ஜெயலலிதாவின் மரணம் : கார்ல் மார்க்ஸ்

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரது உடல்நலம் குறித்து நாங்கள் பொய் சொன்னோம்” என்று அதிமுகவின் மந்திரிகளில் ஒருவரான திண்டுக்கல் சீனிவாசன் சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். அது இந்த விவகாரம் மீண்டும் சமூகப் பரப்பில் விவாதமாக விரிவடைய வழிவகுத்திருக்கிறது.

திண்டுக்கல் அப்போது பொய் சொன்னாரா என்று கேட்டால், இல்லையென்றே நான் சொல்வேன். இப்போது இவ்வாறு சொல்வதன் மூலம் சீனிவாசன், தனக்கு எதோ இந்த விவகாரத்தில் பொய் சொல்லக்கூடிய அதிகாரம் அப்போது இருந்தது போலவும், அதை அவர் பிரயோகித்துவிட்டது போலவும் திமிருடன் பேசியிருக்கிறார் என்பதே என் அபிப்ராயம்.

உண்மை என்னவாக இருந்திருக்கும் என்றால், நம்மைப் போலவே இந்த அடிமையும், “அம்மா இட்லி சாப்பிட்டார்” என்று அவர்கள் சொன்னதை நம்பியிருக்கும், அதை அப்படியே வெளியே வந்து சொல்லியிருக்கும் என்பதுதான். அரசி இறந்ததும் பிள்ளைப் பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்போது இந்த கிளுகிளுப்பைக் கூட அனுபவிக்காமல் அப்புறம் என்ன கட்சிக்காரர் அவர். போகட்டும்.

ஜெயலிதாவின் இறப்பு குறித்து மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று ஸ்டாலின் இன்று கோரிக்கை விடுத்திருக்கிறார். இது மத்திய அரசின் கடமை என்றும் சொல்லியிருக்கிறார். ஏற்கனவே இது குறித்து விசாரணை ஆணையம் அமைக்கவேண்டும் என்று போராடியவர் தர்மயுத்த வீரர் பன்னீர் செல்வம். விசாரணைக் கமிஷன் அமைத்திருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி. இன்னும் அந்த கமிஷன் செயல்படுவதற்கான மற்ற ஆணைகள் இடப்படாமல் அந்த அறிவிப்புத் தூங்குகிறது. அது எழாது என்பது அரசியல் எதார்த்தம்.

மேலும், ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று எந்த ஒரு விசாரணைக்கும் மத்திய அரசு உத்தரவிடாது. இது நம்மை விட ஸ்டாலினுக்கு நன்றாகத் தெரியும். இதெல்லாம் சும்மா ஜாலிக்காக அவர் சொல்கிறார் என்பதே என் அனுமானம்.

ஜெயலலிதா விவகாரத்தில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து, அடக்கம் செய்யப்பட்டதுவரை நடந்தவற்றைக் கொஞ்சமாக அசைபோட்டுப் பார்ப்போம். அதன் மூலம், கிட்டத்தட்ட ஓராண்டு கடந்திருக்கும் நிலையில், இதில் யாரெல்லாம் நியாயவான்கள், யாரெல்லாம் பொய் சொன்னவர்கள் என்று பார்க்கலாம்.

மிக முக்கியமாக, இந்த விவகாரத்தில் எதுவுமே சொல்லாமல் இருந்து யாரெல்லாம் பொய்களுக்கு உதவியவர்கள் என்பதையும் அப்போதுதான் புரிந்துகொள்ளமுடியும்.

ஜெயலலிதா செப்டம்பர் 22 ம் தேதி உடல்நலக்குறைவு என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அக்டோபர் 2 ம் தேதி, அவர் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைப்பதாகவும், அவர் தேறி வருவதாகவும் அப்பல்லோ சொன்னது. இது உண்மையா பொய்யா, என்பது இப்போது வரைக்கும் தெரியாது. ஒரு முதலமைச்சர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார், அவரது ரத்த சொந்தங்கள் இல்லாது, அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான தோழியான சசிகலாவின் மேற்பார்வையில் சிகிச்சை நடக்கிறது.

அவர் மீது அபிமானம் வைத்திருக்கிற லட்சக்கணக்கான தொண்டர்கள் தங்களது தலைவியின் உடல் நலம் குறித்து தெரிந்துகொள்வதில் இருந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். பத்திரிகைகள் யூகங்களாக பயந்து பயந்து செய்திகளை வெளியிடுகின்றன. இப்படியான சூழலில் வழக்கமாக என்ன நடந்திருக்கவேண்டும். ஒன்று, மத்திய அரசு இதில் தலையிட்டு உண்மை வெளிவர உதவியிருக்கவேண்டும். அல்லது, பிரதான எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட மற்றைய கட்சிகள் கடும் அழுத்தத்தைப் பிரயோகித்து உண்மை வெளிவர முயன்றிருக்கவேண்டும். அல்லது, அவரது உடல்நலம் குறித்த தகவல்களை கசியச் செய்திருக்கவேண்டும்.

இது எதுவுமே நடக்கவில்லையே ஏன்?

இத்தனைக்கும் அக்டோபர் 6 ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக் குழு நேரில் வந்து ஜெயலலிதாவின் உடல் நிலையை ஆய்வு செய்கிறது. அவர் நீண்ட நாள் மருத்துவமனையில் இருக்க நேரிடும் என்று சொல்கிறது. அக்டோபர் 10 ம் தேதி ஸ்டாலின் சென்று பார்க்கிறார். அக்டோபர் 12 ம் தேதி அருண் ஜெட்லி வந்து பார்க்கிறார். அவருக்கு முன்பாகவே ராகுல் வந்து பார்த்துவிட்டுப் போய்விட்டார். அக்டோபர் 13 ம் தேதி எய்ம்ஸ் மருத்துவர் குழு மீண்டும் வந்து பார்வையிடுகிறது. ராசாத்தி அம்மாள் போய்ப் பார்க்கிறார்.

அதன் பிறகு வைகோ, தா. பாண்டியன், திருமாவளவன் உள்ளிட்ட நிறைய அரசியல் தலைவர்கள் சென்று காரிடாரைப் பார்த்துவிட்டு வருகிறார்கள். அம்மாவைப் பார்த்தீர்களா என்றால், “அவர்களைப் பார்த்தவர்களைப் பார்த்தோம்” என்று அவ்வளவு வார்த்தை நயத்துடன் சொன்னார் தாபா. அந்தத் துயரத்திலும் அவரது மொழியழகு வசீகரமாக இருந்தது.

டிசம்பர் 4 ம் தேதி கூட அவர் முழுவதும் தேறிவிட்டதாகவே எய்ம்ஸ் மருத்துவக்குழு சொன்னது. கவனத்தில் வையுங்கள், அப்படிச் சொன்னது அப்பல்லோ அல்ல மத்திய அரசின் தொடர்புடைய எய்ம்ஸ் மருத்துவக்குழு. அதற்கு சில மணி நேரங்களுக்குப் பிறகுதான் அவருக்கு மாரடைப்பு வந்ததாக அறிவித்தார்கள்.

இதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ஜெயலலலிதாவின் உடல்நலம் குறித்த சந்தேகங்கள் தீவிரமடைந்தன. அதை எதிர்கொள்ள பொய்கள் மேல் பொய்களாக வெளியிடப்பட்டன. அப்பல்லோ தொடங்கி, மந்திரிகள், அரசு அதிகாரிகள், போலீஸ் என எல்லாரும் பொய் சொன்னார்கள். மேலும் இது குறித்து வதந்தி பரப்புவர்களை கைதுசெய்வோம் என்று காவல்துறை அறிவித்தது. சிலரைக் கைதும் செய்தது.

கிட்டத்தட்ட சிவில் சமூகம் அறிவிக்கப்படாத முற்றுகைக்குள் இருந்தது. கனத்த மவுனம் நிலவியது. எங்கும் அடர்த்தியான இருட்டு. இன்று ஜெயலலிதாவுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் எல்லாருமே, அன்று சசிகலாவுக்கு முழு ஒத்துழைப்பை நல்கினார்கள். சிலர் பொய் சொனார்கள். பலர் மவுனமாக இருந்து அந்தப் பொய்யை உண்மை என்று அவர்கள் நம்பவைக்க உதவினார்கள்.

அதில் முதலாவது மோடியின் மத்திய அரசு. தனது பிரதிநிதிகளான அமித்ஷா, அருண் ஜெட்லி, வெங்கையா, மற்றும் கவர்னர் வித்யாசாகர் ராவ் ஆகியோரது வழியாகவும், எய்ம்ஸ் மருத்துவக்குழுவின் வழியாகவும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து முழு தகவல் தெரிந்திருந்தும், அதை மக்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும் என்கிற எந்த கடப்பாடும் இல்லாமல் அமைதி காத்தது. அதற்கு ஒரே காரணம்தான் இருக்கமுடியும்.

ஜெயலிதாவின் மரணத்துக்குப் பிறகான அரசியல் சூழலில் ஆதாயம் அடைவதில், இந்த வெளிப்படைத்தன்மை எதுவும் சேதாரத்தை உண்டு பண்ணிவிடக்கூடாது என்கிற அரசியல் கணக்குதான். மேலும், மிகவும் மூர்க்கமாக அது இந்த விஷயத்தில் நடந்துகொள்ள முயன்றது. பிஜேபியின் அந்த அழுத்தத்தை எதிர்கொள்வதன் பொருட்டே நடராஜனின் வழியாக மிக அவசரமாக ராகுல் தொடர்புகொள்ளப்பட்டார் என்றும், அவர் வந்து உடனே ஜெயலலிதாவைப் பார்த்தார் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.

இதில் வெளிப்படையாக நடந்துகொள்வதில் இருந்து சசிகலாகவை ஒரு விஷயம் தடுத்துவைத்திருக்கும் என்றால் அது எல்லாத் தளங்களிலும் முதலீடு செய்யப்பட்டிருக்கும் ஊழல் பணமாகத்தான் இருக்கமுடியும். மேலும் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்த வெளிப்படையான அறிவிப்பு அப்போதே வந்திருக்குமெனில், இப்போது காக்கைகளைப் போல பறக்கும் அந்தக் கட்சியின் பிரதிநிதிகளை சசிகலாவால் கட்டுக்குள் வைத்திருக்கவே முடியாது. கொஞ்சமும் நியாய உணர்வற்ற, சுயமரியாதை இல்லாத, அடிமைத்தனமும் சுயநலமும் நிரம்பிய கும்பல் அது.

ஜெயலலிதாவை மருத்துவமனையில் சேர்த்தது முதல், அவரது உடலில் அருகிலேயே இருந்து அடக்கம் செய்தது வரை ஒரு இராணுவத் தலைமையின் ஒழுங்குடன் அதை செய்துமுடித்தார் சசிகலா. அந்த ஒழுங்குங்கு அதுவரை அவர் கட்டிக்காத்த பொய்யே பயன்பட்டது. இன்று எல்லா பொறுப்பையும் சசிகலாவின் தலையில் கட்டிவிட்டு ஓட நினைக்கும் எல்லாரும் இதில் பங்காளிகளே.

ஜெயலலிதாவின் இந்த விவகாரத்தை ஸ்டாலின் ஏன் இவ்வளவு கண்ணியமாக எதிர்கொண்டார் என்பது ஆச்சர்யமான ஒன்று. இத்தனைக்கும் ஜெயலிதாவின் உடல்நிலைமோசமாக இருக்கும்போதுதான், பன்னீருக்கு பொறுப்பு அளிக்கப்படுகிறது. அவரது ரேகையுடன் முன்மொழியப்பட்டு இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதையெல்லாம் செய்துகொண்டிருப்பவர் சசிகலா என்று ஸ்டாலினுக்குத் தெரியாதா என்ன? துணை முதல்வராக இருந்து ஐந்தாண்டு காலம் மாநிலத்தை ஆண்டவருக்கு உளவுத்துறை என்றால் என்ன, அதன் வீச்சு என்ன என்றெல்லாம் ஓட்டுப் போடுபவர்களா வகுப்பெடுக்கவேண்டும்? குறைந்த பட்சம் நீதிமன்றத்தை அணுகுவதிலிருந்து கூட அவரைத் தடுத்தது எது? அவர்களும் இது ஜெயலலிதாவின் அந்தரங்க உரிமையுடன் தொடர்புடையது என்றுதான் சொல்லியிருப்பார்கள். ஆனாலும் அதை ஒரு வழிமுறையாகக் கூட அவர் முயன்று பார்க்கவில்லை என்பதே முக்கியம்.

இறுதியாக, ஜெயலலிதா எப்படி இறந்தார் என்கிற ரகசியத்தை நாம் அறிந்துகொள்வதில் இனி எந்தப் பயனும் இல்லை. அந்த ரகசியம் ஏன் காக்கப்பட்டது, எதிரெதிர் துருவத்தில் இருக்கும் எல்லாரும் இதில் எப்படி இணைந்து செயல்பட்டார்கள், அந்தக் கூட்டணியில் மக்கள் மட்டும் ஏன் விலக்கி வைக்கப்பட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்வதே முக்கியம். அதைப் புரிந்துகொள்வதும் அரசியலைப் புரிந்துகொள்வதும் வேறு வேறல்ல!

கார்ல் மார்க்ஸ்