செப்டெம்பர் 29, 2016
அனுஷின் கடிதத்தைப் படித்தேன். நான் எழுதும் கருத்துக்கள் மிகை உணர்ச்சியின் குவியல்கள் என்று எழுதியிருக்கிறார். நன்றி. நான் எழுதியது ஒரு எச்சரிக்கை. என் கருத்தைப் பொருட்படுத்துவதும் தூக்கிக் குப்பையில் எறிவதும் உங்கள் விருப்பம். நான் எழுதியது எதிர் பதிப்பகத்தின் நோக்கத்தைப் பற்றியது அல்ல. தவறு செய்பவர்கள் பொறுப்பற்ற முறையில் மொழிபெயர்ப்பவர்களைத்தான். அர்ஷியாவின் மொழிபெயர்ப்பைப் பற்றி நான் எதுவுமே சொல்லவில்லை. தலைப்பே அந்த நாவலின் அடியோட்டத்துக்கு எதிராக இருந்ததால் அதை நான் படிக்கவில்லை. ஆனால் என் நண்பர்கள் அத்தனை பேரையும் படிக்கச் செய்தேன்.
அனுஷ் கோபமாக எழுதியிருக்கிறார். பரவாயில்லை. தமிழ் மொழியைக் கேவலப்படுத்தி, மிக மிக அயோக்கியத்தனமாக மொழிபெயர்த்திருக்கும் க. சுப்ரமணியன் செய்திருக்கும் கொடுமைகளைப் படித்து விட்டு ஒருவனுக்குக் கோபம் வரவில்லை என்றால் அவன் பிணத்துக்குச் சமானம். அந்தப் புத்தகம் பூராவுமே தமிழ்க் கொலை. அந்த நபருக்கு ஒரு வாக்கியம் கூட சரியாக எழுதத் தெரியவில்லை. எல்லோரும் இப்படித்தான் சொல்கிறார்கள் என்பதற்கு பிரபஞ்சப் பிரதிவினை என்றா எழுதுவார்கள்? ஒவ்வொரு வரியாக இப்படிக் கொலை செய்திருக்கிறார். ஒவ்வொரு வரியாக தவறுகளை, குளறுபடிகளைக் குறித்து வைத்திருக்கிறேன். அதையெல்லாம் அனுஷே ஒருமுறை படித்துப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.
அனுஷ் எதிர் பதிப்பகம் பற்றி எனக்குப் பாடம் எடுக்கத் தேவையில்லை. நாய்ப் பீ என்றதும் கோபம் பொத்துக் கொண்டு வர வேண்டியதில்லை. அந்த நபர் அப்படிச் செய்திருக்கிறார். என் குறிப்பை அனுஷ் சரியாகப் படித்தால் எதிர் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்று அவருக்குப் புரிந்திருக்கும். எதிர் பதிப்பகத்தில் என் நாவல் வெளிவர வேண்டும் என்பது என் கனவு என்று எழுதியிருக்கிறேன். அதற்கு என்ன அர்த்தம்?
மேலும், உலகத்தில் என்னவெல்லாம் முக்கியமான புத்தகங்கள் என்று கருதுகிறேனோ அந்தப் புத்தகங்கள் அனைத்தும் எதிர் பதிப்பகத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் அனுஷ் தான் வெளியிடும் புத்தகத்தைப் படித்தே பார்ப்பதில்லை என்று நோர்வேஜியன் வுட் புத்தகத்தைப் படிக்கும் போது தெரிகிறது. இந்த நிலையில் இனிமேலும் அந்தப் பதிப்பகத்தின் மொழிபெயர்ப்புகளை எப்படி நம்பி வாங்குவது?
ஒரு பதிப்பகத்துக்கு நம்பகத்தன்மை முக்கியம். க்ரியா என்றால் நம்பி வாங்கலாம். மொழிக் கொலையே இருக்காது. மொழிபெயர்ப்பின் தரம் சற்று குறையலாம். ஆனால் மொழியை வன்கலவி செய்ய யாருக்கும் உரிமை இல்லை. அப்படிச் செய்து என்னை ஏமாற்றி, புத்தகம் வாங்கச் செய்தால் நாய்ப்பீ துடைத்து எறிவேன் என்றுதான் எழுதுவேன். ஏமாற்றி என்றால், உங்கள் பதிப்பகம் பற்றி அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன் என்று பொருள். நம்பிக்கை வைத்தது என் தவறுதான். நீங்கள் ஏமாற்றவில்லை என்று இப்போது உணர்கிறேன்.
தமிழ்க் கொலை செய்திருக்கும் ஒரு அயோக்கியத்தனமான மொழிபெயர்ப்பையும் வெளியிட்டு விட்டு பாதிக்கப்பட்டவன் கோபப்பட்டால் திரும்ப அடிக்கிறீர்களோ? இதை என்னவென்று சொல்வது? ஏன்யா ஊசிப் போனதைக் கொடுத்தே என்று கேட்டால் முதலாளியே இறங்கி வந்து அடிப்பார்களே அப்படி இருக்கிறது அனுஷின் எதிர்வினை.
எதிர் பதிப்பகத்தை நான் காதலித்தேன். ஏன் என்றால், தாஹர் பென் ஜெலோனின் புத்தகத்தை வெளியிட்டதற்காக.
இப்போது விமர்சனத்துக்கு எதிர் அடி, என்று இறங்கியிருப்பதால் அப்படிக் காதலித்ததற்காக வெட்கப்படுகிறேன். பின்னூட்டத்தில் ஒரு ஆள் என்னை சைக்கோ என்று திட்டியிருக்கிறார். அவரும் அனுஷின் படை என்றே நினைக்கிறேன். என் விமர்சனத்துக்காக அனுஷ் இன்னமும் என்னை என்ன வேண்டுமானலும் திட்டலாம். இனிமேல் இது பற்றி நான் எதுவும் எழுத மாட்டேன்.
ஒரு உணவகத்தில் ஒரு பணியாள் கோக்கை ஸ்ட்ராவில் ஒரு மிடறு குடித்து விட்டுக் கொடுத்தார். அதற்காகத் திட்டினால் அந்தக் கடை முதலாளி என்னை அடிக்க வந்தார். அந்தச் சம்பவம்தான் ஞாபகம் வருகிறது.