தி இந்து வெளியான முதல் நாளிலிருந்து அதன் வாசகனாக, அதைப் பலரிடமும் சிபாரிசு செய்பவனாக இருந்து வருகிறேன். காரணம், தமிழ்ச் சமூகம் அறியாத, அறிய விரும்பாத தமிழ் எழுத்தாளர்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தும் பணியை மிகச் சிறப்பாக செய்து வருகிறது தி இந்து என்பதால். மேலும் அதில் வரும் நடுப்பக்கக் கட்டுரைகள் சர்வதேசத் தரத்தில் உள்ளன. இந்த நிலையில் என்னுடைய விவேகம் விமர்சனம் தொடர்பாக எனக்குக் கொலை மிரட்டலும் மற்ற பல வசைகளும் வந்ததால், அதுவும் அந்த நபர்கள் வெளிப்படையாகவே அதைச் செய்ததால் அது சினிமா விமர்சனம் என்பதை மீறி கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தைப் பிடிப்பது என்று ஆகி விடுகிறது. இது குறித்து, தமிழ் சினிமாவில் ஜெண்டில்மன் என்று கருதப்படும் அஜித்துக்கு நான் எழுதியிருந்த கடிதத்தை தி இந்துவில் வெளியிட முடியுமா என்று சமஸ் அவர்களிடம் கேட்டிருந்தேன். ஆனால் சினிமா குறித்து இந்துவில் வருவதில்லை என்றார் சமஸ். எனக்கு அது ஒப்புக் கொள்ளக் கூடியதாக இல்லை. ஏனென்றால், பகிரங்கமாகக் கொலை மிரட்டலும் வசையும் வருகிறது. போய் போலீஸில் புகார் செய்தால் பிரச்சினை முடிந்து விடாது. இது கருத்துச் சுதந்திரம் பற்றிய பிரச்சினை. இருந்தாலும் சமஸ் சொன்னதைக் கேட்டுக் கொண்டேன். ஏனென்றால், என் கருத்து எனக்கு எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம், பத்திரிகை பற்றிய ஆசிரியர் குழுவின் கருத்தும்.
ஆனால் இப்போது என்னுடைய விவேகம் விமர்சனத்தை விமர்சித்து, எனக்கு புத்திமதி சொல்லி யாரோ ஒருத்தர் தி இந்துவில் எழுதியிருக்கிறார். அதாவது, எஸ்.ரா. மாதிரி, ஜெயமோகன் மாதிரி நான் அடக்கி வாசிக்க வேண்டுமாம். எப்படி இருக்கிறது கதை? அவர்கள் இருவரும் சினிமாவுக்கு உள்ளே இருக்கிறார்கள். அவர்கள் தமிழ் சினிமாவைத் தீவிரமாக விமர்சிக்க முடியாது. அதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் நானும் ஏன் அப்படி இருக்க வேண்டும்? ஏன், ஜெயமோகன் மற்ற விஷயங்களை மயிலிறகாலா எழுதுகிறார்? அவர் விமர்சனத்தைப் படித்தால் பலகீன இதயம் படைத்தவர்களுக்கு நெஞ்சு வலி வந்து விடுமே, அத்தனை நெருப்பாக அல்லவா எழுதுகிறார்?
எஸ்.ரா., ஜெயமோகன் போல் நாகரீகமாக சினிமா விமர்சனம் செய்ய வேண்டும் என்று எனக்கு தி இந்துவில் புத்திமதி சொல்லும் நபருக்கு நான் ஒன்று சொல்கிறேன். விஸ்வரூபம் வந்த அன்று ஜெயமோகன் அதற்கு ஒரு மதிப்புரை எழுதியிருந்தார். குட்டியாக. அதில், அந்தப் படம் இஸ்லாமியர் அனைவரையும் தீவிரவாதிகளாகக் காட்டுகிறது என்பது போல் சில வாசகங்கள் இருந்தன. (எனக்கும் அந்தப் படம் அப்படித்தான் இருந்தது.) ஆனால் சில மணி நேரங்களிலேயே அந்த மதிப்புரை ஜெயமோகனின் ப்ளாகிலிருந்து நீக்கப்பட்டது. புரிகிறது. கமல் ஜெயமோகனுக்கு நண்பர். கமலின் நண்பர்கள் அதை நீக்கச் சொல்லியிருக்கலாம்.
எனக்கு அறிவுரை சொல்லும் நபர் எனக்குக் கொலை மிரட்டல் விட்டவர்களை நியாயப்படுத்துகிறார். இதை எந்த நீதிமன்றத்தில் சொல்வது என்று தெரியவில்லை. ஒருத்தர் விமர்சனம் செய்கிறார். உடனே ரசிகக் கூட்டம் விமர்சகருக்குக் கொலை மிரட்டல் விடுக்கிறது. அதற்கு தி இந்து விமர்சகர் எழுதுகிறார்.
“ திரைத்துறையில் நேரடியாக ஈடுபட்டுவரும் எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்ற, சாருநிவேதிதாவை ஒத்த பிற எழுத்தாளர்கள் திரைத்துறையினருக்கு விமர்சனச் சிக்கல்களை உருவாக்காமல் நாகரிகம் பேணிவரும் நிலையில், சாருநிவேதிதாவின் இந்த வெளிப்படையான விமர்சனத் தாக்குதல் திரைத்துறையினரை நிலைகுலையச் செய்திருக்கிறது. அதனால்தான் அவருக்குக் கொலை மிரட்டல்விடும் அளவுக்கு நிலைமை கைமீறிப் போயிருக்கிறது. “
எஸ்.ரா. ஜெயமோகன் இருவரும் நாகரீகம் பேணி வருகிறார்களாம். நான் திரைத்துறையினரை நிலைகுலையச் செய்து விட்டேனாம். சரி, இனிமேல் நான் திரை விமர்சனம் செய்யவில்லை. ஆனால் தி இந்து தமிழ்நாட்டு முதலமைச்சரை விமர்சனம் செய்யக் கூடாது; மோடியை விமர்சனம் செய்யக் கூடாது. மாட்டுக் கறித் தின்பவர்களை அல்லது மாட்டை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்பவர்களைக் கொலை செய்பவர்களை விமர்சனம் செய்யக் கூடாது. எந்தப் புத்தகத்தையும் யாரும் விமர்சனம் செய்யக் கூடாது. எல்லோரும் எல்லோரையும் திட்டாமல் நாகரீகம் பேண வேண்டும். ஓட்டலில் ஊசிப்போன பண்டத்தைக் கொடுத்தால் கூட திட்டாமல் சப்புக் கொட்டி சாப்பிட்டு வர வேண்டும் அதுதான் நாகரீகம்.
ம்… எழுத்தாளர்களைக் கொண்டாடும் ஒரு தினசரியிலேயே இப்படிப்பட்ட கட்டுரைகள் வருகின்றன. தேசம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை. சரி, மெர்சல் வெளிவந்தால் ஹாலிவுட்காரன் தோத்தான் என்றுதான் சொல்லப் போகிறேன். என் உயிரை இந்த ரசிகக் குஞ்சுகளிடம் இழக்க முடியுமா?
http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19594595.ece