நடனம் பற்றி நான் அதிகம் எழுதியதில்லை என்றாலும் ஒரு ரசிகனாக அதில் எனக்குக் கொஞ்சம் பரிச்சயமுண்டு. ராவணன் படத்தில் ஒரு நடனக் காட்சி மிக வித்தியாசமாக இருக்கிறதே, இந்த கொரியாக்ரஃபி யாருடையது என விசாரித்த போது அது அஸ்தாத் டெபூ என்று தெரிந்தது. அஸ்தாத் டெபூ உலக அளவில் பிரசித்தமான ஒரு நடனக் கலைஞர். அவருடைய நடனத்தை நேரடியாக எண்பதுகளில் தில்லியில் பார்த்திருக்கிறேன். மற்றபடி உலகின் பல்வேறு முக்கியமான நடனங்களை தில்லியில் பார்க்க வாய்த்தது. வருடத்தில் ஒருமுறையாவது கதக் நடன மேதை பிர்ஜு மஹராஜின் நடனத்தை மிகப் பக்கத்தில் இருந்து ரசித்ததுண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக கல்பனா என்ற படம். நடனத்தின் கடவுள் உதய் ஷங்கர் நடித்தது. நடனம் என்றால் என்ன என்று புரிந்து கொள்ள அந்தப் படம் ஒன்று போதும்.
இதெல்லாம் பழைய கதை. இப்போது நடனம், எழுத்தைப் போலவே பல்வேறு திசைகளில் போய்க் கொண்டிருக்கிறது. போல் தோ நா ஸரா என்ற பாடலுக்கு ஒரு குழு நடன அசைவுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அதை கீழே பார்க்கலாம்.
பார்ப்பதற்கு இதெல்லாம் நடனமா என்று தோன்றும். இசையில் க்ரேடில் ஆஃப் ஃபில்த்தைக் கேட்பது போல இது. போல் தோ நா ஸரா என்ற இந்தப் பாடலுக்கு நடனப் பள்ளிகளில் பயிலும் ஆயிரக் கணக்கான இளைஞர்கள் ஆடிப் பயின்று வருகிறார்கள். அதில் எனக்குப் பிடித்த சிலரைப் பார்த்தேன். அவர்களில் விவேக் குப்தா என்னை மிகவும் கவர்ந்தார்.