நிம்மதி (2)

எழுதி முடித்துத் திரும்புவதற்குள் தொலைபேசியில் நண்பர் கேட்டார், எப்படி திடீரென்று பணத்துக்கு இவ்வளவு மதிப்பு தருகிறீர்கள் என்று.

என் குறிப்பில் அப்படியா இருக்கிறது குறிப்பு?  என் வாழ்வில் பணத்துக்கு இடமே இல்லை.  கடுகத்தனை கூட இடம் இல்லை.  முக்கியத்துவம் இல்லை. ஒரு சமீபத்திய உதாரணம்.  மாதத்தில் நாலு வகுப்பு எடுத்தால் போதும்.  ஒரு வகுப்புக்கு 5000 ரூ.  மாத வருமானம் இருபதாயிரம் ஆச்சு.  ஒரு மாதம் எடுத்தேன்.  மாணவர்களுக்கு நான் தமிழ் சினிமாவை விமர்சிப்பது பிடிக்கவில்லை.  நிர்வாகியான நண்பர் சொன்னார், வகுப்பில் தமிழ்ப் படங்களை விமர்சித்துப் பேசாதீர்களேன் என்று.  தர்மதுரை என்ற படத்தின் ஆரம்பக் காட்சி எவ்வளவு மொக்கையாக இருக்கிறது என்றே பத்து நிமிடம் பேசினேன்.  எப்படியெல்லாம் எடுக்கக் கூடாது என்று விளக்கினேன்.  சும்மா போகிற போக்கில் திட்டுவது அல்ல வகுப்பு.

இப்படியெல்லாம் நிபந்தனைகளோடு வகுப்பு எடுக்க முடியாதே சார் என்றேன்.  முயற்சி செய்யுங்கள் என்று வற்புறுத்தினார் நண்பர்.  பணத்துக்காகக் கொள்கையை விட முடியாது என்று நின்று விட்டேன்.  பணத்துக்காக தர்மதுரையைப் பாராட்டிப் பேச முடியுமா?  ஜோக்கரைப் போய் பார்க்கத்தான் முடியுமா?  அந்தக் காலத்தில் ராஜாக்களுக்கு உணவில் விஷம் வைக்கப்பட்டிருக்கிறதா என்று ஒரு அன்பர் சாப்பிட்டுப் பார்ப்பார் அல்லவா, அப்படி எனக்காக ஒரு நண்பர் படங்களைப் பார்த்து கருத்து சொல்வார்.  அவர் ஜோக்கர் பக்கம் போயே போய் விடாதீர்கள் என்றார்.  மேலும் நானே குக்கூவைப் பார்த்து இனிமேல் இந்த ஜென்மத்தில் ராஜு முருகனின் படத்தைப் பார்த்து விடக் கூடாது என்று தீர்மானம் செய்திருந்தேன்.  இதையெல்லாம் பணத்துக்காக விட முடியாது.  எக்காலத்திலும் என் வாழ்வில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.  பரிசுத்தம் என்பதன் மீது நான் கொண்டுள்ள மதிப்பு காரணம் அல்ல; நிம்மதியாக உறங்க வேண்டும்.  சமரசம் செய்தால் எனக்கு உறக்கம் வராது.  இந்த self love தான் நான் சமரசம் செய்து கொள்ளாமல் வாழ்வதற்குக் காரணம்.