ஒரு நியூயார்க்கர் கதையும் ஸீரோ டிகிரியும்

செப்டெம்பர் 28, 2016

என் எழுத்துக்களின் மூலம் நான் ஒழுங்கற்றவனைப் போல் தெரிந்தாலும் கடும் ஒழுங்கைக் கடைப்பிடிப்பவன். என்னோடு பழகியவர்களுக்கு அது தெரியும். அது நல்லதோ கெட்டதோ, இப்படி ஒழுங்கைக் கடைப்பிடிப்பது எனக்கு வசதியாக இருக்கிறது. அதனால் ஒழுங்கைக் கடைப்பிடிப்பதுதான் அறம் என்றெல்லாம் உளற மாட்டேன். ஒருவர் ஒழுங்கற்று இருப்பதுதான் அவருக்கு வசதியாக இருந்தால் அது அவரைப் பொறுத்தவரை நல்லதுதான். சரி, அப்படி நான் கடைப்பிடிக்கும் ஒழுங்குகளில் ஒன்று, ஒரு புத்தகத்தைப் படிக்க எடுத்தால் அதை முடித்து விட்டுத்தான் அடுத்த வாசிப்புக்கான எழுத்தை எடுப்பேன். இப்போது அப்படி நான் படித்துக் கொண்டிருப்பது ஹாருகி முராகாமியின் நோர்வேஜியன் வுட்.

இதில் இன்னொரு பிரச்சினை என்னவென்றால், வாசிப்பையும் நான் மற்றவர்கள் போல் செய்வதில்லை. புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள ஓவியம், இசை, சினிமா பற்றிய குறிப்புகளை எடுத்து அதைப் பார்த்த பிறகே அடுத்த வாக்கியத்துக்குச் செல்வேன். ஆனால் இதே பாணியை நீங்கள் என்னுடைய ராஸ லீலாவை வாசிக்கும் போது பின்பற்றினால் அந்த நாவலை உங்கள் வாழ்நாளில் வாசித்து முடிக்க முடியாது. அதில் நான் குறிப்பிட்டுள்ள சினிமா, இசை, நாவல் பற்றிய குறிப்புகளை பார்த்து, கேட்டு, வாசித்து முடிக்க ஒருவருக்குப் பல ஆண்டுகள் பிடிக்கும். அப்படியானால் உனக்கு மட்டும் எப்படி முடிந்தது, நீ பெரிய கொம்பா என்று என்னைக் கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். கேட்டால் என் பதில்: ஆம், கொம்புதான். எப்படியென்றால், நான் என் உறவினர்களின், நண்பர்களின் ஜனன, மரண, திருமண நிகழ்வுகளுக்குச் செல்வதில்லை. தொலைக்காட்சி பார்ப்பதில்லை. பார்த்ததே இல்லை. வேறு எவ்வகையிலும் ஒரு நிமிடத்தைக் கூட வீணடிப்பதில்லை. எனவே ஒரு சராசரி மனிதரின் நாளை விட என்னுடைய நாள் மிக மிக நீண்டது. அதனால்தான் பிறரால் பல பத்தாண்டுகளில் கூட முடிக்க முடியாத அத்தனையையும் ராஸ லீலாவில் உள்ளடக்க முடிந்தது. (திரைப்பட விழாக்களில் ஒரு நாளில் ஆறு சினிமா பார்ப்பது வழக்கம்.)

விஷயத்துக்கு வருகிறேன். இப்படியாக நான் ஹாருகி முராகாமியின் நோர்வேஜியன் வுட் நாவலைப் படித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் இன்று காலை ஜி. குப்புசாமி இந்த வார நியூயார்க்கரில் வந்துள்ள ஒரு சிறுகதையைப் பற்றிக் குறிப்பிட்டு அதை அவசியம் படித்துப் பார்க்கும்படி கூறினார். கதையின் பெயர் To the Moon and Back. எழுதியவர் Etkar Keret. கதையைப் படிக்க விரும்புவோருக்காக கீழே இணைப்பு:

http://www.newyorker.com/magazine/2016/10/03/to-the-moon-and-back

குப்புசாமி சொன்னால் என்ன வேண்டுமானாலும் செய்வேன். ஆதலால், நோர்வேஜியன் வுட்டைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு நியூயார்க்கர் கதையை வாசிக்க ஆரம்பித்தேன். இதைத்தான் நான் ஸீரோ டிகிரியிலும் எக்ஸைலிலும் எழுதி விட்டேனே? எக்ஸைல் பக்கம் 26. வெறும் அரைப் பக்கம்தான் இருக்கும். அதில் ஒரு நாவலே இருக்கிறது. இதையெல்லாம் நான் பக்கம் பக்கமாக வர்ணித்து, விவரித்து எழுதினால் எக்ஸைல் பத்தாயிரம் பக்கத்தைத் தாண்டி விடும். நான் வெறுமனே நாவலுக்கான குறிப்புகளையே நாவலாகக் கொடுத்திருக்கிறேனோ என்று மற்ற எழுத்தாளர்களின் படைப்புகளைப் படிக்கும் போது தோன்றுகிறது.

இதனால்தான் என் எழுத்து சர்வதேசத் தளத்துக்குப் போக வேண்டும் என்று தீவிரமாக நினைக்கிறேன். எழுதும் போது நான் தமிழ் வாசகர்களையோ சர்வதேச வாசகர்களையோ மனதில் கொள்வதில்லை. ஏற்கனவே சொல்லியபடி, கடவுளிடம் நான் நிகழ்த்தும் உரையாடல்களே என் புனைகதைகள். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கேரளப் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவன் நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள் என்று கேட்டபோது முன்பின் யோசிக்காமல் ஒரு பறவை பறப்பது போல் எழுதுகிறேன்; அவ்வளவுதான் என்று பதில் சொன்னேன். இன்னமும், இப்போதும் அதுதான் பதில். என்றாலும், என் புனைகதைகளை ஒரு வாசகனாகப் படித்துப் பார்க்கும் போது, ஒரு வாசகனாக சர்வதேச இலக்கியத்தில் பயணிக்கும் போது என் எழுத்து தமிழ்நாட்டு எல்லைக்குள் புரிந்து கொள்ளப்படுவதை விட சர்வதேசத் தளத்தில் வாசிக்கப்படுவதுதான் உசிதம் என்று கருதுகிறேன். அவர்கள்தான் அதை இன்னும் அதிகமாகப் புரிந்து கொள்ள முடியும் என்று தோன்றுகிறது.

இப்போது இந்த எட்கார் கெரட்டைப் படிக்கும் போது இதை நாம் முன்பே எழுதி விட்டோமே என்று தோன்றியது. அப்போது முதல் ஒரு பரவசமான உணர்வும் தொற்றிக் கொண்டது. இந்தக் காரணத்தினால்தான் என் எழுத்து ஆங்கிலத்துக்குப் போனால் அது ஓரான் பாமுக்கைப் போலவும், ஹாருகி முராகாமியைப் போலவும் கொண்டாடப்படும் என்று சொல்லி வருகிறேன்.