ஹே ராம் – ஒரு இந்துத்துவ அஜெண்டா

17 ஆண்டுகளுக்கு முன்பு உயிர்மையில் எழுதி என்னுடைய அலைந்து திரிபவனின் அழகியல் என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஹே ராம் பற்றிய விமர்சனக் கட்டுரை இது.  ஹே ராம் எப்படிப்பட்ட இந்துத்துவ சினிமா என்பதைக் கட்டுடைப்பு – deconstruct – செய்யும் கட்டுரை.

நண்பர் ஒருவரின் சிபாரிசின் பேரில் ஹேராம் பார்க்க நேர்ந்தது. அரங்கத்தின் உள்ளே கூட்டம் மிகக் குறைவாக இருந்ததன் காரணம், படத்தைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது.  மூன்றரை மணிநேர படத்தில் இருபது நிமிடம் மட்டுமே தமிழ் வசனங்கள். ஆங்கிலம், இந்தி, மராட்டி என்று மொழிக்கு முக்கால் மணி நேரம் என்று போட்டு வாட்டுவதென்றால் அது கொழுப்பு இல்லாமல் வேறு என்ன?

எத்தனையோ உலக சினிமா பார்த்திருக்கிறேன். எல்லாவற்றிலும் ‘சப்டைட்டில்’ உண்டு. ஆனால் ஹே ராமில் சப் டைட்டில் போட்டால் இருக்கிற பார்வையாளர்களும் எழுந்து ஓடிவிடுவார்கள். ஆக, சப் டைட்டில் போடுகிற சீரியஸ் படமும் இல்லை. தமிழ் மக்கள் பார்க்கக் கூடிய, அவர்கள் பேசும் மொழியிலும் இல்லை. அப்படியானால் இதன் பார்வையாளர்கள் யார்?

படத்தை சீரியஸ் சினிமாவின் பார்வையாளர்கள் ஏற்க மாட்டார்கள். காரணம், இதன் சினிமா மொழி ‘இயக்குநர் இமயம்’ பாலசந்தர் லெவலையே தாண்டவில்லை. ஆஸ்கர் விருது குறித்துத் தமிழில் நிறையவே பேசப்பட்டு வருகிறது. அவ்விருது ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டப் படங்களுக்கு மட்டுமே உரியது. ‘சிறந்த வெளிநாட்டுப் படம்’ என்ற பிரிவில் மட்டுமே தமிழ்ப் படம் நுழைய முடியும். ஆனால் அதிலும் பிரச்சினை உள்ளது. ஹே ராம் போன்ற படங்களை அனுப்பி வைத்து ஒரு வல்லரசை நாம் அவ்வளவாக அவமானப்படுத்தி விட முடியாது.

சரி, தமிழ் ரசிகனுக்கு இந்தப் படத்தில் புரியக்கூடிய ஒரே சமாச்சாரம் சாகேத் ராம் தனது முதல் மற்றும் இரண்டாவது மனைவியுடன் கொள்ளும் காமக் களியாட்டங்கள்தான்.

இந்தக் காட்சிகள் மற்ற சினிமாக்களில் வரும் கிளுகிளு காட்சிகளை விட எந்த விதத்திலும் மேம்பட்டதாக இல்லை. கமலின் Narcissism தவிர இக்காட்சிகளில் வேறு எதுவும் தெரியவில்லலை.

சில காட்சிகளைப் பார்ப்போம்: ராம், ராணி முகர்ஜியை பியானோவுக்குக் கீழே கிடத்தி அவளையும் பியானோவையும் சேர்த்து இயக்குவது; ராணி முகர்ஜியின் புட்டத்தைக் கடிப்பது; மற்றும் பலவிதமான முத்தக் காட்சிகள்.

செக்ஸ் என்பது, ஆண் பெண் பால் பேதமற்று ஒன்றிணையும் செயல்பாடு. ஆனால் மேற்படி காட்சிகளில் இத்தன்மை காணக் கிடைப்பதில்லை. ஏன் ராணி முகர்ஜி பியானோ வாசிக்க கமல் பியானோவுக்குக் கீழே – அதாவது ராணி முகர்ஜியின் கால்களுக்கு அடியில் போக முடியாது? ஏனென்றால் படத்தில் வருவது சாகேத் ராம் மட்டுமல்ல, ‘கமல் சார்’ என்ற இயக்குநர், தயாரிப்பாளர்! இதைப் புரிந்து கொண்டால்தான் புட்டக் காட்சிகள் மற்றும் முத்தக் காட்சிகளின் செயற்கைத் தன்மையைப் புரிந்து கொள்ள முடியும்.

ஹேமமாலினிக்கு முக்கால் நிமிஷம், நாசருக்கு 23 செகன்ட், சௌகார் ஜானகிக்கு ஒன்றரை நிமிஷம், கிரீஷ் கர்னாடுக்கு ரெண்டரை, வாலிக்கு மூனரை, டெல்லி கணேஷ்க்கு 13 செகன்ட், நஸ்ருதீன் ஷாவுக்கு மூனேகால் நிமிஷம், ஓம் பூரிக்கு ஒன்னேகால், ஷாருக்கானுக்கு எட்டேகால் நிமிஷம், ராணி முகர்ஜி மற்றும் வசுந்தராவுக்கு ஒம்போது ஒம்போது நிமிஷம் – மற்றபடி படம் ஓடும் மூன்றரை மணி நேரமும் கமலின் முகம் என்று படமெடுத்தால் அதை என்னவென்று சொல்வது?

ஓம் பூரி எவ்வளவு பெரிய நடிகர்! அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள  பாத்திரம் – காந்தியை சாகேத் ராமுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு தொழிலதிபர். கிட்டத்தட்ட ஒரு ‘ஏஜென்ட்!’ இதே அணுகுமுறைதான் சாகேத் ராமின் தாம்பத்ய காட்சிகளிலும் கையாளப்பட்டுள்ளது. அதனால்தான் அவை உக்கிரமான ‘லவ்-மேக்கிங்’ காட்சிகளாக மாறாமல் ரசிகர்களுக்கு கிளுகிளுப்பூட்டும் அஜால் குஜால் காட்சிகளாக மாறிவிட்டன.

ராணி முகர்ஜியை அரைகுறை ஆடையுடன் மல்லாத்திப் போட்டு, அவரது இரண்டு தொடைகளுக்கு நடுவே குத்துக்காலிட்டு சாகேத் அமர்ந்திருக்கம் காட்சியில் ‘என்ன வேணும்? என்ன வேணும்?’ என்று கேட்கும்போது ‘கூதி வேணும், கூதி வேணும்’ என்று ரசிகர்கள் கத்துகிறார்கள். இப்படியே சாகேத் ராம் ராணி முகர்ஜியின் புட்டத்தைக் கடிக்கும்போதும், வசுந்தராவும் சாகேத் ராமும் மாமிசம் சாப்பிடுவதைப் போல் ஒருவர் மற்றவரது உதடுகளைக் கடித்து இன்புறும் போதும் தியேட்டரில் ரசிகர்கள் அதை பலான வார்த்தைகளால் ஆரவாரமாய்க் கத்தி எதிர்கொள்கிறார்கள்.

இது மிகவும் சோகமானது. தமிழ் சினிமாவின் காதல் காட்சிகள் எப்படிப்பட்டவை? பன்றிகள் ஒன்றையொன்று மூக்கை உரசிக் கொள்ளுமே அதைப் போல் ஹீரோவும் ஹீரோயினும் மூக்கை உரசிக் கொள்வது. (முத்தமிட்டால் தமிழ்க் கற்பு கெட்டுப் போகும்!) புட்டங்களை இடித்துக் கொள்வது. ஐம்பது அறுபது பேர் கூட்டமாக ஜிம்னாஸ்டிக்ஸ் செய்வது. (அதாவது, பாடல் காட்சி) தொப்புளில் பம்பரம் விடுவது. இன்னபிற. இம்மாதிரிக் காட்சிகளைவிடவும் தமிழ் சினிமா ரசிகர்களைக் கீழான, மலினமான ரசனைக்கு இட்டுச் செல்லக்கூடியதாக இருக்கிறது கமலின் பியானோ/புட்டம் மற்றும் முத்தக் காட்சிகள்.

கமல் பிராமண ஜாதிபற்றிக் குறிப்பிடும்போதெல்லாம் பார்ப்பான் என்றே சொல்லுகிறார். ஜாதி, மதம், கடவுள் எதையும் நம்புவதில்லை என்கிறார். ஆனால் ஹே ராம் படத்தில் கமல் தனது அய்யங்கார் நாஸ்டால்ஜியாவை அப்படியே இறக்கியிருக்கிறார். சுய அனுபவம் பிரபஞ்ச அனுபவமாக மாறினால் மட்டுமே அது கலையாக மாற்றமடைய முடியும். இல்லாவிட்டால் அது வெறும் டயரிக் குறிப்புகள்தான். கமலின் டயரியைப் படித்து நமக்கு என்ன ஆகப் போகிறது?

ஒவ்வொரு ஜாதிக்கும் அதனதன் பேச்சுமொழி இருக்கிறது. அந்தக் கால பிராமண மொழியின் இசை லயமும் ரசிக்கக் கூடியதுதான். ஆனால் இந்தப் படத்தில் அது செயற்கைத்தன்மை கூடியதாகவும் அசட்டுத்தனமாகவும் அமைந்துள்ளது. கமல் வெறும் அசட்டு அம்பியாக இருப்பதில் நமக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. ஆனால் அசட்டுத்தனத்தோடு இந்துத்துவ ஃபாசிசமும் கலந்திருப்பது தான் பிரச்சினை.

1947 பிரிவினையின் போது சாகேத் ராமின் மனைவி ராணி முகர்ஜியை முஸ்லிம்கள் கற்பழிப்பது, அவள் கழுத்தையும் அறுத்து, கொன்று போட்டுப் போகிறார்கள். இந்தக் காட்சி மிகவும் விபரமாக, நுணுக்கமாக, ஆவேசமாக, பார்வையாளர்களை வெறிகொள்ளச் செய்யும்படி அணு அணுவாக விவரிக்கப்படுகிறது. கற்பழிக்கும் கும்பலைச் சேர்ந்த அல்தாஃப் என்ற இளைஞன் சாகேத் ராம் குடும்பத்திடம் கூலி வாங்கிப் பிழைத்தவன். ‘என் உப்பைத் தின்றுவிட்டு எனக்கே துரோகம் செய்தாயே’ என்று கதறுகிறான் சாகேத்.

ஆனால் படத்தின் வேறோர் காட்சியை இக்காட்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அங்கே ஒரு கும்பல் தில்லி சாந்த்னி சௌக் என்ற பகுதியிலுள்ள முஸ்லீம்களைத் தாக்க வருகிறது. அந்தக் கும்பல் ஏதோ ஒரு கொள்ளைக் கூட்டத்தைப் போல் வெறும் கும்பலாக மட்டுமே இருக்கிறது. பெயர்கள் கிடையாது. (முன்னே குறிப்பிட்ட காட்சியில் அல்தாஃப் என்ற பெயரும் அழுத்தமான பாத்திர உருவாக்கமும் உண்டு என்பதைக் கவனியுங்கள்!) சாந்த்னி சௌக் காட்சியில் அக்கும்பல் ஒரு நிழலுருவத்தைப் போல் காட்டப்படுகிறது. அவர்கள் முஸ்லீம்களைத் தாக்க வருவதற்கான காரணமும் நியாயமும் கூடச் சொல்லப்படுகிறது. சாந்த்னி சௌக் முஸ்லீம்களிடம் துப்பாக்கிகளும், வெடிகுண்டுகளும் இருக்கின்றன. ஏன், அங்கே ஒரு பெரிய ஆயுதக் கிடங்கே இருக்கிறது.

தங்கள் பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்ற முஸ்லீம் இளைஞர்களின் ஒரு தற்கொலைப்படையே அங்கு இருக்கிறது. இந்தக் காட்சி ஏதோ இரண்டு கொள்ளைக் குமபல்களுக்கிடையே நடக்கும் துப்பாக்கிச் சண்டையைப் போல் – ஒரு மெக்ஸிகன் கவ்பாய் சண்டைக் காட்சியைப் போல் படமாக்கப்பட்டிருக்கிறது – குதிரைதான் மிஸ்ஸிங். ஆனால், சாகேத் ராமின் மனைவி கற்பழிக்கப்படும் காட்சியில், பாவம், ராணி முகர்ஜி ஒரு அப்பாவி. தன்னிடம் உள்ள கைத்துப்பாக்கியில் குண்டுகளைக்கூட போட்டு வைத்துக் கொள்ளாமல் இருக்கிறாள். அதை ஏற்கெனவே ஒரு காட்சியில் சாகேத் ராம் நையாண்டியாக வேறு செய்கிறான்.

திரும்பவும் சாந்த்னி சௌக் காட்சிக்கு வருவோம். அங்கே அவ்வளவு முஸ்லீம் பெண்களையும் குழந்தைகளையும் சாகேத் ராம்தான், தன் உயிரையும் பணயம் வைத்துக் காப்பாற்றுகிறான். அப்போது கூட பாருங்கள் – அந்தப் பெருமை சாகேத்தின் நண்பன் ஷாருக்கானுக்கு கிடைக்கவில்லை. துப்பாக்கிச் சண்டையில் ஷாருக்கான் செத்து விடுகிறான். என்ன செய்வது? இயக்குனரும் தயாரிப்பாளரும் கமல்ஹாசன் ஆயிற்றே!

வேறோர் காட்சி. சாகேத் ராம் வெற்று மார்புடன் பூணூல் துலங்க, கீழே வேஷ்டியைத் தார்ப்பாய்ச்சுக் கட்டி புஜங்கள் முறுக்கேற துப்பாக்கிப் பயிற்சி பெறுகிறான். சுழல் காற்று சூறையாய் வீசி குடுமி அவிழ்ந்து பறக்கிறது. பிராமணன் ஆயுதத்தை எடுத்துவிட்டான், இல்லையா கமல்? உச்சபட்ச இந்துத்துவ – பார்ப்பனீய – ஃபாசிச வெளிப்பாடு இது. இதுவே படத்தின் அடிப்படையான செய்தி எனலாம். (வேறோர் காட்சியில் ஒரு இந்துத்துவ போராளி ‘அபிவாதயே’ சொல்கிறான் உணர்ச்சி கொப்பளிக்க. எனக்கே மயிர்க்கால்கள் கூச்செறிந்த காட்சி அது!) விளம்பரப் படங்களிலும் சாகேத் ராம் துப்பாக்கிப் பயிற்சி பெறும் இக்காட்சிதான் தேர்வு செய்து வைக்கப்பட்டுள்ளது.

அண்மைக் கால இந்துத்துவ ஃபாசிச எழுச்சி – ஆர்.எஸ்.எஸ்.ஸின் செல்வாக்கு – ஊடகங்களில் இதன் பிரதிபலிப்பு என்று எல்லாவற்றையும் இங்கே நாம் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். சில உதாரணங்கள்: சமீபத்தில் ஜூனியர் விகடனில் காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சேயின் கவர் ஸ்டோரி. ஹே ராம் படத்தைப் பார்க்க வைத்து அவரிடம் பேட்டி. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் கூட ‘மகாத்மாவைக் கொன்ற வெறியன்கள்’ என்று எழுதிய பத்திரிக்கைகளில் இன்று அவர்களுக்குப் போராட்ட வீரர்களைப் போன்ற, தியாகிகளைப் போன்ற அடைமொழிகள், பூர்ண கும்ப மரியாதைகள்!

சரோஜாதேவி புத்தகங்களில் நாம் ஒரு பொதுவான விஷயத்தைக் காண முடியும். செய்ய வேண்டியதையெல்லாம் செய்துவிட்டு கடைசியில் அந்தப் பெண் சொல்லுவாள் – ‘அக்கா புருஷனை இனிமேல் டாவடிக்கக் கூடாது என்ற பாடத்தைக் கற்றுக்கொண்டேன்’ என்று. அதைப் போல கமல் ஒரு முழு ஆர்.எஸ்.எஸ். கொள்கை விளக்கப் படத்தை எடுத்துவிட்டு கடைசியில் ‘காந்தி வாழ்க’ ‘அன்பு வாழ்க’ என்று முடிக்கிறார்.

நான் ஒரு சினிமாப் பார்வையாளன் என்ற முறையில் தூய கலைப்பார்வையில் பார்த்தாலும் இந்தப் படம் தேறவில்லை. மட்டுமல்ல. தமிழ் சினிமா இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு உருப்படாமல் போவதற்கும் இம்மாதிரிப் படங்களே போதும் என்று தோன்றுகிறது. டி.ராஜேந்தர், படையப்பா ரவிக்குமார் போன்றவர்களின் படங்களால் தமிழ் சினிமா ரசனைக்கு ஏற்படும் தீய விளைவுகளைவிட ஹே ராம் போன்ற படங்களால் ஏற்படும் பாதங்கள் அதிகம்.

ஹே ராமில் சிம்பாலிக் காட்சிகள் ஏராளம் ! அறை பூராவும் ரத்தம் பெருகி ஓட அதில் ஒரு பல்லி தத்தளிக்கிறது. (இது இரண்டு முறை வேறு வருகிறது.) ஐயா, பெரியோரே! வன்முறையைக் காட்ட வேண்டுமானால் ஆடு மாடுகளை வெட்டுவதைப் போல் இப்படியா படத்தையே ஒரு பெரிய Slaughter house ஆக மாற்ற வேண்டும்? ரத்தம் என்று சொல்லிக் குடம் குடமாக சிகப்புச் சாயத்தைக் கரைத்து ஊற்றினால்தான் வன்முறையா? Hungarians என்றொரு படம். Zoltan Fabri இயக்கியது. ஒரு சொட்டு ரத்தத்தைக் கூட காண்பிக்காமல் ஒரு துப்பாக்கியைக் கூட காண்பிக்காமல், பெரியதொரு போரின் வன்முறையையும் மனித வாழ்வின் அவலத்தையும் எவ்வளவு உக்கிரமாகக் காண்பித்திருக்கிறார் ஃபாப்ரி!

இறுதியாக, தமிழ்நாடே மூக்கில் விரலை வைக்கும் கமலின் நடிப்பைப் பற்றி சில வார்த்தைகள். தன் மனைவியோ, பெண் குழந்தையோ கற்பழிக்கப்படும்போது அல்லது கொல்லப்படும்போது முகத்தை காக்கா வலிப்பு வந்ததுபோல் கோணிக்கொண்டு ‘ஒருமாதிரி’ குரலில் ‘ஆ… ஊ…’ என்று கத்துவதை எத்தனைப் படங்களில்தான் பார்ப்பது? சலிப்பாக இருக்கிறது. இந்தக் காட்சிக்கு மட்டுமாவது அவர் ‘டூப்’ வைத்துக் கொண்டால் நல்லது என்று தோன்றுகிறது.

2000