மணி ரத்னத்துக்கு ஒரு கடிதம் : பிரபு காளிதாஸ்

11.4.17

பிரபு காளிதாஸ், முகநூலில்:
இது மணிரத்னம் பார்வைக்குப் போகுமா தெரியவில்லை. பார்க்கலாம்.

மதிப்பிற்குரிய மணிரத்னம் அவர்களுக்கு,

உங்களிடம் முதலில் ஒன்று சொல்லவேண்டும் ஸார். உங்களுக்கு இப்போது ஒரு ரசிகர் வட்டம் இருக்கிறார்கள் அல்லவா ?. அவர்கள் இன்னும் இரண்டு வருடத்தில் உங்களை ரசிக்க முடியாத ஏரியாவுக்குப் போய்விடுவார்கள். அதாவது அடுத்த தளத்திற்கு சென்றுவிடுவார்கள். I Bet. என்ன காரணம் தெரியுமா ? இதே மாதிரி உங்களுக்குக்காக இருபது வருடம் முன்னால் கொடி பிடித்த ரசிகர் கூட்டத்தில் நானும் ஒருவன். உங்கள் “நாயகன்” மற்றும் “அக்னி நட்சத்திரம்” வந்தபோது ஒன்பதாம் வகுப்பு. குடும்ப சூழல் காரணமாக First release பார்க்க முடியாமல் படம் வெளிவந்து ஒரு வருடம் ஆகி ரீ-ரிலீஸில் தான் பார்க்கக் கிடைத்தது. அவ்வளவுதான். பார்த்த கையோடு உங்கள் தீவிர ரசிகன் ஆகிவிட்டேன். காரணம், பதின் பருவத்து மாணவனுக்கான fantasy உலகம் உங்கள் படங்களில் இருந்தது.காரணம், அழகியல் மற்றும் பாத்திரப் படைப்புகள்.

அப்படியே வண்டி ஏறி கல்லூரி நாட்கள் வந்தபோது “ரோஜா”, “பம்பாய்”. இரண்டிலும் உங்களை விட அதிகம் ஈர்த்த விஷயம் ரஹ்மான். அதில் “பம்பாய்” பார்த்துவிட்டு அப்போதே என் கல்லூரி நண்பன் ஒருவன், “வக்காளி என்னடா மாப்ள, கத விடுறானுங்க, கடைசில ஹீரோ எல்லாத்தையும் நிறுத்தச்சொல்லி கத்துன உடனே கலவரம் நின்னுடுது..ஹிஹி காமெடியா இருக்குடா..” என்றான். அன்று அவனை உலகத்தில் இருக்கும் அத்தனை கெட்ட வார்த்தைகளும் சொல்லித் திட்டினேன். அவன் இப்போது அமெரிக்காவில் இருக்கிறான். நான் இங்கேயே பிச்சை எடுத்துக்கொண்டு உங்கள் சமீபத்திய சாதனையான “காற்று வெளியிடை” பார்த்துக்கொண்டு கிடக்கிறேன்.

சரி. போகட்டும். உங்களிடம் பிடித்த விஷயங்களுக்கு வருவோம். அழகியல். எல்லா ஹீரோயின்களும் தேவதை ரகம். அதேமாதிரி சொத்தை ஹீரோ கூட உங்கள் ஏரியாவுக்குள் வந்தவுடன் elite-ஆக மாறிவிடுவார். சேற்றில் உழலும் பன்றிகள் கூட உங்கள் படங்களில் தென்பட்டால் கடவுளின் பண்ணையில் உள்ள பன்றிகள் போல மட்டுமே தெரியும். மேலும் உங்கள் படங்களில் “நாம் இந்தியாவில் இருக்கிறோம்…” என்பதை ஒவ்வொரு ரத்த செல்லிலும் உணர வைக்கும்படி, ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று ஆளாளுக்கு ஒவ்வொரு மொழியில் பேசி “நாம் இந்தியர்” என்பதை உணர்த்திய வண்ணம் இருப்பார்கள்.

அதே சமயத்தில் தீவிரவாதம் வியாதி உங்களுக்கு “ரோஜா”-வில் பிடித்தது என்று நினைக்கிறேன். கதாநாயகன் இன்றுவரை “பிள்ளை” தான். எப்படி “நாகராஜன்” என்றாலே தமிழில் பாம்போ அதுமாதிரி யாராவது ஒருவருக்கு முஸ்லீம் ரோல் கொடுத்து அவரைத் தீவிரவாதம் புரிய வைப்பீர்கள். எல்லாவற்றையும் நுணுக்கமாக பார்த்துப் பார்த்து செய்யும் உங்களிடம் எப்படியும் ஓரளவு சரக்குள்ள ஆட்கள் நிச்சயம் பணி புரிவார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் உங்களிடம் நீங்கள் சறுக்கும் இடங்களைச் சுட்டிக் காட்டுவார்களா…? அப்படி காட்டினால் நீங்கள் செவி சாய்க்க மாட்டீர்கள் என்றே தோன்றுகிறது. உதாரணம் சொல்லவா…? “நாயகனுக்குப்” போவோம். சிறு வயதிலேயே கமல் ஸார் மும்பை போய்விடுவார். வளர்த்து ஆளாகி அவர் தாதாவாகும் பொழுது அவரை சிறுவயதில் ஏற்ற நண்பர் ஜனகராஜ் மற்றும் டெல்லி கணேஷ் இருப்பார்கள். அவரிடம் ஒரு பிரச்சனையின் போது, “என்ன சொல்றான் அந்த சேட் கம்னாட்டி..?” என்பார். காரணம், கமலுக்கு இந்தி வராது. ஒருவாரம் மும்பையில் இருந்தாலே, “போலோ சாப்”, “ஷுக்ரியா”, “நமஸ்தே” எல்லாம் ஒரு சிறு குழந்தையால் கூடக் கற்றுக் கொள்ள முடியும். பொறவு கமலுக்கு ஏன் வரவில்லை என்று யாரேனும் உங்களிடம் கேட்டார்களா…? ஏன், பாலகுமாரன் கேட்டாரா..? அவர்தானே வசனம்?

உங்கள் தீவிர ரசிகர்கள் உங்களுடைய “மெளன ராகம்” காவியம் என்கிறார்கள். அதில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று பலமுறை யோசித்து களைத்து போய் அப்படியே விட்டுவிடுவேன். ஏனென்றால், ஹீரோயின் ஒருவரைக் காதலிப்பார், ஆனால் இன்னொருவரை மணப்பார். கட்டாயத்தின் பேரில். டில்லி போய் கணவர் தொட வரும்போது கம்பளி பூச்சி ஊறுவது போல இருக்கு என்று முறைப்பார். பிறகு ஒரு பாடல். ஊடல். மனம் மாறி ஓடும் ரயிலை நிறுத்தி இறங்கி ஓடிப்போய் கணவரைக் கட்டிப் பிடித்துக்கொண்டு தண்டவாளத்திலேயே சுற்றிக்கொண்டு… புரியவேயில்லை. அந்தப் பெண்ணுக்கு என்னவேண்டும் என்று இன்னமும் புரியவில்லை.

“மெளன ராகம்” காவியம் எனும் ரசிகர்கள் உங்கள் “தளபதி” படத்தோடு கேட் போட்டுக்கொண்டு டாட்டா காட்டுகிறார்கள். ஏனென்றால் அவர்களெல்லாம் இளையராஜா ரசிகர்கள். அவர்கள் வேறு டைப். இப்போது அவர்கள் உங்கள் பின்னால் இல்லை. வெறும் நினைவுகளோடு சுற்றிக்கொண்டு தன் காலத்தில் சைட் அடித்த ஏதோ ஒரு பெண்ணை கார் ஓட்டும்போது MP3-யில் கேட்டு அழுதுகொண்டே சிரிப்பவர்கள் என்று நான் சொல்லவில்லை. அவர்களே சொல்கிறார்கள்.

பெரும்பாலும் அவர்கள் தங்கள் நாற்பதுகளின் மத்தியில் உள்ளவர்கள்.

கிட்டத்தட்ட இதே பிரச்சனையோடு இன்னொரு இயக்குனர் கெளதம் மேனன் (தற்போது கெளதம் வாசுதேவ் மேனன்) (சிலர் GVM என்கிறார்கள்) வந்து இறங்கினார். அவருக்கு போலீஸ் சீக்கு. வேண்டாம். டாபிக் மாறுகிறது. என் பால்ய நாட்களில் எங்கள் தெருவுக்கு மிக அருகில் போலீஸ் காலனி ஒன்று இருந்தது. அதில் சில போலீஸ்கார்கள் மகன்கள் என்னுடைய நண்பர்கள். என் வாழ்நாளில் ஒரு நாள் கூட அவர்களில் ஒருவர் கூட ஹீரோ கணக்காக யாரையுமே டீல் செய்ததில்லை. போகட்டும். இங்கு கெளதம் வேண்டாம். அவர் சமீபத்தில் உங்களை ஒரு பேட்டி எடுத்தார். ஆங்கிலப் பேட்டி. தலைப்பு “Uraiyaadal and stuff..” செம கொடுமையான பேட்டி அது. ஏனென்றால் ஒருபக்கம் ஒரு இயக்குனர் க்ரூப் விளம்புநிலை களிம்புநிலை என்று எல்லோர் காதிலும் பூச்சுற்றிக்கொண்டு கிடக்க இன்னொரு பக்கம் நீங்களும் GVM ஸாரும் காஃப்பி ஷாப்பில் கூலாக ஒரு உரையாடல்.

உண்மையிலேயே உங்கள் பழைய காலத்துப் படங்கள் வந்து ஓடித் தீர்ந்த பிறகும் நீங்கள் மீடியா பேப்பர் என்றெல்லாம் எட்டிக் கூடப் பார்க்க மாட்டீர்கள். தமிழ் வார இதழ்களில் கூட உங்களைப் பற்றிய ஏதேனும் ஒரு சிறு குறிப்பு வந்தால் அத்திப்பூ. அப்படியே வந்தாலும் உங்கள் புகைப்படம் மட்டும் ஒரே படம்தான் இருக்கும். அதையெல்லாம் வைத்து நான் உங்களை Narcissist அல்ல என்று நம்பிக்கொண்டு கிடந்தேன். சமீபத்தில் அதிலும் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டீர்கள்.

கடல் படம்போது ரஹ்மானுடன் ஆரம்பித்து, அடுத்ததடுத்து சரமாக ப்ரோமோ. எனக்கு அதையெல்லாம் பார்க்கும்போது “பயந்துட்டியா கொமாரு?” டயலாக்தான் ஸார் ஞாபகம் வருகிறது.

சமீபத்தில் இளைஞர்கள் உங்கள் துறையில் அடித்துப் புழுதி கிளப்பிக்கொண்டிருக்கிறார்களே? அதில் ஏதாவது துணுக்கு செய்திகள் காதுக்கு வந்ததா..?

சரி ஸார்.

நான் என் பிரச்சனைக்கு வருகிறேன். நான் தீவிரமான சினிமா பைத்தியம். ஏன் பைத்தியமானேன் என்றெல்லாம் உங்களை அறுக்க விரும்பவில்லை. பைத்தியம். அவ்வளவுதான். சரியா? சரி.

பைத்தியக்காரனாக இருப்பதில் ஒரு சவுகரியம் என்னவென்றால் நம்மை அது தானாகவே அடுத்த படிநிலைக்கு இட்டுச் செல்லும். சரிதானே..? அப்படி முற்றிப் போய் அடுத்தடுத்து படங்கள் பார்த்து உங்களிடமிருந்து திடீர் நண்பர்கள் விலகுவது போல விலகிவிட்டேன். அதில் உங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. எனக்குதான் நஷ்டம். எப்படி என்று கேட்கிறீர்களா உங்கள் படங்களையெல்லாம் காசு கொடுத்துப் பொறுப்பாய் தியேட்டர் போய் இன்னும் பார்க்கிறேன் அல்லவா..? அதுதான்.

பார்க்கப் போனால் “ரோஜா” படத்திற்கு தேசிய விருது கிடைத்ததற்கு நீங்கள் சிறுமைப்பட்டிருக்கவேண்டும். ஒரு தேசபக்தி பாடல் போதும் நம் ஆட்களுக்கு என்று தெரிந்துவைத்துக்கொண்டு நீங்கள் ஆடிய கள்ள ஆட்டம் அது என்றுதான் நான் சொல்வேன். கைகள் கட்டப்பட்டிருக்கும் நிலையில், பல நாட்கள் சோறு தண்ணி இல்லாமல் கிடக்கும் ஒருவன் எவனாவது உருண்டு புரண்டு தேசியக் கொடி அனைப்பானா..? சரி இப்படி வருவோம். நான் அணைப்பேனா என்று கேளுங்களேன். மாட்டேன். முதலில் சோறு கேட்பேன்.

இன்று கூட “காற்று வெளியிடை” போனபோது “தேசிய கீதம் வருகிறது, அனைவரும் எழுந்து நில்லுங்கள்” என்று திரையில் வந்தபோது வேண்டா வெறுப்பாய்த்தான் எழுந்து நின்றேன்.

என்போல் நிறைய பேர் அப்படிதான் நிற்கிறார்கள்.

“காற்று வெளியிடை” மட்டும் இல்லை. எல்லா படங்களுக்கும்.

உங்கள் படங்கள் ஏன் எனக்கு ஆரம்ப காலங்களில் மிகவும் பிடித்தது என்று யோசித்துப் பார்த்தால் அழகியல் மட்டுமே என்று தோன்றுகிறது. எந்தவித முன்முடிவுகளும் இன்றி சமீபத்திய உங்கள் திரைப்படம் பார்த்த இளைஞர்கள் சிலரிடம் கேட்டால் அவர்களும் அதையே சொல்கிறார்கள்.

ஒரு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் புகைப்படக் கலையில் ஆரம்ப நிலையில் உள்ள கலைஞன் எப்படி தேடித்தேடி பூ, வண்டு, நண்டு, சஊரிய உதயம், வண்ணத்துப்பூச்சி, தோழி, சிலை, ஆறு, மின்னல் என்று எடுக்கிறானோ அவ்வாறே தங்கள் படங்களும் சினிமா பைத்தியம் ஆகவிருக்கும் இளைஞர்களின் ஆரம்பநிலை படங்களாக அவரகளுக்குத் தங்கள் படங்கள் உதவுமோ என்று நம்பிக்கொண்டிருந்தேன். அதுவும் இல்லை. இந்த “இல்லை” சமீபத்தில் உருவானது. காரணம், இணையம்.

சினிமா இப்போது உண்மையிலேயே விரல் நுனியில் இருக்கிறது என்பது தங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். “காற்று வெளியிடை”யில் காதலைச் சொல்ல ஏரோப்ளேன், லடாக், கஷ்மீர், தீவிரவாதம் எல்லாம் தேவையா என்று குப்பைத் தனமாக உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கவே மாட்டேன். ஏனென்றால், அப்படிக் கேட்டால் நீங்கள் “தேவை” என்று சொல்கிறீர்களோ இல்லையோ உங்கள் ரசிகர்கள் சொல்லிவிடுவார்கள்.

சரி. “இருவர்” படத்தில் என்ன செய்தீர்கள். எம்.ஜி.ஆர், கலைஞரை வைத்து ஒரு படம் எடுத்துவிட்டு “இது முழுக்க முழுக்க கற்பனையே” என்று கார்டு போட்டீர்கள். அதில் வருவது எம்.ஜி.ஆர், கலைஞரை ப் பற்றிய கதைதான் என்று சொல்ல ஏன் உங்களுக்கு தில் இல்லை. அதேமாதிரி தளபதியில் கர்ணன் ஒன்லைன். ராவணன் படத்தில் ராமாயணம் ஒன்லைன் என்று எடுத்துக்கொண்டு எந்த இடத்திலும் Refer செய்த மாதிரி குறிப்பிடவேயில்லை.

சமீபத்தில் “ராஜ்கஹினி ” என்றொரு பெங்காலி படம் பார்த்தேன். அதில் வரும் இரண்டு நிமிட ஆரம்பக் காட்சி “சதத் ஹஸன் மண்ட்டோ” வுடையது. என்ன தெரியுமா செய்தார்கள். “The starting sequence of this film is based on a short story of Sadath Hasan Manto” என்று ஒரு கார்டு போட்டார்கள். சமகால தமிழ் இலக்கியத்தின் Reference உங்கள் படத்தில் எங்கேனும் தென்படுகிறதா ஸார் ? ம்ஹூம்.

முடிசிக்கறேன் ஸார்.

ஆனால் அதற்கு முன் சில கேள்விகள். உங்களுக்காக செயல்படுபவர்களில் தவறாமல் தன்னை upgrade செய்துகொள்பவர்கள் இரண்டே ஆட்கள்தான். ஒருவர் உங்கள் காமெராமேன். மற்றொருவர் ரஹ்மான். ஆனால் இப்போதைக்கு ரஹ்மானும் கொஞ்சம் சந்தேக லிஸ்ட்டில்தான் இருக்கிறார். ரோஜாவில் ஆரம்பித்த தேசபக்தி வியாதி அவருக்கு முற்றிவிட்டது. அவரின் சூஃபி இசை சில படங்களில் மிகவும் அற்புதமாக இருந்தது. ஆனால் பாருங்கள் அவரைவிட அமித் த்ரிவேதி பல மடங்கு உயரத்தில் இருக்கிறார் என்பது நீங்கள் அறிந்ததே. ஏனென்றால் நீங்கள் கோக் ஸ்டுடியோ பார்க்காமல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை.

மற்றவர் தொடர்ந்து தன்னை மேம்படுத்திக்கொண்டே இருப்பது அவர்களது ரிசல்ட்டில் தெரிந்துவிடுகிறது. ஆனால் நீங்கள் மட்டும் out-dated-ஆகவே இருக்கிறீர்கள். “இது சூர்யா ஸார், ஓரசாதீங்க” என்று தளபதியில் ரஜினி கலெக்டரிடம் சொல்லும் டயலாக் எவ்வளவு அபத்தமாக இருந்தாலும் அது ரஜினி என்ற ஒரே காரணத்தால் மக்கள் சகித்துக்கொண்டு என்ஜாய் செய்தார்கள். இப்போது நிலைமை அப்படியா இருக்கிறது. இதைச் சொல்ல உங்களுக்கு ஏன் ஆளில்லை.

“காற்று வெளியிடை”யில் பார்டரை ஏதோ தெருவைக் கடப்பது போல அல்வாத் துண்டாக எளிதில் கடக்கிறார் ஹீரோ. அதுவும் ஒரு பெரிய chasing நடந்து செக் போஸ்ட் வரும்போது அலேக்காக லாரியை ஒரு வளை வளைத்து “ஹே… இந்தியா வந்தாச்சு” என்று மகிழ்கிறார். என்ன ஸார் இது ? அதுவும் பின் தொடர்ந்து சுட்டுக்கொண்டே ராணுவம் வருகிறது. ஏன், ஒரு குண்டு கூட அவர்கள் டயரில் சுடாமல் பேக்கு மாதிரி பின்னாலேயே வருகிறார்கள்.

மேலும் அவர்கள் பின்னால் வர, ஹீரோ தனது சகாக்களுடன் பெட்ரோல் குண்டு தயார் பண்ணி வீசி ரெண்டு லாரிகளை கவிழச் செய்கிறார். படம் பார்த்த போது எனக்கு எப்படித் தெரியுமா இருந்தது ? பதினைத்து வருடங்கள் முன்னால் நானும் என் நண்பணும் சென்னையில் ஏதாவது ஒரு காஸ்ட்லியான பார் போய் குடிக்கலாம் என்று ஸ்கெட்ச் போட்டோம். ஆனால் அதற்கான காசோ தகுதியோ எங்களுக்கு இல்லை. ஆனால் போகலாம் என்று முடிவு செய்தோம். அதற்காக நாங்கள் செய்த செயல் இன்று நினைத்தாலும் காமெடியாக இருக்கிறது. எப்படியென்றால் பையில் ஒரு மொக்கை சரக்கை எடுத்துக்கொண்டு உள்ளே போய்விட்டோம். அங்கே சென்று ரெண்டு லார்ஜ் ஆர்டர் செய்தவிட்டு மீதி லார்ஜ் எல்லாம் பேரருக்குத் தெரியாமல் நாங்கள் கொண்டு சென்ற மொக்கை சரக்கை ஊற்றி அடித்துவிட்டு வந்தோம். உட்கார்ந்திருந்தது என்னவோ சென்னையின் காஸ்ட்லியான பார். ஆனால் அடித்தது அதே அறுபது ரூபாய் குவார்ட்டர். அப்போது எப்படி ஃபீல் செய்தேனோ அப்படித்தான் இருந்தது தங்கள் “காற்று வெளியிடை”.

போதும் ஸார். இதற்கு மேல் முடியவில்லை.

நன்றி
பிரபு காளிதாஸ்

(நல்லவேளை பிரபு, இம்மாதிரி ஆட்களிடம் நண்பனாக மாட்டிக் கொள்ளவில்லை.  மாட்டிக் கொண்டிருந்தால் இம்மாதிரி குப்பைப் படங்களைப் பார்த்து ஹி ஹி என்று இளிக்க வேண்டி வந்திருக்கும்.  வாழ்வில் அப்படி ஒரு தருணம் இதுவரை வந்ததில்லை.  இறைவனுக்கு நன்றி.

சாரு)