ஸ்ரீராம் எனக்கு நண்பராகக் கிடைத்தது நான் பெற்ற பேரதிர்ஷ்டங்களில் ஒன்று. விக்கிபீடியாவில் என்னைப் பற்றிய விபரங்களைப் பார்த்தால் அது புரியும். ஸ்ரீராம்தான் அவ்விபரங்களைச் சேகரித்தார். அதற்காக இரண்டு மாதம் ராப்பகலாக உழைத்தார். உலகில் எந்த ஒரு எழுத்தாளருக்கும் அப்படி ஒரு விக்கிபீடியா பக்கம் இருக்காது என்று நினைக்கிறேன். பனிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரிஞ்ஞாலக்குடாவில் நான் பேசிய பேச்சைக் கூட எப்படியோ தேடி எடுத்து யூடியூப் இணைப்பைக் கொடுத்து விட்டார். சமீபத்தில் ’உழவர் செய்தி’ என்ற பத்திரிகையில் என்னைப் பற்றி வந்திருந்த ஒரு செய்தியை எனக்குக் கர்ம சிரத்தையாக அனுப்பியிருந்தார். ஆனால் எப்போதுமே உழவர் செய்தியோடு நின்று விடாது. அமெரிக்காவில் அவ்வளவு பிரபலமில்லாத ஒரு வானொலிப் பத்திரிகையில் என் எழுத்து பற்றி ஒரு அமெரிக்க புத்திஜீவி எழுதி விவாதித்திருக்கும் கட்டுரையைக் கூட அனுப்புவார். இதெல்லாம் உங்களுக்கு எப்படிக் கிடைக்கிறது என்று கேட்டேன். காலையில் எழுந்ததும் (காலை என்றால் பத்து மணி) என் பெயரைப் போட்டுத் தேடினால் எப்படியாவது கிடைக்கும். ஒரு அரை மணி நேரம். தினமும் காலையில். இது தவிர எத்தனையோ பணிகள். உதாரணமாக ஒன்று. அந்திமழை இணைய இதழில் நான் எழுதிய நிலவு தேயாத தேசம் பயணத் தொடரை புத்தகமாக வெளியிட வேண்டி, அதற்கான ப்ரூஃப் ரீடிங் பணியில் இறங்கினார். விளைவு கீழே:
மாற்றங்கள்:
முதல் கட்டுரை, ஆறாம் பத்தி, ஆறாவது வரி:
அசல்: நம் ஆட்களால் அந்நிய கலாச்சாரத்தோடு எப்படிச் சேர்வது என்றே தெரிவதில்லை.
மாற்றியது: நம் ஆட்களுக்கு அந்நிய கலாச்சாரத்தோடு எப்படிச் சேர்வது என்றே தெரிவதில்லை.
***
மூன்றாம் கட்டுரை, பதினேழாம் பத்தி, முதல் வரி:
அசல்: இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு ஆண் நான்கு பெண்களைத் திருமணம் செய்து கொள்ளலாம்.
மாற்றியது: இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு ஆண் நான்கு பெண்கள் வரை திருமணம் செய்து கொள்ளலாம்.
***
பதினொன்றாம் கட்டுரை, ‘கடைசி விருந்து’ படத்திற்கு முந்தைய பத்தி:
தேவாலயத்தின் உள்ளே வெளிச்சம் இல்லாததால் அந்தப் பெயர்.
(வாக்கியம் முழுமையாக இல்லை.)
***
பன்னிரெண்டாம் கட்டுரை, ஐந்தாம் பத்தி:
“பின்வரும் காணொளியில் ஜிப்ரால்டர் குன்று பற்றிக் கொஞ்சம் அறிந்துகொள்ளலாம்.” – இந்த வரிக்குப் பிறகு காணொளியின் இணைப்பு கொடுக்கப்படவில்லை.
***
பதிமூன்றாம் கட்டுரை, ஐந்தாம் பத்தி, எட்டாம் வரி, பன்னிரண்டாம் வரிகள்:
அஜீத் சாமே (Madjid Samii) என்ற பெயரை ‘மஜீத் சமீ’ என்று மாற்றியுள்ளேன்.
Please hear at 0:15 second in this video: https://www.youtube.com/watch?v=RsESeu0Kwns
Official website: http://professormadjidsamii.com/en/biography.html
***
பதினேழாம் கட்டுரை, பதினொன்றாம் வரி:
அல் ஜசீரா என்பதை அல்-ஜதீத் என்று மாற்றியுள்ளேன். (24-வது அத்தியாயத்தில் அல்-ஜதீத் என்றே உள்ளது.)
(அல் ஜசீரா என்று நான் எழுதியிருக்க வாய்ப்பில்லை. பத்திரிகையிலேயே இருக்கும் ப்ரூஃப் ரீடர் அறிஞர்கள் மாற்றியிருப்பார்கள் ஸ்ரீராம்!)
***
பதினெட்டாம் கட்டுரையில், Abu Ghraib படத்திற்கு கீழ் உள்ள பத்தி:
அசல்:
துரதிர்ஷ்டம் என்னவென்றால், மெஹ்தி ஸானாவின் ஐந்து நூல்களில் ஒன்றுதான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அது, Prison No. 5: Eleven Years in the Turkish Jail.
சந்தேகம்:
இதற்கு முந்தைய பத்திகளில் அவரது ஐந்து நூல்களின் பட்டியல் உள்ளது. அதில் இந்தப் பெயர் இல்லை. இந்த இணைப்பில் பார்த்தேன், சாரு. https://www.chris-kutschera.com/A/mehdi_zana.htm
Prison No. 5: Eleven Years in the Turkish Jail நூல் முதல் இரண்டு நூல்களின் resume என்று உள்ளது. (Only a resume of the author’s first two books is available, published by Kendal Nezan of the Kurdish Institute in Paris under the title “La Prison N°5”.) (ஆங்கில மொழிபெயர்ப்பு இப்போது அமேஸானில் உள்ளது.)
ஆக, இந்த வரிகளை இதுபோல் மாற்றியுள்ளேன்.
மாற்றம்:
துரதிர்ஷ்டம் என்னவென்றால், மெஹ்தி ஸானாவின் நூல்களில் ஒன்றுதான் ஆங்கிலத்தில் கிடைக்கிறது. அது, Prison No. 5: Eleven Years in the Turkish Jail. (முதல் இரண்டு நூல்களின் சுருக்கம்.)
***
24-ஆவது அத்தியாயம், 7வது பத்தி, ஐந்தாம் வரி:
சலைன் நீர் என்பதை சலைன் என்று மாற்றியுள்ளேன்.
***
இருபத்தைந்தாம் கட்டுரை:
நாஸிம் ஹிக்மத் படத்தின் கீழ் இருந்து மூன்றாம் பத்தியிலும் , ஐந்தாம் பத்தியிலும் ஒரே கருத்துகள் உள்ளன. இரண்டையும் இணைத்துவிடுங்கள், சாரு.
***
இருபத்தியாறாவது கட்டுரை, முதல் கவிதைக்குக் கீழ் உள்ள குறிப்பு:
இதய வலி என்பதை நெஞ்சு வலி என்று மாற்றியுள்ளேன். கீழே உள்ள குறிப்பையும் பார்த்துவிடுங்கள்.
***
பதினனைந்தாம் கட்டுரை, ஐந்தாம் பத்தி, கீழிருந்து ஐந்தாம் வரி:
இதயவலி என்பதை நெஞ்சுவலி என்று மாற்றியுள்ளேன். (Doctors call it referred pain. One cannot feel pain in the lungs, heart, food tube (esophagus), gut or intestine. Any pain in the above parts is usually felt in the chest or abdomen.
***
இருபத்தியாறாவது கட்டுரை, மூன்றாம் கவிதையில், கீழிருந்து நான்காவது வரி:
Sciatic வலி என்பதை Sciatica வலி என்று மாற்றியுள்ளேன்.
***
இருபத்தியாறாவது கட்டுரையின் கடைசி சில பத்திகளிலேயே Blue Eyed Giant பற்றிய குறிப்பு வந்துவிட்டது. இப்பொழுது, இருபத்தியேழாம் கட்டுரையிலும் அஹே வரிகள், கருத்துகள் உள்ளன. இரண்டையும் சேர்த்துவிடுங்கள், சாரு.
***
இருபத்தியொன்பதாவது கட்டுரை, இரண்டாம் படத்துக்குக் கீழ், இரண்டாம் பத்தி, முதல் வரி:
அசல்: போஸ்னியாவின் தலைநகர் ஸராயீவோ நகர் பற்றிய ஒரு காணொளி கீழே.
(காணொளியின் இணைப்பு கட்டுரையில் இல்லை, சாரு.)
***
ரியாஸின் கடிதத்திற்கு முன் Huzun என்ற வார்த்தையை ஹூசுன் என்றும், அவர் கடிதத்திற்குப் பிறகு ஹூஸூன் என்றும் மாற்றியுள்ளேன். நீங்கள் எழுதப்போகும் புதிய கட்டுரைகளிலும் ஹூஸூன் என்றே குறிப்பிடுங்கள்.
***
ஸ்ரீராமிடம் உள்ள இன்னொரு விசேஷம், ஒரு நாவலில் கதாபாத்திரமாகச் சேர்க்கப்பட வேண்டிய அளவுக்கு விநோதங்களும் விபரீதங்களும் நிறைந்தவர். அதனால்
அவரை நான் நடமாடும் மனித வெடிகுண்டு என்றே பல சமயங்களில் நினைத்திருக்கிறேன். அனாயாசமாக அம்மாதிரி காரியங்களில் ஈடுபடுவார். ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒருமுறை சீனி மீது எனக்குக் கடும் கோபம் வந்து விட்டது. (சீனிக்கு அராத்து என்ற நாமகரணத்தைச் சூட்டியது அடியேன் தான் என்றாலும் அவரை நான் சீனி என்றே அழைப்பது வழக்கம்.) குட் பை சொல்லி விட்டு வந்து விட்டேன். குட் பை என்றால் இதுதான் கடைசி சந்திப்பு என்று பொருள். அவரைப் பற்றி எனக்கும் என்னைப் பற்றி அவருக்கும் நன்கு தெரியும் என்பதால், அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வராது என்று எனக்குத் தெரியும். நான் யாரிடமாவது குட்பை சொல்லி விட்டால் அவர்களைப் பற்றி நெருங்கிய நண்பர்களிடையே கன்னாபின்னா என்று கெட்ட வார்த்தைகளில் திட்டுவது வழக்கம். நேரில் திட்ட முடியாததைக் கட்டுப்படுத்தி வைப்பதால் ஏற்படும் விளைவு. அந்த வழக்கப்படி சில நெருங்கிய நண்பர்களிடம் இது பற்றிப் பிரஸ்தாபித்த போது அவர்கள் அனைவரும் எனக்கு வாழ்த்து சொல்லி பூங்கொத்து அனுப்பினர். செல்வகுமார் மட்டும்தான் உஷாராக “இதையெல்லாம் நம்பி சாருவிடம் அராத்து பற்றிப் போட்டுக் கொடுக்காதீர்கள். சாருவோடு சேர்ந்து அராத்துவைத் திட்டாதீர்கள். நாளைக்கே ரெண்டு பேரும் சேர்ந்து கொண்டு நம்மைத் துவைத்து எடுத்து விடுவார்கள்” என்று நண்பர்களை எச்சரித்துக் கொண்டிருந்ததாக உளவுப்படை மூலம் அறிந்தேன். ஒரு ஆறு மாதம் இப்படியே ஓடியது. பிறகு ஒருநாள் எதுவுமே நடக்காதது போல் ரெண்டு பேரும் ஒட்டி விட்டோம். ஆனால் நான் சொல்ல வந்த கதை வேறு. சீனியிடம் குட்-பை சொன்ன மறுநாள் ஸ்ரீராமிடம் ரொம்ப வருத்தப்பட்டேன். ”சே, ஒரு மாதம் கழித்து குட்-பை சொல்லியிருக்கலாம்…”
“ஏன் சாரு?”
நண்பர் ஒருவரின் பொத்திக் ஹோட்டல் சத்தீஸ்கரில் இருக்கிறது. அங்கே தங்குவதென்றால் ஒரு நாள் வாடகை 15000. கடுமையான மலைப்பகுதியில் உள்ளது அது. அங்கே வந்து ஒரு வாரம் இலவசமாகத் தங்கிக் கொள்ளுங்கள்; நானும் வந்து சேர்ந்து கொள்கிறேன் என்று சொல்லியிருந்தார் நண்பர். அங்கே தான் சீனியோடு போகலாம் என்று முடிவு செய்து தேதி குறித்திருந்தோம். அதற்கிடையில்தான் இந்த குட்-பை வந்து தொலைத்தது. அதை வருத்தத்தோடு ஸ்ரீராமிடம் சொல்லிக் கொண்டிருந்த போது அவர் சொன்ன ஐடியா: அவந்திகாவை அழைத்துப் போகலாமே?
என் வாழ்நாளில் எந்தத் தருணத்திலும் அப்படி ஒரு கோபம் வந்ததில்லை. ஆனாலும் எனக்குத் தேரோட்டும் கிருஷ்ண பரமாத்மாவிடம் கோபத்தைக் காண்பிக்க முடியுமா? சிரித்துக் கொண்டே “ஒஸாமா பின் லாடனை அழைத்துக் கொண்டு ’பப்’புக்குப் போகச் சொல்கிறீர்களே, என் மீது ஏன் இந்தக் கொலை வெறி?” என்று மட்டுமே கேட்டேன். இந்த ideological warfare தவிர இன்னொரு பிரச்சினையும் இருக்கிறதே? ”பப்புவையும் ஸோரோவையும் நடுத்தெருவில் விட்டு விடுவதா ஸ்ரீராம்?” பப்புவுக்கு நடக்க முடியாது என்பதால் நாய்ப் பாதுகாப்பு மையங்களில் விட முடியாது. அதெல்லாம் இருக்கட்டும், தாலிபானும் ஹிப்பிகளும் ஒன்று கூட முடியுமா?
இதேபோல் ஸ்ரீராமுடன் மாதம் ரெண்டு தடவையாவது சம்பவம் நடக்கும். இப்போதெல்லாம் நான் வாயே திறப்பதில்லை. எல்லாவற்றையும் நாவலுக்காகக் குறித்து வைக்கிறேன். ஒருநாள் ஒரு நண்பர் கேம்ப் ரோட் மாதிரி ஏதோ ஒரு வெளிப் பிரதேசத்திலிருந்து பேசினார். சென்னை தான். ஆனாலும் எனக்கு ஏதோ வெளிநாடு போல் இருந்தது. சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள குஜராத்தி மெஸ்ஸில் சாப்பிடலாமா என்றார். அங்கே ஆம் ரஸ்ஸும் சப்பாத்தியும் பிரமாதமாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு ரெண்டுமே உயிர். பல இடங்களில் சப்பாத்தி என்று கொடுப்பதெல்லாம் வன்புணர்ச்சியில்தான் சேர்த்தி. சரி என்று சொல்லி விட்டேன். அக்னி நட்சத்திரம். நண்பர் மோட்டார் பைக்கில் வருகிறார். நண்பரும் என்னைப் போலவே ஒரு உணவுப் பிரியர். சிந்தாதிரிப்பேட்டை என்பதால் ஸ்ரீராமையும் அழைக்கலாமா அல்லது அவரிடம் சொல்லாமல் தந்திரமாகப் போய் வந்து விடலாமா என்று யோசித்தேன். ஏனென்றால், அவருடைய திருவிளையாடல்களை நான் தான் பொறுத்துக் கொள்வேன். நண்பரும் பொறுத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாதே? ஆனால் அவரை விட்டு விட்டுப் போகவும் மனம் ஒப்பவில்லை. அதிலும் அவர் சிந்தாதிரிப்பேட்டை அருகிலேயே வசிக்கிறார். அதுவும் ஒரு முக்கியமான காரணம். கடைசியில் இன்று அவருக்குப் பரீட்சை, தேறுகிறாரா பார்ப்போம் என்று அழைத்தேன். பரீட்சையில் பூஜ்யம் அல்ல, அதற்கும் கீழே மைனஸில்தான் மதிப்பெண் வாங்கினார் ஸ்ரீராம். அதெல்லாம் விபரமாக நாவலில். ஒன்றே ஒன்று மட்டும் இங்கே. என்னையும் நண்பரையும் முந்திக் கொண்டு ஸ்ரீராமே மூன்று சாப்பாட்டுக்கான டோக்கனை வாங்கினார். (இதிலேயே 25 மார்க் போய் விட்டது. என் வட்டத்தில் மாணவர்கள் எதற்கும் முந்திக் கொண்டு காசு கொடுக்கக் கூடாது. பணக்காரர்களுக்கு விதிவிலக்கு உண்டு. இரண்டு பெரியவர்களை விட்டு விட்டு ஒரு மாணவரான ஸ்ரீராம் சாப்பாட்டு டோக்கன் வாங்கியது பெரும் தவறு. அதை விடக் கொலை பாதகம் என்னவென்றால் – சொல்கிறேன். மூன்று சாதா சாப்பாட்டுக்கான டோக்கன் அது.
ஸ்ரீராம்: ஸ்பெஷல் வேண்டாம் சாரு, ஸ்பெஷலுக்கும் சாதாவுக்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது.
நான்: அப்படியா? அப்படியென்றால் இரண்டுக்கும் ஏன் வெவ்வேறு பெயரும் வெவ்வேறு விலையும்?
(இந்த விசாரணையெல்லாம் கல்லாவில் நிற்கும் போதே மற்றவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் விதமாக நடக்கிறது.)
ஸ்ரீராம்: அது ஒன்னுமில்லை சாரு. ஸ்பெஷல் சாப்பாடுன்னா ஒரு மேங்கோ ஜூஸ் எக்ஸ்ட்ராவாத் தருவான். அவ்ளோதான்.
மேங்கோ ஜூஸ் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் நண்பர் பொங்கி எழுந்து விட்டார். என்னது மேங்கோ ஜூஸா? அது பேர் ஆம் ரஸ்ங்க. அது வேற, மேங்கோ ஜூஸ் வேற. ஏனென்றால், நண்பர் ஆம் ரஸ்ஸுக்காகத்தானே கேம்ப் ரோட்டிலிருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு அக்னி நட்சத்திரத்தில் மதியம் ஒரு மணிக்கு பைக்கில் வந்திருக்கிறார்! இப்படி ஸ்ரீராம் தொடர்ந்து வீசிக் கொண்டிருந்தார் அரிவாளை. அது கிடக்கட்டும். இப்போது ஏன் ஸ்ரீராம் பேச்சு வந்தது என்றால், என்னைப் பற்றி நண்பர்கள் எழுதும் கட்டுரைகளை அவர் ஒரு நூலாகத் தொகுக்கிறார் அல்லவா? அதற்காக அராத்து ஒரு கட்டுரை எழுதி அனுப்பினார். படித்தேன். கொஞ்ச நேரத்தில் அராத்துவிடமிருந்து ஃபோன். ”கட்டுரை நல்லா இல்ல, நீங்க பொதுவா ஜாலியா எழுதுவீங்களே, அப்டி இல்ல… வேற மாத்தி எழுதி அனுப்புங்கன்னு ஸ்ரீராம் சொல்றார். என்ன செய்யட்டும்?” நான் என்ன பதில் சொன்னேன் என்று இங்கே பொதுவெளியில் சொல்ல முடியாது. கடவுளை அடியார்கள் ஏதோ கோபத்தில் திட்டுவார்கள். அதையெல்லாம் பப்ளிஷ் பண்ண முடியுமா?
ஸ்ரீராமுக்கு இந்தக் கட்டுரை பிடிக்காமல் போனதில் தப்பே இல்லை. எல்லா வித கருத்து முரண்பாடுகளுக்கும் இடம் அளிக்கும் இடம் வாசகர் வட்டம். ஆனால் தான் நினைத்ததே சரி என்று எண்ணி, என்னிடம் கூட அபிப்பிராயம் கேட்காமல், தானே முடிவெடுத்து, அதை அராத்துவிடமும் தெரிவித்து, வேறுமாதிரி மாற்றி எழுதித் தரச் சொன்னதால்தான் ஸ்ரீராமை ஆரம்பத்தில் மனித வெடிகுண்டு என்று வர்ணித்தேன். நல்லவேளை, அராத்துவாக இருந்ததால் என்னைத் தொடர்பு கொண்டு கேட்டார். வேறு சில நண்பர்களாக இருந்தால், ஐயோ, ஸ்ரீராமே சொல்லி விட்டார், அது சாருவே சொன்னதற்குச் சமம் என்று நினைத்து வேறு விதமாக எழுதியிருப்பார்கள். ஸ்ரீராம் இப்படியெல்லாம் செய்வதைப் பார்க்கும் போது, நான் சாரு நிவேதிதா எம்பிபிஸ் என்று போர்டு போட்டுக் கொண்டு மருத்துவம் செய்ய ஆரம்பிக்கலாமா என்று யோசிக்கிறேன். அவர் இலக்கியத்தில் புகுந்து அதகளம் பண்ணும் போது நான் அவருடைய துறையில் நுழைந்து ரகளை பண்ணினால் என்ன?
அராத்துவின் பிரஸ்தாபக் கட்டுரை ஒரு எழுத்தாளர் குறித்து அவரது நண்பர்கள் எழுதிய கட்டுரைகளிலேயே மிகவும் குறிப்பிடத் தகுந்தது என்று எனக்குத் தோன்றுகிறது. கட்டுரையில் சில பிரச்சினைக்குரிய விஷயங்களும் இருக்கின்றன. இருந்தாலும் இதுதான் என் கருத்து. தான் பழகிய க.நா.சு., சி.சு.செல்லப்பா பற்றி சுந்தர ராமசாமி தனித்தனியாக புத்தகமே எழுதியிருக்கிறார். தஞ்சை ப்ரகாஷின் க.நா.சு. பற்றிய புத்தகம். அந்த வரிசையில் சேர்க்கத்தக்கது அராத்துவின் கட்டுரை. அதை நாளை வெளியிடுகிறேன்.
பின்குறிப்பு: ஸ்ரீராமே ஒரு பெண்ணாக இருந்து அவரைப் பற்றி இத்தனையும் எழுதியிருந்தால் ஏதோ நான் பலாத்காரம் செய்ய முயற்சித்தது போல் ஜென்மப்பகை கொண்டு விடுவார்கள் பெண்கள். ஆனால் ஆண்களிடம் அந்தப் பிரச்சினை இல்லை.