சிந்தனையாளர்கள் தேவை

சிந்தனையாளர் என்பவர் யார்?

ஒரு கொந்தளிப்பான சூழல். ஒரு சாரார் இன்னொரு சாராரை அடித்து உதைக்கிறார்கள்.  உயிரோடு கொளுத்துகிறார்கள்.  இன்னொரு சாரார் இன்னொரு பக்கம் எதிரியைப் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறார்கள் அல்லது வெறுமனே அடியை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  ஊடகங்கள் அலறிக் கொண்டிருக்கின்றன.  பார்ப்பவர்களின் ரத்த வெறியைத் தூண்டி விடுகின்றன.  எல்லோரும் ஆயுதம் ஏந்த வேண்டும் என்று விரும்புகிறார்கள்.  வன்முறையின் மீது தாகம் ஏற்பட்டு விடுகிறது.  அடி உதை அடி உதை.  கொஞ்ச நேரத்துக்கு முன்னால் நல்லவர்களாகத் தெரிந்தவர்கள்தான்.  என் மகளே எதிர்ப் பக்க ஆட்களால் வன்கலவி செய்து கொல்லப்பட்டு விட்டாள்.  இப்படி பல கலவரங்கள், கொலைகள், படுகொலைகள் நம் இந்திய வரலாற்றில் தொடர்ந்து வருகின்றன.

இப்படிப்பட்ட சூழலிலும் – என் மகளையே ஒரு கொடூரமான சூழலுக்குப் பலி கொடுத்து விட்டு நிற்கும் நிலையிலும் – யார் ஒருவர் நிலைமையை சரியாகப் புரிந்து கொள்ள முயல்கிறார்களோ, சரியாக மற்றவர்களுக்கு விளக்குகிறார்களோ அவர்களே சிந்தனையாளர்கள்.  இதில் பக்கச் சார்பு இருக்கக் கூடாது என்பது ஆதார விதி.  இப்படி இன்றைய நிலையில் இந்தியாவில் நான் பார்க்கும் ஒரு சிந்தனையாளர் ராமச்சந்திர குஹா.  தமிழ்நாட்டில் சமஸ், குஹாவுக்கு இணையான கட்டுரைகளை எழுதுகிறார்.  பிஜேபியைத் திட்டும் போது மட்டும் கொஞ்சம் பக்கச் சார்பு ஏற்பட்டு விடுகிறது என்றாலும் சமஸை அந்த இடத்தில்தான் வைப்பேன்.  சமீபத்தில் ஒரு ஆசிரியரிடம் அவர் எடுத்துக் கொடுத்த நீண்ட நேர்காணல் அதற்கு ஒரு உதாரணம்.

சமூக நிலவரங்களை, அன்றாட நிகழ்வுகளைப் பற்றி எழுத இன்று சமஸை விட்டால் ஆட்கள் இல்லையா என்று கவலையாக இருக்கிறது.  பலர் இருக்கிறார்கள்.  ஆனால் எல்லோரிடமுமே கொஞ்சம் சிவப்புக் கலர் ஒட்டிக் கொண்டிருக்கிறது.  நடுநிலைமை இல்லை.  இந்தப் பரிதாபமான சூழலில் காவேரி பிரச்சினை பற்றி நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.  நினைப்பதை எழுதினால் யாரும் பிரசுரிக்க மாட்டார்கள்.  சாரு ஆன்லைனில் போட்டால் என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.  இந்த நிலையில் முகநூலில் கார்ல் மார்க்ஸின் இந்தப் பதிவைப் பார்த்தேன்.  இந்தப் பதிவு முகநூலில் வெளிவந்திருப்பது தமிழ்ச் சூழலில் துரதிர்ஷ்டம்.  முகநூலில் அவர் எழுதியிருந்தாலும் கூட அதை தினசரிகளில் எடுத்து முழுமையாகப் போட்டிருக்க வேண்டும்.  லட்சக் கணக்கான பேர் இந்தக் கட்டுரையைப் படித்திருக்க வேண்டும்.  இதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் எழுத்தையும் என் எழுத்தாக, என் கருத்தாகவும் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

தினசரிகள் கார்ல் மார்க்ஸைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  அதனால் அவருக்கு ஒரு லாபமும் இல்லை.  அவர் எங்கோ பாலைவனத்தில் ஒட்டகம் மேய்த்துக் கொண்டிருக்கிறார்.  அவர் எழுதுவது பெருவாரியான மக்களிடம் போய்ச் சேர வேண்டும்.  இதற்கு முன்பு தஞ்சை மாவட்டம் பற்றியும் அங்குள்ள நதிகள் மணல்குப்பையாக இருப்பது பற்றியும் எழுதியிருந்தார்.

எனக்குக் கர்நாடகம் பற்றித் தெரியும்.  அங்கே உள்ள கிராமங்களில் பதினைந்து மணி நேரம் மின்சாரத் தடை இருப்பது இங்கே உள்ளவர்களுக்குத் தெரியுமா?  பல ஆண்டுகளாக இப்படி இருக்கிறது.  பெங்களூரில் ஒரு நண்பர் ஒரு நீதிமன்றத்தில் பெயில் கிடைக்குமா என்ற பதற்றத்துடன் காத்துக் கொண்டிருந்தாராம், சென்ற மாதம்.  காலையிலிருந்து.  மாலை நான்கு ஆகி விட்டது.  அதற்குள் சுமார் 15 முறை மின்சாரம் போனதாம்.  அந்த எரிச்சலிலேயே பெயில் மறுக்கப்பட்டு விடுமோ என்று பயந்து கொண்டிருந்ததாகச் சொன்னார்.  பெங்களூரே இப்படி என்றால் கிராமங்களைப் பற்றி என்ன சொல்ல?  ஆந்திராவின் கிராமங்கள் இன்னும் மோசம்.  நல்லவேளை, காவேரி ஆந்திராவிலிருந்து வரவில்லை.  கீழே இருப்பது கார்ல் மார்க்ஸின் முகநூல் பதிவு:

காவிரிப் பிரச்சினையை ஒட்டி கர்நாடகாவில் நடக்கும் வன்முறைகளை ஆராய்ந்தால், ‘தண்ணீர்’ என்பதைத் தாண்டி நாம் கவனம் செலுத்த நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது; எவ்வாறு ஒரு கலவரம் எளிதாக உருவாக்கப்படுகிறது என்பதும் மேலும் முழுவீச்சில் அது எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதும். இவை தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் என்று யாரேனும் சொல்ல முயல்வார்களானால் அவர்கள் நெஞ்சறிய பொய் சொல்கிறார்கள் என்று பொருள். உதிரிகளைக் கட்டமைத்து களமிறக்குவதில் கர்நாடகம் வெற்றியடைந்திருக்கிறது. இந்த வெற்றி என்பது அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெரும் மக்கள்திரள் ஒன்று சீரழிந்திருக்கிறது என்பதன் வெளிப்பாடு. நடக்கும் கலவரத்தை வெறும் பிஜேபியுடன் மட்டும் குறுக்கிப் பார்க்க முடியாது. இதன் பின்னே காங்கிரசின் புரையோடிய ஊழல் கரங்கள் உண்டு.

பெங்களூர் தவிர்த்த பெரும்பான்மை கர்நாடகம் தரித்திர பூமி என்பது பலர் அறியாதது. உதிரிகளின் உருவாக்கத்தில் இந்த பொருளாதார நிச்சயமின்மைக்கும், உள் கட்டமைப்பு இல்லாத ஊழல் நிர்வாகத்துக்கும் பங்கு உண்டு. வரலாற்று ரீதியாகவே கர்நாடகம் விவசாயத்தில் பின் தங்கிய, மக்கள் நலன் நோக்கி வேகமாக நகராத ஒரு பிராந்தியம்தான். தண்ணீரைத் தேக்கி விவசாயத்துக்கு பயன்படுத்தியது மற்றும் தெளிவான கால்வாய்களை அமைத்து சோழர்கள் தஞ்சையை செழிப்பாக்கியது பத்தாம் நூற்றாண்டுகளில். ஆனால் மைசூரை ஆண்டவர்கள் முதல் அணையை காவிரியின் மீது கட்டியது 1934ல் தான் என்கிறது ஒரு செய்தி. கிட்டத்தட்ட கிருஷனராஜ சாகர் அணை கட்டப்பட்டபோது அப்போதைய தமிழக விளைச்சல் நிலங்களின் அளவு பதினைந்து முதல் இருபது லட்சம் ஏக்கர்கள் என்கிறது ஒரு கணக்கு. அதே காலகட்டத்தில் கர்நாடகத்தின் விளைச்சல் நிலங்களின் அளவு 6.5 லட்சம் ஏக்கர். இப்போது அது 15 லட்சம் ஏக்கராக விரிவடைந்திருக்கிறது. இப்போது கணக்கிட்டால் காவிரியால் பயனடையும் தமிழக விவசாய நிலங்களின் அளவு மூன்றில் ஒரு பங்காக சுருங்கியிருக்கும் என்பது வெளிப்படை.

ஒரு விஷயத்தில் தமிழர்கள் அதிர்ஷ்டசாலிகள். அது என்னவென்றால் நிலத்தடி நீரில் கர்நாடகத்தை விட நமக்கு கையிருப்பு அதிகம். இப்போதைய விளைச்சல் நிலங்களில் பெரும்பான்மை இந்த நிலத்தடி நீரை நம்பி இருப்பவைதான். ஆனால் இந்த நிலத்தடி நீர் இருப்பிற்கு காவிரியின் பங்களிப்பு அவசியம் என்பதுதான் இதில் டுவிஸ்ட்.

இந்த இடத்தில் நாம் கவனிக்க ஒரு முக்கியமான செய்தி இருக்கிறது. கர்நாடகாவில் விவசாய நிலங்கள் அவ்வளவாக இல்லாத போது, காவிரியை அவர்கள் முழுதும் பயன்படுத்திக்கொள்ளாதபோது, அதன் மீது அணை கட்டி, வாய்க்கால்களைத் திட்டமிட்டு அமைத்து அற்புதமான பாசன வலைப்பின்னலை ஏற்படுத்திய சோழர்களின் நிர்வாகத்தை ஒப்பிடும்போது, விரிவடைந்து வரும் கர்நாடகாவின் விவசாய நிலங்களையும், காவிரியை முழுக்கவும் பயன்படுத்த முயலும் அவர்களது எத்தனிப்பையும் எதிர்கொள்ள வேண்டிய தமிழக நிர்வாகம் செய்திருக்க வேண்டியதென்ன? செய்ததுதான் என்ன? சோழர் காலத்தில் இருந்து மிகுந்த உழைப்பில் உருவாக்கி நிலை நிறுத்தப்பட்ட்ட அந்த நீர்ப்பாசன கட்டுமானங்களின் மீது மண் அள்ளிப் போட்டதுதான்.

ஒரு பக்கம் காடுகளின் இழப்பால் குறைந்து வரும் மழையின் அளவு. அதனால் குறையும் காவிரியின் நீர்வரத்து. கர்நாடகாவில் பெருக்கப்பட்ட விளைச்சல் நிலங்கள். மேலும் தாராள பொருளாதார கொள்கைகள் மூலம் மேலிருந்து கீழாக திணிக்கப்பட்டிருக்கும் வளர்ச்சியால் கார்ப்பரேட்களால் சுரண்டப்படும் நீர் என, காவிரி அதன் சக்திக்கு மீறி உறிஞ்சப்படுகிறது. இனி நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு அதிக மழை பொழிவு காலங்களின் பாய்ந்து வரும் நீரை பத்திரப்படுத்தி வைப்பதுதான். அதன் வழிகளை போர்க்கால அடிப்படையில் செய்வதுதான். இதன் பொருள் நமது உரிமையைக் கைவிடுவதல்ல. முன்னோக்கிச் செல்வது. அறிவுப்பூர்வமாக எதார்த்தத்துக்கு முகம் கொடுப்பது.

ஏனெனில் கர்நாடகாவின் அரசியல் என்பது தனது மக்களை கார்ப்பரேட்டுக்கும் மதவாதத்துக்கும் கூட்டிக்கொடுக்கும் அரசியலாக சீரழிந்து கொண்டிருக்கிறது. அப்படி ஒரு சூழலில், இதைப்போன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்களை ஊதிப் பெரிதாக்குவதன் மூலம்தான், தனது மாநிலத்தின் அடித்தட்டு மக்களை அது கட்டுக்குள் வைத்துக்கொள்ள முயலும். காங்கிரஸ், பிஜேபி அல்லது ஜனதாதளம் எந்த கட்சி அதிகாரத்துக்கு வந்தாலும் இந்த நடைமுறையில் இருந்து கொஞ்சமும் வழுவாது.

இதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், முதிய ஓட்டுனரை வண்டியில் இருந்து இறக்கி கன்னத்தில் அறையும் பொறுக்கிகளால் கொக்கோ கோலாவுக்காகவோ, பெப்சிக்காகவோ உறிஞ்சப்படும் நீரை எதிர்த்து அங்கு ஒரு போராட்டத்தைக் கூட செய்ய முடியாது என்பதில் இருந்து அறியலாம். அரசும் இப்போது எரிய விட்டு வேடிக்கை பார்ப்பது போல அமைதியாக இருக்காது. ஆமாம். KPN ன் ஐம்பதுக்கு மேற்பட்ட பேருந்துகள் ஒரே இடத்தில் எரியூட்டப்படுவது என்பதெல்லாம் அரசின் ஆதரவு இல்லாமல் நடக்கவே முடியாது. சித்தராமையா கூட்டிய அவசர கூட்டத்தில், அவரது உள்துறை அமைச்சரே கலந்து கொள்ளவில்லை, அது காவல்துறையினருக்கு குழப்பமான சமிக்ஞையை தந்துவிட்டது என்றெல்லாம் செய்திகள் கசிகின்றன. ஆக இது ஓரளவுக்கு அரசால் அனுமதிக்கப்பட்ட கலவரம். அதன் திட்டத்தின்படி அது இப்போது கட்டுக்குள் வந்திருக்கிறது.

இந்த விஷயத்தில் பிஜேபிக்கு ஏதாவது சேதத்தை உண்டாக்க முடியுமா என்று சித்தராமையா முயன்றிருக்கிறார். பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் இருப்பதெல்லாம் அந்த விளையாட்டுதான். கடைவாய் எச்சிலோடு பிஜேபி காத்திருப்பது தெரியவும் விளையாட்டை விரைவாக முடித்துக்கொண்டிருக்கிறார். இந்த கலவரத்தால் 25,000 கோடிக்கு மேல் இழப்பு என்று கண்ணீர் விடுகின்றன ஊடகங்கள். அதாவது சிலிக்கான் சிட்டியின் தொழில் முடங்கியதால் ஏற்பட்ட இழப்புக்கான கண்ணீர் அது. ரோட்டில் அடிவாங்கியவன் எல்லாம் இந்த அஜண்டாவிலேயே கிடையாது.

மருத்துவமனையில் பிணங்கள் புதைக்கப்படாமல் நாறுவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா சொல்கிறது. ஏனெனில் அந்த வேலையைச் செய்பவர்களில் பெரும்பான்மை தமிழர்கள். அவர்கள் கலவரக்காரர்களுக்கு எளிய இலக்காகி அடித்து துரத்தப்பட்டிருக்கிறார்கள். தமிழர்கள் மீது நிதானமாகவும், அதே சமயம் வேகமாகவும் ஒருவகை வெறுப்பு கட்டமைக்கபடுகிறது என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது. தமிழர்களின் தொழில் நிறுவனங்கள், வசதியான குடியிருப்புகள் குறிவைக்கப்படுகின்றன. சுப்ரீம் கோர்ட்டில் சாதகமான தீர்ப்பு கிடைத்துவிட்டது என்பதை வெற்றியாகக் கருதுவதற்கு ஒன்றுமே இல்லை. தண்ணீர் விவகாரத்தில் நாம் நனைவதற்கு இன்னும் நிறைய இருக்கிறது என்பதே இந்த கலவரம் சொல்லும் செய்தி.

கார்ல் மார்க்ஸ்