மந்தாகினியும் லம்பார்கினியும்…

நீங்கள் சொல்வதெல்லாம் கப்ஸா போல் இருக்கிறதே,

நீங்க சொல்றதெல்லாம் கதையா, நிஜமா?

செமயா கதை வுட்றீங்க சாரு…

இப்படியே பல ஆண்டுகளாக என் நண்பர்கள் என்னிடம் சொல்வதைப் பார்த்திருக்கிறேன். சில மாதங்களுக்கு முன் திருவனந்தபுரத்திலிருந்து திரும்பும் போது லீனா மணிமேகலை கூட இதையே சொன்னார்.

இத்தனை ஆண்டுகளில் நான் சொல்வதை நம்பிய ஒரே ஆள் அராத்துதான். ஏனென்றால், என் உலகை எட்டிப் பார்த்தவர் அவர் மட்டுமே. அதனால் அதை நம்புவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. இன்று பதினோரு மணியிலிருந்து லம்பார்கினி காரில் பயணம். விலையைக் கேட்க முடியாது. ஏனென்றால், ஏற்கனவே அந்தக் காரில் ஏறுவதற்கு முன் செம அடி வாங்கியிருந்தேன். நண்பரை ஒருசில ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கிறேன். ஐந்து வயது கம்மியாகிருந்தது.

ஜிம்மா என்றேன்.

ஜிம்மோடு ரோவிங்கும் என்றார்.

எங்கே?

போட் கிளப்.

எல்லோரும் சேர முடியுமா, ஏதும் ரெஸ்ட்ரிக்‌ஷன்ஸ் உண்டா?

எதுவும் இல்லை. யார் வேண்டுமானாலும் சேரலாம்.

மாதம் எவ்ளோ ஃபீஸ்?

மாத ஃபீஸ் கிடையாது. மெம்பர்ஷிப் கொடுப்பார்கள். ஆயுள்கால மெம்பர்ஷிப் 20 லட்சம். ஐந்து ஆண்டு மெம்பர்ஷிப் ஐந்து லட்சம். ஒரு ஆண்டுக்குக் கூட உள்ளது. ரெண்டு லட்சம்.

ஓ. கூட்டமே இருக்காதே?

நான் ரோவிங் போகும் போது நூறு பேர் இருப்பார்கள்.

அதற்கு மேல் லம்பார்கினி காரின் விலையைக் கேட்க முடியுமா?

பிறகு ஒரு பிரபலமான மதுபானக் கூடத்துக்குப் போனோம். கூடம் பூராவும் பெண்கள். ஒரு பெண் தனியாகக் குடித்துக் கொண்டிருந்தாள். அவள் நெஞ்சைப் பார்த்து என் நெஞ்சு படபடத்தது. நண்பர் வைன் குடிக்க நான் ஆப்பிள் ஜூஸ், மாதுளை ஜூஸ் எல்லாம் குடித்தேன். அவித்த வேர்க்கடலை, நறுக்கிய வெள்ளரி, காரட், இத்யாதி. அவித்த மீன். லம்பார்கினி நண்பனோடு ராஸலீலாவில் வரும் ஒரு நண்பனும் சேர்ந்தான். அவன் கூட பெண் இல்லாமல் இருக்க மாட்டான்.

ஒரு பிரபல கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் பெண். பேசிக் கொண்டிருந்தோம். இன்று இரவு பனிரண்டு மணி வரை எங்களோடு இருங்கள் என்றாள். எங்கள் என்றால் லம்பார்கினி அல்ல; ராஸ லீலாவில் வரும் நண்பன். மூவர். மூவர்.

கொஞ்சம் குடித்திருந்தாள். நான் எழுத்தாளர் என்றெல்லாம் தெரியாது. படிக்கும் வழக்கம் உள்ளவள் அல்ல. ஆனால் புத்திசாலி. நடனம் பற்றியே ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். நான் வயதானவன் ஆயிற்றே. 64 வயது. அதெல்லாம் அங்கே ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. எனக்கு அல்ல. அவளுக்கு. அப்படி எதைக் கண்டாள்? எதையும் காணவில்லை. அவளுக்கு 24ம் ஒன்றுதான், 64ம் ஒன்றுதான். நல்ல தோழமை. நல்ல பேச்சு. நல்ல போகமும் வேண்டும் என்றாள். தமிழ்க் கொச்சை. ஆங்கிலம் நுனிநாக்கு.

அம்மா, நான் ஏக பத்தினி விரதன் என்று சொல்லி விட்டு வீடு ஏகி விட்டேன். ஆனால் அந்த ஜென் குரு மாதிரி இன்னமும் சுமந்து கொண்டே இருக்கிறேன். சுமக்காவிட்டால் எழுத்தாளனாக இருக்க முடியாதே?

இதை யாரிடமாவது சொன்னால் கப்ஸா என்பார்கள். நடுத்தர வர்க்கத்தைத் தாண்டிய வேறோர் உலகம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

குடியை விட்டதும் வேறு ஒன்றும் போய் விட்டது. என் மனதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.