செப்டெம்பர் 27, 2016
எதிர் பதிப்பகத்தின் அனுஷ் தங்கமான இளைஞர். என் நண்பர். என்னுடைய நாவல் எதிர் மூலமாகத்தான் வர வேண்டும் என்பது என் ஆசைகளில் ஒன்று. எதிர் பதிப்பகத்தின் புத்தகத் தயாரிப்பு அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது. ஆனாலும் எதிர் பதிப்பகத்தின் மொழிபெயர்ப்பு நூல்களை இனிமேல் வாங்குவதில்லை என்று மயிலாப்பூர் முண்டக்கண்ணி அம்மன் சந்நிதியில் இன்று சத்தியம் செய்தேன். வன்முறையில் எனக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் கண் முன்னே என் தமிழ் வன்கலவி செய்யப்படுவதைப் பார்த்து ரத்தம் கொதிக்கிறது. முரகாமியின் நோர்வீஜியன் வுட் என்ற நாவலை க. சுப்பிரமணியன் என்ற நபர் முழிபெயர்த்திருக்கிறார்.
கடவுள் என்பதெல்லாம் வெறும் கற்பனைதானா? இப்படியெல்லாம் ஒரு மொழியை, அதுவும் செம்மொழியை ரேப் பண்ண முடியுமா? அடப்பாவிகளா, நீங்கள் உருப்படுவீர்களா? தாயை நட்டநடு வீதியில் விட்டு சேலையை உருவுவது போல் அல்லவா இருக்கிறது இந்த மொழிபெயர்ப்பு? இதைக் கேட்பாரே இல்லையா? நேற்றிலிருந்து கடும் ரத்தக் கொதிப்பில் இருக்கிறேன். இந்த மொழிபெயர்ப்புதான் காரணம். புத்தகத்தைக் கிழித்து நாய்ப்பீயைத் துடைத்துப் போடலாம் போல் இருக்கிறது.
ஒரு உதாரணம் தருகிறேன்.
கதையின் நாயகனுக்கு 19 வயது. மாணவன். அவனுடைய அறையில் ஒரு நிர்வாணப்படம் மாட்டியிருக்கிறான். அதை அவனுடைய அறை நண்பன் கிழித்துப் போட்டு விட்டு ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஒரு கால்வாயின் புகைப்படத்தை மாட்டுகிறான். காரணம், அந்த ரூம் மேட் ஒரு ஒழுக்கவாதி. இதைப் பார்க்கும் மற்ற மாணவர்கள் கன்னாபின்னா என்று திட்டுகிறார்கள். இதுதான் பின்னணி. இப்போது படியுங்கள் கீழே. பக்கம் 34.
”மற்ற பையன்கள் என் அறைக்கு வந்த போதெல்லாம், “என்ன கருமம் இது?” என்பதுதான் அந்த ஆம்ஸ்டர்டாம் புகைப்படத்தைப் பார்த்து அவர்கள் வெளிப்படுத்தும் பிரபஞ்ச பிரதிவினையாயிருக்கும்.”
சினிமாவில் விலங்குகள் துன்புறுத்தப்படவில்லை என்று அறிவிப்பு வருகிறது. விலங்கைத் துன்புறுத்தினால் தண்டனை. ஆனால் மொழியைத் துன்புறுத்தினால் தண்டனை இல்லையா? பிரபஞ்ச பிரதிவினை என்ற இரண்டு வார்த்தைகளுக்கும் இடையில் ஒற்று கோவிந்தா என்பதை விடுங்கள். அது என்ன சாமி பிரபஞ்சப் பிரதிவினை? எனக்கு உடனடியாகப் புரிந்து விட்டது. universal reaction என்பதைத்தான் அன்னார் அப்படிக் கைமா பண்ணியிருக்கிறார். ஆக்ஷன் என்றால் வினை; ரியாக்ஷன் என்றால் பிரதிவினை; யுனிவர்சல் என்றால் பிரபஞ்சம். எனவே பிரபஞ்சப் பிரதிவினை. (ப் மிஸ்ஸிங்)
வயலன்ஸ் கூடாது என்று சொல்கிறார் காந்தி. மை டியரஸ்ட் மகாத்மாஜி, இந்த மாதிரி ஆட்களை நீங்கள் எப்படித் தண்டிப்பீர்கள்?
இதெல்லாம் ஹாருகி முராகாமி அல்ல; ஹராகிரி முராகாமி என்றார் என் நண்பர்.
நண்பர்களே, தயவு செய்து எழுத்துக் கூட்டி எழுத்துக் கூட்டியாவது ஆங்கிலத்திலேயே படிப்போம்; இது போன்ற முழிபெயர்ப்புகள் வேண்டாம். அதுவும் எதிர் மொழிபெயர்ப்பு வேண்டவே வேண்டாம்.
(எனக்குத் தெரிந்து ஜி. குப்புசாமி அற்புதமாக மொழிபெயர்க்கிறார். நேற்றுதான் கல்குதிரையில் அவருடைய விநோத நூலகம் என்ற மொழிபெயர்ப்புக் கதையைப் படித்து அசந்து போனேன். தமிழில் எழுதப்பட்டது போல் இருந்தது. ஹாருகி முராகாமியின் Strange Library என்ற கதையின் மொழிபெயர்ப்பு.)