சண்முகம் மாமாவும் குட்லியும்… (சிறுகதை)

வெட்கம் மானம் சூடு சொரணை ரோஷம்…

மேற்கண்ட ஐந்து நற்குணங்களும் என்னிடம் நினைவு தெரிந்த நாளிலிருந்தே கிடையாது.  ஏன் என்றெல்லாம் யோசித்ததில்லை.  இதனால் எனக்குப் பல வழிகளிலும் லாபமாக இருந்ததால் அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விட்டேன்.  ஆனால் ஒரே ஒரு விதிவிலக்கு.  என் எழுத்தை மட்டமாகப் பேசுபவர்களை மட்டும் என் நட்பு வட்டத்திலிருந்து விலக்கி விடுவேன்.  அவ்வளவுதான்.  அவ்வளவேதான்.  அவர்களோடு பகைமை பாராட்டுவதோ திட்டுவதோ எல்லாம் கிடையாது.  விலகி விடுவேன்.  நமக்கு எழுத்துதான் வாழ்க்கை, உயிர், உடல், மூச்சு, பிராணன் எல்லாமே.  அப்படிப்பட்ட எழுத்தை நண்பன் மதிக்கவில்லை என்றால் அவனை நம் நட்பு வட்டத்தில் வைத்திருப்பதா, விலகி விடு என்ற மனோபாவம்.  அவ்வளவுதானே தவிர வேறு எந்தவிதப் பகையோ புகைச்சலோ கிடையாது.

ஹமீது என்னைத் திட்டி முகநூலில் எவ்வளவோ எழுதியிருக்கிறார்.  முகநூலில் நான் அவரை விலக்கி வைத்திருப்பதால் அதையெல்லாம் படித்து இன்புறும் வாய்ப்பு எனக்குக் கிடைப்பதில்லை என்றாலும் நண்பர்கள் சொல்வார்கள்.  அப்படிச் சொல்லும் நண்பர்களையும் விலக்கி விடுவேன் என்று சொன்னதால் இப்போது அந்த நண்பர்களும் என்னிடம் சொல்வதில்லை.  ஆனால் ஹமீது முகநூலில் என்னைத் திட்டுவதைக் கண்ணுறும் போதெல்லாம் எனக்குக் கோபமே வராது.  ஏனென்றால், அதில் எதுவுமே என் எழுத்தின் மீதான விமர்சனமாக இருக்காது.  அபிப்பிராய பேதம் பற்றின காய்ச்சலாக இருக்கும்; அது சம்பந்தமான வசையாக இருக்கும்.  அதையெல்லாம் நான் பொருட்படுத்துவதே இல்லை.  சாரு ஒரு பொய்யன், சாரு ஒரு கோழை என்றெல்லாம் எழுதுவது என்னைப் பொறுத்தவரை பாராட்டு வார்த்தைகள்.  ஆனால் ஊட்டியில் ஒரு கானகத்தில் வைத்து ஹமீது என் எழுத்து பற்றி மட்டமாகப் பேசி விட்டார் என்பதாக நான் புரிந்து கொண்டதால் – அவர் அப்படித்தான் உண்மையிலேயே நினைக்கிறாரா, சும்மா விவாதத்தின் உஷ்ணத்தில் சொன்னாரா என்றெல்லாம் பல பிரச்சினைகள் அதில் இருக்கின்றன என்றாலும் நமக்குப் புரிவதைத்தானே நாம் எடுத்துக் கொள்ள முடியும்?

வாழ்க்கையில் முதல்முதலாக ஹமீது விஷயத்தில் ஆசுவாசம் அடைந்தேன்.  அப்பாடா, ராகு விட்டு விட்டது.  நம் எழுத்தைப் பற்றி நண்பன் படுமட்டமாக நினைக்கிறான்.  இனிமேல் நமக்குப் பூரண சுதந்திரம் கிடைத்து விட்டது.  இனிமேல் வாழ்க்கையில் வசந்தம்தான்.  இப்படியெல்லாம் நினைத்து ஹமீது என்ற பெயரை என் வாழ்வின் நினைவுப் பெட்டகத்திலிருந்து தூக்கி விட்டேன்.

என்னைப் பொறுத்தவரை நான் மிகவும் கொண்டாடிய ஒரு நட்போ, உறவோ பிரிந்து விட்டால் ரொம்பவும் சந்தோஷப்படுவேன்.  துயரம் அடைய மாட்டேன்.  மற்றவர்களுக்கென்றால் பைத்தியமே பிடித்து விடும்.  இதனால் நட்பாக இருந்த போது பொய் நட்பு பாராட்டினேன் என்றும் அர்த்தமல்ல.  உயிருக்குயிராக நேசிப்பேன்.  விலகி விட்டால் அடடா, என்ன ஒரு பேரின்பம் என்று ஓடி விடுவேன்.

இந்த இடத்தில் என்னுடைய முதல் நாவலான எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் என்ற நாவலில் ஒரு இடம்.  அந்த நாவலை நான் விரிவாக எழுதும் திட்டத்தில்  அப்படியே விட்டு வைத்திருக்கிறேன்.  அதனால்தான் மறுபதிப்பு இல்லாமல் இருக்கிறது.  மேலும், அதிலிருந்து ஒரு அத்தியாயத்தை உருவி எக்ஸைலில் போட்டு விட்டேன், அவசியம் கருதி.  அதனாலும் அந்த நாவலுக்கு மறு பதிப்பு இல்லாமல் இருக்கிறது.  அதில் ஒரு சண்முகம் மாமா என்று ஒரு பாத்திரம் வருவார்.  சூர்யாவின் தாய் மாமா.  அவருடைய குடி நண்பர் குட்லி.  இருவரும் தினமும் குடிப்பார்கள்.  ஒருநாள் சண்முகம் மாமாவை கள்ளுக்கடையில் வைத்து குட்லி வெட்டி விட்டார்.  உடம்பில் 24 இடங்களில் வெட்டு.  எங்கள் வீடு பூராவும் ரத்த வெள்ளம்.  அம்மாதான் மருத்துவமனையிலேயே இருந்து சிசுருக்ஷை செய்து பிழைக்க வைத்தார்.

வீட்டுக்குத் திரும்பிய சண்முகம் மாமா செய்த முதல் வேலை குட்லியைப் பார்க்கப் போனதுதான்.  அப்போதுதான் அம்மா எனக்கு அந்த வார்த்தைகளை எனக்கு அறிமுகப்படுத்தினார்.  ஏன்ணே, உங்களுக்குக் கொஞ்சமாச்சும் வெக்கம் மானம் சூடு சொரண ரோஷம் இருக்கா?  சண்முகம் மாமாவிடம் என் அம்மா கேட்ட கேள்விகள்.

என்ன இருந்தாலும் மாமாவின் ‘ஜீன்’தானே என்னிடமும் ஓடும்?  அதனால்தான் எனக்கும் அந்த ஐந்து நற்குணங்களும் இல்லாமல் போனதோ என்னவோ.

ஊட்டி சம்பவத்துக்குப் பிறகும் கொஞ்சம் கூட வெட்கம் மானம் சூடு சொரணை ரோஷம் எதுவும் இல்லாமல் நாளை கவிக்கோ அரங்கில் நடக்க இருக்கும் மனுஷ்ய புத்திரன் கவிதை வெளியீட்டு நிகழ்வுக்கு வரலாம் என்று முடிவு செய்து விட்டேன்.  ஒரே காரணம்தான்.  இந்த இலக்கிய உலகில் என்னைப் போலவே இன்னொருத்தரும் வெட்கம் மானம் சூடு சொரணை ரோஷம் எதுவும் இல்லாமல் இருக்கும் விஷயம் எனக்குத் தெரிந்து விட்டது.  வேறு யாருமல்ல; ஹமீதுதான் அது.

இவ்வளவு நடந்த பிறகும் என்னைத் தன் விழாவுக்கு அழைத்து ஒரு கடிதம் எழுதியிருந்தார் ஹமீது.  அப்போதுதான் அவரும் என்னைப் போல்தான் என்று எனக்குத் தெரிய வந்தது.  இதன் விசேஷம் உங்களுக்கெல்லாம் புரிகிறதா?  உலகிலேயே இப்படி வெட்கம் மானம் சூடு சொரணை ரோஷம் எதுவும் இல்லாமல் மனிதர்கள் வாழ்வது மிகவும் அரிது.  அப்படிப்பட்ட நிலையில் ஒரே மொழியில் இரண்டு படைப்பாளிகள் அதிலும் பக்கத்துப் பக்கத்துத் தெருவில் வாழ்வது அரிதிலும் அரிது.  எனவேதான் அவர் என் எழுத்து பற்றி சொன்ன கெட்ட வார்த்தைகளை ஒரு ‘புறாக் கூண்டில்’ போட்டு விட்டுப் பழையபடியே நட்பாகி விடுவது என்று முடிவெடுத்து விட்டேன்.

ஒரே ஒரு சோகம்தான்.  இனிமேலாவது நிம்மதியாக வாழலாம் என்று நினைத்தேன்.  இரண்டே மாதம்தான் அந்த நிம்மதி நீடித்தது.  ம்… சூடு சொரணை இல்லாத உலகம்…

நாளை கவிக்கோ அரங்கில் சந்திக்கலாம்.  ஆனால் மேடைக்கு அழைத்தால் வர மாட்டேன்.  Beware!

பின்குறிப்பு:  சண்முகம் மாமா, குட்லி பற்றிக் குறிப்பிட்டதற்குக் காரணம் புரிகிறதா, அல்லது அதையும் விளக்க வேண்டுமா?  சண்முகம் மாமா தான் சாரு நிவேதிதா.  குட்லிதான் மனுஷ்ய புத்திரன்.