காலவழுவமைதி

உயிர்மை புத்தக வெளியீடு மதுரையில் மூன்றாம் தேதி, நான்காம் தேதி செப்டம்பர் என்று சொன்னார் செல்வி.  மனுஷ்ய புத்திரனின் தொகுப்பு பற்றி நான் பேசுகிறேன்.  ஆனால் மூன்றாம் தேதி வியாழக்கிழமை.  ஏன் இவர்கள் வியாழக்கிழமை வைத்திருக்கிறார்கள்?  கேட்க நினைத்தேன்.  அப்புறம் கேட்கவில்லை.  அது அவர்கள் விருப்பம்.  அதை ஏன் நாம் கேட்க வேண்டும்?  ஆனால் வெள்ளிக்கிழமை இங்கே சென்னையில் ஃபில்ம் ரெவ்யூ பண்ண வேண்டும் என்பதால் வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்கு இங்கே இருக்க வேண்டும்.  அதனால் மதுரையிலிருந்து சென்னைக்கு நண்பரை அதிகாலை விமானத்துக்கு டிக்கட் எடுக்கச் சொன்னேன்.  வெள்ளிக்கிழமை டிக்கட் எடுத்தாயிற்று.  பத்து மணிக்குள் வந்து விடலாம்.  அப்புறமாகத்தான் தெரிந்தது, நான் மாத கேலண்டர் தாளைக் கிழிக்கவில்லை என்பதும் அந்த மூணு நாலு தேதிகள் ஆகஸ்ட் மாதத்தவை என்பதும்.  அடச் சே.  செப்டம்பரில் மூணும் நாலும் சனி ஞாயிறு.  அடடா, ஞாயிற்றுக் கிழமை மதியம் குமார் மெஸ்ஸில் சாப்பிட்டு விட்டு மாலை விமானத்தைப் பிடித்து வந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.  இனிமேல் மாதம் தேதி எல்லாம் பார்க்க வேண்டும்.

இப்போது செப்டம்பரில் மூணாம் தேதி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும்.  மூணாம் தேதியோ சனிக்கிழமை.  சனிக்கிழமையோ மதுரையில் புத்தக வெளியீட்டு விழா.  ஒரு நண்பரை அழைத்து ஆலோசனை கேட்டேன்.  இல்லைங்க, செப்டம்பர் மூணாம்தேதி ஞாயிற்றுக் கிழமை.  உயிர்மை விழா சனிக்கிழமை இல்லை; ஞாயிற்றுக்கிழமைதான் என்றார் நண்பர்.

உடனே சனிக்கிழமை – ரெண்டு, செப்டம்பர் – சதாப்தியில் பெங்களூருக்கு டிக்கட் எடுத்தேன்.  ஞாயிறு காலை – மூணு செப்டம்பர் – பெங்களூரிலிருந்து மதுரைக்கு விமானத்தில் டிக்கட் எடுத்தேன்.  காலை ஒன்பது மணிக்கு பெங்களூரில் கிளம்பும் விமானம் சென்னை வந்து சேர்கிறது.  அங்கே ரெண்டு மணி நேரம் காத்திருந்து வேறொரு விமானத்தில் மதுரைக்குப் போக வேண்டும்.  மதியம் ஒரு மணிக்கு மதுரை.  இன்னொரு நேர் விமானம் பெங்களூரிலிருந்து மதுரைக்கு இருந்தது.  ஒரு மணிக்குக் கிளம்பி ரெண்டு மணிக்கு மதுரை.  ம்க்கும்.  அதை நம்பி அதில் டிக்கட் எடுக்க முடியாது.  அந்த விமானம் மூன்று மணி நேரம் தாமதம், சிரமத்துக்கு வருந்துகிறோம் என்று அறிவித்து விட்டால் என்ன செய்வது?  அதனால் காலை விமானத்திலேயே டிக்கட் போடச் சொன்னேன் நண்பரை.  (எனக்கு டிக்கட் போடத் தெரியாது.)  டிக்கட் விலை 8000 ரூபாய் ஆச்சே என்றார் நண்பர்.  பன்னண்டாயிரமா இருந்தாலும் சரி, என் நண்பனின் புத்தக வெளியீட்டு விழா, போயே ஆக வேண்டும் என்று சொல்லி விட்டேன்.

இந்தக் கதையை விபரமாக என் இன்னொரு நண்பரிடம் சொன்னேன்.  ஒன்னுமே புரிலியே என்றார்.  விவேகம் பாருங்கள்.  எல்லாவற்றுக்கும் ஒரு தீர்வு இருக்கிறது என்று சொல்லி விட்டுக் கிளம்பினேன்.

பின் குறிப்பு:  விமான நிலையத்தில் இந்த ரெண்டு மூணு தேதிகள் அக்டோபருக்கானவை என்று சொல்லி என்னைத் திருப்பி விடக் கூடாது.  அம்மாதிரி பலமுறை திரும்பி வந்திருக்கிறேன்!