ஞானக்கூத்தனுக்கு அஞ்சலி

ஞானக்கூத்தன் நேற்று இரவு மறைந்தார். குமுதம் இதழில் ‘கனவு, கேப்பச்சினோ, கொஞ்சம் சாட்டிங்’ தொடரில், ஜூலை 6 அன்று வெளியான சாருவின் கட்டுரை கீழே.

– ஸ்ரீராம்

***

தமிழின் மூத்த கவிஞர் அவர்.  78 வயது.  சென்னையிலிருந்து கிளம்பி கோலாலம்பூரில் உள்ள தன் மகன் வீட்டுக்கு வந்திருக்கிறார்.  வந்து மூன்று மாதங்கள் இருக்கும்.  தினமும் காலை ஆறு மணி அளவில் வீட்டுக்கு அருகில் உள்ள பூங்காவுக்கு வருவது வழக்கம்.  அப்படி ஒருநாள் வந்த போது ஒரு குயில் வரேண்யம் வரேண்யம் என்று கூவியது.  ஆகா, குயிலுக்கு எப்படி காயத்ரி மந்திரம் தெரிந்தது என்று கவிஞருக்கு ஆச்சரியம்.  நமக்குத்தான் ஊர் ஞாபகம் வந்துவிட்டது, அதனால்தான் குயிலின் பாட்டெல்லாம் காயத்ரியாகக் கேட்கிறது என்று நினைத்துக் கொள்கிறார்.  மறுநாளும் குயிலின் வரேண்யம் வரேண்யம்.  திரும்பவும் உன்னிப்பாகக் கேட்கிறார்.  சந்தேகமே இல்லை.  வரேண்யம் வரேண்யம்.  மலேஷியத் தலைநகரின் குயில் எப்படி காயத்ரி மந்திரத்தை ஜெபிக்க முடியும் என்று யோசித்தபடி வீட்டுக்கு வந்து விடுகிறார்.  மூன்றாம் நாளும் வரேண்யம் வரேண்யம்.  அப்போதுதான் அவருக்கு மண்டனமிசிரர் வீட்டுக் கிளி ஞாபகம் வருகிறது.  ஆதி சங்கரர் தேச யாத்திரை செய்து கொண்டிருந்த போது மகிஷ்மதி என்ற ஊருக்கு வருகிறார்.  அந்த ஊரில் வசிக்கும் மண்டனமிசிரர் வீட்டுக்குப் போக வேண்டும்.  வழியில் இரண்டு கிளிகள் ரிக் வேத மந்திரம் ஒன்றை சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்கிறார்.  ஓம் பூர் புவஸ்ஸூவ தத் சவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத்.  ரிக் வேதத்தில் வரும் காயத்ரி மந்திரம்.

ரிக் வேதம் யார் எழுதியது?  யாருக்கும் தெரியாது.  ஆதி மனிதன் சூரியனைத் தொழுதான். அதுதான் காயத்ரி மந்திரம்.  ஆதி மனிதனுக்கு இயற்கையிலிருந்தே சப்தம் கிடைத்தது.  அதுதான் மொழியின் துவக்கப் புள்ளி.  மனிதனிடமிருந்து பறவைக்குச் சென்றதா?  பறவையிடமிருந்து மனிதன் பெற்றதா?  மண்டனமிசிரர் வீட்டுக் கிளி காயத்ரி சொன்னதைப் போலவேதான் கோலாலம்பூர் குயிலும் காயத்ரி சொல்கிறது என்பதை உணர்ந்தார் கவிஞர்.  

எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால்
பிறர்மேல் அதைவிட மாட்டேன்

என்ற பிரபலமான கவிதையை 43 ஆண்டுகளுக்கு முன்னே எழுதிய தமிழின் மூத்த கவியான ஞானக்கூத்தனே கோலாலம்பூர் குயில் காயத்ரி சொல்லக் கேட்டவர்.   ஞானக்கூத்தனின் சிறப்பு என்னவென்றால், இலக்கியப் பரிச்சயமே இல்லாத சராசரி மனிதருக்கும் அவர் கவிதை புரியும். அதே சமயம் சங்கக் கவிதைகளின் இன்றைய தொடர்ச்சியாகவும் வாரிசாகவும் அவரை நாம் பார்க்க முடியும்.  அவர் கவிதையில் சந்தம் இருக்கும்.  தாலாட்டு போல, அல்லது மலையடிவாரத்தில் தவழும் தென்றல் போல நம் உணர்வுகளை வருடும் அவர் கவிதைகள் அதே சமயம் பாலைவனப் புயலாய் நம் சிந்தையையும் உலுக்கக் கூடிய ஆற்றல் படைத்தவை.   

யாரோ முனிவன் தவமிருந்தான்
வரங்கள் பெற்றான் அதன் முடிவில்
நீர்மேல் நடக்க தீ பட்டால்
எரியாதிருக்க என்றிரண்டு

ஆற்றின் மேலே அவன் நடந்தான்
கொடுக்குத் தீயைச் சந்தனம் போல்
உடம்பில் பூசிச் சோதித்தான்
மக்கள் அறிந்தார் கும்பிட்டார்

மறுநாள் காலை நீராட
முனிவன் போனான் ஆற்றுக்கு
நீருக்குள்ளே கால்வைக்க
முடியாதவனாய்த் திடுக்கிட்டான்

கண்ணால் கண்டால் பேராறு
காலைப் போட்டால் நடைபாதை
சிரித்துக் கொண்டு கண்ணெதிரே
ஆறு போச்சு தந்திரமாய்

காலைக் குளியல் போயிற்றா
கிரியை எல்லாம் போயிற்று
வேர்த்துப் போனான் அத்துளிகள்
உடம்பைப் பொத்து வரக்கண்டான்

யாரோ பிணத்தைக் கண்டெடுத்தார்
செத்துப் போக ஒரு நாளில்
தீயிலிட்டார். அது சற்றும்
வேகாதிருக்கக் கைவிட்டார்

நீரின் மேலே நடப்பதற்கும்
தீயாலழியா திருப்பதற்கும்
வரங்கள் பெற்ற மாமுனிவன்
மக்கிப் போக நாளாச்சு

ஸ்ரீலஸ்ரீ என்ற இந்தக் கவிதையை ஞானக்கூத்தன் எழுதிய ஆண்டு 1971.  எந்த விஷயமும் வெறுமனே வித்தையாகவும் சடங்காகவும் மாறினால் என்ன ஆகும் என்பதை உணர்த்தும் கவிதை.  வாய் விட்டுப் படித்துப் பாருங்கள்.  லயம் தெரியும்.

“ஐரோப்பாவின் ஆதி மொழிகளான லத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளை விட பழமையும், இலக்கணச் சிறப்பும் கொண்டது சமஸ்கிருதம்;  மேலும், அந்த இரண்டு மொழிகளோடும் ஆச்சரியகரமாக ஒத்தும் இருக்கிறது” என்று குறிப்பிடுகிறார் சர் வில்லியம் ஜோன்ஸ்.  இவர்தான் 1784-ஆம் ஆண்டு மேலை நாட்டவருக்கு சமஸ்கிருதத்தை அறிமுகப்படுத்தியவர்.

முதல் தமிழ்ச் சங்கத்தில் இருந்தவரான அகத்தியர்தான் தொல்காப்பியத்துக்கும் முந்தைய தமிழ் இலக்கணத்தை வகுத்தவர்.  தமிழைப் போலவே சமஸ்கிருதத்திலும் புலமை பெற்றவர்.  அவரது அகஸ்திய சம்ஹிதா என்ற சமஸ்கிருத நூல் இப்போதும் கிடைக்கிறது.  பாணினி, காளிதாஸன், பாஸன், பாணபட்டர், பர்த்ருஹரி, ஜயதேவர், சங்கரர், வியாசர், வால்மீகி போன்ற மாபெரும் மேதைகளையும் கவிஞர்களையும் கொண்ட மொழி சமஸ்கிருதம்.  அதை வேண்டாம் என்று சொல்வது பெரும் பொக்கிஷத்தை நிராகரிப்பதற்குச் சமம்.

தமிழ், ஆங்கிலம் தவிர இன்னொரு மொழியையும் நம் குழந்தைகள் கற்றுக் கொண்டால் நமக்கு லாபமா, நஷ்டமா?  இந்தியை நிராகரித்தோம்.  அதனால் வட இந்தியாவுக்குச் செல்லும் தமிழர்கள் அத்தனை பேரும் பட்ட சிரமம் கொஞ்ச நஞ்சமல்ல.  ஐரோப்பிய மாணவர்கள் பள்ளிப் படிப்பை முடிக்கும் போதே இரண்டு வெளிநாட்டு மொழிகளைக் கற்றுக் கொண்டு விடுகிறார்கள்.  ஜெர்மனியில் நான் சில மருத்துவ மாணவர்களை சந்தித்த போது அவர்கள் லத்தீன் அல்லது கிரேக்க மொழி படிப்பதை அறிந்தேன்.  ஏனென்றால், பல மருத்துவ வார்த்தைகளின் மூலம் அந்த மொழிகள்தான்.  உதாரணமாக, கைனகாலஜி.  கைனா என்றால் பெண்;  ஆலஜி என்றால் படிப்பு.  பெண் பற்றிய படிப்பு.  கேஸ்ட்ரோஎண்டராலஜி – வயிறு தொடர்பான மருத்துவம்.  கேஸ்ட்ரோ என்ற கிரேக்க வார்த்தையின் பொருள் வயிறு.  டயாபிடிஸ் – இந்த வார்த்தை புழக்கத்துக்கு வந்தது கி.மு. முதல் நூற்றாண்டு.  கிரேக்க வார்த்தை.  பொருள்: வடிகுழாய்.  (அதிக அளவில் சிறுநீர் வெளியேறுவதால் வைக்கப்பட்ட பெயர்.) டயாபிடிஸின் முழுப்பெயர், டயாபிடிஸ் மெலிடெஸ்.  மெலிடெஸ் என்ற கிரேக்க வார்த்தையின் பொருள் தேன்.  அந்த வியாதி உள்ளவரின் சிறுநீர் இனிக்கும் என்பதால் ஏற்பட்ட பெயர்.  சமஸ்கிருதத்திலிருந்து பல வார்த்தைகள் மருத்துவ அகராதியில் உண்டு.  துவோதீனம் (Duodenum) என்பது சிறுகுடலின் ஆரம்பப் பகுதி. சராசரியாக மனிதர்களுக்கு 12 இன்ச் அளவு இருக்கும். சமஸ்கிருதத்தில் ‘துவா’ என்றால் 12. (துவாதசி – அமாவாசையிலிருந்து பனிரெண்டாவது நாள்; பொர்ணமியில் இருந்து பனிரெண்டாவது நாள்.)

அந்நிய வார்த்தைகளை ஏற்காத எந்த மொழியும் வளர்ச்சி அடைந்ததாக சரித்திரம் இல்லை.  கஞ்சி, கயறு, கட்டுமரம், கூலி, இஞ்சி, பந்தல், மிளகுத் தண்ணி என்று பல நூறு தமிழ் வார்த்தைகளை ஆங்கிலம் ஏற்றுக் கொண்டுள்ளது.  ஆனால் அப்படிப்பட்ட பரந்த மனப்பான்மை நம்மிடைம் உண்டா?  மந்திரி என்பது சமஸ்கிருத வார்த்தை என்பதால் அமைச்சர் என்கிறோம்.  ஆனால் அமைச்சரும் சமஸ்கிருதம்தான்.  அமாத்யர்.  அது எப்படி அமைச்சராகும்?  இலக்கணத்தில் த்து, த்ய இரண்டும் ச்ச என்று ஆகும்.  வைத்து, புளித்து.  வச்சு, புளிச்சு. மைத்துனன் – மச்சினன்.  முன்பு மனிதாபிமானமாக இருந்தது இப்போது மனித நேயமாக மாறி விட்டது.  இதில் மனித என்பது சமஸ்கிருதம்.  நேயம் என்பதும் சமஸ்கிருதம்தான்.  பண்டிதர் பேசும் சமஸ்கிருதம் பேச்சு வழக்கில் பாமரரிடம் வரும் போது பிராகிருதம் என்று சொல்லப்படும்.  அந்தப் பிராகிருதத்தில் அபிமானத்தை நேயம் என்பார்கள்.  நீதிபதி இப்போது நீதியரசர் ஆகியிருக்கிறது.  இதில் அரசர் என்பது சமஸ்கிருத வார்த்தை.  அரைய, ராய என்பதெல்லாம் ராஜா என்பதன் திரிபு.  மன்னன், கோ என்ற வார்த்தைகளே ராஜா என்பதன் தூய தமிழ் வார்த்தைகள்.  இப்படியெல்லாம் விளக்கி விட்டு ”ஒருத்தருக்கும் ஒரு பிரயோஜனமுமில்லாமல் இப்படியெல்லாம் வெறும் துவேஷத்தில் செய்கிற காரியங்கள் கடைசியில் பித்துக்குளித்தனமாகத்தான் முடிகின்றன!” என்று முடித்திருப்பவர் யார் தெரியுமா? மகா பெரியவர் என்று அழைக்கப்படும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி. என் தமிழ், சமஸ்கிருத அறிவை விருத்தி செய்ததில் அவருடைய ’தெய்வத்தின் குரல்’ என்ற ஏழு தொகுதிகளுக்கும் பெரிய பங்கு உண்டு.  

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு மொழி அறிவே இல்லை.  யாருக்கும் எந்த மொழியிலும் ஞானம் இல்லை.  இவ்வளவு குறைந்த மொழி அறிவு உள்ள தேசம் இந்த உலகில் இருக்குமா என்று தெரியவில்லை.  எல்லாவற்றையும் விட மருத்துவர்களுக்குத் தமிழ் தெரியாததுதான் பெரும் ஆச்சரியம்.  உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய விஷயம் இது.   உதாரணமாக, அரசு மருத்துவமனைகளில் ஒரு மருத்துவர் தமிழில் மாதங்கள் பெயரைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.  உதாரணமாக, “என்னிக்குக் கடைசியா தலைக்குக் குளிச்சீங்க?” (When did you last have periods?) என்று கேட்டால், ஐப்பசி 17 என்று பதில் வரும். ஐப்பசி என்றால் எந்த மாதம் என்று தெரியாவிட்டால் அம்பேல்.

***

ஒருநாள் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு பெண்மணி கையில் ஒரு பொட்டலத்தை வைத்தபடி அந்த வாட்ச்மேனிடம் ஏதோ ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்.  வாட்ச்மேனுக்குப் புரியவில்லை.  பெண் ஆங்கிலத்தில் பேச இவர் தமிழில் பேச ஒரே கக்கறா புக்கறா.  தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்த நான் என்ன விஷயம் என்று அந்தப் பெண்ணிடம் கேட்டேன்.  ”இதில் சூடாக இட்லி தோசை இருக்கிறது.  இப்போதுதான் வாங்கியது.  இவரை சாப்பிடச் சொல்ல வேண்டும்.”  அடப்பாவிகளா! இதற்கு ஏன் ஆங்கிலம்?  சைகையால் சொன்னால் புரியாதா?