழ் இலக்கியத்திலிருந்து ஒரு ஆளைக் கூட அழைக்கவில்லை; தமிழுக்கு எப்பேர்ப்பட்ட அவமானம் இது!   தமிழ்நாட்டிலிருந்தே ட்டி.எம். கிருஷ்ணா தான் போகிறார்.  அதுதான் என் கவலையெல்லாம்.  பாருங்கள், இலக்கியம் என்று ஒரு இடம் இருக்கிறது.  அதில் நூறு பேர் இருக்கிறார்கள்.  நூறு பேருமே நூறு பேருக்கும் ஜென்ம எதிரி.  இந்த இடமும் சினிமாக்காரர்களுக்கும் இசைக் கலைஞர்களுக்கும் போய் விடுகிறது.  இந்த நிலையில் அவர் எழுதுவது சரோஜாதேவி, இவர் எழுதுவது சரோஜாதேவி என்று அங்கலாய்ப்பு வேறு!

சமீப காலமாக என்னை ஒரு கேள்வி உருட்டி எடுத்துக் கொண்டிருந்தது.  அழகிய பெரியவன் தான் ஆரம்பித்து வைத்தார்.  அவர் எழுதும் கதைகள் சராசரியானவை; பத்திரிகைத் தேவைகளுக்காக எழுதப்படுபவை என்று பேசினேன்.  அதற்கு அவர் ‘அந்தக் கதைகளைப் படித்து நூற்றுக் கணக்கான பேர் ஃபோன் பண்ணிப் பாராட்டுகிறார்கள்’ என்றார்.  இதுதான் என் சம்சயம்.  இதே பதிலைத்தானே ரமணி சந்திரனும் சொல்வார்?  எனக்கு தினமும் ஆயிரம் கடிதங்கள் வருகின்றன.  லட்சக் கணக்கான பெண்கள் என் கதைகளில் அவர்களின் வாழ்க்கையையே பார்ப்பதாக கண்ணீர் உகுத்துக் கடிதம் எழுதுகிறார்கள்.  சிவசங்கரி சொல்கிறார்.  என் கதைகளைப் படித்து எத்தனையோ பேர் திருந்தியிருக்கிறார்கள்.  என் கெழுதகை நண்பர் ராகவன் தினமுமே சொல்வார்.  என் வாழ்க்கை இப்படி நலமாக அமைந்ததற்கு நான் பாலகுமாரனுக்குத்தான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.  என் வாழ்க்கையே அவர் தந்தது.  (ஒரு குடும்பஸ்தன் எப்படி வாழ வேண்டும்; பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்பதையெல்லாம் அவர் பாலகுமாரனிடமிருந்துதான் கற்றாராம்.)  ஜெயமோகனின் வாசகர்களும் என்னிடம் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள்.  என் வாசகர்களும் என்னிடம் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள்.  அப்படியானால் இலக்கியத்தின் தகுதியைத் தீர்மானிப்பது வாசகர் கூட்டமா?

இந்தக் கேள்வியை நான் வெரோனிகாவிடமும் நேசமித்திரனிடமும் கேட்டேன்.  இருவரும் ஒரே பதிலையே சொன்னார்கள்.  ரமணிசந்திரனின் வாசகர்களின் பிரச்னை, அன்றாட வாழ்க்கையின் சிக்கல்கள்.  அதை அவர் தீர்க்கிறார்.  அழகிய பெரியவனின் வாசகர்களின் பிரச்னை, சமூக அவலம்.  அது ஒரு நல்ல அரசியல் செயல்பாட்டினால் தீர்ந்து விடும்.  (100 ஆண்டுகளுக்கு முன் பெண்களுக்கு இருந்த பிரச்னைகள் பெரும்பாலும் இப்போது தீர்ந்து விட்டதைப் போல.) பாலகுமாரன் வாசகர்களின் பிரச்னை, குடும்பம், ஆண் பெண் உறவு சார்ந்தவை.  அதற்கு அவர் கதைகள் உதவும்.  ஆனால் உங்களுடைய எழுத்து முன்வைப்பவை வாழ்வின் ஆதாரமான கேள்விகள், மதிப்பீடுகள் குறித்தவை.   எனவே இதில் பல அடுக்குகள் உள்ளன.  அவைதான் அந்த எழுத்தின் தரத்தையும் தீர்மானிப்பவை.

எனவே சரவணன், அமைதியாக இருங்கள்.  எனக்கு ரெமி மார்ட்டின் ரொம்பவே பிடிக்கும்.  ஆனால் குடித்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.  விட்டு விட்டேன்.  ஜெயமோகனின் எழுத்து பிடிக்கவில்லை.  மீறிப் படித்தால் ரத்த அழுத்தம் அதிகமாகிறது.  விட்டு விட்டேன்.  இப்படி நான் விட்ட விஷயங்களை வலுக்கட்டாயமாக எனக்குப் புகட்டாதீர்கள்.  ஆரோக்கியத்துக்கு ஆகாது.  இதில் உங்களுக்கு உள்ள செய்தியையும் புரிந்து கொள்ளுங்கள்.

ஜனவரி 9 அன்று நடக்கும் என் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வருவீர்கள்தானே?

அன்புடன்,

சாரு.