விவேகம் – விட மாட்டேங்குது இன்னும்…

பின்வரும் கருத்து கருந்தேள் ராஜேஷ் முகநூலில் சொல்லியிருப்பது. படியுங்கள். இது பற்றி என் கருத்தை கீழே சொல்லியிருக்கிறேன்.

சினிமா ஒண்ணு வந்தப்புறம், அதைப்பத்தி உடனடியா பேசி வீடியோ ரிலீஸ் பண்ணுறது விமர்சனம் இல்லை. அது சினிமா பத்திய கருத்து. அவ்வளவுதான். வீடியோவில் விமர்சனம் செய்வதை ஓரளவுக்காவது நல்லா செஞ்சது மதன் மட்டுமே என்பது என் தாழ்மையான, கீழ்மையான கருத்து. வீடியோவில் அப்படி அடிச்சிப் புடிச்சி விமர்சிப்பவர்கள் மொதல்ல ஒரு நல்ல film appreciation கோர்ஸ் படிச்சிட்டு வரலாம். சினிமா பத்தியே தெரியாம எப்படி ஒரு படத்தைப் பத்திப் பேச முடியும்னு தெரியல. I am genuinely concerned. ஏன்னா அவங்க சினிமாவின் பல துறைகள் பத்திப் பேசும்போது, அவங்களுக்கு எதுவுமே தெரியாது என்பது புரிஞ்சிடுது…
உலகிலேயே சினிமா & அரசியல் பத்திப் பேசுவதுதான் ரொம்பவும் சுலபம். எதுவுமே தெரியாம அடிச்சிவிட முடியும்.. அதுனாலதான் ஆன்லைன் வீடியோ ‘விமர்சகர்கள்’ கலாய்க்கப்படுறாங்க. மதனை யாராச்சும் கலாய்ச்சிப் பார்த்திருக்கீங்களா? மதனுக்கு சினிமா தெரியும். அதுதான் வித்தியாசம்.
ஆன்லைன்ல சினிமா பத்திப் பேசுறவங்ககிட்ட ஒரு basic understanding மிஸ் ஆவுது.. வேணும்னே ஒரு படத்தைப் கலாய்த்து, திட்டி இஷ்டத்துக்குப் பேசும் trend அதிகரிச்சிட்டு வருது. அது அவங்களுக்குத்தான் ஆபத்தா முடியும்.

மேற்கண்ட கருத்து ராஜேஷ் எழுதினது. மேலோட்டமாகப் பார்த்தால் அருமையான கருத்தாகத் தோன்றும். சரியாகத்தானே சொல்லியிருக்கிறார் என்று தோன்றும். ஆனால் அன்பானவன், என்னமோ ஆனவன், என்னென்னமோ ஆனவன், வேலையில்லா பட்டதாரி – 2 போன்ற குப்பைகளைப் பிரித்து மேய நீலச்சட்டை, பச்சை சட்டை, மஞ்சள் சட்டை எல்லாம் போதும். இந்தக் குப்பைகளை ஆய்வு செய்ய எந்தப் பயிற்சி ————-ம் தேவையில்லை. ஆனால் இதே நீலச்சட்டை தரமணி படத்தைப் பற்றி எப்படி சொதப்பினார் பாருங்கள். வித்தியாசமான படம் வித்தியாசமான படம் என்றே பத்து முறை சொல்லி, ரெண்டரை நிமிடத்தில் மதிப்புரையை முடித்து விட்டார். அவ்ளோதான் ராஜேஷ். குப்பைகளுக்கு குப்பை மதிப்புரைதான் வரும். தரமணி போன்ற நல்ல படங்களுக்கு உயிர்மையில் மதிப்புரை வரும். அது போதும். நீங்கள் இப்படி அங்கலாய்த்து எழுதுவது சினிமாவில் குப்பை போடுபவர்களுக்கு மட்டுமே உதவும். ஏனென்றால், மதிப்பீடு செய்யாதே, கொன்ருவேன் என்று அரிவாளைக் காண்பிக்கும் வன்முறையாளர்களும், சினிமாவை விமர்சிக்க நீ யார் என்று கேட்கும் இயக்குனர்களும் நீங்கள் சொல்வதைத்தான் இன்னும் கொஞ்சம் வன்முறையாகச் சொல்கிறார்கள்.

உயிர்மையில் பத்து ஆண்டுகள் சினிமா விமர்சனம் எழுதினேனே. யார் படித்தார்கள்? உங்களைப் போன்றவர்கள்தானே படித்தார்கள்? இந்த மாஸ் சினிமா என்பது எதுவுமே தெரியாத பாமரர்களுக்கானது. அதைப் பாமரத்தனமாக விமர்சிப்பதில் எந்தத் தவறும் இல்லை. செய்யாதே என்று சொல்வதும் தகுதியை ஏற்றிக் கொண்டு வா என்று அறிவுரை சொல்வதும் அதிகாரத் தடியடி.