மோர் சாதமும் தாமதமாக வந்த அழைப்பும்…

கொஞ்ச நேரத்துக்கு முன்னால் முகநூலில் அடியேன் இட்ட பதிவுகள்:

ப்ராமின் கேர்ள்ஸைக் கல்யாணம் செய்து கொள்வதில் ஒரு சின்ன பிரச்சினை இருக்கிறது. நம்மையும் ப்ராமின்னு நினைச்சுக்கிட்டு அடையார் ஆனந்த பவன் ஜிலேபி கொடுத்து விடுகிறார்கள் பக்கத்து வீட்டு எதிர்வீட்டு இஸ்லாமிய சகோதரர்கள்! பிரியாணி வாசனை நம்மை நாலா பக்கமும் தூக்கி அடிக்க அடையார் ஆனந்த பவன் ஜிலேபி சாப்பிடுவது எவ்வளவு கொடுமை தெரியுமா நண்பர்களே!

12 மணி.

மோர் சாதம், தொட்டுக் கொள்ள சின்ன வெங்காயத்தோடு இன்றைய சாப்பாடு முடிந்தது. வெளியே போய் சாப்பிட்டு விடலாம் என்றுதான் கோபமாக யோசித்தேன். ஆனால் பழுப்பு நிறப் பக்கங்களுக்குக் கட்டுரை கொடுக்க வேண்டும். சா.கந்தசாமியின் சாயாவனம் படித்துக் கொண்டிருக்கிறேன். எங்கே போய் சாப்பிடுவது? சாப்பிட்டு முடிக்கும் தறுவாயில் – மணி 1.55 – (உயிர்மை) செல்வியின் போன் வந்தது. பிரியாணி இருக்கு, சாப்பிட வாங்க என்று சொன்னார். விஷயத்தைச் சொன்னேன். அடடா என்றார். அதோடு நிறுத்தியிருந்தால் கூடப் பரவாயில்லை. காலைலேர்ந்து உங்களுக்கு ட்ரை பண்ணிக்கிட்டிருக்கேன். லைனே கிடைக்கல என்றார். அதுதான் என் துரதிருஷ்டம். போன ஜென்மத்தில் யாரையோ பட்டினி போட்டிருப்பேன் போல. இப்படி வச்சு வச்சு அடிக்கிறான். கைக்கு வந்த பிரியாணி வாய்க்கு வரவில்லை. இதில் ஹமீது வேறு, ஏழெட்டு கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் பிரியாணி அனுப்பிட்டாங்க; என்னா பண்றதுன்னே தெரியல என்று வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டார். என் ஷேரை எடுத்து வைங்க; நைட் சாப்பிட்டுக்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன்.
இவ்வளவு அமளிதுமளிக்கும் செல்வி தீவிர சைவம். அவரும் மோர் சாதம்தான் சாப்பிட்டாரா என்று தெரியவில்லை.

மதியம் இரண்டு மணி.