முகநூல்

மற்ற மொழிகளில் எப்படி என்று எனக்குத் தெரியாது.  ஆனால் தமிழிலும் ஆங்கிலத்திலும் முகநூல் என்பது வெட்டி அரட்டை என்பதாகவே பெரும்பாலும் இருந்து கொண்டிருக்கிறது.  நல்ல முறையில் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.  என்னுடைய பள்ளியிலிருந்து உருவான பலரே இதற்கு சாட்சி. இரண்டு நாள் முன்பு மூப்பனார் போல நீங்கள் ஒரு கிங் மேக்கராக இருக்கிறீர்கள் என்று என்னைக் கிண்டல் செய்தார் ஹமீது.   அராத்து, கருந்தேள், கணேஷ் அன்பு, பிரபு காளிதாஸ் என்று பெயர்களையும் குறிப்பிட்டார்.  இன்னும் ஒருவர் ஒளிந்து கொண்டிருக்கிறார்.  செல்வகுமார்.  இருந்தாலும் முகநூல் 99 சதவிகிதம் வெட்டி அரட்டையாகத்தான் இருக்கிறது.  அந்தக் காலத்தில் நாகூரில் ஒரு கிளப் இருந்தது. வேலை வெட்டி இல்லாத மைனர்கள் அங்கே போய் சீட்டாடுவார்கள்.  நாள் பூராவும் ஆடுவார்கள்.  சாப்பாடு கூட வீட்டிலிருந்து போகும்.  முகநூல் எனக்கு அந்த க்ளப்பைத்தான் நினைவூட்டுகிறது.  ம்ஹும்.  தப்பு. அந்த கிளப்பில் சீட்டாடுபவர்கள் பணம் வைத்து ஆட வேண்டும்.  பெரிய பெரிய ஜமீனெல்லாம் பிச்சைக்காரனாகி விடும்.  ஆனால் முகநூலில் எல்லாமே ஓசி.   50 ஆண்டுகள் தன் உயிரையே விட்டு கவிதையும் கதையும் எழுதிய எழுத்தாளனையெல்லாம் ஆனா ஆவன்னா தெரியாத விடலைக்குஞ்சுகள் கேலி பண்ணும்.  எப்படி கேலி என்றால் சூடு சுரணை இருந்தால் அந்த எழுத்தாளன் தற்கொலை செய்து கொண்டு சாக வேண்டும்.  ஞாநி, கலாப்ரியா, வண்ணதாசன் போன்ற பல எழுத்தாளர்கள் இப்படிப்பட்ட முகநூல் விடலைகளால் கேலி கிண்டலுக்கு ஆளானதை என் நண்பர்கள் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றனர்.  என்னை விட்டு விடுங்கள்.  என்னைத் திட்டாவிட்டால் பலருக்கும் சுவாசக் கோளாறே வந்து விடும்.  பலரும் உயிர் வாழ்வதற்கு இப்படியாக நான் ஆதார முடிச்சாக இருந்து கொண்டிருக்கிறேன்.

இந்த நிலையில் இன்று காலையில் ஒரு அன்பர் முகநூலில் உங்களை ஒருவர் கலாய்த்திருக்கிறார் என்று சொல்லி இணைப்பு கொடுத்தார்.  என்னதான் எழுதியிருக்கிறார் என்ற ஆர்வத்தில் பார்த்தேன்.  அதில் ஒரு மண்ணும் இல்லை.  கிண்டல் கூட இல்லை.  பாலாவின் அவன் இவன் மாதிரி இருந்தது.  முன்பு போல் இருந்தால் சுவற்றில் ஓட்டை போட்டு… என்று அசிங்கமாக எழுதியிருப்பேன்.  இப்போது அப்படி எழுத மனம் வர மாட்டேன் என்கிறது.  மட்டரகமாக இருந்தது என்று கூட சொல்ல முடியவில்லை.  அதில் ஒரு வெங்காயமும் இல்லை.  மொக்கை.  மொக்கை.  மொக்கை.  இம்மாதிரி மொக்கைகளையெல்லாம் படித்துப் பொழுதுபோக்குவது உங்கள் விருப்பம்; உங்கள் வாழ்க்கை.  அதை ஏன் கொண்டு வந்து என் முகத்தில் தேய்க்கிறீர்கள்?  என்ன அசிங்கம் இது?  எத்தனையோ பேருக்கு எத்தனையோ விதமான fetish பழக்கங்கள் உள்ளன.  சிலர் நகத்தைக் கடித்துக் கொண்டே இருப்பார்கள்.  அவர் மாபெரும் எழுத்தாளராக, நடிகராகக் கூட இருப்பார்.   சிலர் பொது இடத்தில் வாய்க்குள் விரல் போடுவார்கள்.  வாய்க்குள் என்ன, நவ துவாரங்களிலும் விரல் போடுவார்கள்.  இன்று காலையில் ஒரு ஆள் தான் வேலை பார்க்கும் இஸ்திரிப் பெட்டித் தள்ளுவண்டிக்கு அரை அடி தூரத்தில் நின்று மூத்திரம் போய்க் கொண்டிருந்தான்.  இப்படி எத்தனையோ ஃபெட்டிஷ்.  அதை ஏன் ஐயா என் மூஞ்சியில் கொண்டு வந்து காண்பிக்கிறீர்கள்?

பழுப்பு நிறப் பக்கங்களில் நான் கொடுக்கும் இணைப்புகள், அதில் நான் கொடுத்துக் கொண்டிருக்கும் நூல்களின் பெயர்கள் – இவற்றையெல்லாம் படிக்க உங்களுக்கு ஒரு ஆயுள் போதாது.  எனக்கு அந்தக் குறிப்பிட்ட முகநூல் இணைப்பை அனுப்பிய நட்பு சிகாமணியே… தி.ஜா.வின் மோகமுள், செம்பருத்தி, நளபாகம், அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு, இணையத்திலேயே கிடைக்கும் தஞ்சை ப்ரகாஷின் சிறுகதைகள் போன்றவற்றைப் படித்து விட்டீர்களா?  இல்லை.  ஆனால் எந்த வெட்கமும் இன்றி அந்த மொக்கை முகநூல் இணைப்பை எனக்கு அனுப்புகிறீர்கள்.  இப்படி நீங்கள் அத்துமீறி நடந்து கொண்டதற்காக இனி ஒரு மாத காலத்துக்கு என்னோடு தொடர்பு கொள்ளக் கூடாது.

உங்களுக்கு நான் தங்கச் சுரங்கத்தைக் காண்பிக்கிறேன்.  நீங்கள் எனக்குக் கழுதை மூத்திரம் அடித்த குட்டிச் சுவரைக் காண்பிக்கிறீர்கள்.  சே… வெட்கமாக இருக்கிறது என்னுடைய சில நண்பர்களை நினைத்தால்…