மதன்

பிரபல கேலிச் சித்திரக்காரர், பத்திரிகையாளர் மதனுடன் எனக்கு ஏழெட்டு ஆண்டுகளாக நெருங்கிய நட்பு உண்டு.  அவர் அளவுக்குப் படித்த ஒரு மனிதரை நான் என் வாழ்வில் இதுவரை சந்தித்ததில்லை.  அது வெறும் படிப்பு மட்டும் அல்ல; ஆழ்ந்த வாசிப்பு.  அந்த அனுபவத்தை அவர் பேசும் போது கேட்டால் நாள் பூராவும் கேட்டுக் கொண்டிருக்கலாம்.  பல சமயங்களில் இவர் ஒரு ஜீனியஸ் என்ற நினைப்புடனேயே அவர் வீட்டிலிருந்து வெளியே வருவேன்.  ஆனால் – இதை நான் அவரிடம் நேரிலேயே பலமுறை சொல்லியிருக்கிறேன் – அவர் வாசித்த அளவுக்கு அந்த ஞானத்தை நமக்குத் தரவில்லை.  ஐந்து சதவிகிதம் கூட தரவில்லை.  அவர் தந்தது ஒரு சதவிகிதம் இருக்கலாம்.  அதற்கு அவரைப் பயன்படுத்திக் கொள்ளாத ஊடகங்களும் காரணமாக இருக்கலாம்.  இந்த சமூகத்துக்கு இதுவே அதிகம் என்று அவர் கருதியும் இருக்கலாம்.

அவரால் தமிழ் அளவுக்கு ஆங்கிலத்திலும் எழுத முடியும்.  ஆனால் என்னவோ அவர் தமிழில் மட்டுமே எழுதுகிறார்.  ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் அவர் பெயர் இன்று Roger Ebert அளவுக்கு சர்வதேச அளவில் தெரிந்திருக்கும்.  ஆனால் தமிழ்ச் சூழலில் அவரால் சினிமா விமர்சனங்கள் செய்ய முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.  ஏனென்றால், அவர் நல்லவர்; மென்மையானவர்; யாரையும் புண்படுத்தக் கூடாது என்று நினைப்பவர்.  எனவே அவர் கையில் மயிலிறகுதான் இருக்கும்.  தமிழில் 90 சதவிகிதம் குப்பைப் படங்கள்தான் வருகின்றன.  அப்படிப்பட்ட சூழலில் மதன் போன்ற ஒரு நல்ல மனம் கொண்டவரால் எப்படிக் காட்டடியாகச் சொல்ல முடியும்?  விக்ரம் நடித்து, ஷங்கர் இயக்கிய ஐ என்ற மூன்றந்தரக் குப்பையை மதன் பார்த்து என்ன விமர்சனம் செய்ய முடியும்?  அதில் திருநங்கைகளை எந்த அளவுக்கு மலினப்படுத்தியிருக்கிறார்கள் தெரியுமா?  குப்பை என்று சொன்னது அதனால் அல்ல.  கடைசிக் காட்சியில் ஒவ்வொரு வில்லனாகப் பழி வாங்கி விட்டு வசனம் பேசுவார், அட அடா…

முகநூலில் நண்பர் ராஜேஷ்,மதனின் திரை விமர்சனம் ஆகச் சிறந்தது என்று எழுதியிருந்தார்.  சச்சினைப் பாராட்டுவதாக  இருந்தால் அவருடைய கிரிக்கெட்டைப் பற்றி எழுதுங்கள்.  ஆகா, சச்சின்ஆகச் சிறந்த  ஒரு parliamentarian என்று எழுதாதீர்கள்.  அது சச்சினைப் பாராட்டுவதாகாது.