கார்ல் மார்க்ஸ் முகநூலில் எழுதியிருப்பது:
இந்தத் தடை விவகாரத்தில், இது என்ன மாதிரி விளைவுகளை, உரையாடல்களை சமூகத்தளத்தில் ஏற்படுத்துகிறது என பிஜேபி சோதனை செய்துபார்க்கிறது. ஆக, புதிய நெறிமுறைகள் என்ற பெயரில் மறைமுகமாக இந்த தடை அறிவிக்கப்பட்டவுடன் இங்கு நிகழத் தொடங்கிய உரையாடல்கள் என்ன என்று பார்க்கலாம். முதலாவதாக அரசு எதை பேசலாம் எதைப் பேசக்கூடாது என்கிற நவீன அரசியலின் அடிப்படையை அறியாதவர்க்ள் ‘வேத காலத்திலேய பசுவைப் புசிப்பது இருந்தது…’ என்று உளறத்தொடங்கியது. இரண்டாவது ‘அதில் கொழுப்பு நிறைய இருக்கிறது… எனும் கிருஷ்ணசாமிகளின் குரல். மூன்றாவது ‘போராடுவதற்கு இதைவிட முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன’ எனும் அன்புமணிகளின் குரல். நான்காவது இப்படித்தான் இருக்கமுடியும் என்று யூகிக்க முடிந்த கம்யூனிஸ்ட்களின் உறுதியான குரல். ஐந்தாவது இன்னும் கமறிக்கொண்டே இருக்கும் காங்கிரசின் கிச் கிச் தொண்டை.
இதை செய்யத்தொடங்கியிருக்கும் இவர்கள் யார்? இங்குதான் ராமர் பிறந்தார் என்ற சொத்தை வாதத்தை சம்மதிக்கவைத்து ‘அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்வதை’ நீதிமன்றத்தை ஏற்றுகொள்ளச்செய்தவர்கள். இங்குதான் ராமர் பாலம் இருந்தது என்பதை ஏற்றுக்கொள்ளச்செய்து ‘மாற்றுத் தடங்களை சிந்தியுங்கள’ என்று நீதிமன்றத்தின் மூலமாக அரசுக்கு அறிவுரை வழங்கச்செய்தவர்கள். அதன்மூலம் அந்தத் திட்டத்தையே முடக்கியவர்கள். இந்த விஷயத்திலும் அவர்கள் செய்ய முற்படுவது ‘மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும்’ அதே பழைய அரசியல்தான். இதில் பசு மீதான பாசமும் கிடையாது. அதன் சாணம் மீதான வாசமும் கிடையாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் இதில் அறிவுப்பூர்வமான எந்த எதிர்வினையும் பயனளிக்காது என்பதே யதார்த்தம்.
எல்லா பிரதேசங்களிலும் ஒத்த கருத்துள்ள, வளைந்துகொடுக்கிற மற்றும் மூர்க்கமான தரப்புகளை கண்டுகொள்ள உதவும் கருத்துநிலையாகவும் இந்த ‘புதிய நெறிமுறைகளை’ அவர்கள் சுற்றுக்கு விட்டிருக்கிறார்கள். இதன் மூலம் ‘பசு பாதுகாப்புப் படை’ என்கிற பெயரில், மத்திய மற்றும் வட இந்தியாவில் அவர்கள் உருவாக்கி நிறுத்தியிருக்கிற லும்பன் கூட்டத்திற்கு அளவிலாத ஊக்கத்தை வழங்கியிருக்கிறார்கள். அதன் வழியாக பசுவின் மீதான புனிதம் ஒரு வலுவான கருத்துநிலையாக மாறவும், அதுவொரு அரசியல் எழுச்சியாக திரள்வதற்குமான அடித்தளத்தை அமைக்கிறார்கள். அப்படி அமையும்போது அதுவொரு அரசியல் அதிகார உறுதியாக்கத்தை நோக்கி நகரும் என்பது அவர்கள் முன்பே செய்துபார்த்த வழிமுறை.
அவ்வாறு திரள்கிறபோது பொருட்படுத்தத்தக்க பங்காளிகளாக அவர்களுடன் யாரெல்லாம் இணைவார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள முயல்கிறார்கள். அதற்கு பலனிருக்கிறது. இந்த விவகாரம் வெளியில் வரும் வரை கிருஷ்ணசாமிக்கு இப்படி ஒரு கருத்து இருக்கும் என்று நமக்கு தெரியுமா என்ன? ஆக பலரது தயக்கங்களை உதறுவதற்கு அவர்களது வெளிப்படையான இந்த முன்னகர்வு இங்கு உதவுகிறது.
ஆக, இத்தகைய முன்னெடுப்புகளை அதே மூர்க்கத்துடன் எதிர்கொள்வதைத் தவிர மாற்று வழியில்லை. எதை உண்ணவேண்டும் எதை உண்ணக்கூடாது என்று சொல்லும் அதிகாரம் எப்போதும் மக்களையும் உள்ளடக்கிய ஒரு ஜனநாயக அரசுக்கு இருக்கமுடியாது என்கிற அடிப்படையில் எதிர்வினைகள் அமையவேண்டும். வேதம், இதிகாசம், பசு, புனிதம் போன்ற சொல்லாடல்களில் உட்புகுந்தால் எளிய மக்களிடம் அது மிகவும் நுணுக்கமாக அவர்களது பண்பாட்டின் மீதான தாக்குதலாக திரித்து பொருள்கொள்ளச் செய்வது இந்துத்துவ இயக்கங்களுக்கு எளிது. இதன் பொருள் இதைப் பேசாது கடக்கவேண்டும் என்பதல்ல. ‘ராமன் எந்த காலேஜில் எஞ்சினியரிங் படிச்சான்’ எனும் கருணாநிதியின் குரலே இங்கு பயனளிக்கக் கூடியது. மூர்க்கமான வெகுமக்கள் திரட்சியே இதற்கு எதிராக கொஞ்சமும் பலனளிக்கக் கூடியது. தெருவுக்கு வரவேண்டிய விவகாரங்களில் அங்கு வந்து நிற்பதுதான் அரசியல்.
வலதுசாரி எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்ட இயக்கங்கள் மத்திய அரசின் இந்த நெறிமுறைகளை வெளிப்படையாக மீறவேண்டும். அந்த மீறலையே போராட்ட வழிமுறையாக அறிவிக்கவேண்டும். இந்த எழுச்சியின் வழியாகவே எடப்பாடி போன்ற அரசியல் சொரணை அற்றவர்களின் இருப்பை இல்லாமலாக்க முடியும். இதற்காக் குரல் கொடுப்பதுதான் இங்கு பிரதான அரசியல் என்கிற அழுத்தத்தை அன்புமணிகள் அப்போதுதான் பெறுவார்கள். மாட்டுக்கறி என்பது ஒரு குறியீடு. மீறலை நோக்கி அது நம்மை உந்துகிறதா என்பதே இங்கு கேள்வி!