ஆன்மீகம் என்ன கெட்ட வார்த்தையா?

அன்புள்ள சாரு,

சமீபகாலமாக உங்கள் எழுத்து ஆன்மீகத்தின் பக்கம் சாய்ந்துவருவதாக சில வாசகர்கள் கவலை தெரிவித்து வருவதை கவனிக்கிறேன். பெப்ரவரியில் நடைபெற்ற தங்களது புத்தக வெளியீட்டு விழாவில் கூட யாரோ அந்த விஷயத்தை தொட்டது ஞாபகம் வருகிறது. அவ்வாறு தெரிவிப்பதில் தவறில்லை. ஆனால் அதை derogatory தொனியில் சொல்வது போல் படுகிறது. ஆன்மீகம் என்ன தீண்டத்தகாத விஷயமா? அதை நீங்கள் எழுதுவதில் இவர்களுக்கு என்ன பிரச்னை? அல்லது ஆன்மீகம் உங்கள் எழுத்தின் வீரியத்தை குறைக்கிறது என்று சொல்ல முற்படுகிறார்களா?

உங்கள் “ராஸ லீலா” வை இவர்கள் படிக்கவில்லையா? அதை படித்த போதே எனக்கு ஆன்மீகம் ஒரு ஞான வடிவம் என்று பட்டது (கன்னத்தில் போட்டுக்கொள்ளும் ஆன்மிகம் அல்ல). இத்தனைக்கும் ராஸ லீலா ஆன்மீகம் (மட்டும்) பேசும் புத்தகமல்ல. ராஸ லீலா தனது வாசகர்களை எதையும் கற்றுக்கொள்ளத் தயாராய் இருக்கும் சூன்ய மனோ நிலைக்கு இட்டுச்செல்கிறது. முன்முடிவுகளை உடைத்து ஒரு சாகரத்தில் மூழ்குமாறு பணிக்கிறது. அனைத்து புலன்களையும் உலகின் பல அற்புதங்களுக்காய் திறந்து வைக்கக்கோருகிறது. இது அற்புதம்!

இவர்கள் ஒரு வித அரசியலில் சிக்கிக்கொண்டுள்ளது போல் தோன்றுகிறது.

ராமசாமி.

அன்புள்ள ராமசாமி,

முன்பு கோபக்காரனாக இருந்தேன்.  வெளியீட்டு விழாவிலேயே புத்தகத்தைக் கிழித்து எறிந்தேன்.  எதற்காக?  என் நண்பனை ஒருவர் நொண்டி என்று எழுதியதால்.  ஆனால் இப்போது பொறுமையாக யோசித்துப் பார்க்கும் போது நண்பர் எழுதியது மறந்து போய், நான் புத்தகத்தைக் கிழித்து எறிந்ததே நினைவின் சிமிழில் நிரந்தரமாக அமர்ந்து கொண்டு விட்டது.

இது பற்றி யோசிக்கும் மௌனத்தை நான் அடைந்து விட்டேன்.  ஏன், எல்லோராலும் மகா ஆபாசமாகக் கருதப்பட்ட (அது வெளிவந்த காலத்தில்) ஸீரோ டிகிரி பேசுவது முழுக்க முழுக்க ஆன்மீகம்தானே?  ஒருவன் இமயமலையில் போய் தனியாக அமர்ந்து சொல்லற்ற நிலை வேண்டும் என்று இயற்கையிடம் வேண்டுகிறானே, அது ஆன்மீகம் இல்லையா?

விஷயம் என்னவென்றால், முன்பு சத்தம் போட்டுக் கொண்டிருந்தேன்.  ஒருவன் என் கன்னத்தில் அடித்தால் அவனோடு சாலையில் பொருதி என் சட்டையைக் கிழித்துக் கொண்டேன்.  முன்பு போல் இருந்திருந்தால் என்னைத் திட்டுபவர்களைத் திட்டி நூறு பக்கங்கள் எழுதியிருப்பேன்.  இப்போது அவர்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது.  அவர்களுக்கு நல்ல புத்தி கொடுங்கள் பாபா என்று வேண்டிக் கொள்கிறேன்.

மற்றபடி எனக்குள் எந்த மாற்றமும் இல்லை.  இன்னமும் சொல்கிறேன்.  எக்ஸைல் மாதிரி ஒரு நாவலை எழுத ஒரு தமிழ் எழுத்தாளரால் கூட முடியாது.  ஏனென்றால், தங்களுடைய சொந்த வாழ்வை அவர்கள் இழக்க வேண்டியிருக்கும்.

என்னை மிகச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கும் உங்களுக்கு என் நன்றி ராமசாமி.

அன்புடன்,

சாரு