மரணத்தோடு பகடையாடியவன்…(2)

அன்புள்ள சாரு,

கவிஞர் குமரகுருபரன் மறைவும் அதை ஒட்டி இலக்கியப் பரப்பில் நிகழ்ந்து வரும் விவாதங்களையும் அறிவீர்கள். குமரகுருபரனைத் தங்கள் வலைத்தளத்தில் தாங்கள் அறிமுகப்படுத்தியதில்தான் அறிவேன்.  இச்சூழ்நிலையில் பல கேள்விகள் மனதை நிலையிழக்கச் செய்கின்றன.  அதீதத்தின் கரங்களுக்குள் ஒரு மனிதனை இட்டுச் செல்வது எது? வாழ்வில் எதனால் ஒரு மனிதன் அதீதத்தால் ஆட்கொள்ளப்பட்டு அழிவிற்குள்ளாகிறான்? அன்பும் பண்பும் மிக்கவர்களுக்கே இந்த நிலை வாய்ப்பது எதனால்? அவருக்குள் இருந்த கோபம் எதன் மேல்? எதற்காக? அந்த ஆறாத சினம் அர்த்தமுள்ளதா? அங்கீகாரத்திற்க்கான ஏக்கத்தினாலா?

அதே மனச்‌ சீற்றமும் காமத்தின் அலைக்கழிப்பும் அங்கீகாரத்திற்கான ஏக்கமும் என்னையும் ஆக்ரமிக்கின்றன. அதீதமே இதற்கான காரணிகளையும்  பழிவாங்கிய உணர்ச்சியையும் தருகிறது. அதனாலேயே அதன் மடியில் இளைப்பாறுகிறேன். நகர வாழ்க்கையைப் பற்றி குமார் குறிப்பிடக் கேட்டிருக்கிறேன். நான் தில்லியில் தற்போது படித்துக் கொண்டிருப்பதால் எனக்கும் அது புலனாகிறது. அந்த நகரத்தின் லயத்தோடு இசைய முடியாமல் கூடவே அதன்  இச்சைகளுக்கும் இணங்க முடியாமல் தனிமையில் அரற்றிக் கொண்டிருக்கும் ஒரு ஜீவனாகவே இருக்கிறேன்.

இந்த அலைக்கழிப்பிலிருந்து விடுதலை மரணம்தானா, அதீதத்தின் மூலமாக? இலக்கியமும் ஆன்மீகமும் என்ன செய்ய முடியும் இந்த விஷயத்தில்? எப்படி நீங்கள் இப்படிப் பட்ட இழப்புகளைக் கடந்து செல்கிறீர்கள்? ஆசானே அப்பனே… இந்த உலகத்தில் நான் இணக்கமாக உணரும் உங்களிடம் இருந்து பதில் வரும் என்று எதிர்பார்ப்புடன்…

பருவ மழைத் தீண்டிய அந்திமாலை வேளையில் இரண்டு பியர் புட்டிகளைக் காலி செய்துவிட்டு கண்ணீர் மல்கி நிற்கிறேன்…

அன்புடன்

நவீன்.

பி.கு. குரகுருபரனைப் பற்றி வலைத்தளத்தில் எழுதுவீர்கள் என நம்புகிறேன்.

அன்புள்ள நவீன்,

உங்களுடைய கடிதம் வந்து மூன்று தினங்களாகின்றன.  பதில் எழுத முடியாதபடி வேலை.  முந்தாநாள் இரவு இரண்டு மணிக்கு குமரன் நினைவு.  அதனால் நேற்று அவனைப் பற்றி எழுதினேன். இரண்டு மணிக்கு என்னை மருட்டியவன் மூன்று மணிக்கு நேராக மனுஷ்ய புத்திரனிடம் போயிருக்கிறான்.  மனுஷ் ஒரு சைத்தான்.  சைத்தானிடம் இவன் பாச்சா பலிக்குமா?  நேற்று முழுதும் குமரனின் ஆன்மா சாந்தமடைய பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன்.

உண்மையில் சொல்லப் போனால், உங்கள் கேள்விகளுக்குப் பதில் அளிக்க எனக்கு எந்தத் தகுதியும் இல்லை.  ஏனென்றால், எனக்கு உங்களுக்கெல்லாம் இருப்பது போன்ற மென் உணர்வுகள் இல்லை.  விளக்குகிறேன்.  1938-44 காலகட்டத்தில் ஐரோப்பாவில் தொண்ணூறு லட்சம் யூதர்கள் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள் இல்லையா?  அதில் பல லட்சம் குழந்தைகளும் உண்டு.  விஷ வாயுக் கூடங்களில் குழந்தைகளின் உடல் கருகும் போது அவர்கள் அணிந்திருக்கும் காலணிகள் உடல்களை அப்புறப்படுத்துவோருக்குப் பிரச்சினையாக இருக்கும் என்று (அல்லது வேறு காரணமோ, தெரியவில்லை) காலணிகளை வெளியே போட்டு விட்டு உள்ளே அனுப்புவார்கள்.  உள்ளே என்ன நடக்கும் என்று அறியாத சில குழந்தைகள் அழும் போது அவர்களுக்குச் சாக்லெட் வழங்கப்பட்டது.  அதெல்லாம் படமாக்கப்பட்டது.  அந்த ஆவணப்படங்களை நான் பார்த்திருக்கிறேன்.  விஷ வாயுக் கூடங்களின் வெளியே பிரமிடுகளைப் போல் பல பிரமிடுகளாக அந்தக் குழந்தைகளின் காலணிகள் குவிந்து கிடக்கும்.  ஆவணப்படத்தை எடுத்தவர் மிகவும் பெருமையாக அந்தக் காலணிகளின் அளவை க்ளோஸப்பில் காண்பிப்பார்.

இறை சக்தி என்று சொல்கிறோமே, அந்த இறை சக்திக்கு இதையெல்லாம் பார்த்துப் பைத்தியம் பிடித்திருக்க வேண்டாமா?  சூரியனும் நட்சத்திரங்களும் வெடித்துச் சிதறியிருக்க வேண்டாமா? எதுவுமே நடக்கவில்லை.  சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், காற்று, கடல், விருட்சம் எதிலுமே மாற்றமில்லை.  அது அது அதனதன் போக்கில் சென்று கொண்டிருந்தன.  நானும் அவ்வாறே ஒரு அஃறிணையாக மாறி விட்டேனோ என எனக்குள் ஓர் ஐயம் எழுகிறது.  எதுவுமே என்னை பாதிக்க மாட்டேன் என்கிறது.  அல்லது, பொய்யாக அப்படி நான் நம்பி என்னையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறேனா என்றும் புரியவில்லை.

அதீதத்தின் கரங்களுக்குள் செல்பவன் கவி மட்டும் அல்ல; சே குவேரா போன்ற போராளிகளும்தான்.  இதில் நல்ல போராளி, கெட்ட போராளி என்று பிரிவுகள் வேறு.  இரட்டைக் கோபுரங்களைத் தகர்த்தவர்கள் அதீதர்கள் இல்லையா?  இப்படியெல்லாம் எனக்குள் கேள்விகள் எழுகின்றன.  கோட்பாடுகளும் தத்துவங்களும்தான் மனிதர்களைக் கொலைகாரர்களாக மாற்றுகின்றன என்று தோன்றுகிறது.

காலையில் எழுந்து குவளை தானியங்களை எடுத்துக் கொண்டு போய் என்னைச் சுற்றி வரும் காகங்களின் கூட்டத்திற்கு உணவிடுவதைப் போன்ற மகிழ்ச்சியான தருணம் என் வாழ்வில் ஏதுமில்லை.  அதற்காகவே இன்னும் இருநூறு ஆண்டுகள் வாழ விரும்புகிறேன்.

பியர் போத்தல்களை வைத்துக் கொண்டு புலம்பும் உங்களைப் போன்றவர்களைப் பார்த்தால் உண்மையில் எனக்குப் பிடிக்கவில்லை.  தான் என்ற நினைவை அழியுங்கள்.  நீங்கள் யார்?  அந்தக் காகத்தின் நீட்சியே நீங்கள் என உணருங்கள்.  பூமியை வணங்குங்கள்.  சூரியனை வணங்குங்கள்.  விடுமுறையில் லே வரை சென்று இமயத்தை தரிசியுங்கள்.

அப்போது உங்களுக்குக் கிடைக்கும் செய்தி உங்கள்  துயரத்திலிருந்து உங்களை விடுவிக்கும்.

அன்புடன்,

சாரு