அசோகமித்திரனின் ஆவி

13.4.17

அசோகமித்திரனின் ஆவி சும்மா பூந்து விளையாடுகிறது.  இறந்து இத்தனை தினங்கள் ஆகியும் சர்ச்சை தீர்ந்தபாடில்லை.  அசோகமித்திரனின் இறுதிச் சடங்கில் சுமார் 25 பேர் தான் கலந்து கொண்டார்கள் என்று குமுதத்தில் எழுதியிருந்தேன்.  அதோடு விட்டிருக்கலாம்.  என் போறாத காலம், வைரமுத்துவின் பெயரையும் சேர்த்து விட்டேன், இப்படி:

”பாரதியின் சவ ஊர்வலத்தில் பதினான்கு பேர் கலந்து கொண்டார்கள்.  அவருடைய பிணத்தின் மீது மொய்த்த ஈக்களை விட சவ ஊர்வலத்துக்கு வந்த எண்ணிக்கை கம்மி என்று துயரத்துடன் எழுதினார் வைரமுத்து.  அந்த வைரமுத்து கூட அசோகமித்திரனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை.”

இதை மறுத்து இந்த வார குமுதத்தில் வைரமுத்து இப்படி எழுதியிருக்கிறார்:

“எழுத்தாளர் அசோகமித்திரனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த நான் செல்லவில்லை என்று சாரு நிவேதிதா கட்டுரையில் பதிவாகியிருக்கிறது.  அது தகவல் பிழை.  மார்ச் 24 அன்று காலை 8.25 முதல் 8.50 மணி வரை நான் அசோகமித்திரன் அஞ்சலியில் ஈடுபட்டிருந்தேன்.  என் வருகையும் அஞ்சலி உரையும் தொலைக்காட்சிகளில் பதிவாகியிருக்கின்றன.  அன்று என் வருகையை அசோகமித்திரன் அறியாதிருந்ததில் ஆச்சரியமில்லை; சாரு நிவேதிதா அறியாததுதான் ஆச்சரியம்.

இன்னொன்றும் சொல்ல விழைகிறேன்.  ஒரு மரணத்திற்கு அஞ்சலி செலுத்துவது என்பது அவரவர் சுதந்திரம்.  அது உடல்நிலை, மனநிலை, சூழ்நிலை, தூரம், இருப்பு முதலியவற்றோடு தொடர்புடையது.  மரணத்திற்கு அஞ்சலி செலுத்துவது ஒரு பண்பாடு என்று சொல்லலாமே தவிர அதை ஒரு கடப்பாடு என்று கருதி விட முடியாது.

நான் பெரும்பாலும் அஞ்சலிகளைத் தவிர்ப்பதில்லை.  ஆனால் விட்டுப் போன மரணங்கள் எனக்கும் உண்டு.  ஆகவே மரணம்தான் மனிதனுக்குக் கட்டாயமே தவிர மரணத்திற்கு அஞ்சலி செலுத்துவதுமன்று.

சாரு நிவேதிதா கவனிக்கப்படுகிற எழுத்தாளர்.  அதனால் அவர் தகவல்களை உறுதி செய்து எழுதுவது நன்று.”

எனக்குப் பொய் பேசத் தெரியாது.  சூதுவாதும் அதிகம் அறியேன்.    அதற்கெல்லாம் கொஞ்சம் புத்திசாலித்தனம் வேண்டும்.  அது என்னிடம் இல்லை. எனவே நேரடியாகச் சொல்லி விடுகிறேன்.  நான் கடைசியாகவும் முதல்முதலாகவும் தொலைக்காட்சி பார்த்தது 1977-இல்.  மில்லர்ஸ் ரோட்டில் இருந்த சாந்தி மேன்ஷனில் தங்கி, பக்கத்தில் உள்ள ஆர்ம்ஸ் ரோட்டில் இருந்த சிறைத்துறைத் தலைவர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்த போது, அருகில் உள்ள நேரு பூங்காவில் தொலைக்காட்சிப் பெட்டி வந்துள்ளது என்று கேள்விப்பட்டு அது எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் போய்ப் பார்த்ததோடு சரி.  வயலும் வாழ்வும் நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருந்தது.  நானும் ஓடி வந்து விட்டேன்.  அதற்குப் பிறகு தொலைக்காட்சிப் பெட்டி பக்கமே போனதில்லை.  தேவையென்றால் யூட்யூபில் ஓரிரு நிமிடங்கள் பார்ப்பேன்.  அவ்வளவுதான்.  எனவே வைரமுத்து அசோகமித்திரன் அஞ்சலியில் ஈடுபட்டது எனக்குத் தெரியாது.  ஆனால் அதே சமயம் நான் எழுதியதில் எந்தத் தவறும் பிழையும் இருப்பதாகவும் நான் கருதவில்லை.  ஏனென்றால், பெஸண்ட் நகர் மின் தகன மண்டபத்தில் அசோகமித்திரனுக்கு நடந்த அஞ்சலி live-ஆக நடந்து கொண்டிருந்த போது சுமார் 25 பேர் இருந்திருப்போம்.  அத்தனை பேரும் அசோகமித்திரனுக்கு மிக மிக நெருக்கமானவர்கள்.  அந்த நெருக்கமானவர்களின் கூட்டத்தில் நான் வைரமுத்துவையும் சேர்த்ததுதான் என் தவறு.  குடும்பத்தினரிடம் சென்று துக்கம் விசாரிப்பது வேறு; ஒரு மாபெரும் கலைஞனின் உடல் தகனம் செய்யப்படும் போதோ பூமிக்குள் இறக்கப்படும் போதோ நாம் அவருக்கு இறுதி வணக்கம் சொல்வது என்பது வேறு.

உதாரணமாக, சுஜாதா மறைந்த போது இறுதி அஞ்சலி செலுத்த வராத திரைத்துறையினரே இல்லை.  கமல் ஒரு மணி நேரம் சுஜாதாவின் உடலுக்கு அருகில் நின்று கொண்டிருந்தார்.  ரஜினி புயல் போல் வந்து புயல் போல் சென்றார்.  ஆனால் அசோகமித்திரன் சினிமாவுக்கு வஜனம் எழுதவில்லை.  அதுதான் அவர் செய்த பிழை.

குமுதம் 52

இது பற்றி நான் குமுதத்துக்கு ஒரு விளக்கம் எழுதினேன்.  அது வெளிவராது என்றே நினைக்கிறேன்.  பொதுவாக விளக்கத்துக்கு விளக்கத்தை யாரும் வெளியிடுவதில்லை.  மேலும், தமிழ்நாட்டில் சினிமாத் துறையினரே ஆள்வோர்.  அரசியல்வாதியெல்லாம் அவர்களுக்குக் கீழே தான்.  குமுதத்துக்கு நான் எழுதி அனுப்பிய விளக்கம்:

வைரமுத்துவின் விளக்கத்தில் உள்ள தொனி சரியில்லை.  சாரு நிவேதிதா கவனிக்கப்படுகிற எழுத்தாளர் என்று எழுதியிருக்கிறார்.  (’கவனிக்கப்படுகிற’ என்பதில் லயம் குறைவு, எனவே ’கவனிக்கப்படுகின்ற’ என்று மாற்றிக் கொள்கிறேன்.)  ரஜினிகாந்தை கவனிக்கப்படுகின்ற நடிகர் என்றோ, வைரமுத்துவை கவனிக்கப்படுகின்ற கவிஞர் என்றோ எழுதினால் அது எவ்வளவு ரசக் குறைவாக இருக்கும்?

இலக்கிய வாசிப்பு இல்லாத தமிழ்நாட்டில் என்னைப் போன்ற இலக்கியவாதிகள் கவனிக்கப்படாமல்தான் இருப்பார்கள்.  நான் நாற்பது ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.  சுமார் நூறு புத்தகங்கள் எழுதியிருப்பேன்.  ஆனாலும் வெகுஜனப் பத்திரிகைகளில் இதுவரை இரண்டே இரண்டு முறைதான் என் தொடர் வந்துள்ளது.  ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு விகடனில்.  இப்போது குமுதத்தில்.  அதனால்தான் 64 வயதில் கவனிக்கப்படுகிறேன்.  இல்லாவிட்டால் என் பெயரும் கவனிக்கப்படாமலேதான் போயிருக்கும்.  ஆனால் நண்பர் வைரமுத்து என்னைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமானால் லண்டனிலிருந்து வெளிவரும் ArtReview Asia-வைப் பார்க்கலாம்.  அல்லது, அவரது வட இந்திய நண்பர்களிடம் கேட்கலாம்.  சுமார் ஐந்து ஆண்டுகளாக வட இந்தியாவில் என் கட்டுரைகள் பிரபலம்.  அவ்வளவு தூரம் போக வேண்டாம் என்றால் நம் மம்முட்டியிடம் கேட்டுப் பார்க்கலாம்.