சமஸ்

17.4.2017

சில தினங்களுக்கு முன்பு மனுஷ்ய புத்திரன் தி இந்துவில் எழுதியிருந்த கட்டுரையைப் படித்தீர்களா? படிக்கவில்லையெனில் உடனே இங்கே படித்து விடுங்கள்.

நான் கடந்த பல ஆண்டுகளாகப் புலம்பிக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை அவரும் அனுபவித்து எழுதியிருக்கிறார். விஷயம் இதுதான். தில்லியில் நடந்த ஒரு கவிதைக் கருத்தரங்குக்குச் சென்றிருக்கிறார். இந்திய மொழிகளிலிருந்து பல கவிஞர்கள். கடைசியில் பார்த்தால் இவர் கவிதைகள் மட்டுமே வேறு ஏதோ ஒரு தளத்தில் இருந்திருக்கின்றன. அது மட்டும் அல்ல; அந்தக் கவிஞர்கள் அத்தனை பேருக்குமே தமிழ் இலக்கியத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. இப்படியெல்லாமா கவிதை வருகிறது என்று எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம்.

புரிகிறாற்போல் சொல்கிறேன். நான் கலந்து கொள்ளும் இலக்கியக் கருத்தரங்குகள் அனைத்திலும் – சர்வதேசக் கருத்தரங்குகள் உட்பட – நான் போய்ப் பேசினால், அவர்களோடு உரையாடினால் ஏதோ ரொம்பச் சின்னப் பசங்களோடு பேசுவது போல் உணர்கிறேன். ஆக்ஸ்ஃபோர்ட், ஹார்வர்ட் என்பார்கள். அங்கே பணியாற்றும் பேராசிரியர்களாக இருப்பார்கள். ஆனால் நாம் சொல்லும் எதையுமே விளங்கிக் கொள்ளும் நிலையில் இருக்க மாட்டார்கள். ”பர்கஸ் யோசாவின் Bad Girl-இல் பார்த்தீர்கள் என்றால்…” என்று ஆரம்பிக்கும் போதே அவரையெல்லாம் கல்லூரிப் பருவத்தில் படித்ததுதான் என்பார்கள். Gabrera Infante-யின் Three Trapped Tigers அல்லது கொர்த்தஸாரின் Hopscotch என்றால் முழி முழி என்று முழிப்பார்கள். கல்லூரிப் பருவத்திலும் படித்ததில்லை. இன்ஃபாந்த்தேயை கேள்வியே பட்டதில்லை. தூரத்தில் ரெண்டு பேர் இதெல்லாம் வெறும் name dropping என்று கிசுகிசுப்பார்கள்.

சரி, கோட்பாட்டுத் தளத்தில் பேசுவதற்கு ஃபூக்கோ, தெரிதா, ரொலான் பார்த்தின் Death of the Author என்று ஆரம்பித்தால் எங்கோ மோட்டுவளையைப் பார்ப்பார்கள். அதாவது, ஒவ்வொரு துறைக்கும் அந்தந்தத் துறை சார்ந்த வல்லுனர்கள், அறிஞர்கள் இருப்பார்கள். அவ்வளவுதான். 2011-இல் அல்மோஸ்ட் ஐலண்ட் கருத்தரங்கில் Tomaz Salamun என்ற கவிஞரோடு உரையாடிக் கொண்டிருந்தேன். தொமாஸின் பெயர் சில முறை நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காலமாகி விட்டார்.) க்ரோஷியாவில் பிறந்தவர். ஸ்லொவேனியாவில் வாழ்ந்தார். ஸ்லொவீன் மொழியில் எழுதினார். நம்முடைய ஏ.கே. ராமானுஜத்தை நேரில் அறிந்திருந்தார். ஆனால் செர்பிய எழுத்தாளரான – தமிழ்நாட்டு இலக்கியவாதிகள் பெரிதும் மதிக்கக் கூடிய மிலோராத் பாவிச்சை அவர் படித்ததில்லை. நான் பாவிச் பற்றி மிகவும் ஆர்வத்துடன் விசாரித்த போது அவர் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறேன் என்றார்.

என்னுடைய செஷன் முடிந்த போது நீங்கள் ஜெர்மனிக்குக் குடிபெயர்ந்து விடுங்கள்; அங்கேதான் உங்களை கவனிப்பார்கள் என்றார்.

நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன். தமிழ்நாட்டின் கலாச்சார சூழல் ஃபிலிஸ்டைன் என்றாலும் இந்தியாவிலேயே தமிழ்மொழியில்தான் மிகப் பெரிய இலக்கிய சாதனைகள் நிகழ்ந்து வருகின்றன. ஆனால் இது இந்திய இலக்கியவாதிகளுக்குக் கூடத் தெரிவதில்லை. ஒரு காரணம், நாம். நாமே நம்மை மதிப்பதில்லை. மனுஷ்ய புத்திரன் பாப்லோ நெரூதாவையே மிஞ்சி விட்டார் என்றால் உளறுகிறேன் என்கிறார்கள். சாருவுக்கு இதே வேலையாப் போச்சு என்கிறார்கள். தலையைத் தலையைச் சிலுப்பிக் கொண்டு எங்களையெல்லாம் தொலைக்காட்சியில் டார்ச்சர் பண்ணுகிறாரே, அவரா பாப்லோ நெரூதாவை மிஞ்சியவர்? சராசரி கேட்டால் பரவாயில்லை. மதிப்புக்குரிய சக கவிஞர்களே கேட்கிறார்கள். நானும் ஒன்றும் போகிற போக்கில் அடித்து விடவில்லை. கவிதை கவிதையாகப் போட்டு ஒப்பிட்டு ஆய்வு செய்து சொல்கிறேன்.

மற்றொரு இடத்தில் நிகானோர் பார்ராவை மனுஷ்ய புத்திரன் மிஞ்சி விட்டார் என்று எழுதி, அவருடைய கடைசிக் கோப்பை என்ற கவிதையையும் அதே போல் பார்ரா எழுதியிருந்த கவிதையையும் எடுத்துப் போட்டேன். உடனே பெருந்தேவி கேட்கிறார். ஒரு வேற்று மொழி எழுத்தாளரை சாருவோடும் ஜெயமோகனோடும் ஒருத்தர் ஒப்பிட்டு, அவர் சாருவை விஞ்சி விட்டார் என்றும், ஜெயமோகனை விஞ்சி விட்டார் என்றும் சொல்ல முடியுமா? நெரூதா முழுக்க முழுக்க ரொமாண்டிசிஸம். பார்ரா அதற்கு நேர் எதிர். எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது ரகம். ஒரே ஆள் எப்படிய்யா இந்த ரெண்டு பேரையும் மிஞ்சுவார்?

மிஞ்சியிருக்கிறாரே மனுஷ்ய புத்திரன்? அவரிடம் ரொமாண்டிசிஸமும் உண்டு. பார்ராவின் எதிர் ரொமாண்டிசிஸமும் உண்டு. அந்நிய நிலத்தின் பெண் என்ன ரொமாண்டிசிஸமா? முழுக்க முழுக்க ஒரு பித்தநிலையின் வெறிக் கூச்சல். அவருடைய கவிதைகளில் அந்த்தோனின் ஆர்த்தோவின் (Antonin Artaud) கூறுகளும் உண்டு. ஆனால் மனுஷுக்கு பார்ராவும் தெரியாது; ஆர்த்தோவும் தெரியாது. உடனே அவரை நாட்டுப்புறப் பாடகன் என்று சொல்லி விடாதீர்கள். தீவிர வாசிப்பு இல்லாத ஒருவர் கவிஞராக இருக்க முடியாது. அவரும் அப்படியே. ஆனால் பார்ராவையும் ஆர்த்தோவையும் படித்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். எதற்காகச் சொல்கிறேன் என்றால், பெருந்தேவி போன்றவர்கள் நெரூதாவையும் பார்ராவையும் படிப்பது போல் மனுஷ்ய புத்திரனையும் படிக்க வேண்டும். அவர் இரண்டு மாதத்துக்கு ஒரு தொகுப்பு போடுகிறார். அத்தனையும் எரிமலைக் கங்குகள். ஆனால் நாமோ அவரையும் அவரைப் பாராட்டுபவனையும் நக்கலடித்துக் கொண்டிருக்கிறோம்.

இப்போது இந்தக் கட்டுரைத் தலைப்புக்கு வருகிறேன். இன்றைய தி இந்து நாளிதழில் சமஸின் கட்டுரை ஒன்றைப் படித்தேன்.
http://writersamas.blogspot.in/2017/04/blog-post_0.html

படித்தவுடன் மேற்கண்ட விஷயங்களெல்லாம் ஞாபகம் வந்தன. சமஸை நாம் எப்படி எதிர்கொள்கிறோம்? முகநூலில் பார்த்தால் அவரைப் பற்றிப் பல அவதூறுகள், இந்துத்துவா, பிற்போக்குவாதி இத்யாதி இத்யாதி என்று. அடப் பாவிகளா… உலகப் புகழ் பெற்ற ராமச்சந்திர குஹா போன்றவர் சமஸ். அந்த அளவுக்கு அங்கீகரிக்கப்பட வேண்டியவர். கொண்டாடப் பட வேண்டியவர். ஆனால் தமிழில் எழுதுகிறார். போட்டு சாத்து. இதுதான் நம் மனோபாவம். நான் சொல்வதில் சந்தேகம் உள்ளவர்கள் அவர் எழுதியுள்ள கடல், மலை சார்ந்த கட்டுரை நூல்களைப் படியுங்கள். அதுவும் முடியாதவர்கள் இன்றைய கட்டுரையைப் படியுங்கள். சமஸின் கட்டுரைகளை பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பாடமாக வைத்தால் நாம் வேறு நல்லவிதமான சமூகத்தில் வாழ வழி பிறக்கும். கிரிமினல்கள் குறைவார்கள். செறிவான இளைஞர்கள் உருவாவார்கள்.