ஒரு இரங்கல் கட்டுரை

பின்வரும் கட்டுரையை எழுதியவர் நண்பர் கருந்தேள் ராஜேஷ்.  என்னுடைய சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் ஒரு முக்கியமான இழப்பை, மரணத்தை எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இனி வருவது கருந்தேள் ராஜேஷ்:

எரியும் உடலின் வாய் அரிசியை நோண்டித் தின்பவர்கள்

நம்மூருல ஒரு மனுசன் செத்துப்போனா என்னலாம் பிரச்னை என்பதை ப்ராக்டிகலாக உணர்ந்துகொண்டிருக்கிறேன். அப்பா கடந்த வெள்ளியன்று மதியம் இறந்துவிட்டார். வயது 78. கிட்னி பிரச்னை. டயாலிசிஸ் வேண்டாம் என்று உறுதியாக இருந்து, நினைத்தபடி ஜாலியாக வாழ்ந்தார். கடைசி ஒரு மாதம் மட்டும் கொஞ்சம் வீக்காக இருந்தார். நான்கே நாட்கள் மருத்துவமனை வாசம். முதல் கார்டியாக் ஃபெய்லியரில் செமி அன்கான்ஷியஸ். மூன்று நாட்கள். இரண்டாவது கார்டியாக் ஃபெய்லியரில் அன்கான்ஷியஸாகவே போய்விட்டார். (No RIP comments please. இதையே பயங்கர சோகமாக அழுவாச்சி போஸ்ட் போட்டு லைக் அண்ட் கமெண்ட்ஸ் குவிவது நோக்கம் இல்லை. அவர் இறந்ததால் என்னென்ன ஆயிற்று என்பதை விளக்குவதற்குத்தான் இந்த போஸ்ட்.. எனவே உணர்ச்சி வசப்படவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.. அதுதான் நோக்கம் என்றால் இறந்த உடனேயே மருத்துவமனையில் இருந்தே சோக அழுவாச்சி போஸ்ட் போட்டு இருப்பேன். Let us be practical)..

மருத்துவமனையில் இருந்து அவரது உடலை வீடு எடுத்துவர, 6 கி.மீ தொலைவுக்கு, ஆம்புலன்ஸ் பணம் ஆயிரத்து நானூறு. அடுத்ததாக, உறவினர்கள் வரும்வரை ஐஸ்பாக்ஸில் அவரது உடலை வைக்க, ஒரு நாள் வாடகை நாலாயிரம். இதை மருத்துவமனையிலேயே முடிவு செய்தாயிற்று. எல்லாவற்றுக்கும் சம்மதித்துதான் வண்டி வந்தது. வீட்டில் ஐஸ் பாக்ஸை இறக்கியதும், க்ளீனிங் செலவு என்று 1250/- பிடுங்கிவிட்டனர். அந்த ஐஸ் பாக்ஸை மறுநாள் எடுத்துச்செல்லும்போது (நான் மயானத்தில் இருந்த சமயம்) வீட்டில் இருந்தவர்களிடம் இன்னொரு 300/- பிடுங்கிச் சென்றுவிட்டனர்.

அடுத்ததாக, எனக்கு எந்த சாங்கியத்திலும் நம்பிக்கை இல்லை. அப்பாவே என்னிடம், ‘நான் இறந்தபின் பசித்திருக்கும் பத்துப் பதினைந்து நபர்களுக்கு வயிறார சாப்பாடு போடு.. அதுதான் எனக்கு சந்தோஷம்’ என்று பலமுறை சொல்லியிருக்கிறார். ஆனால் இதெல்லாம் தெரியாத, அப்பா இறந்த சோகத்தில் இருக்கும் அம்மா போன்றவர்கள், பலகாலமாக சில சடங்குகளைப் பார்த்தே வளர்ந்திருப்பதால், கூப்புடுடா புரோஹிதரை.. அப்பா இறந்ததும் உடனடியாக வந்து பேருதவி செய்த நண்பர்களின் உதவியால் மின்மயானத்தை புக் செய்தாகிவிட்டது. அங்கே ஸ்லாட் பிரித்துக் கொடுப்பதால், எங்களுக்கு சனி மதியம் 12 மணி ஸ்லாட். இதை தெளிவாக பூசாரியிடம் சொல்லி வைத்திருந்தேன்.

காலை பத்தரைக்கு வந்துவிடுவதாக உறுதியாக சொன்னார். பத்து மணிக்கே அவரைக் கால் செய்து விசாரித்தால், தோ வந்துடுவேன்னா என்றார். பத்தரைக்கு ஆள் வரவில்லை. மின்மயானத்துக்கு 11.50க்காவது சென்றுவிடவேண்டும் என்பதால், வண்டியை நண்பர்கள் உதவியால் பதினொண்ணரைக்கு வரச்சொல்லியிருந்தேன். அவர்கள் சொன்ன நேரத்துக்கு வந்துவிட்டனர். ஆனால் 11.30 ஆகியும் அந்த அரை மண்டையன் வரவில்லை. தொடர்ச்சியாக ஃபோன் செய்தும் நோ யூஸ். ஒருவழியாக பன்னிரண்டுக்கு இரண்டு பேர் வந்தனர். ஒண்ணரை மணி நேரம் வேஸ்ட். வீட்டில் அப்பாவின் உடலோடு, நாற்பதுக்கும் மேற்பட்ட உறவினர்கள், நண்பர்கள் வெயிட்டிங்.

வந்ததும் சாங்கியங்கள் முடித்து மின்மயானத்துக்குச் சென்று, தகனத்தை முடித்து, வீடு வர மாலை ஆகிவிட்டது. மறுநாள் ஞாயிறன்று மறுபடியும் பண்ணுடா சாங்கியத்தை.. பெங்களூரில் மல்லேஸ்வரத்தில் ஒரு இடத்துக்கு சென்று, அதே அரை மண்டையன் மூலமாக மறுபடியும் சாங்கியங்கள். அந்த ஆளுடன் வந்த இன்னொருவர், எல்லாவற்றையும் முடித்தபின்னரும் பணம் பிடுங்குவதிலேயே குறியாக இருந்தார். இரண்டு நாட்கள் – மொத்தமாக ஒரு மணி நேர வேலைக்கு அவர்கள் வாங்கியது 13,000/-. அதிலும் ஆத்மசுத்தி இல்லாமல் ஃபோன் பேசிக்கொண்டு, காலைச் சொறிந்துகொண்டு இருந்த நேரம்தான் அதிகம். சரி விடு. அம்மா வருத்தப்படுகிறார். சகித்துக்கொள்.

அடுத்ததாக, அப்பாவின் அஸ்தியைக் கரைக்கவேண்டும். ஶ்ரீரங்கப்பட்டினம் சென்றோம். அங்கே காவிரிக்கரையில், நடு ஆற்றுக்குச் செல்ல பரிசலில் டிக்கெட் 100/-. கொடுத்தால், உடனடியாக இன்னொருவன் வந்து, எண்ட்ரன்ஸ் ஃபீஸ் இன்னொரு 100 கொடு என்றான். ஏனெனில் அஸ்தியைக் கரைக்க அவசியம் எண்ட்ரன்ஸ் ஃபீஸ் கொடுக்கவேண்டுமாம். அதையும் கொடுத்தேன். அஸ்தியைக் கரைத்தபின் பரிசல்காரர் தலையைச் சொறிய, அவருக்கு ஒரு அமௌண்ட்.

அங்கிருந்து வீடு வந்தால், சென்று திரும்பிய டாக்ஸியின் ஓட்டுநர் 600 ரூ அதிகம் கேட்டார். அஸ்தியைக் கொண்டுசென்றதால் வண்டியைக் கழுவவேண்டுமாம். கொடுத்தேன்.

இன்று காலை, இனி ஒரு சில நாட்கள் கழித்துப் படையல் வைப்பது, இறுதிக் காரியங்கள் போன்றவை செய்ய ஒரு bidding warரே நடந்துகொண்டிருக்கிறது. இரண்டு மூன்று அரைமண்டையன்கள், ஒண்ணரை லட்சம் கொடு, இரண்டு லட்சம் கொடு என்று அம்மாவிடம் பேரம் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

ஒருத்தனுக்கும் ஒரு பைசா கொடுக்காதே.. அப்பாவின் விருப்பப்படி பசித்தவர்களுக்கு நான் தினமும் உணவு வாங்கிக் கொடுக்கிறேன் என்று சொன்னேன். அம்மாவுக்கு அதில் சம்மதமில்லை. புரியாத மொழியில் பேசும் சாங்கியங்களுக்குத்தான் பணத்தைக் கொடுக்கவேண்டும் அவருக்கு.

இதுமட்டுமல்லாமல், இந்த மூன்று நாட்களில் இன்னும் பலருக்கு, அப்பாவின் உடலை சாக்காக வைத்து எக்ஸ்ட்ரா பணத்தைக் கொடுத்திருக்கிறேன். பிணம் என்று வந்துவிட்டாலே இந்த ஓநாய்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. பிணத்தின் வாயில் இருக்கும் அரிசித் துணுக்கையும் விரலை விட்டு நோண்டி வாயில் போட்டு விழுங்கும் கூட்டம்.

இதெல்லாம் அப்பாவுக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்காது. எத்தனையோ உடல்களைக் கரையேற்றியிருக்கிறார். மிகவும் ப்ராக்டிகலான மனிதர். அவர் இப்போது இருந்திருந்தால், கவலையே படாமல், வாடா என்று என்னையும் அழைத்துக்கொண்டு வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியிருப்பார்.

எப்போதும் என் கூடவே இருந்த Shree Vaniக்கு எப்படி நன்றி சொல்வது? அப்பா இறந்த தகவல் தெரிந்ததும் உடனடியாக மருத்துவமனை வந்து பல விதங்களில் உதவிய KR Arts (ராஜன்) மற்றும் நம்ம கொழந்த Saravana Ganesh ஆகிய நண்பர்களுக்கு மிக்க நன்றி. இவர்கள் இல்லாமல் மருத்துவமனையில் பல administrative விஷயங்கள் ஓடியிருக்காது. நான் அம்மாவையும் உறவினர்களையும் பார்த்துக்கொள்ள, இவர்கள் இருவரும் பாக்கி எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டனர். வீட்டிலும் பல வேலைகள் இவர்களால்தான் நடந்தது.

அதன்பின் வீடு வந்து பல விஷயங்களை அநாயாசமாகக் கையில் போட்டுக்கொண்டு செய்த Vijayanand, Jay Kumar ஆகிய இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. You guys rocked. நாங்கள் CIT காலத்தில் இருந்தே ஜிகிரி தோஸ்த்கள். குறிப்பாக இவர்களின் நண்பர் பாபுவுக்கு மிக்க நன்றி. அவர் ஒரு சோஷியல் வொர்க்கர். உடனடியாக மின்மயானத்தைத் தொடர்புகொண்டு எல்லாவற்றையும் யாரென்றே தெரியாத எனக்காகப் பார்த்துக்கொண்டார். பாபுவை இவர்களுக்கு அறிமுகப்படுத்திய நண்பருக்கும் மிக்க நன்றி. அவரையும் மறக்கமுடியாது. இவர்களுடன் வந்து உதவிய Manoj CKவுக்கும் மிக்க நன்றி. நடு இரவில் உறவினர்களை பிக்கப் செய்து வீடு சேர்த்த Elango– thanks a ton. வீட்டுக்கு வந்து சப்போர்ட்டாக இருந்த Krishna Kumar, Pradeep, Siva Kumar Kanagaraj, Lakshmi Narayanan, Ramesh Baabu, எனது அபார்ட்மெண்ட்டை சேர்ந்த அத்தனை நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் என் நன்றிகள். யார் பெயராவது விட்டிருந்தால் மன்னிக்கவும். ஃபோனில் அக்கரையுடன் பேசிய அனைத்து நண்பர்களுக்கும், மெசெஜ், வாட்சப், மெஸஞ்சரில் ஆறுதல் சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

எனது இருபக்க உறவினர்களின் பெயர்களை இங்கே tag செய்யவில்லை. முதலிலிருந்து இறுதிவரை அவர்களின் இருப்பும் உதவியும் ஆறுதல்களும் மறக்கமுடியாதது. ஒருவேளை இன்னும் நண்பர்கள் யாருக்காவது தகவல் தெரிந்திருக்கவில்லை என்றால் மன்னித்துக்கொள்க.

கடைசியாக, மரணம் என்பது ஒரு pitstop மட்டுமே என்பது அப்பாவின் நம்பிக்கை. அவருடன் அண்டவெளி முதல் அணு வரை அனைத்தையும் பேசமுடியும். மிகத்தெளிவான விஷயஞானம் உள்ளவர். அதைவிட, மிகவும் ப்ராக்டிகலானவர். காமிக்ஸ், படங்கள், கேம்கள் என்பதெல்லாமே எனக்கு இவர் அறிமுகப்படுத்தியதுதான். எனவே எனக்கு சோகம் இல்லை. I wanna give him a big cheers for everything.

பி.கு – என்னிடம் பணம் பிடுங்காமல் நியாயமாக நடந்துகொண்டவர்கள் இருவர். அவர் இருந்த CMH மருத்துவமனையும், அவர் எரிக்கப்பட்ட இடுகாடும்.