நிம்மதி

இத்தனை நாள் என் எழுத்தையும் நேரத்தையும் சமூகத்துக்கு தானமாகக் கொடுத்து விட்டு, தட்சிணை கொடுங்கள் என்று கையேந்தினேன்.  பதிலுக்கு சமூகம் என்னைப் பிச்சைக்காரன் என்றது.  இப்போது டெக்னிக்கை மாற்றி விட்டேன்.  இனிமேல் என் எழுத்தும் நேரமும் இலவசம் கிடையாது.  கட்டணம் கொடுங்கள்.  இந்த முடிவில் ஏதேனும் தவறு இருந்தால் சொல்லுங்கள், திருத்திக் கொள்கிறேன்.  என் எழுத்தை விட இனிமேல் என் நேரத்துக்குத்தான் கட்டணம் வசூலிக்க இருக்கிறேன்.

நேற்று ஒரு முக்கியமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு.  தெரிந்த நண்பர்கள்தான்.  விவாதத்திற்கான பொருளும் எனக்கே எனக்கென்று தேர்ந்தெடுத்தது போல் இருந்தது.  உடனே சரி என்று சொல்ல மனம் விழைந்தது.  நீயும் மனுஷ் மாதிரி ஆக வேண்டாமா என்று வேறு இடித்தது.   எப்படியும் ஆறு மணி நேரம் போய் விடும்.   தலைக்கு மேல் வேலை இருந்தது.  ”சரி, மிகக் குறைந்த பட்ச கூலி 3000 ரூ. கொடுத்து விடுங்கள்.  வருகிறேன்” என்றேன்.  ஏனென்றால் பணத்துக்கும் தேவை இருந்தது.  மேலிடத்தில் கேட்டு சொல்கிறேன் என்றார்.  அதோடு சரி.  மேலிடம் மறுத்திருக்கும்.  எனக்கு ஆறு மணி நேரம் மிச்சம்.  ரொம்ப சந்தோஷமாக இருந்தது.  இனிமேல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலிருந்து தப்பிக்க ஒரு வழி கிடைத்து விட்டது.

இது குறித்து இன்னும் சில விஷயங்களையும் சொல்ல வேண்டும்.  எழுத்து சம்பந்தமாகவே நிறைய செலவாகிறது.  ஸீரோ டிகிரியை ஒரு பெண் மொழிபெயர்த்தார்.  ஃப்ரான்ஸில் பிறந்து வாழும் தமிழர்.  ஒரு லட்சம் ரூபாய் எனக்கு செலவு.  காலிமார் தான் ஃப்ரெஞ்ச் மொழியின் நம்பர் ஒன் பதிப்பகம். அதன் முதலாளி எனக்குத் தெரிந்தவர்.  பிரதியைப் படித்து விட்டு, இது ஃப்ரெஞ்சே இல்லை என்று சொல்லி விட்டார்கள்.   சரி பண்ணக் கூட முடியாத அதல பாதாளத்தில் இருந்தது.  ஒரு லட்சம் ரூபாய் வீண்.  இப்போது இன்னொரு மொழிபெயர்ப்புக்கு ஒன்றரை லட்சம் ஆகி விட்டது.  நான் ப்ரஸீல், சிலே செல்வதற்காக சிறுகச் சிறுக சேர்த்த பணம்.  இப்போது பயணத்தை விட மொழிபெயர்ப்பு முதல் இடத்தைப் பிடித்து விட்டது.  மொழிபெயர்த்து வந்த பிரதியை எடிட் செய்வதற்கு 50,000 ரூபாய்.  பிற மொழி எழுத்தாளர்கள் எல்லோருமே அவர்களின் நேரத்துக்குப் பணம் வாங்குகிறார்கள்.

ஆதலால், இனிமேல் என் நேரத்தைக் கேட்கும் நண்பர்கள் அதற்கான சிறிய தொகையை எனக்குத் தானமாகத் தர வேண்டும்.  கட்டணம் என்றால் ரொம்ப அதிகமாகும்.  எனவே தானம் என்பதே சரி.  உதாரணமாக, உங்கள் நூல் வெளியீட்டுக்கு என்னை அழைத்தால் அதற்கான தொகை 5000 ரூ.  அந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு எனக்கு ஆகும் நேரம்.  புத்தகம் படிக்கக் காசா என்று அலறக் கூடாது.  நானாகப் படிப்பது வேறு, ஒரு விழாவுக்காக அழைப்பதும் அதற்காக ஏதோ பரீட்சைக்காகப் படிப்பது போல் படிப்பதும் வேறு.  (பெரியார் பல ஆயிரம் கூட்டங்களில் பேசினார்.  இலவசமாகவா பேசினார்?)  குருவுக்கு தட்சிணை கொடுப்பது என்ற பழக்கமே இல்லாத ஒரு நாட்டில் நான் இப்படித்தான் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.  இதையெல்லாம் ஒரு எழுத்தாளரின் literary agent தான் பிற மொழிகளில் கவனித்துக் கொள்கிறார்கள்.  இங்கே தான் இதையும் கூட எழுத்தாளரே கவனிக்க வேண்டியிருக்கிறது.

பல நண்பர்கள் என்னை லஞ்சுக்கும் டின்னருக்கும் அழைக்கிறார்கள். தங்கள் திருமணத்துக்கு வரச் சொல்லி அழைக்கிறார்கள்.   என் நேரத்தை இனிமேலும் இலவசமாகத் தரத் தயாராக இல்லை.  இதெல்லாம் என்னுடைய உள்வட்டத்தைச் சேர்ந்த நண்பர்களுக்குப் பொருந்தாது.