குறுங்கதை : மாரத்தானும் புத்தக விழாவும் : பிரபு காளிதாஸ்

 

நேற்று 11.6.16 மாலை புத்தக விழா பின்புறம் ஓடும் சாக்கடையைத் தாண்டி இருக்கும் பார்க்கிங்கில் ஒரு இரண்டாயிரம் கார்கள் மேல் நின்றது. டூவீலர்கள் கண்ணிலேயே சிக்கவில்லை. பொதுவாக மிடில் க்ளாஸ்தானே நிறைய வருவார்கள், பணக்காரர்களும் படிக்க ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டார்களோ என்று சந்தேகம் வந்ததற்குக் காரணம், அங்கே நின்ற கார்கள் எல்லாமே லக்ஸுரி மாடல்கள். ஒவ்வொரு காரிலும் விலை உயர்ந்த சைக்கிள்கள் இரண்டு மூன்றை, சினிமாவில் ராஜ்கிரண் தூக்கி அடிப்பார் அல்லவா? அதே ஸ்டைலில் காரின் பின்னால் தூக்கி நிறுத்தியிருந்தார்கள்.

“மராத்தான்” கோஷ்டிகள்புத்தக விழா பார்க்கிங், அதாவது முன்புறம் உள்ள பார்க்கிங்கில் யானைகள் கிராமத்துள் புகுந்து கொடுக்கும் டார்ச்சர் போல் ரகளை பண்ணியதால் கடுப்பாகி BAPASI கொல்லைப்புறம் சாக்கடையைத் தாண்டி திருப்பிவிட்டது. இங்குதான் எல்லோருக்கும் ஆப்பு. அதாவது புத்தகம் வாங்க வந்தவர்களுக்கு. பின்னால் உள்ள சாக்கடை தாண்டி உள்ள பார்க்கிங் போய் வண்டியைப் போட்டுவிட்டு அங்கு நிற்கும் புத்தக விழா செல்லும் தொடர் வண்டியில் ஏறிக்கொண்டு வரவேண்டும். அதற்கு ஒரு பெரிய க்யூ.

“மராத்தான்” செய்த இன்னொரு காமெடி என்னவென்றால் இரண்டு நாட்கள் முன்னால் நடத்திய போட்டியில் போட்டி ஆரம்பிக்கும் இடத்தை பின்னால் ஓடும் சாக்கடைக்கு அந்தப் பக்கம் வைத்து ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால் ஒரே தாளகதியில் புத்தகக் கண்காட்சியையும் பார்க்கிங்கையும் இணைக்கும் சோனியான மரப்பாலம் மேல் தபதபவென்று ஓடியதால் பாலம் இடிந்து விழுந்து பல பேருக்கு செம அடியாம்.

ஒரே தாளகதியில் பாலத்தின் மேல் ஏன் ஓடக்கூடாது என்பது நமக்கு ஆறாவது படிக்கும்போது அறிவியல் பாடத்தில் வரும்.

Why soldiers are asked to break their steps while crossing the bridge?
At a certain point, the bridge would start oscillating to the same rhythm as that of the marching steps. This oscillation would reach a maximum peak when the bridge can no longer sustain its own strength and hence collapses. Therefore, soldiers are ordered to break their steps while crossing a bridge.

இந்த அடிப்படை அறிவு “மராத்தான்” ஓடிய ஆட்களுக்கு ஒருத்தருக்குக் கூடவா இல்லை. ஓடியவர்கள் பூராவும் மாங்கா மடையர்கள் என்பதை பாலம் நிரூபித்துவிட்டது பாருங்கள். நேற்று இரவு டுவீலர் பாஸைக் நின்று காட்டும் அந்த இரண்டு நொடிக்குள் பொறுக்காமல் ஒரு BMW ஹாரன் அடித்துக் காட்டி, திரும்பிப் பார்த்தால், “போ” என்று முகத்தில் கடுமை காட்டுகிறான். இதுபோன்ற மொண்ணைகள்தான் “மராத்தான்”ல் அதிகம் பேர் ஓடுகிறார்கள். அவர்கள் செய்கை ஒவ்வொன்றிலும் அந்த வெறுப்பை உமிழ்கிறார்கள். சென்சிபிள் ஆட்கள் விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இது இப்படியென்றால் நேற்று புத்தக விழா கிளம்பும்போது கிரீன்வேஸ் சாலையில் தொடங்கி லைட் ஹவுஸ் வரை ஒரு இறுதி ஊர்வல கோஷ்டியிடம் மொத்த ஊரும் மாட்டிக்கொண்டது. யாரோ வயதானவர் சடலம் போக முன்னும் பின்னும் பத்து பல்ஸர் பைக்கில் ஓவ்வொன்றிலும் மூன்று பேர், கையில் நிறைய பிணத்துக்குப்போட்ட மாலையைப் பிய்த்துப் பிய்த்து கள் குடித்த குரங்கு போல போவோர் வருவோர் மேலெல்லாம் வீசிக்கொண்டு யாரையும் போகவிடாமல் ஒரே சத்தம். ஒரு இடத்தில்டி வைத்து சைடு போடப் பார்த்தேன். அதற்குள் பல்ஸர் கோஷ்டிகளில் ஒருவன், “ஏய்ய்…ம்மாள….மெதுவா வாடா ங்கோத்தா….” என்றான். டிராஃபிக் போலீஸ் கண்டுகொள்ளவில்லை. மாறாக அங்கங்கே நின்றவர்கள்தொ ப்பியைக் கழற்றி பிணத்துக்கு மரியாதையை செலுத்தினார்கள்.

கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது.

***

IMG_2876மேலே உள்ள மாரத்தானும் புத்தக விழாவும் என்ற குறுங்கதையை எழுதியவர் பிரபு காளிதாஸ்.  இவருடைய குறைந்த ஒளியில் என்ற தொகுப்பு ஏற்கனவே உயிர்மை வெளியீடாக வந்துள்ளது.  அடுத்த ஆண்டு அது கிளாஸிக்ஸ் வரிசையில் வரும் என்று மனுஷ்ய புத்திரன் சொன்னார்.  மேலே உள்ள புகைப்படம் மாரத்தான் முடிந்ததும்  எடுத்தது.  புகைப்படம் காப்பிரைட் அடியேன்.  அதற்காக புகைப்படத்தைப் பயன்படுத்தி விட்டு அடியேன் என்று போடாதீர்கள்.  சாரு நிவேதிதா என்று போட வேண்டும்.  நான் எடுத்த சில புகைப்படங்கள் சர்வதேசத் தரத்தில் வரும்.  இருந்தாலும் பிரபுவுக்குப் போட்டியாக வேண்டாம் என்று என் நண்பர்களிடம் மட்டுமே பகிர்ந்து கொண்டு வருகிறேன்.  புத்தக விழாவில் எல்லாருடைய சட்டையும் இப்படித்தான் தொப்பலாக நனைந்திருந்தது.  சிலர் வெள்ளை நிறத்தில் போட்டிருந்ததால் ஏடாகூடமாக வேறு காட்சியளித்தது.  நானும் வெள்ளை தான்.  சட்டை உடம்போடு ஒட்ட ஆரம்பித்த போது வெளியேறி விட்டேன்.  இன்றைய தினம் மேலே ஒரு கோட்டு அணிந்து வருவேன்.  மேலே கூரையாகப் போட்டிருப்பது தகரமாம்.