யாருக்காக எழுதுகிறேன்?

விவேகம் படத்தை காணொளியில் விமர்சனம் செய்த போது என் பெயரையே கேள்விப்பட்டிராத ஆயிரக் கணக்கான அஜித் ரசிகர்கள் என்னென்ன விதமாகவோ எதிர்வினை செய்தார்கள்.  அவர்கள் அனைவரின் பொதுவான கேள்வி, யார் இவன் என்பது.  அதைப் பற்றி நான் அக்கறை கொள்ளவில்லை.  வந்து விழுந்த வசைகள் என் மனதுக்குள்ளேயே செல்லவில்லை.

ஆனால் நேற்று ஸ்ரீராமுடன் சவேரா ப்ரூ ரூமில் நான் இதுவரை எழுதிய சினிமா கட்டுரைகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது மனதுக்குள் ஒரு ஆழ்ந்த துயரம் ஏற்பட்டது.  இதையெல்லாம் யாருக்காக எழுதுகிறோம்?  Jodorowsky பற்றி நாம் பேசவில்லை என்று யார் அழுதார்?  ஹொடரோவ்ஸ்கியின் பெயர் கூட உலக சினிமா பற்றிய கட்டுரைகளில், விவாதங்களில் இடம் பெறுவதில்லை.  தமிழ்நாட்டிலேயே ஹொடரோவ்ஸ்கி பற்றித் தெரிந்தவர்கள் எனக்குத் தெரிந்து இன்னும் இரண்டு பேர் இருக்கிறார்கள்.  டிசம்பர் 2005 உயிர்மை இதழில் ஹொடரோவ்ஸ்கி பற்றிய என் விரிவான கட்டுரை வெளிவந்தது.  பின்னர் அது அலைந்து திரிபவனின் அழகியல் என்ற நூலில் தொகுக்கப்பட்டது.  இந்த நூலைப் படித்த ஒரே ஒரு நபரைக் கூட இன்னும் நான் கண்டதில்லை.  எந்த அளவுக்கு உலக சினிமாவில் மூழ்கியிருந்தால் ஹொடரோவ்ஸ்கி என்ற கலைஞன் என் கண்களில் தென்பட்டிருப்பான்.  ரோஜர் எபர்ட்டைத் தவிர ஹொடரோவ்ஸ்கி பற்றி உலக அளவிலேயே யாரும் பேசியதில்லை.

ஹொடரோவ்ஸ்கியாவது பரவாயில்லை.  பொலிவிய இயக்குனர் Jorge Sanjines பற்றி உலகின் முக்கிய படங்களை ஒன்று விடாமல் எழுதும் ரோஜர் எபர்ட் கூட எழுதவில்லை.  நான் 1980-இல் எழுதினேன்.  அதற்குப் பிறகும் அவர் பற்றித் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.

ப்ரஸீலிய இயக்குனர் க்ளாபர் ரோச்சா (Glauber Rocha) பற்றியும் யாரும் எழுதியதில்லை.  இதுவரை சினிமா என்றால் நம் மனதில் என்னென்னவெல்லாம் பதிவாகியிருக்கிறதோ அது அத்தனையும் ரோச்சாவின் சினிமாவைப் பார்த்தால் மாறி விடும்.  உலகின் அத்தனை சினிமா இயக்குனர்களும் வேறு, ரோச்சா வேறு.  இதையெல்லாம் பேசா மொழி என்ற இணைய இதழில் எழுதினேன்.  என் எழுத்தின் மீது மிகுந்த மரியாதை கொண்ட, என்னை உயர்ந்த ஒரு pedestal-இல் வைத்திருக்கும் ஒரு நண்பரிடம் இதையெல்லாம் படித்திருக்கிறீர்களா என்று கேட்டேன்.  குறைந்த பட்சம், க்ளாபர் ரோச்சா பற்றிய கட்டுரை?  இல்லை என்று பதில் வந்தது.  நானோ வேறு இதழ்களில் வெளிவரும் கட்டுரைகளை சாரு ஆன்லைனில் பதிவேற்றும் வழக்கம் இல்லாதவன்.  இணைப்பு மட்டும் கொடுப்பதோடு சரி.

சினிமா பற்றிய என் கட்டுரைகள் மிகவும் வித்தியாசமானவை.  ஆரண்ய காண்டத்தின் ஒளிப்பதிவு renaissance ஓவியம் போல் இருப்பதாக எழுதினேன்.  இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரின் திட்டமும் அதுவாகத்தான் இருந்துள்ளது.   இன்செப்ஷனில் போர்ஹேஸின் தாக்கம் இருக்கிறது என்று எழுதினேன்.  படம் வெளிவந்து பல தினங்கள் சென்று பேட்டி ஒன்றில், தான் ஒரு தீவிரமான போர்ஹேஸ் வாசகன் என்று சொல்லியிருந்தார் நோலன்.  அது மட்டும் அல்ல; இன்செப்ஷன் படத்துக்கு என்னென்ன பிரிவுகளில் ஆஸ்கர் பரிசு கிடைக்கும் என்று எழுதினேன்.  நான் என்னென்ன பிரிவுகளில் கிடைக்கும் என்று எழுதியிருந்தேனோ அதே பிரிவுகளில்தான் ஆஸ்கர் விருது இன்செப்ஷனுக்குக் கிடைத்தது.  Pfister-க்கு ஒளிப்பதிவுக்கு ஆஸ்கர் கிடைத்தது. நடிகைக்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை. திரைக்கதைக்கும் இசைக்கும் ஆஸ்கர் final nomination list-இல் இடம் பெற்றன.)

நண்பர்களே, இதெல்லாம் கொண்டாட்டத்துக்குரிய விஷயம் இல்லையா?  இந்தப் படம் ஆஸ்கர் பரிசு பெறும் என்று நான் எழுதவில்லை.  இன்னின்ன பிரிவுகளில் பரிசு பெறும் என்று எழுதினேன்.  சென்னைக்கும் ஆஸ்கருக்கும் எவ்வளவு தூரம்?  அதுவும் இதையெல்லாம் தமிழில் எழுதுகிறேன்.  நான் சொன்ன பிரிவுகளிலேயே பரிசு கிடைக்கிறது.  Pray for me brother வந்தவுடனேயே இந்த ஆண்டு ஆஸ்கர் விருது ரஹ்மானுக்குத்தான் என்று எழுதினேன்.  ஸ்லம்டாக் மில்லியனர் மதிப்புரையில் கூட ரஹ்மானுக்கு ஆஸ்கர் நிச்சயம் என்று உறுதிப்படுத்தினேன்.  அதேபோல் அவருக்கு ஆஸ்கர் கிடைத்தது.

பொதுவாக சினிமா ரசனை என்றால் என்ன என்பதை என்னுடைய முக்கியமான சினிமா விமர்சனங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.  பரதேசி, தேவ் டி போன்றவை உதாரணங்கள்.

இதற்கெல்லாம் எனக்கு சினிமா விமர்சகர் விருது வேண்டாம்.  சராசரி மனிதர்களுக்கு நான் யார் என்றும் தெரிய வேண்டாம்.  இதையெல்லாம் விடப் பெரிதாக நினைக்கும் ஒரு விஷயம் இருக்கிறது.  அது என்னவென்றால், இந்தக் கட்டுரைகளை நீங்கள் படிக்க வேண்டும்.  இதை விடவும் ஒரு எழுத்தாளன் உங்களிடம் எதை இறைஞ்ச முடியும் சொல்லுங்கள்?  அதிலும் என்னை ஒரு உயர்ந்த pedestal-இல் வைத்திருக்கும் உங்களிடம் நான் இதை மட்டுமே எதிர்பார்க்கிறேன்.