படித்ததில் பிடித்தது

முகநூலில் லுலு தேவ ஜம்லா எழுதியது:

மௌன நினைவுகள்*

ஆஃபீஸ் முடித்து காரில் வந்தமர்ந்த நான் சட்டென மெசெஞ்சர் ஓப்பன் செய்து அவனுடைய இன்பாக்ஸில் சென்று “உம்மா” என்றேன். சிரிக்கும் ஸ்மைலி அனுப்பினான். “நா தந்தத திருப்பி தா டா தடியா” என்றேன். மீண்டும் 3 சிரிக்கும் ஸ்மைலிகள் வந்தன பதிலாய். வீடியோ கால் பட்டனை அழுத்திவிட்டு காத்திருந்தேன். அட்டெண்ட் செய்யாமல், “என்னது வீடியோகாலிங்லாம் பண்ணுற? ஓடிரு ராஸ்கல்” என்றான். “உன்னைய பாக்கணும்னு தோணுதுடா” என்றேன். “சரி வா” என்று விட்டு வீடியோ அழைப்பில் வந்தான். வெறும் ஒரு முண்டா பனியன் போட்டு தலையெல்லாம் கலைந்து கட்டிலில் படுத்தவாறே கேமரா பார்த்து நேராய் சிரித்தான்.

“எப்டியிருக்க டா தடியா?”

“நல்லாயிருக்கேன், நீ பேபி?”

“ம்ம்ம் நல்லாயிருக்கேன் டா”

“ஆனா உன் கண்ணும் குரலும் அப்டி சொல்லலையே பேபி, என்னாச்சு, நேத்திக்கு நைட் சரியா தூங்கலையா?”

“ம்ம்ம்”

“என்ன ம்ம்ம்? வாய தொறந்து சொல்லு. என்ன ஆச்சு?”

“ஒண்ணுமில்ல டா. அம்முவுக்கு உடம்பு சரியில்ல. அதான் மனசுக்கு கஷ்டமாயிருக்கு”

“ஐயோ என்னாச்சு பேபி. நல்லாத்தானே இருந்தா? திடீர்னு என்ன? காய்ச்சல் எதாவதா?”

“இல்ல டா. இது வேற”

“வேறன்னா? புரியும் படியா சொல்லு.”

“அவ ஸ்கூலுக்கு போகமாட்டேன்னு ரெண்டு வாரமா வீட்டுக்குள்ளயே இருக்கா” என்ற என் கண்கள் நிரம்பியதை தடுக்க முடியாமல் திணறினேன். கேமராவை விட்டு முகத்தை திருப்பிக்கொண்டு சமாளிக்க முயன்று தோற்றேன். கன்னம் நனைந்து விசும்பல் ஒலி என்னையும் மீறி வந்து விட்டது. அம்முவுக்கு 13 வயசு.

“ஐயோ என்னாச்சு பேபிம்மா. அழுறியா? இவ்வளவு ஸ்ட்ராங் லேடி நீயே இப்டி உடைஞ்சு போனீன்னா அப்ப நாங்க எல்லாம் எங்க போயி முட்டிக்கிறது? அம்மு ஏன் ஸ்கூலுக்கு போக மாட்டிக்கிறா?”

“நான் முன்ன இருந்தேனில்ல டா மனசு சரியில்லாம, அதே மாதிரி இப்ப அவ இருக்கா. நத்தை கூட்டுக்குள்ள சுருக்கிகிட்ட மாதிரி தன்னையே சுருக்கிகிட்டா. ரூமைவிட்டே வெளிய வர மாட்டிக்கிறா. அப்டியே விட்டத்தை வெறிச்சு பார்த்திட்டு முடங்கி போயி இருக்கா. போன வெள்ளிக்கிழமை ரொம்ப கட்டாயப்படுத்தி சைக்கியாட்டிரிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போயிட்டேன். ஆனா அங்க கூட அவ மனச தொறந்து எதுவும் பேசல. அப்டியே இறுகி போயி உக்காந்து இருந்தா டா. எனக்கு மனச பிசையுது.”

“திடீர்னு ஏன் இப்டி ஆச்சு? ஏதாவது கேட்டியா அவகிட்ட?”

“ம்ம்ம் கேட்டேன். முதல்ல ஒண்ணுமில்ல மம்மின்னு சொல்லி ஒதுக்கினவ கடைசியில நீங்களும் டாடியும் சண்டை போட்டுக்கிறதால தான் அப்டீன்னு சொல்லிட்டு மறுபடியும் பேச மறுத்திட்டா. எவ்வளவு கேட்டும் பேச மாட்டேன்னு ரூம்ல போயி கதவ சாத்திகிட்டா”

“இத நீ டாக்டர் கிட்ட சொன்னியா?”

“சொன்னேன். அவரு சரி பார்ப்போம் கவுன்சலிங் பண்ணுவோம் சரியாயிரும்னு சொல்லி அனுப்பியிருக்காரு. நாளைக்கு மறுபடியும் கூட்டிட்டு போணும்”

“மறுபடியும் உங்க ரெண்டு பேருக்குள்ள பிரச்சனையா பேபி? ரிச்சர்ட் எதாவது சொன்னாரா?”

“ஹ்ம்ம் என்னைக்கு தான் பிரச்சனையில்லாம இருந்திருக்கு இந்த நாலு வருஷமா சொல்லு”

“சரி நீ அவர உக்கார வச்சு பேசி சரிபண்ணு. என்ன பிரச்சனைன்னாலும் பிள்ளைகள் முன்ன சண்டை போடக்கூடாதுங்கிற விஷயத்த ஸ்ட்ராங்கா சொல்லி புரிய வை. வேற என்ன பண்ண முடியும் நம்மால சொல்லு”

“ரொம்ப பேச டிரை பண்ணிட்டேன் டா. அம்மு, அக்‌ஷா முன்ன வச்சு ரொம்ப ஹர்ட் பண்ணுற மாதிரி சத்தம் போடுறாரு. என்கிட்ட சரியா மூஞ்சி குடுத்து பேசவே மாட்டிக்கிறாரு. ரூம் கதவ வேற எப்பயும் பூட்டியே வச்சுக்கிறாரு. ஸோ என்னால எதுவுமே செய்ய முடியல”

“அப்ப அடுத்த தடவை அம்முவை சைக்கியாட்டிரிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போறப்போ அவரையும் எப்டியாவது கூட்டிட்டு போயி பேச வை. சரி பண்ணிரலாம் விடு”

“ம்ம்ம் ஓக்கேடா. சரி அத விடு, உன் விஷயம் என்னாச்சு? ஏதாவது முன்னேற்றம் தெரியுதா?”

“எங்க, அப்டியே தான் இருக்கு. லட்சக்கணக்குல செலவு பண்ணி கடனாளியானது தான் மிச்சம். அவ அப்டியே தான் இருக்கா”

அவனோட வைஃப் ஒரு நெடுநாள் மனநோயாளி. நான் நாலு வர்ஷத்துக்கு முன்ன எப்டி இருந்தேனோ அதே நிலைமையில அவ இருக்கா இப்ப.

“உன் நிலைமையை கம்பேர் பண்ணினா என் பிரச்சனை ஒண்ணுமே இல்லன்னு தோணுது டா தடியா. உன்னால எப்டிடா எல்லாத்தையும் உள்ளுக்குள்ள மறைச்சுகிட்டு இப்டி ஜாலியா எழுத முடியுது?”

“தெர்ல பேபி. ஏதோ ஒரு சக்தி என்னை உந்தி தள்ளிகிட்டு போகுதுன்னு நினைக்கிறேன். போறவரைக்கும் போட்டும். உன் கூட்டை விட்டு நீ வெளிய வந்த மாதிரி அவளும் வந்திருவான்னு நம்புறேன். பாக்கலாம்”

“வந்திருவா டா. அம்முவும் சரியாயிருவா. எல்லாரும் மறுபடியும் பழைய மாதிரியே துள்ளி குதிக்க தொடங்கிருவோம் டா. நீ பார்த்துகிட்டே இரு”

“அவ்வளவு தான் பேபி. நம்பிக்கை தானே வாழ்க்கை. லவ் யூ உம்மா”

“ம்க்கும். நீயும் உன் உம்மாவும். கொண்டோயி வேற எவளுக்காச்சும் குடு”

“ஏண்டி கோச்சுக்கிற? நான் அங்க வரவா?”

“வந்து?”

“வந்தா என்ன பண்ணுவேன்னு உனக்கு தெரியாது?”

“ஹிஹி வேணாம். சொல்லாத. எனக்கு வெக்கம் வருது”

“ஹாஹாஹா. சரி சரி நான் தந்தத திருப்பி குடுத்திட்டு சீக்கிரம் வீடு போயி சேரு”

“ம்ம்ம் ஓகே டா உம்மா. பை டேக் கெயர்”

சொல்லிவிட்டு கால் கட் செய்து, காரை கிளப்பி வீடு நோக்கி வரத்துவங்கினேன். மனதிற்குள் நேற்றிரவு வீட்டில் நடந்த சண்டையின் போது ரிச்சு சொன்ன வார்த்தைகள் ரீங்கரிக்க, கண்ணீர் தாரை தாரையாய் வழிந்து கன்னங்கள் நனைத்துக் கொண்டே இருந்தது வீடு எட்டும்வரை.

“நீ என்னை வீட்டை விட்டு விரட்டி விட்டுட்டு வேற எவனையாவது கட்டிகிட்டு இருக்கலாம்னு ப்ளான் பண்ணிட்ட. அதானே இப்டி என்னை டார்ச்சர் பண்ணுற! அம்மு, அக்‌ஷா ரெண்டுபேரும் கேட்டுக்கங்க. உங்க மம்மி ஒரு வேஷக்காரி. நான் சொல்லுறது நடக்கத்தான் போகுது. உங்க ரெண்டுபேருக்கும் கூட நடுத்தெரு தான், பார்த்துக்கங்க!”

இருபது வருஷங்களுக்கு முன் என் வீட்டை எதிர்த்து வெளியேறி கைபிடித்த காதலன் ரிச்சுவுக்கும் இப்போது அம்முவின் மனக்குழப்பத்துக்கு காரணமாகி நிற்கும் கணவன் ரிச்சுவுக்குமிடையே தான் எவ்வளவு வித்தியாசம் என்ற எண்ணம் மனதை அரிக்கத்துவங்க, பெருமூச்சு விட்டபடி காரை விட்டிறங்கி லிஃப்ட்டுக்குள் நுழைந்தேன். மறக்காமல் டிஷ்யூ எடுத்து முகத்தை அழுந்தி துடைத்துக் கொண்டேன். 24வது தளத்தை அழுத்திவிட்டு மனதிற்குள் அசை போடத்துவங்கினேன்… 4 வருடங்களுக்கு முன் வரை என் வாழ்க்கை எவ்வளவு கொண்டாட்டமாய் இருந்தது….

நினைவுகள் இன்னும் மலரலாம்… மலராமல் மௌனமாகவும் போகலாம்….