சாரு நிவேதிதா : அராத்து

சாருஆன்லைன்.காம் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த கால கட்டம். ஒருநாளில் நான்கைந்து முறை ஏதேனும் கட்டுரை பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருப்போம். குடி, குட்டி, மது, மாது (இரண்டுக்கும் வேறுபாடு உண்டு 🙂 ) என்று சாரு நிவேதிதா கலர்ஃபுல்லாக இருந்தது போன்ற இமேஜுடன் இருந்துகொண்டிருந்த கால கட்டம் அது. (இப்போது என்பதால் இப்படி நீட்டி முழக்கி பம்ம வேண்டியுள்ளது). இலக்கியமாவது மயிராவது, அப்போதெல்லாம் சென்னை மேல்தட்டு மக்கள் மட்டுமே அறிந்திருந்த ’பப்’களைப் பற்றி எழுதுவார். மேல்தட்டு நவீன நங்கையரைப் பற்றி எழுதுவார். இதைப் போன்ற சிலப்பல கில்மான்ஸான விஷயங்கள் எல்லாம் சாரு மூலமே எங்களுக்கு அறிமுகமாயிற்று.

வெறும் ’பப்’பைப் பற்றி எழுதினாலோ, குட்டிகளைப் பற்றி எழுதினாலோ என்ன பெரிதாக சுவாரசியம் இருந்துவிடப்போகிறது? ஒவ்வொரு கட்டுரையையும் இரண்டு முறை படிப்போம்.  ஒவ்வொன்றும் உலகின் அபாரமான சிறுகதையை விட சுவாரசியமாக இருக்கும். அன்றாடம் மேல்தட்டு மக்கள் கூடும் இடத்தில் நடப்பதை எழுதுவதில் என்ன பெரிய சுவாரசியம்?  ஆனால் எப்படி அவ்வளவு சுவாரசியமாக எழுத முடிந்தது? அதுதான் சாரு.  அதை நான் விளக்கப் போவதில்லை, படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன், அங்கு நடந்தவற்றை அப்படியே உண்மையாக எழுதுவார். இவர் மனதையும், நினைப்பதையும் உண்மையாக எழுதுவார். அட என்னய்யா குழப்பற? உண்மையாக எழுதினால் மொக்கையாகத்தானே இருக்கும்? கற்பனை கலந்து எழுதினால்தானே சுவாரசியமாக இருக்கும் என்கிறீர்களா?

உண்மைதான். பொய்யும் புரட்டும் கலந்து எழுதினால்தான் சுவாரசியமாக இருக்கும்.  உண்மை அலுக்கும்தான். சாருவுக்கு உண்மையையே சுவாரசியமாக சொல்லத் தெரிந்ததால், அவருக்குக் கற்பனை தேவையில்லாமல் போயிற்று என்று நினைக்கிறேன். எவ்வளவு அசுவாரசியமான விஷயமாக இருந்தாலும், அதில் சாரு கை பட்டால் சுவாரசியம் ஆகிவிடும். உதாரணமாக, சுவாரசியமான ’த்ரீசம்’ பற்றி எந்த அளவு சுவாரசியத்தோடு எழுதுகிறாரோ அதே அளவு சுவாரசியத்தோடு அவரால்,  பெண் கீழே படுத்துக்கொள்ள, ஆண் மேலே படர்ந்து புணரும், மிக அலுப்பான கலவி பற்றியும் எழுத முடியும்.

இந்தக் காலகட்டத்தில்தான் ’கண்ணாயிரம் பெருமாளும் சில முன்குறிப்புகளும்’ என்று தன் இணையதளத்தில் எழுத ஆரம்பித்தார். அடி பிய்த்துக்கொண்டு போனது. இதுவரை அதைப்போல ஒரு நடையையும் , கதை சொல்லும் முறையையும் அனுபவித்ததில்லை. எப்போதடா ஐயா அடுத்த அத்தியாயம் எழுதுவார் என அடிக்கடி அவருடைய தளத்தை நோண்டிக்கொண்டு இருப்போம். இப்போதிருப்பது போல ஸ்மார்ட் போன் இருந்திருக்கவில்லை. யார் வீட்டுக்காவது போனாலோ, மற்றபடி அலுவலகத்துக்குப் போனாலோ, அவரவருடைய டெஸ்க் டாப்பில் சாருஆன்லைனைத் திறந்து பார்ப்போம். இதுதான் பின்பு ராஸலீலா என்று நாமகரணம் சூட்டப்பட்ட க்ளாஸிக்.

இந்தக் கதை வந்துகொண்டிருக்கும்போதே, சைடில் முழுமூச்சாக இணையதளத்திலும் எழுதுவார் சாரு.  அதில், விதம் விதமான மதுவகைகள், விரால் மீன் வறுவல், டிஸ்கோவுக்குச் சென்றது, நிக்கியுடன் அடித்த கூத்துக்கள், பரவசப்பட வைக்கும் பயணங்கள், அபத்த மனிதர்களின் ஆயுட்கால நகைச்சுவை, ரீஜுவனேஷன், சின்னஞ்சிறு சிக் சிக் சில்க் குட்டிகள் என ஏக ரகளையாக இருக்கும். கடமைக்கு  அவ்வப்போது மனோஜ், வா.மு.கோமு, முகுந்த் நாகராஜன் என்று இலக்கிய அறிமுகமும் நடக்கும்.  அந்தக் காலத்திய சாருஆன்லைனைப் படிக்கையில் தமிழகத்திலேயே ஜாலியான மனிதர், ரகளையான மனிதர் சாருதான் என்று தோன்றும்.

இப்படியான ஒரு கிளுகிளு சுறுசுறு காலகட்டத்தில்தான், சாரு நிவேதிதா பெங்களூரில் வாசகர்களைச் சந்திக்கப் போவததாக சாரு ஆன்லைனில் அறிவிப்பு வெளிவந்தது. சாருவின் நண்பர் குருதான் இந்த ஏற்பாட்டைச் செய்தவர். சாருவைத் தனியாகச் சென்று சந்திக்க வேண்டாம் என்று இருந்தேன். ஏன் என்று தெரியவில்லை.  இப்போது யோசித்துப் பார்த்தால் , புதிதாக ஒருவரை, அதுவும் எழுத்தாளரை தனியாகச் சென்று சந்திப்பது இங்கிதம் அல்ல, சரியான நாகரீகம் இல்லை என்று கூட சொல்லலாம்.  நடைமுறையில் எல்லோருக்கும் சரிவராது. கசப்பான அனுபவமாக மாறிப்போகும் சாத்தியமும் உண்டு.

இதுவே ஒரு பொது விழாவில், ஒரு நிகழ்ச்சியில் சென்று முதன்முறையாகச் சந்திக்கும்போது நம்முடைய சிறுபிள்ளைத்தனம், அசட்டுத்தனம், நம்மையறியாமல் பிளேடு போடுதல் போன்றவையெல்லாம் தானாகவே தவிர்க்கப்பட்டு, நல்ல பெயர் எடுத்து எழுத்தாளரிடம் அறிமுகம் கிடைத்து நட்பாகி விடலாம்.  நட்பான பிறகு ஒன்றிரண்டு சந்திப்பில் வாலைச் சுருட்டிக்கொண்டு, அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு இருந்து விட்டு, மென்மையான சில கேள்விகளைக் கேட்டு விட்டு நட்பைப் பலப்படுத்தி விடலாம். அதற்குப் பிறகு என்ன கோமாளித்தனம் செய்தாலும் வெட்டி விட மாட்டார் எழுத்தாளர். அதான் நட்பாகி விட்டோமே! மிஞ்சி மிஞ்சிப் போனால், மென் வார்த்தையால் கடிந்து கொள்வார்.  இதுதான் ரகசியம்.

அதனால் பெங்களூர் சென்று சாருவை முதன் முதலாக சந்திக்கத் திட்டம் போட்டு, என் நண்பர்களோடு சென்று சந்தித்தேன். ராயல் ஆர்ச்சிட் என்ற ஐந்து நட்சத்திர உணவு விடுதியில் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார் குரு. ரூஃப் கார்டனில் ரம்மியமாக ஆரம்பித்து இருந்தது சந்திப்பு. இந்த வாக்கியமே உணர்த்தியிருக்குமே? ஆம், நான் சற்றுத் தாமதமாகச் சென்றேன். கிட்டத்தட்ட முப்பது நண்பர்கள் வந்திருந்தனர். ஃபேஸ்புக், ட்விட்டர் இல்லாத காலத்தில் வெறும் இணையத்தில் சொன்னதைப் பார்த்து வந்த பல்வேறு வாசகர்கள்.

நான் கூட்டத்தில் நுழைந்ததும், சாரு எழுந்து என் அருகே வந்து விட்டார். நான் அப்போது கழுத்தில் ஒரு ஆசிட் வாஷ் வெள்ளி செயின் போட்டிருப்பேன். அதைத் தொட்டுப்பார்த்து, ”இது நல்லா இருக்கே! எங்கே கிடைக்கும்?” என்று கேட்டு விட்டு, அவர் அருகில் உட்கார வைத்துக்கொண்டார்.

பின்னாளில் இதைப்பற்றிப் பேச்சு வந்தபோது, ”பாருங்க, அத்தனை பேர் இருக்கும்போது, எழுந்து வந்து உங்களைக் கூப்பிட்டு என் பக்கத்தில் உட்கார வச்சிகிட்டேன். அப்பவே ஏதோ வேவ்லெங்த் இருந்திருக்கு சீனி. இவன் நம்மாளுன்னு தோணிச்சி” என்றார்!

அந்தச் சந்திப்புக்கு வந்திருந்த வாசகர்களுக்கெல்லாம் அப்போது முப்பது வயதுக்குள்தான் இருக்கும். சமீபத்தில் நடந்த சந்திப்பின்போதெல்லாம் சில கிழவர்களும் வருகை தர ஆரம்பித்து இருக்கிறார்கள்.  முப்பது வயதுக்குள் இருக்கும் இளைஞர்களின் வாசிப்புக்கு அதை விட இளமையான துள்ளலோடு சாரு எழுதி வந்ததுதான் காரணம். அங்கே வந்திருந்த இளைஞர்களை விட அப்போது சாருவின் எழுத்து இளமையாக இருந்தது. சாருவின் எழுத்து இளமையாக இருந்தது என்றால் அவர் மனமும் இளமையாக இருந்ததால்தான் அது சாத்தியம். எந்தப் பாடாவதி மேட்டரை எழுதினாலும் அதில் இளமையான புதுமையான அணுகுமுறை இருக்கும். இந்த பப், குடி, குட்டி எல்லாம் சர்க்கரைப்பாகு அல்லது ஜிகினாதான். அதற்குள்ளே கடினமான விஷயத்தை நைஸாக வைத்திருப்பார். அவர் எதைச் சொன்னாலும் அது இளைஞர்களிடம் நெஞ்சில் சொருகப்பட்ட கூர்மையான கத்தி போலச் சென்றடையும்.

அந்தச் சந்திப்பில் அட்டகாசமான மதுவகைகளுடன், அமர்க்களமான டின்னர் ஏற்பாடு செய்திருந்தார் குரு.  உரையாடல் சுவையாக நீண்டு கொண்டு சென்றாலும், நட்சத்திர ஓட்டல் என்பதால் பதினோரு மணிக்கு ’லாஸ்ட் ஆர்டர்’ சொல்லி விட்டார்கள். சாருவைப் பிரிய மனமில்லாமல், குருவின் தொலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டு, மறுநாள் சாரு பெங்களூரிலேயே இருக்கிறாரா என்று கேட்டு உறுதி செய்து கொண்டு கிளம்பினேன். சாருவின் எண்ணை வாங்கவில்லை. சந்தித்த முதல் நாளிலேயே ஒரு எழுத்தாளரிடம் மொபைல் நம்பர் கேட்பது அநாகரீகம் என்று நினைத்ததுதான் காரணம்.

நிறை போதையில் தரைத் தளத்தில் நின்று கொண்டு, லவ் யூ செல்லம் என்று சந்திப்புக்கு வந்திருந்த அனைவரையும் ஒவ்வொருவராக முத்தம் கொடுத்து அனுப்பிக்கொண்டு இருந்தார் சாரு.

மறுநாள் பர்ப்பிள் ஹேஸ் பப்பில் இரவு பத்தரைக்கு குருவுடன் சாருவை சந்தித்தேன். முதல் நாள் அடித்த கூத்தில் குரு மறுநாள் இரவு ஒன்பது மணிக்குத்தான் எழுந்து கொண்டதாகக் கூறினார் சாரு. எவ்வளவுதான் குடித்தாலும், அதிகாலை  நாலு மணிக்குப் போய்ப் படுத்தாலும், ஆறு மணி அல்லது அதிக பட்சம் ஏழு மணிக்கு எழுந்து விடுவார் சாரு.  எட்டு மணிக்கு மீண்டும் கோப்பையைக் கையில் எடுத்துக்கொண்டு உற்சாகமாகத் தயார் ஆகியும் விடுவார். இது அவரின் உடல்வாகா அல்லது மனவாகா என்று பலமுறை குழம்பி இருக்கிறேன்.

பத்தரை மணிக்குச் சென்றதால் முப்பது நிமிடத்தில் லாஸ்ட் ஆர்டர். நான் ஒரு பேச்சிலர் வீடு வைத்திருந்தேன் பெங்களூரில். அங்கே வறீங்களா சாரு என்றதும், உடனே ஆமோதித்து விட்டார். குருவுடன் என் வீட்டுக்குப் பயணம். என் வீட்டில் எப்போதும் எல்லா தளவாடங்களும் தயார் நிலையில் இருக்கும் என்பதால் சாப்பாடு மட்டும் பார்ஸல் வாங்கிக்கொண்டு கிளம்பி விட்டோம். என் வீட்டில் சாரு டக்கீலா ஷாட்டுடன் உற்சாகமாக உரையாட ஆரம்பித்தார்.  விடிய விடிய போனது.

இப்படித்தான் ஆரம்பித்தது சாருவுடனான எனது பழக்கம்.

நான் முதன்முதலில் சாருவின் ’எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும்’ தான் படித்து இருந்தேன். என்னை மிரட்டி எடுத்துப் புரட்டிப்போட்டது அந்த நாவல்.  ஷோபா சக்தி ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார், அந்த நாவல்தான் அவருக்குத் தனக்கென ஒரு நடையை உருவாக்கிக்கொள்ள உந்துசக்தியாக இருந்தது என்று. எனக்கு அது ஒரு புதுத் திறப்பை உண்டாக்கியது. நான் அப்போதெல்லாம் ஏதும் எழுதுபவன் அல்ல. ஆனால் அந்த நாவலைப் படித்த ஒருவனால் எழுதாமல் இருக்க முடியாது. அந்த நாவல் பேசும் விஷயங்கள், அதன் நடை எல்லாவற்றையும் தாண்டி, அது, அதைப் படிக்கும் ஒருவனை எழுதத் தூண்டும் நாவல். அதனால் வாழ்வில் பணம் சம்பாதித்து உருப்பட வேண்டும் என்று நீங்கள் நினைப்பவராக இருந்தால் அந்த நாவலைப் படிக்காதீர்கள்.

சாருவை சந்திப்பதற்கு முன் படித்திருந்த சாருவின் ஒரே நாவல் இதுதான். சாருவை சந்தித்த பின்புதான் ஸீரோ டிகிரி படித்தேன்.  ஸீரோ டிகிரி ஒரு cult க்ளாசிக். அது ஒரு 45 டிகிரி கோணத்தில் கிளம்பி, 90 டிகிரியில் கிளம்பிய மற்றவைகளை விட அதிக உயரத்தை அடைந்து விட்டது. இருந்தாலும் எனக்குத் தனிப்பட்ட முறையில் ஃபேன்ஸி பனியனே ஸீரோ டிகிரியை விடப் பிடித்திருந்தது. அதிகம் படித்து இருந்தது சாருவின் இணையதள எழுத்துக்களே.  அவருடைய சிறுகதைத் தொகுதியைக் கூடப் படித்து இருக்கவில்லை. இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், சாரு தன்னுடைய எழுத்தையெல்லாம் படிக்காமல் வந்து பழகுபவர்களை அருகே சேர்க்க மாட்டார் என்று ஒரு கருத்து நிலவுகிறது அல்லவா? அது உண்மை அல்ல என்பதற்காகத்தான். ஆனால் இது முழுக்க உண்மையல்ல. நான் படிக்காமல் இருந்ததால் நீண்ட நாள் மூடிக்கொண்டு இருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாகப் படிக்க ஆரம்பித்த பிறகே வாய் திறந்தேன்.  ஆனால் பலர் சாரு எழுதிய எதையும் படிக்காமல் வந்து சந்திப்பதோடு அல்லாமல், முதல் சந்திப்பிலேயே ’ஆழமான’ விவாதத்தில் இறங்கி விடுவார்கள். அடுக்கடுக்கான கேள்விக்கணைகளைத் தொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். சாருவுக்கு, ’என்னடா இது எல்கேஜி பயல்களிடம் மாட்டிக்கொண்டோமே’ என்று இருக்கும். எல்கேஜி குழந்தைகள் என்றால் கூட ரசிக்கலாம். எல்கேஜி கிழவர்கள் என்றால் நிலைமையை எண்ணிப் பாருங்கள். வழக்கமாக இதைப்போன்ற கேனக் கேள்விகள் கேட்கும்போது ஒரு நொடி சாரு கோபப்பட்டு நெற்றி சுருங்கும். பிறகு சுதாரித்துக்கொண்டு, இதுக்கு அராத்தே பதில் சொல்வார் என்று என்னிடம் தள்ளி விடுவார். இதுபோல் போல பலமுறை நடந்து இருப்பதால், கேனக் கேள்விவகளுக்கு பதில் சொல்வதில் நான் ஸ்பெஷலிஸ்ட் ஆகி விட்டேன்.

பலரும் பலமுறை அதிசயமாகப் பதிவு செய்திருப்பது, ’சாருவை முரடன், மூர்க்கன், முன்கோபி, செருக்கு பிடித்தவர், தலைக்கனம் பிடித்தவர் என்றெல்லாம் நினைத்தோம்; அதனாலேயே சந்திக்காமல் தவிர்த்து வந்தோம். ஆனால் நேரில் சந்தித்தால், சாரு மிகவும் மென்மையானவர் என்று அறிந்து கொண்டோம். அவரே தேநீர் போட்டு கொடுத்தார், சிரித்தார் (?!), உன் பெயரென்ன என்று கேட்டுக்கொண்டார்’ என்றெல்லாம் சிலாகிப்பார்கள்.  ஆனால் உண்மை என்ன தெரியுமா? அவர்கள் அவரை சந்திக்கும் முன்பு அவரைப் பற்றி என்ன நினைத்திருந்தனரோ அதுதான் சரி, அதுதான் உண்மை.  தலையில் கனம் இருந்தால், தலைக்கனம் பிடித்துத்தானே ஆக வேண்டும்? நாகரீகம் கருதி சராசரி மக்களிடம் நடிக்கிறார் சாரு.  கருணை மிகக்கொண்டு என்று கூட சொல்லலாம்.

சாரு உண்மையாக, அதாவது துளிக்கூட நடிக்காமல் இருப்பது யாரிடம் தெரியுமா?

தன் காதலிகளிடமும், நாய்களிடமும் தான். (சாரி சாரு… எல்லா நாய்களுக்கும் எனக்குப் பெயர் தெரியாது! காதலிகளின் பெயர்களும்…)

எப்போதேனும் அரிதிலும் அரிதான சமயத்தில் காதலியிடம் காட்டும் அதே கோபத்தை நண்பர்களிடம் காட்டுவார்.  அடச்சே, இவன் ஆம்பளை என சடுதியில் உணர்ந்து கொண்டு, சாரி கேட்டு மென்மையாகி விடுவார்.

இந்தச் சலுகையெல்லாம் இலக்கியம், சாருவின் எழுத்து என்று வந்து விட்டால் யாருக்கும் கிடைக்காது.  காதலியாக இருந்தாலும் சரி, நண்பனாக இருந்தாலும் சரி, ஏதேனும் தவறுதலாகப் பேசி விட்டால், ஒரு தேசத்துக்காகக் கடைசியாகப் போராடும் ஒற்றை ராணுவ வீரனைப்போல வெறி கொண்டு வாதங்களை முன் வைப்பார்.  அப்போது மட்டும் ஓத்தா, ஙொம்மா, புண்டை, சிதி என செவ்விலக்கிய வார்த்தைகள் நயமாக வந்து விழும்.  நாய்கள் மட்டும் இலக்கியம் படிக்கத் தெரியாததால், கடைசி வரை அவரது செல்லமாகவே இருந்து கொண்டிருக்கும்.

எனக்கு என்ன தோன்றும் என்றால், ஒரு எழுத்தாளன் ஏன் மென்மையாக இருக்க வேண்டும்? பழகுவதற்கு இனிமையானவனாக இருக்க வேண்டும்? அவன் என்ன பேபி சிட்டரா? ஏர் ஹோஸ்டஸா? ஒரு எழுத்தாளனை அவன் எழுத்தை வைத்துத் தானே மதிக்க வேண்டும்? அவன் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தினான் என்பதை வைத்துத்தானே புகழ வேண்டும்? உங்கள் புத்தியைத் திறந்த ஒருவன், நேரில் சந்திக்கையில் ஒரு அறை கொடுத்தால்தான் என்ன, வாங்கிக்கொள்ள வேண்டியதுதானே? அவன் சைக்கோவாக இருந்தால்தான் என்ன? எத்தனை பேர் சைக்கோக்களிடம் குடும்பமே நடத்துகிறீர்கள்? எழுத்தாளன் மட்டும் ஏன் பழகுவதற்கு இனிமையாக, ஐந்து நட்சத்திர விடுதி வரவேற்பாளினி போலவோ, தேர்ந்த விலைமாது போலவோ இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? அப்படி இருப்பதாக வேறு ஏன் வியந்து போற்றுகிறீர்கள்? இதுவா ஒரு எழுத்தாளனின் குவாலிட்டி?

சாரு இயற்கையில் மிகவும் மென்மையானவர், அதே சமயத்தில் கடும் கோபக்காரர். என்னமோ கோபத்தையே இந்த லோகத்தில் யாரும் பார்த்திராதமாதிரி அதை taboo ஆக்கி விட்டதால், கோபத்திலும் மென்மையாக நடந்து கொள்ளும் வித்தையை சமீபமாக சாரு கற்றுக்கொண்டு விட்டார். நேர்ப்பழக்கத்தில் கடும் மென்மையாக இருந்தால் ஜாக்கிரதை, கட்டுரையில் கடும் கோபத்தைk கொட்டப் போகிறார் என்று அர்த்தம்.

அதே சமயம், இலக்கியம், உலக சினிமா, தத்துவம் பற்றியெல்லாம் பிரஸ்தாபிக்காமல், உங்களுக்கு நடந்த கதை (கொஞ்சமேனும் சுவாரசியம் இருக்க வேண்டும்), உங்கள் அனுபவம் (அனுபவம் என்றாலே அக்கா ஃபிரண்டை மேட்டர் பண்ணிய ரேஞ்சுக்கு நினைக்க வேண்டாம்… கால் டாக்ஸி டிரைவர் அனுபவம் கூட போதும்…), பார்த்த மசாலா படங்கள் போன்ற விஷயங்களை ஜாலியாகப் பேசலாம்.  அப்போது நீங்கள்தான் ராஜா. குறுக்கிடவே மாட்டார், உங்கள் பேச்சை செழுமைப்படுத்த உதவும் வகையில் சின்னச் சின்ன கேள்விகள் கேட்பார், அவ்வளவுதான். குழந்தையின் குதூகலத்துடன் கேட்டுக்கொள்வார். இலக்கியம், எழுத்து என்று வந்துவிட்டால்தான் ஆள் split personality.

இப்படி யார் எது சொன்னாலும் ஆர்வமுடன் முகத்தை ஆட்டி ஆட்டிக் கேட்கும் பழக்கத்தால், பலரும் கொஞ்சம் அதீத ஆர்வப்பட்டு புளுகு மூட்டையையும் சேர்த்து இறக்கி விட்டுப் போய்விடுவார்கள். அது அவர்கள் தவறு அல்ல. இதுவரை அவர்கள் சொன்னதை முழு கவனமும் கொடுத்து, துணைக் கேள்விகள் கேட்டு, இவ்வளவு ஆர்வத்துடன் யாரும் கேட்டிருக்காததால், சாருவிடம் போட்டுத் தாக்கி விடுகிறார்கள். யார் எவ்வளவு பெரிய புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டாலும் சாரு அப்படியே நம்புவார்.  நயன்தாரா, சாருவிடம் வந்து, ”சிம்பு எனக்குத் தம்பி மாதிரி” என்று சொன்னால், உடனே நம்பி விடுவார். ஒரு தெளிவிற்காக, நீங்க ரெண்டு பேரும் இன்செஸ்டா என்று வேண்டுமானால் கேட்பாரே ஒழிய, தம்பி என்று சொன்னதை ஏற்றுக்கொண்டு விடுவார்.

தான் கேட்கும் இந்தப் புளுகு மூட்டைகளை என்னிடம் அவ்வப்போது பகிர்ந்து கொள்ளும் போதுதான், ”ஏன் சாரு நீங்க வேற, இதெல்லாம் அண்டப்புளுகு என்று தெரியவில்லையா?” என்று கேட்பேன்.  அதற்கு “நான் அப்படியெல்லாம் யோசிக்க மாட்டேன் சீனி.  எதுக்கு ஒருத்தர் பொய் சொல்லணும்? யாராவது என்கிட்ட பேசும் போது, என் மைண்ட்ல பொய் சொல்றாங்கன்னு தோணினதே இல்லை. அப்படி யோசிச்சி வீணா என் மூளைக்கு வேலை குடுக்கவே மாட்டேன்” என்பார். இவர் என்ன புளுகினாலும் நம்புவார் என்பது முதல் உரையாடலிலேயே தெரிந்து விடும் என்பதால், பெண்களுக்குக் கேட்கவா வேண்டும்? செம குஜாலாகி, எனக்கு மேல மூணு கீழ ரெண்டு என்ற ரேஞ்சுக்குப் புளுகி, சாருவை ஏத்தி விட்டு அனுப்புவார்கள்.

ஆனால் உலகில் ஒருவர் மட்டும் புளுகுவார் என்று சாரு தெரிந்து வைத்திருக்கிறார். அவர் எப்போதேனும் உண்மை  சொன்னால் சாரு கண்டுபிடித்து விடுவார். மனுஷ்யபுத்திரன் தான் அது.  இருந்தாலும் மனுஷ் சொல்லும் பொய்யையே, டெக்னிக்கலாக, கவித்துவமாக, இலக்கிய பூர்வமாகச் சொல்வதால், அந்த பொய்களெல்லாம் சாருவுக்கு இனிக்கும். அது பொய்யாக இருந்தாலும் அதில் ஒரு இண்டெலக்சுவல் தன்மை இருப்பதால், விரும்பிக் கேட்டு ரசித்து விட்டு வருவார். மனுஷ் சொன்னதையெல்லாம் நம்மிடம் சுவாரசியமாகச் சொல்லி விட்டு, ”அவர் பொய் சொல்லிருக்குறார்னு வைங்க” என்று சிரித்துக்கொண்டே முடித்து விடுவார். எழுத்தாளர்களில் சாருவின் மனதுக்குப் பிடித்த நண்பர் என்றால் மனுஷ்தான். சாருவைப்பற்றி மனுஷ் தவறாக, நக்கலாகச்  சொல்வதெல்லாம் சாருவின் காதுக்குச் சத்தமில்லாமல் வந்து விடும். போட்டுக்கொடுக்கவா ஆட்கள் இல்லை? இருந்தாலும் மனுஷ் மீது சாருவுக்குக் கோபமே வராது. இப்போதைய எழுத்தாளர்கள் தங்களுக்குள் அந்த அளவுக்குப் பூடகமாகவும், நாடகத்தனமாகவும் பழகிக்கொள்கிறார்கள். இதைத்தாண்டி கற்பனைக்கெட்டாத வன்மம் வேறு. சாருவுடன் விடிய விடிய இளித்தபடி பேசிவிட்டு, சாரு வெள்ளந்தியாக பர்ஸனலாகப் பேசியதை, கட்டுரையாகவும், கிசுகிசுவாகவும் ஆக்கக்கூடியவர்கள் அவரது சக எழுத்தாளர்கள். அதனால் ஆபத்தில்லாத ஒரு எழுத்தாள நண்பராக சாருவுக்கு இருப்பது மனுஷ் மட்டுமே.

இருவரும் சேர்ந்து பேசிக்கொள்வதைப் பார்த்தால், தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து எழுத்தாளர்களும் தூக்கு மாட்டிக்கொண்டு சாக வேண்டியதுதான். என்ன காமடி என்றால், சாருவுக்கு, மனுஷ் தன்னைப்பற்றியும் இப்படி நக்கல் அடித்துத்தான் மற்றவர்களிடம் பேசுவார் என்பது தெரியும்.

சாருவுக்கு தன்னைப் பிடிப்பதை விட தன் எழுத்துக்களைப் பிடிப்பவர்கள் கூடவே உறவு என்று அடிக்கடி சொல்வார். என் எழுத்தின் மேல் மரியாதை இல்லாதவர்களிடம் நான் பழகவே மாட்டேன் என்றும் சாரு அடிக்கடி கூறுவார். மனுஷுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு.

மனுஷுக்கு சாருவின் எழுத்துக்கள் மீது பெரிதாக எந்த அபிப்ராயமும் கிடையாது. அவருக்கு சாரு பிடித்தமான எழுத்தாளர் அல்ல. சாரு நல்ல உரையாடல்காரர் என்று கூறி மைல்டாக அவமானப்படுத்துவார் மனுஷ். சாருவின் எழுத்தின் மீது மனுஷுக்கு மரியாதையும் கிடையாது. மனுஷின் எழுத்தாளர் எஸ்.ரா.  இது சாருவுக்கும் தெரியும். இருந்தாலும் இருவருக்குமான நட்பு கெமிஸ்ட்ரி பின்னி எடுக்கும். நான் சொல்லும் நட்பு லௌகீக வாழ்கை சார்ந்ததல்ல. இலக்கிய நட்பு. சாரு, இலக்கிய உலகில் மிக வெளிப்படையாக பேசக்கூடிய ஒரே நபர் மனுஷ் மட்டும் தான். அறிவுத்தளத்தில் சாரு, தனக்குச் சமமாக மதிக்கக்கூடிய நபரும் மனுஷ் தான்.

இந்தாளு எதைச்சொன்னாலும் கேக்கறாண்டா என்ற விஷயம் பரவியதாலோ என்னவோ, பல விசித்திரமான மனிதர்கள் சாருவின் வாழ்வில் வந்து செல்வார்கள். சாரு அதையெல்லாம் சொல்லும்போது ஏதோ மாய மந்திரக்கதை, கனவுக்கதை போல இருக்கும். ஆனால் உண்மையில் அதைப்போன்ற மனிதர்களை பார்த்திருக்கிறேன். இவர்களெல்லாம் கீலாவா என்று தோன்றும். ஆனால் சாருவுடன் படு மர்மமான, நம்பவே முடியாத காரியங்களைப் பற்றி சீரியஸாக பேசிக்கொண்டு இருப்பார்கள். இவர்களில் ஒரு சிலரை சாருவின் நாவலில் நீங்கள் வாசித்திருக்கக்கூடும்.

உதாரணமாக, இப்போது, இந்தக் கட்டுரையை நீங்கள் வாசித்துக்கொண்டு இருக்கையில், மோடியை மாற்றி விட்டு, ரஜினியைப்  பிரதமராகப் போடுகிற ப்ராஜக்ட் ஒண்ணு இருக்கு, அதுக்கு உங்க உதவி தேவை என யாரேனும் சாருவிடம் சீரியஸாக பேசிக்கொண்டு இருக்கக்கூடும். அல்லது, சிங்கப்பூர் அதிபர் பதவிக்கு டிடிவி டிரை பண்றார். தமிழ்நாட்ல உங்க சப்போர்ட்டை எதிர் பாக்கறார், 120 சீ குடுத்துடறேன்னு சொல்லி இருக்கார் என்றும் பேசிக்கொண்டு இருக்கலாம்.

இதெல்லாம் நான் சொல்வது உங்களுக்கு வேடிக்கையாக இருக்கக்கூடும். ஆனால் இந்தக் கேரக்டர்களை நான் நேரிலேயே சந்தித்து இருக்கிறேன். இவர்களெல்லாம் சாருவிடம் பேசுவது குறைந்த பட்சம் நூறு கோடி பிராஜக்ட்தான். சாருவுக்கு பத்து அல்லது இருபது கோடி என்பார்கள். நான்கைந்து முறை மீட்டிங் நடக்கும் . பிறகு மாய ஆவி போல கரைந்து போவார்கள்.

இவர்கள் ஒரு பக்கம் என்றால், சினிமா எடுக்கப் போகிறேன், கிராமத்தைத் தத்து எடுக்கப் போகிறேன், கட்சி ஆரம்பிக்கப் போகிறேன், உங்கள் ஆலோசனையின் பேரில் ஒரு பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்போகிறேன் என்று பலதரப்பட்ட விசித்திர ஜந்துக்களும் சாருவை சந்திப்பதுண்டு. இவர்களையெல்லாம் சாரு ஏன் சந்திக்க சம்மதிக்கிறார் என்று நான் குழம்புவதுண்டு.  நாவலுக்குக் கரு கிடைக்கும் என்ற நோக்கமோ என்னவோ, சாருவும் இவர்களை சளைக்காமல் சந்திப்பார். இவர்களால் தம்பிடிக்குப் பிரயோஜனம் இருக்காது. சமயங்களில், காஃபி ஷாப் பில்லை சாருவே செட்டில் செய்ய வேண்டிய கூத்தெல்லாம் நடக்கும்.

நாங்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன என்று சில வேடிக்கை விநோத பெண்களும் சாருவை சந்தித்து, தங்களின் சோக காவியங்களைக் கூறுவார்கள். ஏசு சிலுவையில் அறையப்பட்ட சோகத்தையெல்லாம் தூக்கி விழுங்கிவிடும் சோகக் கதைகளாக இருக்கும் அக்கதைகள். நம்மிடம் சொன்னால், நான்கு நிமிடத்தில் கொட்டாவி விட்டு விட்டு, இடுப்பாவது தேறுமா என்று நோட்டம் விட ஆரம்பித்து இருப்போம். சாரு அப்படியல்ல. அந்த சோகத்தை, இன்னும் நோண்டி நோண்டி ஆர்வமாகக் கேட்பார். இந்த உலகிலேயே நாம், நம் சோகங்களைக் கொட்ட உகந்த நபர் சாருதான் என அவர்கள் நம்புவார்கள். அது உண்மையும் கூட.

இது போக சில பெரிய இடத்து கனவான்கள், பெரிய இடத்துப் பிள்ளைகள் சாருவை சந்திப்பது உண்டு. முன்பு சாரு மது அருந்திய காலகட்டத்தில்,  ஏதேனும் நட்சத்திர விடுதியில் நான்கைந்து முறை மது அருந்திய பின் அவ்வகை உறவுகள் அறுந்து போகும். எழுத்தாளனுக்கு சரக்கு வாங்கித் தருவது எவ்வளவு பெரிய உதவி தெரியுமா என்ற அவர்களின் உயரிய மனப்பான்மைதான் காரணம்.

இந்த உலகம் எவ்வளவு பைத்தியக்காரர்களால் நிரம்பியது என்று சாருவை சந்திக்கும் விதவிதமான மனிதர்களை வைத்துப் புரிந்து கொள்ளலாம். பைத்தியம் என்றவுடன் நினைவுக்கு வருகிறது, நிறைய பைத்தியங்களுக்கு சாருவின் எழுத்தோ அல்லது சாருவையோ பிடிக்கும். சாருவின் எழுத்தில் இருக்கும் ஒருவகை மேட்னெஸ், இந்த நிஜப் பைத்தியங்களை ஏதோ ஒரு வகையில் கவர்ந்து விடுகின்றன. விளக்கை நோக்கி வரும் விட்டில் பூச்சிகள் போல சாருவை நோக்கி வருவார்கள் இந்தப் பைத்தியங்கள். சாருவின் எழுத்தை படித்துப் படித்து குணமாகி விடுவார்கள். இவர்கள் ஒரு வகை என்றால், நன்றாக இருக்கும் சிலருக்கு சாருவின் எழுத்துக்களைப் படித்தவுடன் பைத்தியம் பிடித்து விடும். பைத்தியம் என்றால் கொஞ்ச நஞ்ச பைத்தியம் அல்ல, உச்சி மண்டைக்கு வெறி ஏறிவிடும் அளவுக்குப் பைத்தியம் ஆகி விடுவார்கள். அதையும் மீறி சிலர் சைக்கோக்கள் ஆகி விடுவதும் நடக்கும். தங்களைத் தாங்களே கீறிக்கொள்வார்கள், சதா சாருவின் எதோ ஒரு எழுத்தை எடுத்துப்போட்டு ’சாமி’ ஆடிக்கொண்டு இருப்பார்கள். சதா சர்வ காலமும் ஏதேனும் ஒரு பஞ்சாயத்தில் ஈடுபட்டபடியே இருப்பார்கள்.

இந்த சைக்கோக்கள் ஒரு பக்கம் எனில், திடீர் ஞானிகள் மறுபுறம். ஒன்றும் தெரியாத அப்பாவிகளாக சாருவை படிக்க ஆரம்பிப்பார்கள்.  பாதி படித்துக்கொண்டு இருக்கையிலேயே ஞானோதயம் பிறந்து விடும். சாருவின் எழுத்து மூலம் கிடைத்த ’ஞானத்தை’ வைத்துக்கொண்டே சாருவை விமர்சிக்க ஆரம்பிப்பார்கள். கொஞ்ச நாட்களில் அவர்களுக்கு ஒரு அறிவுஜீவி இமேஜ் கிடைத்து, அங்கேயே தேங்கிக் கிடந்து செட்டில் ஆகி விடுவார்கள். இதைப்போல சாரு தன் எழுத்தின் மூலம் பலபேருடைய வாழ்கையில் விளையாண்டு இருக்கிறார்.

சாருவுடன் சுற்றிக்கொண்டு இருந்ததால், எனக்கும் பல பிரத்யேக அனுபவங்கள் ஏற்பட்டதுண்டு. சாருவுடன் ஒரு சாமியாரின் நான்கு நாள் ஆன்மீகப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன். சாரு எதையாவது நம்பினால், கொஞ்சம் கூட சந்தேகம் இல்லாமல் நம்புவார். சாமியார் தன்னை கடவுள் என்று சொல்லிக்கொண்டபோது , கடவுள் ஏன் பொய் சொல்லப்போகிறார் என்ற லாஜிக்கின்படி மொத்தமாக நம்பினார். குழந்தை தன் தாயை நம்புவது போல அந்த முகாமில் கலந்து கொண்டார்.

அந்த முகாம் ஒரு பொறியியற் கல்லூரியில் நடந்தது. பெரிய கொட்டாய் போட்டு நடத்தினார்கள். ஏசி எல்லாம் கிடையாது. அங்கேயே தங்க வேண்டும். ஏசி இல்லாத வகுப்பறையில் ஒரு சாதா கட்டில் போட்டு இருப்பார்கள், அங்குதான் தங்க வேண்டும். சாருவுக்கு ஏசி இல்லாமல் படுப்பது மிகச் சிரமம். ஆனால் தான் நம்பிய ஒரு விஷயத்துக்காக மூன்று இரவுகள் அந்தக் கட்டிலில், ஏசி இல்லாமல் படுத்துத் தூங்கினார். நான் நைஸாக எஸ்கேப் ஆகி விட்டேன். படுத்து உறங்குவது கூட பரவாயில்லை. அந்தப் பயிற்சி முகாமே ரண கொடூரம். மரண அறுவை. பைத்தியங்குளிகள் போல ஏதேதோ செய்யச் சொல்வார்கள். சாமியாரின் சிஷ்யர்கள் அவவ்ப்போது ரெண்டு மணி நேரம் தொடர்ந்து பிளேடு போடுவார்கள். ஆனால் சாமியார் பேசுவது கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும். அந்தத் திறமை கூட இல்லாமல் இவ்வளவு பிரபலமாக ஆகி இருக்க முடியாது அல்லவா? நடுநடுவே வடிவேல் காமடிகளையும் அந்த ஆன்மீக வகுப்பில் போடுவார்கள். இவ்வளவு ரண களத்திலும் மொத்தமாக நான்கு நாட்கள் இருந்து விட்டுத்தான் வந்தார் சாரு.

சாமியாரின் ட்விஸ்ட் அனைவருக்கும் தெரிந்ததே.  விஷயம் தெரிந்ததும், தான் ஆதரித்த ஒருவர் என்று சாரு முட்டுக்கொடுக்கவில்லை. எவ்வளவு கடுமையாக ஆதரித்தாரோ, அதை விட கொடுமையான தீவிரத்துடன் எதிர்த்தார். அதற்காக இன்று வரை பெங்களூர் கோர்ட்டுக்கு அலைந்து கொண்டு இருக்கிறார். சாரு இப்படித்தான் இருக்கிறார். நம்பினால் நம்புகிறேன் என்கிறார். ஏமாந்தால், ஏமாந்து விட்டேன் என்கிறார். மற்றவர்கள் தான் மாறுகிறார்கள், சாரு எப்போதும் போல அவருக்கே உரித்தான தனித்தன்மையான குணநலன்களுடன் அப்படியேதான் இருக்கிறார்.

முழுமையாகத் தெரியாமல் ஒருவரைப் பற்றி புகழ்ந்து சொல்லலாமா என்ற வாதம் வைக்கப்படும். இதையும் நாங்கள் வாசகர் சந்திப்பின்போது கேட்போம். அப்படிப் பார்த்தால், எல்லோரிடமும் சந்தேகப்பட்டுக் கொண்டேதான் பழக வேண்டியிருக்கும், எவன் எப்போது எப்படி மாறுவான் என்று யாருக்கும் தெரியாது. சாகும் வரை யாரையும் யாருக்கும் பரிந்துரைக்கவும் முடியாது என்று கூறுவார்.

சாரு எல்லோரிடமும் பணம் கேட்கிறார் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ஒரு உண்மையைச் சொல்கிறேன், சாரு இதுவரை என்னிடம் பணம் கேட்டதேயில்லை. அதைவிட கொடுமை, நானும் கொடுத்ததேயில்லை. என்னிடம் என்று இல்லை, வாசகர் வட்ட நண்பர்கள் யாரிடமும் பணம் கேட்டதில்லை. அவர் பணம் கேட்பது, யாரென்றே தெரியாத பொது வாசகர்களிடம் தான். அதுவும் கட்டாயம் இல்லை. தான் ஓசியில் எழுதிக்கொண்டு இருக்கிறேன், விருப்பம் உள்ளவர்கள் காசு கொடுக்கலாம் என்றுதான் கேட்கிறார். இதில் என்ன தவறு என்று இன்றுவரை புரிந்ததேயில்லை.

சாருவைப் படிக்காமல் என்னால் இருக்கவே முடியாது என்று பலர் சொல்வார்கள். சாருவைப் படித்தபின் தான் என் வாழ்வின் மீதான பார்வையே மாறியது என்றும் பலர் சொல்லியிருக்கிறார்கள். ஓ… அப்படியா நல்லது… இதெல்லாம் நீங்கள் ஓசியில் பெற்றுக்கொண்டு இருக்கிறீர்கள், உங்களுக்கு விருப்பம் இருந்தால், கொஞ்சம் பணம் கொடுங்கள் என்று கேட்பது எந்த வகையில் தவறு? இதில் என்ன இழுக்கு? சாரு என்ன கமல்ஹாஸனா? ஓசியில் ட்விட்டரில் எழுதிக்கொண்டு இருப்பதற்கு?

ஜக்கி, ரவிசங்கர் என ஆன்மீக குருக்களே பணம் வாங்கிக்கொண்டுதானே பயிற்சி அளிக்கிறார்கள், அதுவும் அடிப்பொடிகளை விட்டு.  இங்கே, சிறுநீர் கழிப்பது முதல், ப்ளோஜாப் வரை எல்லாவற்றுக்கும் பணம் கொடுக்கும் நாம், எழுத்தாளனுக்குப் பணம் கொடுப்பதில் மட்டும் கோபம் கொள்கிறோம். அதில் யாருக்குக் கோபம் வருகிறது? இதுவரை ஒற்றைப் பைசா கொடுக்காதவர்கள்தான் இந்த அறச்சீற்ற ஆசாமிகள். அதாவது, பணம் கொடுப்பதால் வரும் கோபம் அல்ல, சாரு பணம் கேட்டதால் வரும் கோபம். எப்படி இருக்கிறது பாருங்கள்.

இதைப்போல வெட்டி சர்ச்சைகளில் ஈடுபடாமல் ரெகுலராக சாருவுக்கு நூறு ஐநூறு கொடுத்துக்கொண்டு இருக்கும் ஏழை வாசகர்களும் இருக்கிறார்கள்.

நன்கு வசதியாக ஏசி பாரில் சாய்ந்து கொண்டு, சாரு பணம் கேக்குறதைப் பத்தி என்னா நினைக்கிறீங்க ப்ரோ என்று எண்டெர்டெயின்மெண்டில் ஈடுபடுபவர்கள்தான் இதை ஒரு சர்ச்சை ஆக்குகிறார்கள்.

பணம் வேண்டும் என்று பிளாகில் வெளிப்படையாக எழுதி விடுகிறாரே ஒழிய, பணம் வேண்டும் என்று நேரிலோ, போனிலோ கூட கேட்க கூச்சப்படுவர்தான் சாரு.  தனக்கு வர வேண்டிய தொகையைக் கேட்கவே கூச்சப்படுவார்.  பதிப்பகங்களில் கூட அவந்திகாவை விட்டுத்தான் கேட்க சொல்வார்.

வார இதழ்கள், ஆன்லைன் கட்டுரைகள் தொடர்பாக  பேமென்டுக்காக மெசேஜ் அனுப்பி விட்டுக் காத்திருப்பார். நான்கைந்து முறை மெசேஜ் அனுப்பியும் பதில் இல்லையென்றால்தான் தன்னுடைய பிளாகில் ருத்ர தாண்டவம் ஆடி பேயடி அடிப்பார். ஆரம்பத்திலேயே ’ஓசி’ என்று சொல்லி ஒத்துக்கொள்ள வைத்துவிட்டால், காசைப் பற்றிய நினைவே இல்லாமல் அடிமை கூலித் தொழிலாளி போல மாங்கு மாங்கென்று எழுதித்தள்ளுவார். சாரு காசுக்காக எழுதிய கட்டுரைகளை விட ஓசிக்கு மாரடித்ததே அதிகம்.

சாரு பண விஷயத்தில், எந்த அளவுக்குக் கூச்ச சுபாவி என்பதற்கு ஒரு சம்பவம் சொல்கிறேன். ஒருமுறை சாருவுடன் வெளியூர் செல்வதாகத் திட்டம். ”என் உயிர் நண்பர் அவர், அவரே அறை பதிவு செய்து விடுவார், அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். மற்ற ஏற்பாடுகளை பார்த்துக்கொள்ளுங்கள்” என்று என்னிடம் சொல்லி விட்டார் சாரு.

கிளம்பும் வரை நான், இரண்டு மூன்று முறை சாருவுக்கு நினைவு படுத்தி விட்டேன். அறை முன்பதிவு செய்யப்பட்டு விட்டதா? ஆம் எனில் அதன் விபரங்கள் என்ன என்று கேட்டுக்கொண்டே இருந்தேன்.

அவர், “ சீனி, செஞ்சிடுவாரு, அவரே தொடர்பு கொண்டு சொல்வார். நான் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை” என்று கூறி விட்டார்.

காரில் சென்று கொண்டு இருக்கிறோம். அப்போது வரை அறை சம்மந்தமான தகவல்கள் உறுதி செய்யப்பட வில்லை. சாருவும் எந்த சலனமும் இல்லாமல் வந்து கொண்டு இருக்கிறார்.  அந்த ஊரை நெருங்க இன்னும் முப்பது நிமிடங்களே இருக்கின்றன. நான் பொறுமை இழந்து, நீங்களே அழைத்துக் கேட்டு விடுங்கள் என்று அழுத்திக் கூறினேன்.

மிகுந்த லஜ்ஜையுடன், பதட்டமாக போன் செய்தார். ம்..ஓக்கே, ஓக்கே… சரி சரி… பாருங்க பாருங்க, நான் தொந்தரவு பண்ணிட்டேன்னு நினைக்கிறேன் என்று கூறி தொடர்பைத் துண்டித்து விட்டு அமைதியாக இருந்தார்.

பத்து நிமிடம் கழித்தும் சாரு எதுவும் சொல்லாததால், என்ன சாரு என்று கேட்டு ஆழம் பார்த்தேன்.

அவரு எதோ மீட்டிங்க்ல இருக்காரு போலருக்கு, எதோ சொன்னாரு, ஒண்ணும் புரியலை, சரி சரின்னுட்டேன் என்றார்.

இதுல என்ன சாரு இருக்கு  ஹோட்டல் பேரை அவர் சொல்ல வேண்டியதுதானே, இல்லன்னா நீங்களாவது கேட்க வேண்டியதுதானே என்றேன்.

விடுங்க சீனி, அவர் ஏதோ பிஸியா இருக்காரு. என்னமோ ப்ரீ பெய்டு ப்ரீ பெய்டுன்னு சொன்னாரு, ஒரு மண்ணும் புரியலை என்று சொல்லி விட்டு, நாமளே வேற அறை போட்டுக்கலாம். அவரா போன் செஞ்சா பாத்துக்கலாம் என்றார்.

சரி போய் ஒழியட்டும் என்று, அந்த ஊரில் அறை தேடி, காரை மெதுவாக ஓட்டிக்கொண்டு சென்றேன். வழியில் பீ ஆர் ப்ரெய்ட் (P.R. Pride) என்று ஒரு ஹோட்டலின் போர்ட் கண்ணில் பட்டது. எனக்கு ஒரு மின்னல் அடித்தது. ஒருவேளை, சாரு காதில் வாங்கிய ப்ரீ பெய்டு இதுவாக இருக்குமோ? வண்டியை ஓரம் கட்டி விட்டு, வரவேற்பில் சென்று விசாரித்தால், ஆமாங்க சாரு நிவேதிதா என்ற பெயரில் சூட் போடப்பட்டு இருக்கிறது என்றார்கள். அருமையான சூட்.

இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், ஒருவரிடம் உதவி பெறுவதில் அவ்வளவு கூச்சம் கொண்டவர் சாரு. அதற்கும் மேல், அது சம்பந்தமாக இவர் கைபேசியில் அழைக்க அவ்வளவு யோசிப்பார். அப்படியே அழைத்தாலும், மிகவும் பதற்றத்தில் இருப்பார். பேசுபவர் என்ன சொல்கிறார் என்று கூட காதில் சரியாக விழாது, பதற்றத்தில் சரி சரி என்று சொல்லித் துண்டித்து விடுவார்.

சாரு பணம் கேட்பது, சேர்த்து வைப்பதற்காகவோ, சொத்து வாங்குவதற்காகவோ அல்ல. அவருடைய எழுத்து தொடர்பான அன்றாட செலவுகளுக்குத்தான். சினிமா, பயணம், புத்தகங்கள், இன்ன பிற. இன்று சாருவிடம் நையா பைசா கூட இல்லை என்று வைத்துக்கொள்ளுங்கள், நாளை ஒரு வாசகர் 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள், அதை சேமித்து வைக்கவோ அல்லது கஞ்சத்தனமாக கொஞ்சம் கொஞ்சமாக செலவழிக்கவோ சாரு முயல மாட்டார். 50 ஆயிரம் ரூபாயையும் அன்றே அழித்து ஒழிப்பதற்கு ஆர்வமாகத்  திட்டங்கள் போடுவார். காசே இல்லையென்றால் பிச்சைக்காரன் என்று நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் பணமே இல்லாமல் கோடீஸ்வரனைப் போல் ராஜ வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருப்பவர் சாரு. பணக்கார வாழ்க்கை, ராஜ வாழ்க்கை என்பதெல்லாம் மனதில் உள்ளது. அது ஒரு மனோபாவம். அது சாருவிடம் உள்ளது.

ஒரு முறை ஹைதராபாத் விமானநிலையத்தில் இருந்து கோவா செல்கிறோம். விமானத்துக்கு இன்னும் ஒரு மணி நேரம் உள்ளது. ”காஃபி சாப்பிடலாமா சீனி?” என்று கேட்கிறார். சாப்பிடலாம் சாரு என்றதும், விமான நிலையத்தின் முகப்பில் இருக்கும் காஃபி கடையை நோக்கி நடக்கிறார்.

நான் அவரை நிறுத்தி, இங்கே வேண்டாம், அங்கே போகலாம் என்று 500 மீட்டர் நடத்தி ஒரு இடத்துக்கு அழைத்துச் செல்கிறேன். அது விமான நிலைய பணியாளர்கள் கேண்டீன். அங்கே காஃபி, 10 ரூபாய். விமான நிலையத்தில் 100 ரூபாய். இதை பெருமையாக சாருவிடம் சொன்னேன்.

”எனக்கு இதெல்லாம் மூளையில தோணவே தோணாது சீனி. எனக்குப் பத்து ரூபாயும் ஒண்ணுதான், நூறு ரூபாயும் ஒண்ணுதான். அப்படித்தான் என் மூளை யோசிக்கும். ஒருவேளை காஃபி ஆயிரம் ரூபாய்னா, அதிகம்னு யோசிப்பேன் போலருக்கு. இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் என் மூளையை நான் உபயோகிப்பதே இல்லை. இதுல தொண்ணூறு ரூபாயை மிச்சம் பிடிச்சி என்னா செய்யப் போறோம்?” என்றார்.

சரிதான். இதுவரை இருபது முறை இப்படி மிச்சம் பிடித்து இருந்தாலும், 1800 ரூபாய். இந்த 1800 ரூபாய் எப்படி என் வாழ்வில் உதவியது? அது எங்கே போனது? அப்போதுதான் நமக்கு இருப்பது கஞ்ச புத்தி என்று புரிந்தது.

அது மட்டும் இல்ல சாரு , இங்க வந்தா, தம் அடிக்கலாம் என்று சொல்லி சமாளித்தேன் .

மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு இது திமிர் என்பதாகத் தோன்றும். ஆனால் சாருவின் மன அமைப்பே இப்படித்தான். கையில் காசு இல்லாமல், ஆன்லைன் பிச்சைக்காரன் என்ற புகழுரையோடு வாழ்ந்து கொண்டிருக்கும்போதே இப்படி என்றால், சாரு உண்மையிலேயே பணக்காரராக இருந்தால் எப்படி வாழ்வார்? அதனால்தான் சொல்கிறேன் – பணக்காரத்தனம், கஞ்சத்தனம் என்பது நம்மிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை வைத்து அல்ல, அது ஆட்டிட்யூட் சம்மந்தப்பட்டது.

சாரு நிவேதிதா பற்றிய கட்டுரையில், இதுவரை இலக்கியத்தைத் தவிர்த்தே எழுதி வந்தாகி விட்டது. கட்டுரையும் முடியப்போகிறது. இப்போதாவது அவரது இலக்கிய இடம் தமிழில் என்ன என்ற என்னுடைய கருத்தைப் பார்த்து விடலாம்.

இதுவரை தமிழில் எழுதிய மொத்த நவீன எழுத்தாளர்களையும் ஒரு பக்கத்திலும், சாருவை மறு பக்கத்திலும் வைப்பேன். மற்ற எழுத்தாளர்கள் அனைவரும் ’தொடர்ச்சி’.  என்ன விதமான தொடர்ச்சியாக வேண்டுமானாலும் இருக்கலாம். பழந்தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம், வேறொரு ஆளுமையின் தொடர்ச்சியாக இருக்கலாம்.

சாரு மட்டும் யாருடைய தொடர்ச்சியும் கிடையாது. அவர் புதிதாக, சுயம்புவாக உருவாகி வந்தவர். வெளிநாட்டு எழுத்தாளர்கள் யாரையேனும் அவர் குருவாக ஏற்றுக்கொண்டு இருக்கலாம் அல்லது அவர்கள் எழுத்தால் inspire ஆகி இருக்கலாம். ஆனால் தமிழ் இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால், சாருவுக்கு முன்னால் இதைப்போன்ற எழுத்தே கிடையாது. தமிழுக்கு முற்றிலும் புதுவகை எழுத்து அவருடையது.

அடுத்து, எழுத்தாளர் என்பவர் யார்? வெறும் கதை சொல்லியா?

இல்லை, நீதி போதனை செய்து நம்மை நல்வழிப்படுத்துபவரா?

ஒரு எழுத்தாளன் என்பவன் எந்த நீதி போதனையையும் நம் மீது திணிக்காமல், நம் சிந்தனாமுறையை மாற்றி அமைப்பவன்.  பாசி படர்ந்து கிடக்கும் நம் மூளையை நிரடி விடுபவன். ஒரே மாதிரி சிந்தித்துக்கொண்டு, ஒரே திசையில் போய்க் கொண்டிருக்கும் ஆட்டு மந்தைக் கூட்டத்தை, சற்றே மாற்றி சிந்திக்கத் தூண்டுபவன். சுருங்கச் சொன்னால், ஒருவனுடைய மனோபாவத்தையே, மனோதர்மத்தையே மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டவன்.

மேற்சொன்ன அனைத்து விஷயங்களிலும் பொருந்திப்போய், ’எனக்கான’ எழுத்தாளராக தமிழகத்தில் இருக்கும் ஒரே எழுத்தாளர் சாரு மட்டும் தான்.

மேற்சொன்ன விஷயங்களைத் தாண்டி, அவர் எவ்வளவு கடினமான விஷயத்தை எழுதினாலும் அதில் சுவாரசியம் தானாக வந்து ஒட்டிக்கொள்வது, அவரது எக்ஸ்ட்ரா சிறப்பியல்பு.

சாரு, தன்னை டிரான்ஸ்க்ரெஸிவ் எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்பவர். இப்போது பல இளம், நடுவாந்திர எழுத்தாளர்கள், இதை ஒரு ஃபேஷனாக நினைத்து, தன்னையும் ஒரு டிரான்ஸ்க்ரஸிவ் எழுத்தாளனாகக் கருதி சாருவை காப்பி அடித்து வருகிறார்கள். (நகலெடுத்து என்றுதான் ’தமிழில்’ எழுத நினைத்தேன். ஆனாலும் காப்பி தான் சரியாக இருக்கிறது. இது தமிழ்க் காப்பி.)

சும்மா ஓத்தா, ஒம்மா, மயிரு என்று எழுதினால் டிரான்ஸ்க்ரெஸிவ் என்று நினைத்துக்கொள்கிறார்கள். இதைவிட இன்னொரு விஷயம், சாரு நடையை காப்பி அடிப்பது சுலபம். ஆனால் சாருவின் ஆன்மாவை, சாருவின் அந்த எஸ்ஸன்ஸை காப்பி அடிக்கவே முடியாது. சிலுக்கு போல ஸ்டெப் போட்டால் போதுமா? சிலுக்கின் அசரடிக்கும் முகமும், முலையும், இடையும், தொடையும்  வேண்டாமா? காந்திமதி சிலுக்கு ஸ்டெப் போட்டால் எப்படி இருக்கும்? அப்படித் தங்கள் எழுத்துலக வாழ்க்கையை அழித்துக்கொள்கிறார்கள் சில எழுத்தாளர்கள்.

காந்திமதி சிலுக்கு ஸ்டெப் போட்டால், சிலுக்குக்கு எப்படி இருக்கும்? அட நம்ம ஸ்டெப்பை போடறாளே, நம்மளை மாதிரி ஆடறாளே  என்று ஜாலியாகத்தானே இருக்கும்? சிலுக்கின் மயக்கும் முகமும், கண்களும், முலைகளும் சிலுக்குக்கா தெரியும் ? பார்க்கும் நமக்குத்தானே தெரியும்?

இன்னொன்று – டிரான்ஸ்க்ரெசிவ் எழுத்தாளன் என்று சொல்லிக்கொண்டு, ஒழுக்கமில்லாமல் ஜாலியாக சுற்றிக்கொண்டு இருக்க முடியாது. ஒழுக்கவாதி என அறியப்படும் ஜெயமோகன் எந்த அளவுக்கு வாசிக்கிறாரோ, அதே அளவுக்கு வாசிக்க வேண்டும். ஒழுக்கவியல் எழுத்தாளர்களாவது டிரான்ஸ்க்ரெசிவ் எழுத்தாளர்களைப் புறக்கணித்து விட்டுப் போய் விடலாம். ஆனால் டிரான்ஸ்க்ரசிவ் எழுத்தாளன் அனைவரையும் படித்தாக வேண்டும். சாரு எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்து அவ்வளவு படித்திருக்கிறார். இன்னும் படித்துக்கொண்டேயிருக்கிறார். இந்த விஷயத்தில் அசுர உழைப்பு அவருடையது. படிப்பு மட்டுமன்றி உலக சினிமாக்களை இவர் அளவுக்கு பார்த்து, அவைகளை வெறும் விமர்சனம் மட்டும் செய்யாமல், அந்தப் படங்களில் தன் பார்வை என்ன, தான் கண்டடைந்தது என்ன என விரிவாக எழுத தமிழில் இவர் ஒருவர்தான் இருக்கிறார்.

இவ்வளவு உழைப்பைப் போட்டாலும் பயன் ஏதும் இருக்காது. ஒழுக்க எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும் மாலை மரியாதை ஏதும் கிடைக்காது. பொதுவெளியில் மரியாதை கிடைக்காது. அனைவரும் வெறுத்து ஒதுக்குவார்கள். வன்மமும் வெறுப்பும் மட்டுமே கிடைக்கும் பரிசுகள். எதையும் ரொமாண்டிசைஸ் செய்யாமல், மனித மனங்களையும், சமூகத்தையும் உள்ளது உள்ளபடி ஆராய்ச்சி செய்து எழுதும் எழுத்துக்கு இதுதான் நிலை. தமிழ் நாட்டில் இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும், டிராஸ்க்ரஸிவ் எழுத்து கொண்டாடப்படாது. பயங்கரமான ஹிப்போகிரைட் சமூகம் தமிழ்ச் சமூகம். இதெல்லாம் தெரிந்தே, ஆரம்பத்தில் இருந்து தன்னை பலி கொடுத்துக்கொண்டே எழுதி வருபவர் சாரு நிவேதிதா.

டிரான்ஸ்க்ரஸிவ் எழுத்தை எழுதுவதற்கு மனதில் தெம்பும் தெனாவட்டும் வேண்டும். பொய் பித்தலாட்டம் அறவே கூடாது. இங்கே டிரான்ஸ்க்ரசிவ் என்று சொல்லிக்கொள்பவர்கள், வன் புணார்ச்சியை கவித்துவமாக ரசிக்கும்படி எழுதுவார்கள். ஒரு மைனர் பெண்ணுடன் உறவு கொள்வதை அசூயையாகவும் மன்னிப்புக் கோரியும் எழுதுவார்கள்.  படிப்பவர்களுக்கு உள்ளம் உருகும்.  ஆனால் உண்மையான டிரான்ஸ்க்ரெஸிவ் எழுத்துக்கு சாருவின் உன்னத சங்கீதம் என்ற கதையை சிபாரிசு செய்கிறேன்; படித்துப் பாருங்கள்.

சாரு எப்போதும் புலம்புவதுதான், தமிழில் எழுதினால் தமிழ்நாட்டிலும் மதிக்கமாட்டான், உலகுக்கும் தெரியாது.  சமீபத்தில் ப்யூக்கோவ்ஸ்கியின் Post Office படித்தேன்.  நல்ல நாவல் தான், ஆனால் தரத்திலும், அனுபவத்திலும், அந்த அனுபவத்தை பகடியுடன் ஒரு கலை அனுபவமாக மாற்றுவதிலும் சாருவின் ராஸ லீலா எங்கேயோ இருக்கிறது.  அந்த நாவல் மட்டும் ஆங்கிலத்தில் வந்து இருந்தால், போஸ்ட் ஆஃபீஸ் எல்லாம் அதன் பக்கத்தில் கூட நிற்க முடியாது.

நாவல் என்றவுடன் நினைவுக்கு வருகிறது. எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும், ஸீரோ டிகிரி, ராஸ லீலா, காமரூப கதைகள், தேகம், புதிய எக்ஸைல் என எதை எடுத்துக்கொண்டாலும் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்காது. வெவ்வேறு வடிவங்களில் எழுதப் பட்டவை. எழுத்து ஓட்டத்திலும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கும். ஆனால் எந்த வடிவத்தை எடுத்துக்கொண்டாலும், வேவ்வேறு ஸ்டைலில் எழுதினாலும், சாருயிஸம் குறையாமல் பயணிக்கும் ஒவ்வொரு நாவலும்.

சாருவின் சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் ஒவ்வொரு சிறுகதையும் பரீட்சார்த்த முயற்சியே. இந்தத் தொகுப்பைப் படித்த ஒருவனுக்கு சிறுகதை எழுதவே தோன்றாது.  சிறுகதையில் இதைத்தாண்டி என்ன செய்யப்போகிறோம், என்ன சொல்லப்போகிறோம் என்று மலைத்துப்போக நேரிடும்.

சிலருக்கு எழுத்து வேறு, வாழ்க்கை வேறு.  சாருவுக்கு இரண்டும் ஒன்றுதான். ஒன்றிலிருந்து ஒன்றை துளிக் கூட பிரிக்க முடியாது. அவர் தன் வாழ்வை எழுத்தாக்குவதால், எழுத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். சாருவைப் போன்ற ஒரு ஆளுமையைப் புரிந்து கொள்வது கடினம்தான். ஏனெனில், அவர், நீங்கள் உருவான பின்னணியில் இருந்து உருவாகி வரவில்லை. உங்களுடைய அறம் மற்றும் மதிப்பீடுகள் (ethics and values) வேறு, அவருடையது வேறு. அவர் முழுக்க முழுக்க உலக இலக்கிய ஆளுமைகளைப் படித்து உள்வாங்கி, அதிலிருந்து பிறந்து வந்திருக்கிறார். அல்லது இயற்கையிலேயே இதைப்போல விசித்திர ஜீன்களுடன் பிறந்தாரா தெரியவில்லை. அதனால் அவர் சொல்வது உங்களுக்குப் புளுகுவது போல இருக்கும். அவர் கோபம் உங்களுக்கு நகைப்பாக இருக்கும். அவர் சிரிப்பது உங்களுக்குக் கோபமூட்டும். மொத்தத்தில் அவர் ஒரு மிகப்பெரிய பைத்தியக்கார விடுதியின் தலைமை மருத்துவர்  போல வாழ்ந்து கொண்டிருக்கிறார். வழக்கம் போல பைத்தியங்களுக்குத் தாங்கள் பைத்தியம் என்பது தெரிவதில்லை. ஒரு மாறுதல், இவர் விஷயத்தில் அனைத்துப் பைத்தியங்களும் சுதந்திரமாக வெளியே சுற்றி வருகின்றன.

இந்தக் கட்டுரை எழுதுவது எனக்குப் பெரும் சவால்தான். பெரிதாக சுவாரசியமும் இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், தன் வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளையும் இந்த சமூகத்தின் முன் பிரித்துப் போட்டு விட்டு, மிகப்பெரிய மேடையின் நடுவே அம்மணமாகப் படுத்திருப்பவர் சாரு நிவேதிதா. அவரே அனைத்தையும் எழுதி விட்டதால், நான் என்ன எழுதுவது? இதெல்லாம் சுவாரசியம் இல்லாதவை என்று நினைத்த சில விஷயங்களை மட்டுமே பொறுக்கியெடுத்து எழுதி இருக்கிறேன்.

எழுதி முடித்தவுடன்தான் சில விஷயங்கள் ஒவ்வொன்றாக நினைவில் வந்து முட்டுகின்றன…

1)ஒரு புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் இடையே டீன் ஏஜ் பையன் போல ஒரு இலக்கியத் தரமான ’சிநேகிதி’க்கு மெசேஜ் அனுப்பிக்கொண்டு இருந்தது. வயிற்றெரிச்சலை கிளப்பும் விதமாக, என்ன பதில் போடலாம் என என்னிடம் ஐடியா கேட்டு வெறுப்பேற்றியது…

2) கருணை அடிப்படையில் ஒரு பெண்ணை சில காலம் காதலித்தது…

3) தாய்லாந்தில் சாருவுடன் சுற்றித்திரிந்தது…

4) சாருவுடனான இமயமலைப் பயணம், மற்றும் தேனருவிக்கு சாரு ஏறி வந்தது…

5) ஒரு நடிகை சாருவை துரத்தித் துரத்திக் காதலித்தது…

6) ஒரு புகழ்பெற்ற கவிதாயினி, ஐயய்யோ, உன்கூட பேசிட்டு இருந்தா உன்னை லவ் பண்ணிடுவேன்னு பயமா இருக்கு என்று ஓடியது…

இதைப்போல இன்னும் நிறைய நினைவில் வந்து மோதுகின்றன. சாரு @ 80-இல் பார்த்துக்கொள்ளலாம்.