விவேகம் – 6

அஜீத்தின் ரசிகர்கள் விவேகம் படத்தை விமர்சிப்பவர்களைக் கொலைவெறியோடு தாக்குகிறார்கள்.  இதுவரை வாழ்வில் நான் இத்தனை பெரிய எதிர்ப்பை நேரடியாக எதிர்கொண்டதில்லை.  வெளியில் செல்லவே பயமாக இருக்கிறது.  அடையாளம் கண்டு அடித்து விடுவார்களோ என்று.  ஆனாலும் விமர்சனத்தை நிறுத்த மாட்டேன்.  இந்தப் பதிவை எழுதுவதன் காரணம், என்னைப் பற்றி எனக்கே நேற்று தான் ஒரு விஷயம் தெரிந்தது.  எழுத்தில் இருக்கும் கடுமை பேச்சில் இல்லை.  இருந்திருந்தால் விவேகத்தை குப்பை என்றுதான் சொல்லியிருக்க வேண்டும்.  இறைவி பற்றிய விமர்சனத்தில் – எழுத்தில் – கையையும் காலையும் கட்டி மலக்கிடங்கில் போட்டது போல் இருந்தது” என்று சொன்னேன்.  சொன்னேன் அல்ல; எழுதினேன்.  அதையே விடியோவில் சொல்லியிருந்தால் அப்படிச் சொல்லியிருப்பேனா என்பது சந்தேகம்.  எழுத்தை விட சொல்லில் ஒரு மென்மை இருக்கிறது.

எல்லோரும் அஜித் எவ்வளவு நல்லவர் என்று பேச ஆரம்பிக்கிறார்கள்.  யோவ், சினிமா நடிகர்களிலேயே எனக்கும் அஜித்தைத்தான் ரொம்பப் பிடிக்கும். ஏனென்றால், அவரிடம்தான் பந்தா இல்லை; மனதில் பட்டதை யாருக்கும் அஞ்சாமல் பேசுகிறார்.  மற்ற சில நடிகர்களைப் போல் அரசியல் ஆசை இல்லாமல் இருக்கிறார்.  இன்னும் அஜித் பற்றிய சிறப்புகளை அஜித் ரசிகர்களை விட நான் நன்கு அறிவேன்.  ஆனால் நாம் அஜித் பற்றியா பேசிக் கொண்டிருக்கிறோம்.  விவேகம் படம் பற்றியல்லவா?

இதுவரை விவேகம் பற்றிய விமர்சனங்களிலேயே குறிப்பிடத்தகுந்ததாக செல்வகுமார் முகநூலில் எழுதியிருப்பதைச் சொல்லலாம்.  அவர் ஒன்றும் படத்தைப் பற்றிப் பெரிதாக எழுதவில்லை. ஒரே வார்த்தையில் குப்பை என்று நிராகரிக்கிறார்.  அதே சமயம், ஏன் குப்பை என்று விளக்குகிறார்.  கீழே வருவது செல்வகுமார்.

விவேகம் குறித்து சொல்ல எதுவுமே இல்லை என்றுதான் நினைத்தேன். குப்பையை பற்றி என்ன சொல்வது. இங்கே குப்பை போடாதீர்கள் என்று சொல்லலாம். வேறு?

ஆனால், படத்தின் கிளைமேக்ஸ் நெருங்க நெருங்க சீட் நுனியில் திகிலுடன் ஆர்வமாக அமரவேண்டிய ஆடியன்ஸ், விவேக் ஓபராய் பேச்சுக்கும், காஜல் அகர்வால் வசனப் பாடல்களுக்கும் ஏன் இடைவிடாமல் சிரிக்கிறார்கள்? ரசிகர்களே சிரிப்பாக சிரிக்கிறார்கள் என்பதை சொல்லவேண்டும் என்று தோன்றியது. அந்த நக்கல் சிரிப்புக்கு என்ன அர்த்தம்? மொத்த உழைப்பும், மெனகெடல்களும் தோற்று விட்டன என்றுதானே அர்த்தம்.

சினிமா எங்கே கோட்டைவிட்டது, எங்கே கோட்டை விட்டது என்று கதற வேண்டிய டைரக்டர் குறியீடாக தனக்கு பதில் விவேக் ஓபராயை கதற விட்டிருக்கிறார். பிரச்சனை இருக்கிறது என்று புரிந்து கொண்டதற்கு வாழ்த்துகள்

மாதம் நாற்பது அல்லது ஐம்பது ரூபாய் கட்டணம் கட்டினால் டாடா ஸ்கையில் இங்க்லீஷ் சினிமா சேனல்கள் தருவார்கள். அதில் அடிக்கடி மிஷன் இம்பாசிபிள் 1, 2, 3…… வரிசையாக வரும். அதில் ஏதோ ஒரு அத்தியாயத்தை உரிமை வாங்கி ரெண்டு பாட்டு, கொஞ்சம் பன்ச் வசனங்கள் சேர்த்து அழகாக தமிழில் கொடுத்திருக்கலாம். ஆனால் அந்த நேர்மை, துணிச்சல் பட குழுவினருக்கு இல்லை. தாங்களே இட்லி மாவில் பீட்சா செய்து ஏமாற்றி இருக்கிறார்கள்.

சில முக்கியமான காட்சிகள்:

1) நடுகாட்டில் மனைவிக்கு மஞ்சள் குங்குமம் பூசி வளைகாப்பு நடத்தும் சீனில் உண்மையில் அரண்டு விட்டேன். அந்த ரணகளத்திலும் கவனமாக அந்த ஊரில் மஞ்சள் குங்குமம் வாங்கி வருவது என்றால் சும்மாவா?

2) டைட்டில் சாங் அரத பழைய ஜேம்ஸ்பாண்ட் சினிமா டைட்டில் தீம். அதோடு அல்ல. ஒரு ஆங்கில பாடல் ஒலிக்கிறது. அதற்க்கு சப் டைட்டில் வேறு.

டைட்டில் சாங்குக்கு சப்டைட்டில்… செம ஐடியா…. இல்ல?

3) அந்த அயல்நாட்டில் யார் குழந்தைகளுக்கு பரதம் கற்பிக்கிறார்கள்? இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கில். அல்லது அந்த இடம் 2030 இல் இந்தியாவா? எனக்குதான் பூகோளம் தெரியலையா?

4) கிளைமாக்ஸ் நெருங்குகையில் ஒரு கையால் வில்லனை அடித்துக் கொண்டே இன்னொரு கையால் பிரசவம் பார்க்க போகிறார் என்று பயந்து கொண்டே இருந்தேன். நல்லவேளை. டைரக்டருக்கு நன்றி.

5) உலகமே என் எதிரில் நின்னு சொன்னாலும், நானாக ஒத்துக் கொள்ளும் வரை நான் தோத்துட்டதா நினைக்க மாட்டேன் என்று அஜீத் பிடிவாதம் பிடிக்கிறார். எப்படியோ ஒழிங்க. எவன் உங்களுக்கு நல்லது சொல்றது?

Conclusion:
செலவு அதிகம் என்பது வெளிப்படையாக தெரிகிறது. அதில் கொஞ்சம் மிச்சம் பிடித்திருந்தால் உள்ளே வருபவர்களுக்கு பஞ்சு வாங்கி கொடுத்திருக்கலாம். அவ்வளவு சத்தம்.

***

என் (சாரு) பின்குறிப்பு :

எனக்குப் படத்தில் பிடித்த ஒன்றே ஒன்று, அந்த சத்தம்.  அது சத்தம் அல்ல.  மெட்டல் மியூசிக். என் விமர்சனத்திலேயே குறிப்பிட்டிருந்தேன்.  தனிப்பட்ட முறையில் எனக்கு மெட்டல் மியூசிக் பிடிக்கும் என்று.  அனிருத்துக்கும் எனக்கும் இசையில் ஒத்த ரசனை உள்ளது.  உதாரணம்: அவர் செல்லும் பப்கள் தான் எனக்கும் பிடித்தவை.  அவை மெட்டல் மியூசிக்குக்குப் பிரபலம் ஆனவை.