வணக்கம்
நான் உங்களின் நூல்களின் வாசகன் அல்ல. இராஜேஷ்குமார், சுபா, பாலகுமாரன், பிகேபி என்று படித்து முடித்து விட்டு சங்க இலக்கியம், கம்பன், திருவாசகம் என்று தாவி விட்ட ஆள். உங்களின் சமகாலத்தவர் ஜெயமோகனின் hyped படைப்பான விஷ்ணுபுரம் சுமார் நூறு பக்கங்கள் படித்து விட்டு, இத்தகைய தமிழ் இலக்கியமே வேண்டாம் என்று விட்டு விட்டேன். உங்களின் நூல்களும் அவரின் நூல்களும் ஒரே மாதிரிதான் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எவ்வளவு தூரம் அது உண்மையோ பொய்யோ தெரியாது. என்னைப் பற்றிய அறிமுகம் போதும்.
நான் சொல்ல வந்த கருத்து, வார மாத இதழ்கள் தங்களுக்கு அனுப்பும் எழுத்தாளர்களுக்கு கண்டிப்பாக ஊதியம் வழங்கியே ஆக வேண்டும். வழங்கத் தவறும் இதழ்களும், பதிப்பகங்களும் நீதிமன்றத்துக்கு இழுக்கப்பட்டு, அறம்நிலை நாட்டப்படவே வேண்டும். இலவசமாக எழுத மாட்டேன் என்று நீங்கள் முடிவு எடுத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.
ஆனால், தொலைக்காட்சி பற்றி நீங்கள் கூறி இருப்பது எனக்கு அவ்வளவு உடன்பாடாக இல்லை. தொலைக்காட்சிகளில், ஏதேனும் குறிப்பிட்ட தலைப்பு பற்றி ஆராய்ந்து நீங்கள் சென்று பேசினால் அதற்கு பணம் தரப்பட வேண்டும் (உதாரணமாக, “சங்க இலக்கியத்தில் காதல்”, “தமிழரின் நீர் மேலாண்மை”, “ஐரோப்பிய நாகரிகமும் தொழிற் புரட்சியும், போல). ஆனால் நாட்டு நடப்பு பற்றி, panel என்று கூடி அமர்ந்து வெட்டிச்சண்டை போடுவதற்கு ஏன் சம்பளம் தரப்பட வேண்டும் ? அதில் தோன்றுவதால், தோன்றும் மக்களுக்கு (ஆசிரியர், அரசியல்வாதி, எழுத்தாளர் யாராயினும்) விளம்பரம் கிடைப்பதால், நியாயத்துக்கு அவர்கள்தான் தொலைக்காட்சிகளுக்கு பணம் தர வேண்டும். இப்படி கூடிக் கூச்சலிடுவதற்கு எதற்கு கூலி ? உங்களின் கருத்துகளைக் கேட்டே ஆக வேண்டும் என்னும் அளவுக்கு நீங்கள் (நீங்கள் என்றால் நீங்கள் இல்லை இத்தகைய விவாத நிகழ்ச்சிகளில் பங்கு பெரும் எவரும்) ஒன்றும் அவ்வளவு பெரிய மேதை இல்லையே ? தவிர, உங்களின் அறிவு ஒரு சில தளங்களில் மட்டுமே இருக்கும். ஆனால் துறை அறிவு இன்றி வெறும் அரசியல் மட்டுமே தானே நம் செய்தி அலைவரிசைகளின் விவாதங்களில் அலசப்படுகிறது, அதில் யார் வேண்டுமானாலும் பேசலாமே, அதற்கு ஏன் ஊதியம் ?
நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என்று அனைவருக்கும் சங்கம் இருக்கும் போது, உங்களைப் போன்ற தமிழ் எழுத்தாளர்களும், திரைக்கதை எழுத்தாளர்களும் ஏன் சங்கம் அமைத்து ஒற்றுமையாக உழைக்கக் கூடாது ? ஒரு இயக்குனருக்கு எவ்வளவு தருகிறார்களோ அதில் பாதியாவது தந்தால்தான் எந்த திரைக்கதை ஆசிரியரும் வேலை செய்ய வேண்டும் என்று நீங்கள் ஏன் கூடிப்பேசி விதிமுறை வைத்துக் கொள்ளக் கூடாது ? உங்களுக்குள் ஒற்றுமை இல்லை என்றால் திரை உலகம் உங்களை ஏய்க்கத்தானே பார்க்கும், அதற்கு யார் என்ன செய்யமுடியும்.
இதெல்லாம் போகட்டும். முதலில் நூலாக வெளி வந்து பிறகு தொலைக்காட்சித் தொடராக/படமாக, சக்கை போடு போடும் அரியணைகளின் ஆட்டம் (Game of Thrones), Harry Potter போன்ற நூல்களை உங்களைப் போன்ற தமிழ் எழுத்தாளர்கள் படைத்திருக்கலாமே ? George RR Martin wordstar என்னும் அரதப் பழசான கணினி நிரலில்தான் எழுதுகிறார் (ஆனால் நிறைய படித்திருக்கிறார், ஐரோப்பிய வரலாறு பற்றி), JK Rowling தேநீர்க்கடையிலும், தொடர்வண்டியிலும் எழுதி முதல் நாவல்களில் முத்திரை பதித்து பிந்தைய நாவல்களை எழுதும் முன் நிறைய சம்பாதிக்கவில்லையா ? அதைப் போல ஏன் தமிழ் எழுத்தாளர்கள் யாரும் ஏன் எழுதவில்லை ? கற்பனை தானே இவற்றின் அடிப்படை. ஆங்கிலத்தில் எழுதியதால்தான் அவை உலகப் புகழ் பெற்றது என்று சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஆங்கிலம் ஒரு காரணம்தான் தவிர அது தலையாயது அல்ல. நூலின் கற்பனைதான் பெரிய காரணம், அக்கற்பனை படைத்த உலகம் தான் பெரிய காரணம், அவ்வுலகின் அழகும், அதில் வரும் பாத்திரங்களின் ஆழ்மன விளக்கங்களும் தான் பெரிய காரணம். தமிழில் குழந்தைகள், சிறுவர்கள், பதின்ம வயதினர் படிப்பதற்கு புதிய நூல்களே இல்லை. இந்த வெற்றிடத்தை நிரப்ப எந்த தமிழ் எழுத்தாளருமே முயலவில்லையே, நீங்கள் முயலலாமே ?
நன்றி.
சங்கர்
டியர் சங்கர்,
என் எழுத்தை ஒருவர் வாசிப்பதும் வாசிக்காமல் இருப்பதும் அவரவர் விருப்பம், சுதந்திரம். ஆனால் என் எழுத்தை வாசிக்காதவர்களிடம் நான் எந்தவிதப் பேச்சும் தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை.
சாரு